மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தியாகி கக்கனை முதல்வர் எம்.ஜி.ஆர். அன்புடன் நலம் விசாரிக்கிறார்.உடன் காளிமுத்து. பாலகுருவா ரெட்டியார்.
எம்ஜிஆர் 100 | 9 - தியாகி கக்கனுக்கு செய்த உதவி
M.G.R. முதல்வராக இருந்த சமயம். 1978-ம் ஆண்டு இறுதியில் ஒருநாள். முதல்வரை சந்தித்து மனுக்கள் அளிக்க எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட வீட்டில் மக்கள் குழுமியிருக்கின்றனர். அவர்களிடையே ஒரு பெண்மணி தயங்கித் தயங்கி நிற்கிறார். எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் அந்தப் பெண்மணியிடம் விசாரிக்கின்றனர். தனது கணவர் பற்றிய விவரங்களைச் சொல்லி தானும் தனது குடும்பமும் படும் கஷ்டங்களை கூறி முதல்வரை சந்தித்தால் நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வந்திருக்கிறார் அந்தப் பெண்மணி.









