சனி, 21 ஆகஸ்ட், 2010

மிகத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட கடல் பிராணி

சர்வதேச உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் ஒக்டோபஸ் ‘போல்’ கூறிய சரியான ஆருடத்தால் இன்றைக்கு ஒக்டோபஸ் இனமே பெருமை பெற்றிருக்கின்றது.

ஒரு ஒக்டோபஸ்சை உங்கள் மனக் கண் முன் கொண்டு வந்து பாருங்கள். என்ன தோன்றுகின்றது? பத்துக் கைகள் கொண்ட, அகப்பட்டால் நம்மைக் கட்டிப் பிடித்துக் கொள்ளும் பயங்கர மானதும், அருவருப்பானதுமான ஒரு பிராணி நினைவுக்கு வருகிறது இல்லையா?

ஆனால் பல உயிரினங்கள் பற்றி மனிதன் தவறாகப் புரிந்து கொண்டு, பிழையான தகவல்களைப் பரப்பி எதிரியாகக் கருதி வருகின்றான். இந்த வகையில் ஒக்டோபஸ்சும் மனிதனுக்கு ஒவ்வாத ஒரு பிராணியாக உருவகிக் கப்பட்டு வந்துள்ளது. இது முற்றிலும் தவறானதெனவும் ஒக்டோபஸ் மதிநுட்பமும், வேடிக்கையும் சற்று கூச்ச சுபாவமுமுடைய சாதுவான பிராணியேயெனவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

மிருதுவான உடம்பையுடைய, முதுகெலும்பற்ற, தமதுடம்பைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு ஓட்டினை யுடைய உயிரினங்கள் மொலஸ்கா (Mollusca) அல்லது molluscs என்று அழைக்கப்படுகின்றன. நத்தை, கிளிஞ்சல் போன்றவை. ஒக்டோபஸ்களும் இவ்வினத்தைச் சார்ந்தவையே. ஆனால் ஒரு வித்தியாசம். ஒக்டோபஸ்களுக்கு ஓடு கிடையாது. அதனால் இவைகள் செபலொபொட்ஸ் (cephalopods) என்னும் தனியான பிரிவாக வகைப் படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பிரிவில் மூன்று பிராணிகள் அடங்குகின்றன. ஸ்கியுட்ஸ் (squids) ஒக்டோபஸ், கணவாய் ஆகியன அம்மூன்றும் ஆகும்.

இதுவரை (1998) 150 ஒக்டோபஸ் இனங்களும் 350 ஸ்கியுட்ஸ் இனங் களும் 14 கணவாய் இனங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

பெரும்பாலும் தனித்தே இருக்க விரும்பும் ஒக்டோபஸ்கள் தமது இனத்தையே உண்ணும் வகையைச் சேர்ந்தவை, தமது இருப்பிடங்களுக்கு அத்துமீறி நுழையும் பிராணிகளை கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பிடித்து விழுங்கிவிடக்கூடியவை என்பது உண்மையானாலும் மனிதர்களுடனான அதன் உறவுகள் நட்பு ரீதியாகவே உள்ளன என அறியப்படுகின்றது. மனிதர்களுடன் பழகுவதற்கு அவை அஞ்சுவதாகவும் தெரிகின்றது.

‘தாக்குவதா - தப்பிப்பதா’ என்ற நிலை தோன்றும் பொழுது ஒக்டோபஸ் தப்பிக்கவே விரும்புகின்றது. ஆனால் தொந்தரவு நேரும் பொழுது அது அதனருகில் உள்ள திடமான பொருளை பற்றிக்கொள்ளும் இயல்புடையது. நீங்கள் அதைப் பிடிக்க முயற்சித்தால் அது உங்களைப் பற்றிக் கொள்ளும். இப்படிப் பற்றிக் கொள்வதையே தம்மைத் தாக்குவதாக மனிதர்கள் பிழையாகப் புரிந்து கொண்டிருக்கின்றார்கள் என்று தெரிவிக்கின்றார் பிரசித்தி பெற்ற நீரோடியான லெரி ஹிவிட். தேர்ந்த நீரோடிகள் ஒக்டோபஸ்சை தமது மார்பில் வைத்துக் கொள்வார்களென்றும் நட்புடன் தழுவினால் அது திருப்தியுடன் விலகிச் சென்றுவிடுமென்றும் தெரியவருகின்றது. ஒக்டோபஸ் ஒன்று நம்மைப் பிடித்துக் கொண்டால் அதனிடமிருந்து விடுபட நாம் செய்ய வேண்டியதெல்லாம் அதன் உடம்பைத் தட்டிக் கொடுத்தல் அல்லது தடவிக் கொடுத்தலே!

அச்சமடைந்த பெரும்பாலான பிராணிகளின் தற்பாதுகாப்பு நடவடிக்கை எதிரியைக் கடித்தலே. ஆனால் ஒக்டோபஸ் அவ்வாறு செய்வதில்லை. அது வேறு வழிகளையே கையாளும். ஒரு ஒக்டோபஸ்சைக் கடிக்கச் செய்வது மிகக் கஷ்டமான காரியம்.

பிராணிகள் உலகிலேயே மின்னல் வேகத்தில் நிறம்மாறும் உடற்கூறு ஒக்டோபஸ்களுக்கே உண்டு. அச்சம் கொண்டால் வெண்ணிறமாகவும், மூர்க்கமானால் செந்நிறமாகவும் அது மாறிவிடும். தன்னை மறைத்துக் கொள்வதற்காக இளம் பச்சை, பழுப்பு, செம்பழுப்பு மற்றும் புள்ளிகள் கொண்டதாக தன்னை மாற்றிக் கொண்டு விடும். தனது எதிரியின் மீது ஒருவித மையைப் பாய்ச்சி எதிரியின் முகரும் திறனை மழுங்கடித்துவிடும் வல்லமையும் அதற்கு உண்டு.

உலகெங்கும் உள்ள வெப்பக் கடற்கரையோரங்களனைத்திலும் ஒக்டோபஸ் காணப்படுகின்றன. வடக்கு பசுபிக் கடற்கரையோரங்களில் காணப்படுபவை மிகப் பெரியவை. இவ்வினத்தில் வளர்ச்சி அடைந்த ஒரு ஒக்டோபஸ் 32 அடி சுற்றளவுள்ள ஒரு வட்டத்தின் இரண்டு முனைகளையும் தொடக்கூடியது. ஏனைய பகுதிகளில் காணப்படும் சில வகை சில சென்ரி மீற்றர்கள் அளவே நீளமுடையவை. தென் சீனப் பகுதியில் காணப்படுபவை மூன்று முதல் நான்கு அடிகள் வரை வளரக் கூடிய நடுத்தர அளவுடையவை. ஏறக்குறைய ஒரு மைல் கடலாழத்தில் வாசம் செய்யும் இவை, சூரிய வெப்பத்தைப் பெற்றுக் கொள்வதற்காக ஆழமற்ற கடற்பரப்புக்கு வந்து செல்லும்.

கிளிஞ்சல், நண்டு, இறால் ஆகியன ஒக்டோபஸ்களின் பொதுவான உணவாகும். எப்போதாவது மீனையும் உண்பதுண்டு. ஒக்டோபஸ் இரை தேடுவது இரவிலேயே. பகலில் தற்செயலாக எதிர்ப்படும் இரைகளைப் பிடித்துண்ணும். ஹவாய்த் தீவுகளைச் சேர்ந்த ‘பகல் ஒக்டோபஸ்’ என்னும் இனம் மட்டுமே பகலில் இரை தேடும்.

ஒக்டோபஸ் தனது இரையை தன்னுடைய வலிமையான எட்டுக் கைகளில் ஒன்றிலோ ஒன்றுக்கு மேற்பட்டவைகளிலோ உள்ள வட்டமான உறிஞ்சிகளினால் பிடிக்கும். ஒக்டோபஸ்சின் வகைக்கேற்ப அதன் ஒவ்வொரு கைகளிலும் ஏறக்குறைய 240 உறிஞ்சிகள் இருவரிசைகளில் அமைந்திருக்கின்றன. அவைகளின் முனை ஒரு ஊசியளவிலானதிலிருந்து இரண்டரை அங்குலம் அளவிலானவை. இந்த உறிஞ்சிகளினால் அது தன் உணவை வாய்க்கு எடுத்துச் செல்கின்றது. ஒக்டோபசுக்கு ஒரு சிறு கிளியினதைப் போன்ற சொண்டு உண்டு. உண்ணுமுன் தான்பிடித்த பிராணி உணர்விழக்கவோ, உயிரிழக்கவோ செய்வதற்காக தனது உமிழ் நீர்ச்சுரப்பிகளிலிருந்து ஒருவித விஷத்தைச் சுரக்கின்றது.

இயல்பில் தனிமையை விரும்பும் ஒக்டோபஸ் மனிதர்களால் பிடிக்கப்பட்டதும் சாதுவானதாகவும் நட்புறவுள்ளதாகவும் மாறிவிடுகின்றது. மனிதர்களின் ஸ்பரிசத்தை அது விரும்புகின்றது. மதிநுட்பம் வாய்ந்ததாகவும் ஹாஸ்ய உணர்வு நிரம்பியதாகவும் மாறிவிடுகின்றது. வான்கூவர் நகரில் வளர்க்கப்பட்ட ஒக்டோபஸ் ஒன்று அவ்வழியாக நடமாடுவோர்கள் மீது மையைப் பாய்ச்சி விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாம்.

வான்கூவர் நீர்வாழ்ப் பிராணிகள் வளர்ப்பு நிலைய மேற்பார்வையாளர் தெரிவித்துள்ளவை குறிப்பிடத்தக்கவை. ஒக்டோபஸ்களின் நுண்ணறிவும், ஆர்வமும் அவைகளுக்கே ஆபத்தை விளைவித்த சந்தர்ப்பங்களும் உண்டு என்கிறார் அவர். ஒருமுறை ஒரு ஒக்டோபஸ் தானிருந்த தாங்கியின் அடைப்பானை இழுத்துவிட தொட்டியின் நீரெல்லாம் வடிந்து போய் உயிர் போயிற்றாம்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் ஒரு தொட்டியில் வைக்கப்பட்டிருந்த ஒரு வகை மீன் பாதியளவில் உண்ணப்பட்டு இறந்து கிடக்கக் காணப்பட்டது. அந்தத் தொட்டியில் அந்த மீன் மட்டுமே தனியே வைக்கப்பட்டிருந்ததால் இது எவ்வாறு நேர்ந்திருக்கலாமென அஙகுள்ளோர் குழம்பிக் கொண்டிருந்தனர். மறுநாள் அம்மீன் தொட்டியின் அருகில் வைக்கப்பட்டிருந்த ஒக்டோபஸ் ஒன்று மிகுதியாயிருந்த மீனை உண்பதற்காக அத்தொட்டியில் நுழைந்தபோது உண்மை வெளிப்பட்டது.

ஒக்டோபஸ் வளர்க்கப்படும் தொட்டிகள் செவ்வையான முறையில் மூடப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் 25 கிலோ நிறையுள்ள ஒக்டோபஸ் ஒன்று இரண்டங்குல துவாரத்திற்குள் நுழைந்து சென்றுவிடக் கூடியது. தாங்கியின் மூடியும் கனதியாக இருக்க வேண்டும். இலேசானதாயின் தள்ளிவிட்டு வெளியேறிவிடும்.

ஒக்டோபஸ்சின் ஆயுட் காலம் சுமார் ஆறு ஆண்டுகள் தாம். அதன் உடல் வளர்ச்சி அதன் மனோபாவத்தைப் பொறுத்ததாகும். கூச்ச சுபாவமுடைய தன்னுடைய உணவுக்காக அடிக்கடி தன் இருப்பிடத்தை விட்டு வெளியே வராத ஒக்டோபஸ் மிக மெதுவாகவே வளர்ச்சியடையும். ஆக்ரோஷமும் நிறைய உணவும் உட்கொள்ளும் ஒக்டோபஸ் மிகப் பெரிய அளவில் வளர்ச்சியடையும். சுமார் 35 கிலோ எடையோடிருந்த ஒக்டோபஸ் ஒன்று ஆறு மாத காலத்தில் 75 கிலோ எடை கொண்டதாக வளர்ச்சி பெற்றதாகத் தகவல் ஒன்றுள்ளது.

ஒக்டோபஸ்சுக்கும் மனிதர்களுக்குமிடையே சரியான புரிந்துணர்வை ஏற்படுத்த மேலை நாடுகளிலே முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. பாடசாலை மாணவர்கள் மூலம் hலீrring என்னும் ஒரு வகை மீனை உணவாகக் கொடுக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. ஒக்டோபஸ்சுக்கு மனிதர்கள் மீதுள்ள அச்சம் நீங்குவதற்குக் கணிசமான காலம் தேவைப்படுவதாகத் தெரியவருகின்றது. ஆனால் மனிதர்களுக்கு ஒக்டோபஸ் மீதுள்ள அச்சத்தை உடனடியாக நீக்கிவிடலாம். ஒருவர் அதனுடன் பேசித் தடவினால் அது அவருடன் விளையாட ஆரம்பிக்கும். பின்னர் அது தப்பிச் செல்ல முயலுவதில்லை.

ஒக்டோபஸ்சின் நுண்ணறிவைப் பரிசோதிக்க பஹாமாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை யொன்று வருமாறு : ஒரு ஒக்டோபஸ் சுக்கு ஆறு நத்தைகள் வீதம் தினசரி உணவாகக் கொடுக்கப்பட்டு வந்தது. ஒக்டோபஸ் அவற்றைத் தன் கூட்டிற்கு எடுத்துச்சென்று பசியெடுக் கும் போது ஒவ்வொன்றாக உண்ணும். உரிய நேரத்திற்கு நத்தைகளை வழங்காவிட்டால் அது வழமையாக அதனை வழங்குபவரின் கையைத் திறந்து துருவிப்பார்க்க ஆரம்பித்தது. வெறுமையான நத்தை ஓடொன்றைக் கொடுக்கும் சந்தர்ப்பங்களில் அதனை உண்பதற்கு முன் அதற்குள் நத்தை இருக்கிறதா என்று தன்னுடைய உறிஞ்சிகள் மூலம் பரீட்சித்தபின் அதனை ஒதுக்கியது.

ஒக்டோபஸ் ஜாக்கிரதையும் கடின உழைப்பும் கொண்டதாகும். பெண் ஒக்டோபஸ்கள் கடல் வாழ் உயிரினங்களிலேயே மிக அர்ப்பணிப்பான தாய் என்ற தகுதியைப் பெற்றுள்ளன. ஒக்டோபஸின் முட்டை அரிசியின் பாதியளவேயானதாகும். முட்டைகள் வெளிப்பட்டவுடன் தாய் அவற்றை ஒன்றோடொன்று இணைத்து ஒரு கயிறு போல பாறைகளின் பாதுகாப்பான இடங்களில் தொங்கவிடும். ஒரு கோர்வையில் சுமார் ஆயிரம் முட்டைகள் இணைந்திருக்கும். ஒரு ஒக்டோபஸ் இரண்டு வார காலங்களில் இடும் முட்டைகளின் எண்ணிக்கை எவ்வளவாக இருக்குமென்று நினைக்கின்aர்கள்? கொஞ்சநஞ்சமல்ல, 3 இலட்சத்து 25 ஆயிரம்.

ஏனைய பெரும்பாலான கடற் பிராணிகளைப் போன்று ஒக்டோபஸ்சும் உணவாகக் கொள்ளப்படுகிறதா என்றால் பரவலாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இத்தாலியில் மாத்திரம் இளம் ஒக்டோபஸ்கள் ஒரு விஷேச பக்குவத்தில் தயாரிக்கப்பட்டு உணவாகக் கொள்ளப்படுவதாகத் தெரிய வருகின்றது.

மொத்தத்தில் பெரும்பாலோர் நினைப்பது போல் ஒக்டோபஸ் ஒன்றும் பயங்கரமான பிராணி அல்ல. நுண்ணறிவு வாய்ந்த தனித்துவமான மனிதனின் நட்புக்குரிய ஒரு உயிரினமே!

வி.எஸ். நவரட்ணம்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல