நடந்து முடிந்த கிழக்கு, சப்பிரகமுவ, வடமத்திய மாகாணசபைத் தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கடந்த மாகாணசபை தேர்தல்களை விட அதிகப்படியாக வாக்குகளையும் ஆசனங்களையும் பெற்று அமோக வெற்றியீட்டியுள்ளது.
அத தெரண

எனினும், 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பெற்றுக் கொண்ட வாக்கு ஆசனங்களைப் போன்று இம்முறை கிழக்கில் வெற்றிக் கொடியை நாட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு இடம் கிடைக்க வில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபைத் தேர்தல் பிரசன்னத்தினால் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரமாண்ட வெற்றிக் கனவு பலிக்கவில்லை.
2008ஆம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலுடன் இம்முறை இடம்பெற்ற தேர்தலை ஒப்பிட்டு நோக்கும் போது, கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் முன்னணிக்கு 6 ஆசனங்கள் குறைவாகவே கிடைத்துள்ளன.
2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 308,886 வாக்குகளைப் பெற்று 20 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஆனால் இம்முறை தேர்தலில் 200,044 வாக்குகளைப் பெற்று 14 ஆசனங்களை மாத்திரமே அக்கட்சியினால் கைப்பற்ற முடிந்துள்ளது.
கடந்த 2008 கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தேர்தலில் 25,0732 வாக்குகளைப் பெற்று 15 ஆசனங்களை பெற்று வெற்றித் தாண்டவம் ஆடிய ஐக்கிய தேசியக் கட்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பாய் போனது போல் இம்முறை வெறும் 74,901 வாக்குகளை மாத்திரமே பெற்று 4 ஆசனங்களை மட்டுமே தக்கவைத்துக் கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த தோல்விக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திடீர் எழுச்சியும், வருகையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுனுடைய பிரிவும் காரணம் என கூறலாம்.
கடந்த தேர்தலில் 9,390 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தை வென்ற மக்கள் விடுதலை முன்னணியால் இம்முறை 3,154 வாக்குகளை மாத்திரமே பெற முடிந்துள்ளது. கிழக்கில் ஆசனங்கள் எதனையும் பெற முடியாத நிலைக்கு கிழக்கு மக்கள், மக்கள் விடுதலை முன்னணியை தள்ளியுள்ளனர்.
கடந்த முறை ஐக்கிய தேசியக் கட்சியுடன் தேர்தலில் போட்டியிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இம்முறை தனித்துப் போட்டியிட்டு கிழக்கில் 7 ஆசனங்களை பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2008 கிழக்கு மாகாணசபைத் தேர்தலுடன் 2012 கிழக்கு மாகாணசபைத் தேர்தலை மாவட்ட அடிப்படையில் ஒப்பு நோக்கின்,
கடந்த முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 105,341 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களை கைப்பற்றிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, இம்முறை பாரிய வாக்குச் சரிவை சந்தித்து 64,190 வாக்குகளைப் பற்று 4 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
கடந்த முறைத் தேர்தலில் 58,,602 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களைக் கைப்பற்றிய ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை வெறும் 2,434 வாக்குகளைப் பெற்று ஆசனங்கள் எதுவும் இன்றி அக்கட்சி கிழக்கு மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை ஐக்கிய தேசியக் கட்சியுடன் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் இம்முறை 23083 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்தமுறை 70,858 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களை பெற்று வெற்றி வாகை சூடிய ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை 24,439 வாக்குகளைப் பெற்று ஒரே ஒரு ஆசனத்தை மாத்திரம் பெற்றுக் கொண்டுள்ளது.
திருமலையில் கடந்தமுறை 59,298 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களை கைப்பற்றிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை வாக்குச் சரிவை கண்டு 43,324 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களை மட்டும் பெற்றுக் கொண்டுள்ளது.
திருகோணமலையில் கடந்தமுறை 4,266 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தை வென்ற மக்கள் விடுதலை முன்னணி இம்முறை 777 வாக்குகளைப் பெற்று ஆசனங்கள் இன்றி விரட்டியடிக்கப்பட்டுள்ளது.
கடந்தமுறை மாகாணசபைத் தேர்தலில் களம் இறங்காத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை 44,396 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களை வென்று திருமலையில் தமது பலத்தை நிறுபித்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 26,176 வாக்குகளைப் பெற்று இம்முறை 2 ஆசனங்களை வென்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இட ஒதுக்கீடின்றி பஞ்சாயுத சின்னத்தில் தனித்து நின்ற தேசிய சுதந்திர முன்னணி 9522 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தை வென்று தமது தனி பலத்தை நிரூபித்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் கடந்தமுறை 144,247 வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்களை தனதாக்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை பாரிய வீழ்ச்சியை கண்டு 92,530 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களை மாத்திரமே வென்றுள்ளது.
கடந்தமுறை 121,272 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களை வென்ற ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை எதிர்பாராத சரிவை சந்தித்து 48,028 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களை வென்றுள்ளது.
அம்பாறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இம்முறை 83,658 வாலக்குகளைப் பெற்று 4 ஆசனங்களை வென்றதோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பு 44,749 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை வென்றுள்ளது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இம்முறை ஆட்சி அமைக்கக் கூடிய பெரும்பான்மையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுக் கொண்டுள்ள நிலையில் கூட்டு ஆட்சி அமைக்கும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறங்கியுள்ளது.
கிழக்கில் ஆட்சியமைக்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவை தெரிவித்துள்ளதென தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் நான்கு ஆசனங்களை வென்ற ஐக்கிய தேசியக் கட்சியினுடைய ஆதரவை மட்டும் பெற்று 11 ஆசனங்களை வென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியாது.
ஆகையினால் கிழக்கில் 7 ஆசனங்களை வென்று மூன்றாவது சக்தியாக உருவெடுத்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் தமிழ்த் செயக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அக்கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது வரப்பிரசாதங்களை விட்டுக் கொடுத்து, அரசாங்கத்தில் இருந்து விலகி, தமிழ்த் செயக் கூட்டமைப்புடன் கிழக்கில் ஆட்சி அமைக்குமா என்ற சந்தேகம் தமிழ் முஸ்லிம் சிறுபான்மை மக்களிடையே எழுந்துள்ளது.
கிழக்கின் ஆட்சி யார் வசம் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!
அத தெரண



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக