ஞாயிறு, 29 ஜூலை, 2012

இந்திய யூனியனுடன் இணைந்தாலென்ன?

மூக்கறுந்தவனுக்குச் சாங்கமென்ன சரியென்ன என்பார்கள், ஏற நனைந்தவனுக்குக் கூதலென்ன குளிரென்ன என்பார்கள், தலைக்குமேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன என்பார்கள் ஈழத்தமிழனுக்கும் இன்று இதுதான் நிலை. ஆரம்பத்தில் இலங்கையை ஒரு கூட்டாட்சிக் குடியரசாக மாற்றி அதில் வடகிழக்கு மாகாணங்கள் இணைந்த தமிழரசை அமைக்க வேண்டுமென்ற கோட்பாட்டுடன் போராடினோம்.



கிழிக்கப்பட்டுப்போன பண்டாசெல்வா, டட்லிசெல்வா ஒப்பந்தங்களால்; பாடங்களைக் கற்றுக்கொண்டோம். மாகாண சபைகளோடு மாவட்ட சபைகளைக்;கூடத் தரமறுத்தார்கள். எதுவும் கிடைக்காத நிலையில் இன்னும் அதிகம் கேட்டாற்தான் ஓரளவாவது கிடைக்குமென்ற நப்பாசையில் பிரிந்து செல்லும் உரிமையுட்பட்ட சுயநிர்ணய உரிமையைத் தமிழ் மாகாணங்களுக்குத் தருமாறு கேட்டோம். அதன் தொடர்ச்சியாக தமிழீழத் தாயகத்தை ஆயுதமுனையிற் கேட்டோம். இன்று ஒன்றுமில்லாமல், எதையும் கேட்டுப் போராடக்கூடிய சக்தியுமில்லாமல் அடுத்தவர் தயவை எதிர்பார்த்து நிற்கிறோம்.

நாம் என்ன தவறு செய்தோம்? இவற்றையெல்லாம் பார்க்கும்போது எங்கோ எதிலோ ஓர் வரலாற்றுத் தவறை நாம் தொடர்ச்சியாக விட்டு வந்திருக்கிறோமென்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

தந்தை செல்வாவின் காலத்திலிருந்து இன்றைய சம்பந்தர் காலம்வரை, பண்டிதர் ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் இன்றைய மன்மோகன் சிங் வரையான வடநாட்டுத் தலைவர்கள் உட்பட, பெரியார் ஈவெரா, அறிஞர் அண்ணா, கலைஞர், ஜெயலிதா போன்ற தமிழகத் தலைவர்கள் வரை எல்லோரையும் நமது தமிழ்த் தலைவர்கள் சந்தித்து இலங்கைத் தமிழர் தொடர்பான பிரச்சனைகளையிட்டு முறையிட்டே வந்திருக்கிறார்கள். ஆனாலும் அறுபது வருடங்களுக்கும் மேலான இந்தப் பிரச்சனைக்கு ஒரு முற்றுப் புள்ளி இடப்படவிலை.

பெருமரத்தைச் சுற்றிய பல்லியும் சாகாதென்பார்கள். இந்தியா என்னும் பெருமரத்தை நாம் சுற்றிச் சுற்றியே வந்தும் கூட இன்றைக்கு ஏறக்குறைய அழியும் நிலைக்கு வந்துவிட்டோம். இப்படியே போனால் ஆகக் கூடியது இன்னும் பத்து ஆண்டுக் காலத்திற்குள் இலங்கைத் தீவில், குறிப்பாக வடகிழக்கில் எமது இருப்பின் சுவடு கேள்விக்குறியாகிவிடும். சிங்களத்தின் தொடர்ச்சியான திட்டமிடப்பட்ட குடியேற்;றம், ராணுவத்தின் அடக்கு முறை, அதனால் ஏற்படும் தமிழரின் இடப்பெயர்வு என்று அனைத்து வழிகளாலும் நமது பிரதேசம் தமிழரின் தாயகமென்னும் அந்தஸ்தை மிக வேகமாக இழந்து வருகின்றது.

நாம் விட்ட வரலாற்றுத் தவறுதான் என்ன?

இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்கள் இந்தியாவுடன் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டுடனான புவியியல், அரசியல் ரீதியான தொடர்பை வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து கொண்டிருந்தும், இலங்கைத் தமிழர்கள், தமிழ் நாட்டிலேயே தங்கள் கலை, கலாச்சார, சமய, இலக்கியப் பாரம்பரியங்கள் அனைத்திற்கும் தங்கியிருந்தும், நாம் அனைவருமே தென் இந்தியத் திராவிட பரம்பரையினராயிருந்தும், வெள்ளைக்காரன் ஏதோ இலங்கைத் தீவைத் தனித்தேசமாக்கிச் சுதந்திரம் தந்துவிட்டானென்ற மமதையில் தமிழகத்தையும் இந்தியாவையும் ஒரு பொருட்டாக மதிக்காமலேயே போய்விட்டோம்.

கொஞ்சம் விளக்கமாகச் சொல்வதானால் சுதந்திரம் கிடைக்கவிருந்த காலத்தில் நமது தமிழ்ப் பிரதேசங்கள் இந்தியாவின் குறிப்பாகத் தமிழகத்தின் பிரிக்க முடியாத பகுதியென்பதை முன்வைத்து இந்தியாவின் ஒரு மாநிலமாக எம்மைச் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கையை பிரித்தானிய அரசிடம் முன் வைக்காமல் விட்டுவிட்டோம். இன்று, இலங்கையென்னும் நாட்டிற்குள் சிங்களப் பேராண்மை வாதத்தின் இரும்புப் பிடிக்குள் அகப்பட்டு மீள முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம்.

சிங்களமும் இதனால் பெரிய லாபத்தை அடைந்துவிடவில்லை. தரித்திரம் பிடித்த நாரை கெழுத்தியைப் பிடித்து விழுங்கிய கதைபோல தமிழர் பிரச்சனை சிங்களத்தின் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டதால் உமிழவும் முடியாமல் விழுங்கவும் முடியாமற்தான் காணப்படுகின்றது. இலங்கையின் முன்னேற்றம் இதனால் ஒரு அரை நூற்றாண்டு பின்தள்ளியும் போய்விட்டது. கையிலெடுத்துவிட்ட பேரின வாதத்தை கைவிடமுடியாத நிலைக்குச் சிங்களம் போய்விட்டது.

வெட்டிவைத்த இளநீர்த் தேங்காயினுள் கைவிட்டுத் துழாவி வழுவலை அள்ளிய குரங்கு கையை வெளியே எடுக்கவும் முடியாமல் அள்ளிய வழுவலை கைவிடவும் விரும்பாமல் தவிப்பது போல இலங்கையரசும் தனது பேரினவாதத்தைக் கைவிட்டுத் தமிழர்களுக்கென்றோர் தனியான ஆட்சியலகைக் கொடுக்க விருப்பின்றி ஐநா, மனிதஉரிமை அமைப்புக்கள் என்று எல்லாத் தரப்பினராலும் தரக்குறைவாக நோக்கப்பட்டு வெட்கித் தலைகுனிந்து நிற்கிறது.

இந்த அனைத்துக் குழப்ப நிலைகளுக்கும் காரணம் நாம் ஆரம்பத்திலேயே இந்தியாவின் ஓர் அங்கமாக எம்மை வைத்துப் பார்க்காமல் விட்டதுதானோ! என்று எண்ணத் தோன்றுகிறது.

சுதந்திரத்திற்கு முன்னர் கொத்தடிமைகளாகக் கூலிகளாக இந்தியத் தமிழர்கள் இங்கு கொண்டுவரப்பட்டபோது அந்தத் தொழிலாள வர்க்கத்தை அசூயையுடன் நோக்கி நம்மிலும் குறைந்தவர்களாக இலங்கையின் வம்சாவழி மேற்தட்டு வர்க்கம் கருதியதால் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவுடன் தங்களது தொடர்புகளை அரசியல் ரீதியில் மேம்படுத்திக்கொள்ள ஆர்வமில்லாமற் போய்விட்டது. அப்போதெல்லாம் அரிஸ்ரோக்கிரட்டிக் சொசைட்டியாகவிருந்த ஆளும் வர்க்கத்தில்; (மேற்தட்டு வர்க்கம்) சிங்களவர்களுடன் கைகோர்த்துக்கொண்டு தமிழர்களும் குலாவிக் கொண்டிருந்ததால் எமது இனநலன்களைப் பாதுகாத்துக்கொள்ள தமிழகத்துடன் இணைந்து விடவேண்டுமென்னும் கோட்பாடு எம்மிடத்தில் உருவாகவேயில்லை.

அன்றே காந்திஜீயிடத்திலோ நேருவிடத்திலோ நாங்களும் இந்தியாவின் குழந்தைகளே எங்களைக் கைவிட்டு விடாதீர்கள் என்று நம்மில் யாராவது வேண்டுகோள் விடுத்திருந்தால் சரித்திரம் வேறு திசையில் போயிருந்திருக்கும். ஆனால் யாரும் அத்தகைய சிந்தனையுடன் செயற்படவில்லை. அப்போது எமக்கு அந்தத் தூரதிருஷ்டி இல்லாமற் போனது எமது துரதிஸ்டமே.

சோல்பரி வந்து எம்மைப் பெரும்பான்மையினரின் ஆதிக்கத்துக்குள் விழுத்திவிட்ட பின்னரும்கூட நாம் விழிப்படையவில்லை. ஏனென்றால் வறிய இந்தியாவின் தமிழர்களோடு எம்மைச் சேர்த்துப் பார்க்க எம்மில் யாருக்கும் விருப்பமிருக்கவில்லை. அந்த அகந்தையின் விளைவை நாம் இன்று அறுவடைசெய்து கொண்டிருக்கிறோம்.

சரி, போனது போகட்டும். இனி நடந்தவைகளைப் பேசிப்பயனில்லை. மேற்கொண்டு செய்ய வேண்டியது என்ன என்பதையாவது சற்று நிதானத்துடன் ஆராய்ந்தாலென்ன? அதையிட்டுத்தான் இனி நாம் கவனம் செலுத்த வேண்டும்.
பாக்கு நீரிணையின் இருபுறத்திலுமுள்ள தமிழ்த் தேசியத்தினை ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாத ஒரே அலகாக உலகின்முன் வைத்து இந்தியாவுடன் ஐக்கியப்பட்டதோர் மாநிலமாகத் தமிழீழத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினாலென்ன?

சில வேளைகளில் இத்தகைய அணுகுமுறைகள் நகைப்புக்கிடமானதாக எம்மவர்களின் மத்தியில் கருதப்படவும் கூடும். அதற்கான விசேடித்த காரணங்களெதுவும் இருக்கமுடியாது. தங்கள் தலைமைத்துவத்தை இழக்க நேரிடுமோ! என்ற ஐயத்தில் சில தமிழ் அரசியற் தலைமைகள் இதனை ஏற்க மறுத்தாலும் இப்போது தலைக்கு மேலாக வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில் நமது தாயகத்தைக் காப்பாற்றிக்கொள்ள இதைவிட வேறு சிறந்த வழி ஏற்படக்கூடுமாவெனத் தெரியவில்லை.

ஒரு புறத்தில் இனப்பிரச்சனைத் தீர்வுக்கான முயற்சிகளை மேற்கொள்கின்ற அதேவேளை, தமிழீழத்தின்மீதான முழுமையான உரிமை பாராட்டலுக்குத் தமிழகத்தைத் தூண்டிவிடுவதும், இந்திய மத்திய அரசின் நிர்வாகப் பரப்பினுக்குள் தமிழீழம் கொண்டுவரப்படவேண்டுமென்று போராட்டங்களை முன்னெடுப்பதும் சிங்களப் பேரினவாதிகளின் வயிற்றில் புளியைக் கரைக்குமென்பதில் சந்தேகமேயில்லை.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் கையை ஈழத்தமிழர்கள் பலப்படுத்தவும், எமக்கான மொழிவாரி நிர்வாக அலகொன்றை இந்திய மத்திய அரசின்கீழ்ப் பெற்றுக்கொள்ளவும் நாம் தொடங்கும் போரட்டம் வழிகோலுமானால் அதையிட்டு இந்திய நடுவண் அரசு நிச்சயம் உள்ள10ர மகிழ்ச்சியடையவே செய்யும். எந்தவொரு நாட்டிலும் நாங்கள் உங்களுடன் சேர்ந்து வாழப்போகிறோமென்ற கோரிக்கையுடன் நடத்தப்படும் போராட்டங்களுக்குச் சட்டரீதியான தடைகள் உருவாகப் போவதில்லை. மாறாக வடமாநிலங்களிலும் இத்தகைய கோரிக்கைகளுக்கான ஆதரவு வலுவடையவே செய்யும்.

தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி போன்றோரின் தற்போதைய தமிழீழத்திற்கான ஆதரவுக்குரலையும், ஏனைய தரப்பினரின் அனுதாபத்தினையும் தக்கமுறையில் வழிப்படுத்தி இந்திய யூனியனுடன் எமது தமிழீழத்தாயகத்தை இணைக்கும் முயற்சியில் இறங்கினாலன்றி இன்னும் பத்தாண்டுக்காலத்தினுள் உருவழிந்து போய்விடக்கூடிய தமிழீழ தேசத்தினை நாம் மீட்டெடுப்பது இயலாத காரியமாகவே போய்விடக்கூடும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல