புதன், 18 செப்டம்பர், 2013

சட்­டத்தைப் பற்றி நீங்கள் அறிய வேண்­டி­யவை

பொதுச் சட்டத்தின் கீழான விவாகரத்து விவாக குற்றங்களில் இருந்து விலகிச் செல்கின்றதா?

இலங்கை பல் இனம், மதங்­களை கொண்­ட­தொரு நாடு. இதனால் அவ்­வி­னங்­க­ளுக்கும் மதங்­க­ளுக்கும் ஏற்ப விவாகம், விவா­க­ரத்து என்­பன நடை­பெற வேண்­டிய முறை பற்றி வெவ்­வேறு சட்ட முறைகள் உள்­ளன. உதா­ர­ண­மாக இஸ்­லா­மிய மக்­களின் விவா­கமும், விவா­க­ரத்தும் கண்­டிய விவாக முறையில் இருந்தும் விவா­க­ரத்து முறை­யி­லி­ருந்தும் வேறு­ப­டு­வதைப் போல பொதுச் சட்­டத்தின் கீழான விவாக முறையில் இருந்தும் விவாக ரத்து முறையில் இருந்தும் வேறு­ப­டு­கின்­றது. இதனால் இலங்­கையில் பல்­வேறு சட்­டங்கள் விவா­கத்­திற்கும் விவா­க­ரத்­துக்கும் அமுலில் உள்­ளன. இன்று நாம் பார்க்கப் போவது கரை­நாட்டுச் சிங்­கள மக்­க­ளுக்கும் தமி­ழர்­க­ளுக்கும் உரிய விவா­க­ரத்துப் பற்­றி­யே­யாகும்.

இஸ்­லா­மியச் சட்­டமும் கண்­டியச் சட்­டமும் விவா­க­ரத்­துக்­கான கார­ணங்­களில் முக்­கி­ய­மா­கவும் அடிப்­ப­டை­யா­கவும் கொள்­வது திரு­மண முறி­வை­யே­யாகும். இதனை ஆங்­கி­லத்தில் “The Break Down of the Marriage” என்பர். ஆனால் பொதுச் சட்­ட­மான உரோம டச்சுச் சட்டம் திரு­ம­ணத்­த­வறை (Matri Monial Fault) அடிப்­ப­டை­யாகக் கொண்டு விளங்­கு­கி­றது. இதற்கு அடிப்­ப­டை­யாக அமைந்­தது என்­ன­வெனில் விவா­க­மா­னது புனி­த­மா­னது என்றும் அதனைக் குலைக்க சிறு சிறு கார­ணங்­க­ளுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்ற வெளி­நாட்டு கலா­சா­ரத்தின் பின்­ன­ணியில் அது அமைந்­தி­ருப்­ப­தாகும்.

இஸ்­லா­மிய சட்டம் பல­தார மணத்தை அங்­கீ­க­ரிக்­கி­றது. அதனைப் போல் கண்­டி­யச்­சட்­டமும் கணவன்- மனைவி இரு­வ­ருக்கும் இடையில் ஏற்­ப­டு­கின்ற ஒப்­பந்­தத்­தின்­படி விவா­க­ரத்து பெற இட­ம­ளிக்­கி­றது. ஆகவே கண்­டியச் சட்­டத்தின் கீழும் இஸ்­லா­மியச் சட்­டத்தின் கீழும் இரு பகு­தி­யாரின் விருப்­பத்­திற்கு இணங்க விவா­க­ரத்து பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் உரோம டச்சுச் சட்­டத்தின் கீழ் இரு பகு­தி­யி­னரும் விவா­க­ரத்துச் செய்ய வேண்­டு­மானால் தகு­தி­யான நீதி­மன்றம் ஒன்றில் திரு­மணத் தவறை நிரூ­பித்தே அதனைப் பெற வேண்டும். இதனால் சிலர் உரோம டச்சு சட்­டத்தின் அடிப்­படை கொள்கை இலங்கை போன்ற நாட்­டுக்குப் பொருந்­தாது என்றும் அதனால் விவா­க­ரத்து பெற விரும்பும் ஒருவர் இல­கு­வான முறையில் அதனைப் பெற வழி­வகை செய்ய வேண்டும் என்றும் கூறுவர். இது சம்­பந்­த­மாக Report of the Commission on Marriage and Divorse என்ற sessional Paper No: 15 of 1959 ல் சில ஆலோ­ச­னைகள் முன் வைக்­கப்­பட்டு உரோம டச்சு சட்­டத்தின் கீழான பொது விவாக கட்டளைச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று சிபா­ரிசு செய்­யப்­பட்­டது. இதனை பலர் எதிர்த்­தனர். இச்­சி­பா­ரி­சு­களை ஏற்றுக் கொண்டால் குடும்பம் என்ற அலகு உறு­தி­யாக அமை­யாது. துஷ்­பி­ர­யோகம் செய்ய இட­முண்­டாகும் என்றும் குடும்­பத்தை பேணிக் காக்க வேண்­டு­மென்ற உய­ரிய எண்ணம் கணவன் மனை­வி­ய­ரி­டத்தில் இல்­லா­தொ­ழிந்து போகும் என்றும் கருத்து தெரி­வித்­தனர். இதனால் மேற்­படி கமி­ஷனின் அறிக்கை எடு­ப­டாமல் போயிற்று. ஆகவே தற்­போ­தைய நிலை என்­ன­வெனில் விவா­கத்­த­வறு அல்­லது இன்­னு­மொரு சொல்லில் சொல்­வ­தானால் நிவர்த்தி செய்­யப்­பட முடி­யாத திரு­மண முறிவு ஒன்றின் கீழேயே பொதுத் திரு­மணக் கட்­டளைச் சட்­டத்தின் கீழ் விவாகம் செய்வோர் கரை நாட்டுச் சிங்­க­ளவர், தமிழர் ஆகியோர் விவா­க­ரத்தை பெற வேண்டும் என்­ப­தாகும்.

விவா­க­ரத்­துக்­கான கார­ணங்கள்

உரோம டச்சுச் சட்­டத்தின் கீழ் விவா­க­ரத்­துக்கு இரண்டு கார­ணங்­க­ளே­யுள்­ளன. 1) சோரம் போதல் 2) வன்ம உறவு அறுத்தல், பொருள் கோடல் அல்­லது வியாக்­கி­யானம் மூலம் மேலே­யுள்ள இரண்டு கார­ணங்கள் கால­வ­ரையில் மூன்று கார­ணங்­க­ளா­யின. 1) சோரம் போதல் 2) வன்ம உறவு அறுத்தல் 3) முறை தவ­றிய பாலியல் நட­வ­டிக்­கைகள், ஆயுட்­கால சிறைத்­தண்­டனை. நீண்ட காலம் பிரிவு என்­ப­னவும் விவா­க­ரத்­துக்­கான கார­ணங்­க­ளாக மாறின. மேலே­யுள்ள மூன்­றா­வது காரணம் இலங்­கையில் நடை­மு­றையில் இல்லை.

ஏனெனில் இலங்­கையில் விவா­க­ரத்­தா­னது பாரா­ளு­மன்­றத்தின் நியதிச் சட்­டத்தின் கீழா­னது. ஆகவே அச்­சட்­டத்தில் உள்ள கார­ணங்­களை தவிர வேறு கார­ணங்­களை நீதி­மன்றம் வியாக்­கி­யா­னத்தின் மூலம் உட்­பு­குத்த முடி­யாது என்­ப­தி­னா­லாகும். மேற்­படி பொது விவாகச் சட்­டத்தின் கீழ் பின்­வரும் மூன்று கார­ணங்­க­ளுக்­கா­கவே இலங்­கையில் விவா­க­ரத்தை கோரலாம். அவை யாவன:

1) விவா­கத்தின் பின்னர் சோரம் போதல் 2) வன்ம உறவு அறுத்தல் 3) நிவர்த்­திக்க முடியா ஆண்மைப் பல­வீனம் விவா­கத்தின் போது இருந்­தது என்­ப­தாகும். இனி மேற்­படி கார­ணங்­களை விரி­வாக ஆராய்வோம்.

சோரம் போதல்

சோரம் போதல் என்­பது தனது துணை­யில்­லாத இன்­னு­மொ­ரு­வ­ருடன் விருப்­பத்­துடன் பாலி­யலில் ஈடு­ப­டு­வது. இது கல்­யா­ணத்தின் பின்னர் நடை­பெற்­றி­ருக்க வேண்டும். இதற்கு அடிப்­ப­டை­யா­னது என்­ன­வெனில், சமூ­கத்­தி­னதும் கலா­சா­ரத்­தி­னதும் நிய­மங்கள் இங்கு புறக்­க­ணிக்­கப்­ப­டு­வ­தாகும். எமது சமு­தாயம் சில பாரம்­ப­ரிய கலா­சார பண்­பாட்டை கொண்­டது. இது எமது நாட்­டுக்குள் மட்­டு­மல்ல, பிற நாட்­ட­வர்­களும் உதா­ர­ண­மாக இந்­தி­யாவில் வாழ்­ப­வர்­களும் இப்­பண்­பாட்டை கொண்டு வாழ்­கின்­றனர். கல் என்­றாலும் கணவன் புல்­லென்­றாலும் புருஷன்’’ என்று வாழ்­கின்­றனர். இதற்கு உச்­ச­மாக அமைந்­தி­ருந்­தது. ‘‘சதி’’ என்ற ஒரு முறை­யாகும். இது இந்­தி­யாவில் இருந்­தது. கணவன் இறந்­ததும் மனை­வி­யையும் உடன்­கட்டை ஏறு­கின்ற வழக்­க­மாகும். மீண்டும் ஒரு­வ­னுடன் வாழ இட­மில்லை என்­பதே அதன் அடிப்­ப­டை­யாகும். இது இலங்­கையில் இல்­லாத போதும் இதன் அர்த்­தத்தில் இலங்­கைக் குடும்பங்களும் வாழு­கின்­றன என்று கூறலாம். அத்­த­கைய குடும்­பத்தைச் சேர்ந்த ஒருவர் துணைவர் அல்­லது துணைவி இருக்கும் போது அவனுக்கு அல்லது அவளுக்கு தெரி­யாமல் இன்­னு­மொ­ரு­வ­ருடன் பாலியல் உறவு வைப்­பது சகிக்க முடி­யா­தது என சமூகம் கரு­து­வதால் அதன் அடிப்­ப­டையில் விவா­க­ரத்து பெற சட்­டத்தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இதில் சுவை­யான வினா என்­ன­வெனில் ஒரு பால் புணர்ச்சி சோரம் போதல் என்ற குற்­றத்­திற்குள் வரு­கின்­றதா? என்­ப­தே­யாகும். ஒரு பால் புணர்ச்சி என்­பது பெண்ணும் பெண்ணும் பாலி­யலில் ஈடு­ப­டு­வது. இது லெஸ்­பியன் என அழைக்­கப்­படும். மற்­றைய ஆணும் ஆணும் பாலி­யலில் ஈடு­ப­டு­வது ஹோமோசெக்ஸ் என்று கூறலாம்.

விவா­க­மான ஆண்கள் பலர் மேற்­படி புணர்ச்­சியில் ஈடு­ப­டு­வதை கேள்­விப்­ப­டு­கிறோம். நண்­பர்கள், உற­வி­னர்கள் ஆகி­யோ­ருடன் விவா­க­த்­திற்கு முன்னர் இருந்தே இத்­த­கைய நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­ட­வர்கள் விவா­கத்தின் பின்­னரும் அதனை தொடர்ந்து நடத்­தினால் சோரம் போகுதல் என்ற பிரிவின் கீழ் அக்­க­ண­வ­னுக்கு எதி­ராக மனைவி விவா­க­ரத்து கோர­லாமா? என்­பது வினா­வாகும். இப்­ப­டி­யான வழக்­குகள் நீதி­மன்­றத்­திற்கு வரு­வ­தில்லை. ஆனால் நடை­மு­றையில் உள்­ளன.

சோரம் போதலை எவ்­வாறு நிரூ­பிக்க வேண்டும்

பல வழக்­கு­களில் இது ஆரா­யப்­பட்­டது. சட்­டத்­து­றையில் ஈடு­பாடு உள்­ள­வர்கள் இந்த வழக்­கு­களை வாசிப்­ப­தற்­காக அவற்றை தரு­கிறேன்.

குரே எதிர் அரசி- 54 NLR 409

Churchman vs Churchman 1945. Denning L.J.

Preston Jones vs Preston Jones 1951- AC 391

Jayasinghe vs Jeyasingha 55NLR 410

Dharmasena vs Navaratne 72 NLR 419. இவ்­வ­ழக்­கு­களை வாசித்தால் சோரம் போதலை நிரூ­பிப்­பது எப்­ப­டி­யெனில் கிரி­மினல் குற்­றங்­களை நிரூ­பிப்­பது போல் எந்­த­வித சந்­தே­கத்­திற்கும் இட­மின்றி சோரம் போதலை நிரூ­பிக்க வேண்டும் என்­பது ஏற்றுக் கொள்­ளப்­பட்­டது என்­பதை காணலாம்.

ஆனால் அல­ரம்மாள் எதிர் நட­ராசா 76 NLR 56 என்ற வழக்கில் மேலே­யுள்­ள­தற்கு மாறான தீர்ப்பு ஒன்று வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்த வழக்கில் விவா­கத்தின் போது தனக்கு சிறு பரா­யத்தில் சித்த சுவா­தீனம் இருந்­தது என்­பதை மனைவி மறைத்து தன்னை விவாகம் செய்­த­தா­கவும், ஆகவே அவரை விலக்­கிட விவா­க­ரத்து வழங்­கு­மாறும் கணவன் நிவர்த்­திக்­கப்­பட முடி­யாத நோய் உள்­ளவள் என்­பதன் அடிப்­ப­டையில் விவா­க­ரத்தை கோரி இருந்தான். இக்­கோ­ரிக்­கை­யை­யேற்று நீதி­மன்றம் அவ­ரது விவாகம் செல்­லு­ப­டி­யா­காது எனத் தீர்த்­தது. இதனை எதிர்த்து உயர் நீதி­மன்­றத்­திற்கு மனைவி மேன்­மு­றை­யீடு செய்த போது அவள் கூறி­யது என்­ன­வெனில் வழக்­காளி விவா­க­ரத்து வழக்­கு­களை நிரூ­பிக்கும் போது எந்­த­வித சந்­தே­கத்­திற்கும் இட­மில்­லாமல் நிரூ­பிக்க வேண்­டுமே ஒழிய ஏள் தகமையின்கீழ் அல்ல என்று கூறியிருந்தாள்.

"Plaintff should have proved his case beyond reasonable, Doubt and not on a balance of probabizitis"

என்­று­கூ­றி­யிருந்தான். உயர்நீதிமன்றம் இதனை ஏற்காது பின்­வ­ரு­மாறு கூறி­யது.

விவாக குற்­றங்­களை நிரூ­பிப்­பது வழக் குகளின் நிகழ்வுக்கு அமைய இருக்கும் என பிர­புக்கள் சபை Blyth vs Blyth என்ற வழக்­கிலும் இலங்கை வழக்­கான Jayasinghe vs Jayasinghe என்ற வழக்­கிலும் நீதி­மன்­றங்கள் கூறி­யதை தாம் ஆமோ­திப்­ப­தா­கவும் ஆகவே தொடர்ந்தும் விவாக குற்ற வழக்­கு­களை சந்­தே­கத்­திற்கு இட­மின்றி நிரூ­பிக்க வேண்டும் என்­பது ஏற்­றுக்­கொள்­ளப்­பட முடி­யாது என்று ம்கூறி வழக்கை தள்­ளு­படி செய்­தது. ஆகவே இன்­றைய நிலை என்­ன­வெனில் சந்­தே­கத்­திற்கு இட­மின்றி நிரூ­பிக்க வேண்­டு­மென்ற தேவைப்­பாடு இல்லை. ஆனால் உறு­தி­யான நிரூ­பணம் அவ­சியம் என்­ப­தாகும். "Strict proof is Necessary, proof beyond Reasonable Doubt is not Required"

உறு­தி­யான நிரூ­பணம் சாத்­தி­யமா?

தற்­கால உலகில் வைத்­திய வச­தி­களும் அறி­வு­ரை­களும் இல­வ­ச­மாக கிடைக்­கின்­றன. சனத்­தொகை கட்­டுப்­பாட்­டுக்கும் குடும்ப நல­னுக்கும் அவ­சி­ய­மான அறி­வு­ரைகள் வழங்­கப்­ப­டு­கின்­றன. ஆகவே இந்த உபதேசத்தை நன்கு அறிந்­த­வர்கள் சந்­தர்ப்ப சூழ்­நி­லையால் தனது துணை­யல்­லாத இன்­னு­மொ­ரு­வ­ருடன் சோரம் போனாலும் அதனை நிரூ­பிப்­பது கஷ்டம். ஏனெனில் ஒரு பெண்ணின் உடல் கூறில் அவள் குழந்தை தரிக்­காத காலத்தை கணித்து இன்­னு­மொ­ரு­வ­ருடன் பாலி­யலில் ஈடு­பட்­டாலும் அதனை நிரூ­பிக்க முடி­யாது.

அதேபோல் கண­வனும் மனை­வியும் சில தேவை­க­ளுக்­காக புனை­யாக கதை கூட்டி ஒரு விவா­க­ரத்தை பெறவும் அதன் மூலம் இலாபம் பெறவும் முயற்­சிக்கும் வழக்­கு­களில் அவன் சோரம் போனான் என நிரூ­பிப்­பதும் கஷ்டம். இலங்கையில் ஒரு பிர­பல்­ய­மான வழக்கில் மனைவி ஒரு டாக்­ட­ரிடம் வைத்­தி­யத்­திற்கு சென்ற தினத்­தன்று அந்த வைத்­தியர் தகாத முறையில் அவ­ளுடன் பாலியல் வைத்தார் என்றும் ஆகவே தனக்கு மான நஷ்­ட­மாக பல லட்சம் தர வேண்டும் என்று தாக்கல் செய்த வழக்கும் தள்­ளு­படி செய்­யப்­பட்­டதை நாம் இங்கு காட்­டலாம்.

பெண் ஒருத்தி தான் இன்­னு­மொ­ரு­வரால் பாலியல் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும் கூறு­வதும் அவ­ளது மேக நோய் தனக்கு ஏற்­பட்­ட­தா­கவும் கூறு­வதும் ஆன வழக்­கு­களில் நீதி­மன்­றங்கள் அவற்றை உறு­திப்­ப­டுத்தும் சாட்­சி­யங்கள் இல்­லா­விட்டால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என தீர்த்­துள்­ளன. ஆகவே இன்று விவா­க­ரத்தின் கார­ணங்­களில் ஒன்­றான சோரம் போதல் என்­பதை நிரூ­பிப்­பது கஷ்டம் என்றும் நீதி­மன்­றங்கள் அதன் கீழ் விவா­க­ரத்து வழங்­கு­வதை ஏற்­றுக்­கொள்­வதை குறைத்­துள்­ளன என்­ப­தையும் நாம் காணலாம். இத­னாற்றான் சட்­டத்­த­ர­ணிகள் சோரம் போதலின் கீழ் விவா­க­ரத்தை குறைத்துள்ளனர் என்று கொள்ளவேண்டியிருக்கிறது. ஆகவே தற்போது விவாகரத்து வழக்­குகள் பொதுச் சட்ட நிபந்­த­னை­களில் அல்­லது கார­ணங்­களில் ஒன்றான சோரம் போதலை பெரும்­பாலும் கைவிட்­டுள்­ளன எனலாம். அதற்குப் பதி­லாக விவாக முறி­வையே காட்டி விவா­க­ரத்தை கோரு­கின்­றன. இனி பொதுக்­கூ­டத்தின் இன்­னு­மொரு கார­ண­மான வன்ம உற­வ­றுத்­தலை பார்ப்போம்.

வன்ம உறவு அறுத்தல்

விவா­க­ரத்­துக்­கான இன்­னு­மொரு தேவை விவாக பந்­தத்தை விட்டு வில­கு­வ­தாகும். இது வேண்­டு­மென்றும் திட்­ட­வட்­ட­மா­ன­தா­கவும் இனி இவ்­வி­வாக பந்தத்தில் இருப்­ப­தில்லை இன்றும் கருதி தனது தாம்­பத்­திய வாழ்வில் நின்றும் பிரி­வ­தாகும். சாதா­ர­ண­மாக குடும்­பத்­தவர் மத்­தியில் அடிக்­கடி சண்­டைகள் ஏற்­ப­டு­வதும் அதன் கார­ண­மாக கணவன் அல்­லது மனைவி ஒரு­வரை விட்டுப் பிரி­வதும் பின்னர் இணை­வதும் நடை­பெ­று­கின்­றது என்­பதை நாம் காண்­கின்றோம். அதனை வன்ம உறவு அறுத்தல் என்­ப­தற்குள் கொண்டு வர முடி­யாது. வன்ம உறவு அறுத்தல் என்­பது இனி இக்­கு­டும்­பத்தில் வாழ்­வ­தில்லை என திட­மா­கத்­தீர்­மா­னித்து வெளி­யே­று­வ­தாகும். ஒரு குடும்­பத்­த­லைவன் மனை­வி­யுடன் சண்டை பிடித்துக் கொண்டு இனிமேல் உன்­னுடன் வாழப் போவ­தில்லை என்று கூறி விட்டு வெளி­யேறும் போது வெளி விறாந்­தையில் அவர்­க­ளது செப்­புக்­குடம் இருப்­பதைக் கண்டான். உடனே தனது மகளின் பெய­ரைக்­கூறி இந்த செம்­புக்­கு­டத்தை எடுத்து உள்ளே வை என்று கூறி விட்டு வெளி­யே­றினான். அப்­போது அந்த மகள் தனது தாயிடம் அம்மா, அப்பா இனி­வர மாட்­டாரா? என்று கேட்டு அழ, தாய் மகளே பயப்­பட வேண்டாம். அவர் வீட்டை விட்டு வெளி­யேறும் போது குடத்தை எடுத்து வைக்கச் சொன்­னதில் இருந்து இந்த குடும்­பத்தின் நலனில் அவர் கரி­ச­னை­யாக இருக்­கிறார் என்­பதை நீ புரிந்து கொள்­ள­வில்­லையா? என்று தாய் சொன்னாள். அதன் படியே சில நாள் கழித்து பின்னர் தகப்பன் திரும்பி வந்தார். இது கற்­ப­னை­யான சம்­ப­வ­மாக இருந்­தாலும் சாதா­ரண பிரி­விற்கும் வன்­ம­மான பிரி­விற்கும் உள்ள வேறு­பாட்டை எடுத்­துக்­காட்­டு­வதை இங்கு காணக் கூடி­ய­தா­யி­ருக்­கி­றது.

சில்வா எதிர் மிசி­நோனா, இரா­ம­லிங்கம் எதிர் இராம லிங்கம், குண­வர்­தன எதிர் விக்­கி­ர­ம­சிங்க ஆகிய வழக்­கு­களில் எடுத்­துக்­காட்­டி­யது போல் உறவு அறுத்துச் செல்­ப­வ­ருக்கு மீண்டும் இணைய வாய்ப்­ப­ளித்தும் அவர் இணைய மறுக்கும் போதே இவ்­வன்ம உறவு அறுத்தல் ஏற்­ப­டு­கி­றது. உரோம டச்சு சட்­டத்தில் முதலில் குடும்­பத்தில் சேரு­மாறு கட்­ட­ளை­யி­டு­மாறு கேட்க வேண்டும். மறுக்கும் பட்­சத்தில் விவா­க­ரத்து தரு­மாறு கேட்க வேண்டும். ஆனால் இலங்­கையில் குடும்­பத்தில் சேரு­மாறு கட்­ட­ளை­யி­டு­மாறு கேட்க சிவில் நட­வ­டிக்­கைச்­சட்­டத்தில் பிரிவுகள் இல்லை. நேரடியாகவே விவா­க­ரத்தை கேட்­கலாம். ஆனால் தற்­போது குடும்ப ஆலோசகர் என்ற ஒருவர் ஒவ்­வொரு மாவட்ட நீதி­மன்­றத்­திலும் இருக்­கிறார். நீதி­மன்றம் முதலில் அவ­ரிடம் கணவன் மனைவி இரு­வ­ரையும் அனுப்பி சமா­தா­னப்­ப­டுத்­து­மாறும் வேண்­டிய ஆலோ­ச­னை­களை கூறு­வதும் நடை­பெ­று­கி­றது. இதன் மூலம் குடும்­பத்தை இணைக்க முயற்­சிக்­கப்­ப­டு­கி­றது. இணைய மறுக்கும் பட்­சத்­தி­லேயே விவா­க­ரத்தை விசா­ரித்து நீதி­மன்றம் தீர்ப்பை வழங்­கு­கி­றது.

சாதா­ர­ண­மாக வீட்டை விட்டு வெளி­யே­றுதல்

குடும்ப சண்டை வந்­ததும் மனைவி அல்­லது கணவன் வீட்டை விட்டு வெளி­யேறி தாய், தகப்பன் வீட்­டிற்கு அல்­லது சகோ­தரர் வீட்­டுக்குச் செல்­வது வழக்கம். அவ்­வாறு வெளி­யே­று­வது வன்ம உறவு அறுத்தல் என்று கூற முடி­யாது. இதை சாட்­டாக வைத்து பல கண­வன்மார் மனைவி தன்னை விட்டு பிரிந்து விட்டாள் என்றும் எனவே தனக்கு விவா­க­ரத்து பெற்றுத் தரு­மாறும் சட்­டத்­த­ர­ணி­யிடம் கண­வன்மார் கேட்­ப­துண்டு. பலர் வழக்­கு­களை தாக்கல் செய்­வதும் உண்டு. ஆனால் நீதி­மன்றம் அவர்­க­ளது கோரிக்­கையை ஏற்று விவா­க­ரத்தை வழங்­க­மாட்­டாது. ஏனெனில், வழக்கு ஒன்­றுக்கு தேவை­யான வழக்­கெ­ழு ­காரணம் இங்கு இல்­லை­யென்­ப­தா­லாகும். தீர்க்­கப்­பட்ட பல வழக்­கு­களில் சுட்­டிக்­காட்­டப்­பட்­ட­வை­களில் ஒரு உத­ராணம் என்­ன­வெனில், தாய்க்கு சுக­வீனம் என்று கூறி மகள் தாய் வீட்­டுக்கு சென்று தங்­கி­யது தவறு என்று கூறி கணவன் வழக்கு தாக்கல் செய்தான். நீதி­மன்றம் அவ­னுக்கு கூறி­யது என்­ன­வெனில், பெற்று வளர்த்த தாய் நோயாய் இருக்கும் போது அவ­ளது மகள் சென்று தாய்க்கு இறுதி உதவி செய்­வது தவறா? என்று கேட்டு கண­வ­னது வழக்கை தள்­ளு­படி செய்­தது. இன்­னு­மொரு வழக்கில் வீட்டை விட்டு வெளி­யே­றிய மனை­வியை மீண்டும் வீட்­டிற்கு வந்து வாழு­மாறு கேட்டு சந்­தர்ப்பம் கொடுத்­தாயா? என்று கேட்டு அதற்கு பதில் இல்லை என்று கிடைக்­கவே கண­வனின் விண்­ணப்­பத்தை தள்­ளு­படி செய்­தது. ஆகவே வன்ம உறவு அறுத்தல் என்­பது வீட்டை விட்டு வெளி­யே­று­வதால் வந்து விட­மாட்­டாது. குடும்ப அலகை உடைக்க வேண்டும் என்ற இறுதி எண்­ணத்­துடன் வெளி­யேறி மீண்டும் இணைய மறுப்­ப­தையே குறிக்கும். வெளி­யே­றுதல் இறு­தி­யா­ன­தாக இருக்க வேண்டும்.

வீட்டை விட்டு வெளி­யே­றா­மலே வன்ம உறவு நடை­பெ­றலாம்

சில சந்­தர்ப்­பங்­களில் ஒரு வீட்­டிற்­குள்­ளேயே வன்ம உறவு அறுத்தல் நடை­பெ­று­வ­துண்டு. யாழ்ப்­பாண வழக்­கொன்றில் ஆசி­ரியை ஒருவர் தனது கண­வ­னுடன் தொடர்ச்­சி­யாக சண்டை பிடிப்­பது வழக்கம். இதற்கு காரணம் புருஷனார் ஒரு அப்பாவி மனிதராகும். அவரும் ஆசி­ரி­ய­ராவார். மனை­வி­யான ஆசி­ரியை தனது வீட்டில் உள்ள அறை ஒன்றில் தங்­கி­யி­ருந்த இன்­னு­மொ­ரு­வ­ரு­ட­னேயே உணவும் மற்றும் தேவை­க­ளையும் பகிர்ந்து கொண்டு வாழ்ந்தாள். இதனால் ஆசி­ரியர் அவள் மீது வழக்கை தாக்கல் செய்து விவ­கா­ரத்தை கோரிய போது தான் வீட்­டி­லேயே இருப்­ப­தா­கவும் வேறு எங்கும் செல்­ல­வில்லை என்றும் கூறி வழக்கை தள்­ளு­படி செய்­யும்­படி கேட்டார்.

ஆனால் நீதி­மன்றம் சகல விட­யங்­க­ளையும் கேட்­ட­றிந்து வன்ம உறவு அறுத்­தலின் கீழ் ஆசி­ரி­ய­ருக்கு விவ­கா­ரத்து வழங்­கி­யது. ஆகவே வன்ம உறவு அறுத்தல் என்­ப­தற்கு கணவன் மனை­வி­யரில் யாரா­வது ஒருவர் தாம் வசிக்கும் மனையில் இருந்து வெளி­யேறி வேறு இடத்­திற்குச் சென்று வாழ வேண்டும் என்ற நிய­தி­யில்லை எனலாம். இதனை புனை­வான வன்ம உறவு அறுத்தல் என்பர் Fulfort VS Fulfort என்ற தென் ஆபி­ரிக்க வழக்­கிலும் ஆரி­ய­பாலா எதிர் ஆரி­ய­பாலா வழக்­கிலும் இது நன்­றாக ஆரா­யப்­பட்­டுள்­ளது.

புனை­வான வன்ம உற­வ­றுத்தல் பற்றி Constructive Desertion

இலங்­கை­யிலும் தென் ஆபி­ரிக்­கா­விலும் கொடூ­ர­மா­னது விவ­கா­ரத்­துக்கு ஒரு கார­ண­மாக கொள்­ளப்­ப­டு­வ­தில்லை. ஆனால் கண­வ­னது அல்­லது மனை­வி­யி­னது நடத்­தை­யை­கொண்டு அங்கு வன்ம உறவு அறுத்­த­லுக்குத் தேவை­யான நிகழ்­வுகள் உண்டா எனப் பார்ப்­ப­து­ணடு. உதா­ர­ண­மாக ஒருவர் தனது மனை­வியை தொடர்ந்தும் துன்­பு­றுத்­து­வதும் அடிப்­பதும் உதைப்­ப­து­மாக இருந்தால் அங்கே நடப்­ப­வை­களை புனை­வான வன்ம உறவு அறுத்­த­லாக கொள்­ள­லாமா? என நீதி­மன்றம் ஊகிக்­கலாம். கொடூ­ர­மா­னது அதி­க­மாக சீதனம், புறங்­காட்டி நடத்தல், மனை­வியை கவ­னிக்­காது விடுதல், நிபந்­த­னை­யான வார்த்­தைகள், பெற்­றோர்­களை தகாத வார்த்­தையால் திட்­டுதல் போன்­றவை புனை­வான வன்ம உறவு அறுத்­த­லுக்கு அடிப்­ப­டை­யாக நீதி­மன்­றங்கள் கொள்­கின்­றன. விக்­கி­ரம சூரிய எதிர் விக்­கி­ரம சூர்ய வழக்கில் 68 NLR 155 இதனை காணலாம்.

பின்­வ­ரு­வ­ன­வற்­றையும் புனை­வான வன்ம உறவு அறுத்­த­லாக நீதி­மன்­றங்கள் கொண்­டுள்­ளன.

1. டீமெல் எதிர் டீமெல் 54 NLR என்ற வழக்கில் பொய்­யாக தனது மனைவி வேறு ஒரு­வ­ருடன் சோரம் போகிறாள் என்று பிர­சாரம் செய்து அவளை வீட்டில் இருந்து வெளி­யேறச் செய்­வது புனை­வான வன்ம உற­வ­றுத்தல் என கொள்­ளப்­பட்­டது.

2. கண­வனின் பாலியல் தொடர்­புக்கு விருப்­ப­மில்­லாமை புனை­வான வன்ம உற­வ­றுத்­த­லாக கொள்ள முடி­யாது. ஆனால் மனைவி பாலி­ய­லுக்கு மறுப்­பது புனை­வான வன்ம உறவு அறுத்தலுக்குள் வரும் என்று விஜ­ய­ரத்ன எதிர் விஜ­ய­ரத்ன வழக்கில் 47 NLR 324 இல் தீர்க்­கப்­பட்­டது.

3. அதிக மது போதை, கொடூரம் ஆகி­யவை புனை­வான வன்ம உறவு அறுத்தல் எனக் கொள்­ளப்­படும்.

4. நீண்ட நாள் வீடு திரும்­பாமல் இருப்­ப­வர்­க­ளையும் புனை­வான வன்ம உறுவு அறுத்­த­லுக்குள் கொண்டு வரலாம். ஆனால் சிறையில் இருப்­ப­வர்கள் இதனுள் அடங்கார்.

ஆண்மை இன்மை

விவா­க­ரத்­துக்கு தேவை­யான இன்­னு­மொரு காரணம் ஆண்­மை­யின்­மை­யாகும். ஆண்மை இன்மை விவாகம் செய்யும் தினத்தில் இருந்திருக்க வேண்டும். மலடி என்பதும் மலடன் என்பதும் இதனுள் அடங்காது. தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாதவர்களாக இருக்க வேண்டும். இந்த ஆண்மை இன்மை அலரம்பாள் வழக்கின் தீர்ப்புப்படி உடலின் எந்த உறுப்பிலும் இருக்கலாம் எனக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் பெண் பாலியலுக்கு தகுதியானவள், ஆனால் சிறுவயதில் இருந்து பித்துப் பிடித்தவள் மூளையிலேயே பழுது ஆயினும் அதனையும் ஆண்மை இன்மைக்குள் கொண்டுவரலாம் என நீதிமன்றம் கூறியது. ஆண்மை இன்மை பிரத்தியேக உறுப்பில் இருக்க வேண்டியதில்லை.

இன்றைய விவாகரத்து நிலை

மேலே கூறிய காரணங்களே விவாகரத்துக்கு காரணிகளாக அமையும் என சட்டம் கூறினாலும் நடைமுறையில் உள்ள விவாகரத்து வழக்குகளில் அக் காரணங்கள் பெரிதாக காட்டப்படுதில்லை. சிறு சண்டைகள், சீதனம் இன்மை, வெளிநாட்டில் உறவினருடன் சேர வேண்டும் என்பவை போன்ற காரணங்களை காட்டி பல வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. உண்மையான வழக்கெழுகாரணம் இருப்பதில்லை. குடும்ப வாழ்வை ஒரு முற்றுக்கு கொண்டு வர வேண்டுமென்ற எண்ணம் இருப்பதில்லை. குடிப்பது வழக்கம். வீட்டைக் கவனிப்பதில்லை வேலைக்கு போவதில்லை என்பன போன்ற காரணங்களை காட்டியும் விவாகரத்துக்கள் பெறப்படுகின்றன. ஒரு தலைப்பட்ச தீர்ப்பின் மூலம் இவ்விவகாரத்து வழக்குகள் தீர்க்கப்படுகின்றன. ஒரு தலைப்பட்சமான தீர்ப்பில் கைக்கொள்ள வேண்டிய நடைமுறைகள் நீதிமன்றத்திற்கு சரியாக நடைபெற்றது என்று காட்டுவதற்காக தேவையான தகவல்களை கொடுப்பது மூலம் விவாகரத்தை பெற்றுக் கொள்வதையும் நாம் இன்று காணக்கூடியதாயிருக்கிறது. இவற்றை நோக்கும் போது இன்று விவாகரத்து வழக்குகள் திருமணத்தவறு என்பதில் இருந்து விலகி திருமண முறிவு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் செல்கிறது எனலாம்.

சட்டத்தரணி கே.ஜி.ஜோன்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல