ஓப்பியம் என்பது ஒரு வகை பாப்பிச் செடியில் விளைவது. பார்ப்பதற்கு செம்பருத்திப் பூ மாதிரி அழகாகத்தான் இருக்கும். நடுவே பச்சைக் காய் ஒன்று. கீறினால் பிசின் போல வடியும். தொட்டால் பிடித்துக் கொள்ளும்! இந்தச் செடிக்கு அடிமையாகி வாழ்க்கையைத் தொலைத்தவர்களில் பேரரசர்களும் பெரும் கலைஞர்களும் மகா கவிகளும் அடக்கம்.
ஓப்பியத்தின் வரலாறு நம்மை விடப் புராதனமானது. கிறிஸ்து பிறப்பதற்கு மூவாயிரத்து நானூறு வருடத்திற்கு முன்பே இதைப் பயிரிட்டிருக்கிறார்கள். சரித்திரப் புத்தகத்தில் வரும் மெசபடோ மிய, சுமேரிய, எகிப்து நாகரிகங்கள் எல்லாவற்றிலும் அபின் வளர்த்து மஜா பண்ணியிருக்கிறார்கள்."தூக்கம் வரவில்லையா? ஆண்மைக் குறைவா? பேதி பிடுங்கிக் கொண்டதா? அபின் சாப்பிடுங்கள், சரியாகிவிடும்.'' என்று மருத்துவர்கள் சகட்டு மேனிக்கு இதை நோயாளிகளுக்குத் தந்து தங்கமான டாக்டர் என்று பெயர் வாங்கினார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் அபினை மளிகைக் கடைதோறும் விற்றார்கள்; மசாலா டீயில் கலந்து குடித்தார்கள். குழந்தைகள் அழுது அடம் பிடித்தால் அவர்களை அமைதிப்படுத்த நாக்கில் சற்று அபினைத் தடவித் தூங்கச் செய்தார்கள். இந்தச் செடியின் பயங்கரமான பக்க விளைவுகளை அவர்கள் அறிந்து கொள்வதற்கு ரொம்ப நாள் பிடித்தது. ஓப்பியம் செடியை இந்தியாவுக்குக் கொண்டு வந்தவர் சக்ரவர்த்தி அலெக்ஸாண்டர்.
போதை மருந்து மட்டும் தனியாக வந்தால் சமாளித்து விடலாம். ஆனால் அது தன்னுடன் இரண்டு வலுவான கூட்டணிகளைச் சேர்த்து வைத்துக் கொண்டு எதிரிகளை டெபாசிட் இழக்க வைக்கிறது: ஒன்று தீவிரவாதம், மற்றது லஞ்ச ஊழல். முன்னொரு காலத்தில் ஆப்கானிஸ்தானில் சோவியத் ரஷ்யா வந்து உட்கார்ந்து தாதாகிரி பண்ணிக் கொண்டிருந்தது. தாடிக்காரத் தாலிபான்கள் அவர்களை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தார்கள். அமெரிக்காவின் முழு சப்போர்ட் அவர்களுக்குத்தான். எனவே பாகிஸ்தானின் உளவுத் துறை, தாலிபான் தீவிரவாதிகளை அமுல் ஊட்டி வளர்த்தது. சுதந்திரப் போராட்டத்துக்குக் காசு வேண்டாமா? ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லை முழுவதும் ஏக்கர் ஏக்கராக ஓப்பியம் வயல்கள், நூற்றுக் கணக்கில் போதை மருந்து பாக்டரிகள் முளைத்தன. அபினிச் செடியின் அத்தனை பாகங்களையும் காய்ச்சி வடித்துக் கெமிக்கல்களில் கரைத்து மார்பின், ஹெராயின் என்று பலப்பல பயங்கரங்கள் தயாரித்தார்கள். எல்லாம் இந்தியா வழியாகத்தான் மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. முதலில் பஞ்சாப் பயங்கரவாதிகள், பிறகு காஷ்மீர் விடுதலை வீரர்கள் இந்தப் புண்ணியச் சங்கிலியில் ஒத்துழைத்தார்கள். இதைக் கண்டு அமெரிக்க உள்துறை பதறியது; ஆனால் வெளித்துறை அவர்களை அதட்டி அடக்கிவிட்டுப் பாகிஸ்தானைப் பார்த்து "உம்! நடத்துங்க!'' என்று கண்ணடித்தது. கம்யூனிசம்தான் ஹெராயினை விட பயங்கரமான போதை என்பது அவர்களுடைய எண்ணம்.
விளைவு இன்றைக்கு போதை மருந்து தயாரிப்பு மிகப் பெரிய தொழிலாக வளர்ந்து லட்சக்கணக்கான குடும்பங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. சர்க்காரின் சகல மட்டங்களிலும் அவர்களுக்குச் செல்வாக்கு உண்டு. எல்லைக் காப்புப் படையினர், போதை தடுப்புப் போலீஸ், அரசியல்வாதிகள் என்று அவர்களுடைய மாமூல் பட்டியல், ஒரு மாபெரும் பட்டியல். பர்மா போன்ற நாடுகளில் ராணுவ அதிகாரிகளே சம்பளம் போதவில்லை என்று சாயங்கால வேளைகளில் சைடு பிசினஸாகப் போதை மருந்து தயாரிக்கிறார்கள். அவர்களை அடக்க நினைத்தால் அரசாங்கமே கவிழ்ந்து விடும்! இந்தியாவுக்கும் பர்மாவுக்கும் இடையே இருக்கும் எல்லைப் பகுதி, காடுகளும் கால்வாய்களும் நிறைந்த சிக்கலான புவியியல். அதிலும் எல்லையோரக் கிராமத்து மக்கள் கடத்தல் வேலைகளுக்கு தாவூதும் தலைகுனியும் ஐடியாக்கள் வைத்திருக்கிறார்கள். ஒரு முறை ஒரு பர்மா பசுமாடு இந்தியப் பகுதிக்கு வந்து எதிர்பாராமல் டாய்லெட் போய்விட்டது. மாடு மேய்க்கும் சிறுவன் அவசரமாகச் சாணக் குவியலுக்குள் கை விட்டுத் துழாவி எதையோ எடுத்து பத்திரப்படுத்தினான். "கொண்டாடா அதை'' என்று வாங்கிப் பார்த்தால், ப்ளாஸ்டிக் குழாய்க்குள் பத்திரமாக சீல் செய்யப்பட்டு ஹெராயின்!
பர்மா - லாவோஸ் - தாய்லாந்து பகுதிக்குத் "தங்க முக்கோணம்'' என்று பெயர். இதுதான் போதைத் தொழிலின் ஊற்றுக் கண். இங்கே டன் கணக்கில் தயாராகும் ஹெராயினும் மற்ற சரக்குகளும் இந்தியா வழியாக உலகம் முழுவதற்கும் ஏற்றுமதி ஆகின்றன. மணிப்பூர், நாகாலாந்து, அஸ்ஸாம் கிராமங்களில் கடத்தல் தொழில் குடிசைத் தொழிலாக நல்ல வருமானம் தந்து கொண்டிருக்கிறது. சரக்கை டெலிவரி எடுத்தோமா, பாக் செய்து லேபிள் ஒட்டி அமெரிக்காவுக்கு அனுப்பினோமா என்பதுடன் நிற்காமல் தாங்களும் லேசாகப் புறங்கையை நக்கிப் பார்க்க முயன்றதில், இந்த எளிய கிராம மக்களைப் போதை வேதாளம் "பச்சக்'' என்று பிடித்துக் கொண்டு விட்டது. இன்று மணிப்பூரில் போதைக்கு அடிமையானவர்களில் அறுபத்தேழு சதவிகிதம் குழந்தைகள். பெரும்பாலும் ஏழாம் வகுப்பு தாண்டுவதற்குள்ளேயே இந்தப் பழக்கம் ஏற்பட்டு விடுகிறது. அவர்கள் எப்படியெல்லாம் ஊசி, சொட்டு மருந்து பாட்டில் மூலமும், ஜிகினா காகிதத்தில் சூடுபடுத்தியும் போதை ஏற்றிக் கொள்கிறார்கள் என்பதை குடும்பத்தார் படிக்கும் பத்திரிகையில் விவரிக்க முடியாது. அதற்குப் பல பொறுப்பில்லாத வெப் சைட்டுகள் உள்ளன.
இருநூறு வருடங்களுக்கு முன்னால் சீனாவுக்கு ஓப்பியம் பழக்கத்தை ஏற்படுத்தியவர்கள் ஆங்கிலேயர்கள். கிழக்கிந்தியக் கம்பெனியார், இந்தியாவில் விளைந்த அபினியைக் கப்பல் கப்பலாக சீனாவில் கொண்டு போய் விற்றார்கள். 1800 - களில் பிரிட்டிஷ் அரசாங்கம்தான் உலகத்தின் மாபெரும் போதைப் பொருள் கடத்தல் கும்பல். சீக்கிரமே சீனா முழுவதும் போதையில் மூழ்கி வேதனையில் வீழ்ந்தது. இதைக் கண்டு பொறுக்காத அரசாங்க அதிகாரி ஒருவர் தன்னந்தனியாக பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போர் முரசு கொட்டினார். சீனாவில் பிறந்த அந்த டி.என்.சேஷனின் பெயர் லின் சே சூ. ஓப்பியம் விற்ற வெள்ளைக்காரர்களையெல்லாம் பிடித்து உள்ளே தள்ளி அவர்கள் கொண்டு வந்த சரக்கையும் தீ வைத்து அழித்தார்.
பிரிட்டனுக்குக் கடுப்பேறி விட்டது. பொன்முட்டையிடும் வியாபாரத்தை ஓர் அரசாங்க அதிகாரி தடுத்து நிறுத்துவதா என்று கோபித்துச் சீனா மீது படை எடுத்து வந்துவிட்டார்கள். அவர்களுடைய போர்த் தந்திரத்துக்கும் நவீன டெக்னாலஜிக்கும் ஈடு கொடுக்க முடியாமல் சீனப் படைகள் சிதறின. முதலாவது ஓப்பியம் போர் என்று சரித்திரம் சொன்ன இந்தச் சண்டை நடந்த வருடம் 1841. கடைசியில் தோற்றுப் போன சீனாவை முட்டி போட வைத்து நான்கிங் ஒப்பந்தம் என்று ஒரு தலைப் பட்சமான ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினார்கள். அதன்படி சீனாவில் ஓப்பியம் விற்பனை தடையில்லாமல் நடக்கவும், லின் சே சூவை தண்ணியில்லாக் காட்டுக்கு டிரான்ஸ்பர் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டது. நஷ்ட ஈடாக சீனா ஹாங்காங்கை வேறு ஆங்கிலேயர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுக்க வேண்டியிருந்தது. (அப்போது பிறந்த ஹாங்காங் பிரச்சினை இன்று வரை தொடர்கிறது.) பதினைந்து வருடம் கழித்து மற்றொரு ஓப்பியம் போர். மறுபடி சீனாவுக்குத்தான் தோல்வி.
ஓட்டப்பம் வீட்டையே சுட்டது: அமெரிக்காவில் ரயில் பாதை போடவும் சுரங்கங்களில் வேலை செய்யவும் ஏராளமான சீனர்களைக் கொத்தடிமைகளாகக் கூட்டிப் போனார்கள். போனவர்கள், போன இடத்தில் போதை மருந்தை விரிவாகப் பரப்பி விட்டார்கள்! நல்ல குடும்பத்தைச் சேர்ந்த வெள்ளைப் பெண்கள் பலரும் அபினுக்கு அடிமையாகி, தத்தம் கணவர்களைத் துறந்து சீனாக்காரத் தொழிலாளர்களுடனே வாழப் போய்விட்டதாகப் பரபரப்புப் பத்திரிகைகள் கவர் ஸ்டோரி வெளியிட்டன.
கவலை கொண்ட அமெரிக்கா விரிவான போதைப் பொருள் தடுப்புச் சட்டங்கள் இயற்றியது. அன்று ஆரம்பித்து அமெரிக்கா, ஐரோப்பா முழுவதும் வைரஸ் மாதிரி பரவிய போதைப் பழக்கத்தைப் பிறகு ஒழிக்கவே முடியவில்லை. 1998 -ல் அமெரிக்க அரசாங்கம் ஒரு சர்வே எடுத்துப் பார்த்துவிட்டு அதிர்ந்து போய் அதன் பிறகு சர்வேக்களையே நிறுத்திவிட்டது! அமெரிக்காவில் மட்டும் அபினை விழுங்குவோர், உறிஞ்சுவோர், ஊதுவோர் எண்ணிக்கை 24 லட்சத்தைத் தாண்டி விட்டது. பதின் வயசுப் பசங்களெல்லாம் கெட்டுக் குட்டிச்சுவராகிக் கொண்டிருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக