ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

ஆறுதல் தீர்ப்பு !



- ஞாநி

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினால், ராஜீவ் கொலை வழக்கின் தூக்கு தண்டனைக் கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் உயிர் தப்பி வாழும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இது நிச்சயம் பல தரப்பினருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடிய தீர்ப்பேயாகும். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் இவர்களையும் சக கைதி நளினியையும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்வதுதான் அடுத்த சிறந்த நடவடிக்கையாக இருக்கமுடியும். அதை ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு செய்யும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. அப்படிச் செய்தால் அதை தேர்தல் கால ஆச்சரியங்களில் ஒன்றாகவே கருதலாம்.



மரண தண்டனையிலிருந்து இப்போது இந்த மூவரும் சில மாதங்கள் முன்னர் வீரப்பன் கூட்டாளிகளும் மீண்டதற்கான காரணங்கள் இன்னமும் திருப்திகரமானவை அல்ல. மரண தண்டனை என்பதே ஒழிக்கப்படவேண்டும் என்ற அடிப்படையில் இவர்களின் தண்டனை ஆயுளாகக் குறைக்கப்படவில்லை. இவர்களுடைய கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் அரசு காட்டிய தாமதத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. உடனே தூக்கில் போட்டிருக்க வேண்டும்; அல்லது மன்னிக்கப்பட்டிருக்கவேண்டும்; அப்படிச் செய்யாமல் தாமதித்த தவறினால் இவர்களுடைய வாழ்க்கைக்கான உரிமை பாதிக்கப்பட்டுவிட்டது என்ற அடிப்படையில்தான் உச்ச நீதி மன்றம் மரண தண்டணையை ஆயுள் சிறையாகக் குறைத்திருக்கிறது.

இது புதியதல்ல. 1983ல் தமிழ்நாட்டில் நடந்த விஷ ஊசிக் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர் வைத்தி. பணத்துக்காகப் பலரை ஏமாற்றி வரவழைத்து விஷ ஊசி போட்டுக் கொன்றுவிட்டு பனத்தை சுருட்டிய குற்றம் பற்றிய வழக்கு இது. இதில் மரண தண்டனை விதிக்கப்பட்ட வைத்திக்கு அதை நிறைவேற்ற இரண்டு வருடங்கள் தாமதமாவதைக் காட்டி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சின்னப்ப ரெட்டியும் ஆர்.பி.மிஸ்ராவும் அந்த தண்டனையை ஆயுளாகக் குறைத்தனர். அரசியல் சட்டத்தின் 21வது பிரிவு அளிக்கும் வாழ்க்கைக்கும் சுதந்திரத்துக்கும் ஆன உரிமையை அந்தத் தாமதம் பாதிப்பதால் இப்படி தீர்ப்பளிப்பதாக தெரிவித்தனர்.

இதன்படி தண்டனை விதித்து இரு வருடமே ஆனது தாமதம் என்ற கருத்துப்படி பார்த்தால் பத்தாண்டுகளுக்கும் முன்னதாகவே ராஜீவ் மரண தண்டனைக் கைதிகள் உட்பட பல கைதிகளின் மரண தண்டனை குறைக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இருபதாண்டுகள் கழித்துத்தான் தாமதம் கணக்கில் எடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு இன்னொரு காரணம், நம் நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்படுவதற்கு எடுக்கும் நேரமும் முன்பை விட அதிகமாவதுதான். கொல்கத்தாவில் தூக்கில் இடப்பட்ட தனஞ்செய் 14 ஆண்டுகள் சிறையில் இருந்தபின் தூக்கில் போடப்பட்டார். அவரது அப்பீல் மனு 1994ல் தாக்கல் செய்யப்பட்டதை விசாரணைக்கு எடுக்கவே நீதிமன்றத்துக்கு எட்டாண்டுகள் ஆகியிருக்கிறது.

இப்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் கொஞ்சம் பேரை மரணத்திலிருந்து காப்பாற்றியிருந்தாலும், இனி வரப் போகும் வழக்குகளில் சில ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்திவிடலாம். செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடங்கி உச்ச நீதி மன்றத்தில் அப்பீல் முடிந்து குடியரசுத்தலைவர் கருணை மனுவை குறிப்பிட்ட காலவரம்புக்குள் பரிசீலித்து முடிவு தெரிவித்துவிடவேண்டுமென்ற காலவரம்பு நிர்ணயிக்கப்படவேண்டிய கட்டாயம் இப்போது ஏற்படுகிறது. அப்படி நிர்ணயிக்காவிட்டால், எல்லாமே காலதாமதமான தூக்கு தண்டனை என்ற பிரிவின் கீழ் வந்துவிடும்.

காலவரம்பை நிர்ணயித்தால் வரப் போகும் ஆபத்து என்ன ? பல சமயங்களில் அப்பாவிகள், தவறு செய்யாதவர்கள் தண்டிக்கப்பட்டிருந்தால், தவறு தெரியவரும் வாய்ப்பே இல்லாமல் அவர்கள் கொல்லப்படுவார்கள். இப்போது ராஜீவ் கொலை வழக்கிலேயே மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பேரறிவாளன் மனித வெடிகுண்டில் பயன்படுத்தப்பட்ட பேட்டரி செல்களை அதற்கென்று தெரிந்தே வாங்கிக் கொடுத்தார் என்பதுதான் குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டில் பல ஓட்டைகள் இருந்தன. எந்தப் பெட்டிக்கடையிலும் பேட்டரி செல் வாங்கினால், ரசீது கொடுப்பதில்லை என்பது நடைமுறை உண்மை.இங்கே ரசீது சாட்சியமாகக் காட்டப்பட்டது. அப்படியே அந்தக் கடையில் பேரறிவாளன் வாங்கியிருந்தாலும் அந்த செல்கள்தான் வெடிகுண்டில் பயன்படுத்தப்பட்டன என்பதை எப்படி நிரூபிக்கமுடியும் என்றும் புரியவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, அண்மையில் பேரறிவாளனை வழக்கில் விசாரித்து வாக்குமூலத்தைப் பதிவு செய்த காவல் அதிகாரி,பேரறிவாளன் சொல்லாததை சொன்னதாகத் தான் எழுதியதாக பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். அது என்ன ? இந்த செல்களை ராஜீவ் கொலைக்கு பயன்படுத்தப் போவதாக தனக்குத் தெரியும் என்று பேரறிவாளன் சொல்லவில்லை. ஆனால் தெரிந்தே வாங்கிக் கொடுத்ததாக ஒப்புக் கொள்வதாக அதிகாரி எழுதியிருக்கிறார்.

இந்தத் தவறான ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனை உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவுப் படி காலதாமதம் தவறு என்று கருதி காலவரம்பு நிர்ணயித்து முன்கூட்டியே தூக்கில் போட்டிருந்தால், அது எவ்வளவு பெரிய கொடுமையாக அநீதியாக இருக்கும் !

எனவே மரண தண்டனை விதிக்கப்பட்டோருக்கு அதை நிறைவேற்ற காலதாமதம் செய்வது தவறு என்ற உச்ச நீதிமன்றத்தின் பார்வையால், இனி காலதாமதங்கள் இல்லாமல் நிறைவேற்றத் தொடங்கினால், நிச்சயம் அப்பாவிகள், நிரபராதிகள் வீணாக உயிரை இழக்கும் ஆபத்தும் ஏற்படும். இப்போது கூட பேரறிவாளன் விஷயத்தில், அவரை விசாரித்த விசாரணை அதிகாரி தெரிவிக்கும் புதிய தகவலின் அடிப்படையை உச்ச நீதிமன்றம் ஏற்பதானால், பேரறிவாளனை முற்றாக குற்றவாளி அல்ல, என்றே விடுவிக்க வேண்டியிருக்கும். ஆனால் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் இப்படி எழுந்திருக்கும் புதிய விஷயங்களுக்குள் எல்லாம் செல்லாமல், வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டது சரியா தவறா என்ற கேள்விக்குள் போகாமல், காலதாமதம் என்ற அடிப்படையில் மட்டுமே தண்டனையை மாற்றி அமைத்துள்ளது.

மரண தண்டனை விதிக்கப்படுவோரில் நிரபராதிகளும் இருக்கமுடியும் என்பதோ அது அவர்களை தூக்கில் இட்டபின்னர்தான் தெரியவரும் கொடுமை நடக்கும் என்பதோ வரலாற்றில் புதியதல்ல. புகழ் பெற்ற வழக்கு அமெரிக்காவின் ஜார்ஜ் பிராண்டன் வழக்கு. அவர் மீதான கொலைக் குற்றத்துக்கு மறுக்கமுடியாத சாட்சியம் இருப்பதாக சொல்லி மரண தண்டனை விதிக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டார். சில மாதங்களுக்குப் பின்னர் வேறொருவர் கொலையை பிராண்டன் செய்யவில்லை என்று தானே செய்ததாகவும் ஒப்புக் கொண்டார். விசாரணையில் பிராண்டன் நிரபராதி என்பது நிரூபிக்கப் பட்டுவிட்டது.

எனவே மரண தண்டனை என்பதே முற்றாக ஒழிக்கப்படவேண்டியதாகும்.

இதை ஏற்காதவர்கள் வைக்கும் வாதம் என்ன? சில நிரபராதிகள் தவறுதலாக உயிரிழப்பார்கள் என்பது கிடக்கட்டும். கொடூரமான கொலைகள் செய்தவர்கள், குற்றங்கள் செய்தவர்கள் ஏன் அதற்காகக் கொல்லப்படக் கூடாது என்பதாகும். அப்படிப்பட்ட கொடூரர்களுக்கு மரண தண்டனை விதித்தால்தான் இனி அப்படிப்பட்ட குற்றங்கள் பெருகாமலும் நடக்காமலும் தடுக்கமுடியும் என்பதே இந்தத் தரப்பின் வாதம்; நம்பிக்கை.

இதைப் பற்றி முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் பல வருடங்கள் முன்னரே அழகாகக் கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் கொலைக் குற்றவாளிகளை மூன்று விதமாக வகைப்படுத்துகிறார். ஒரு நொடியில் உணர்ச்சிவசப்பட்டு கொல்லுகிறவர்கள். இவர்கள் நிச்சயம் தூக்குக் கயிற்றைப் பற்றி முன்கூட்டியே யோசிக்கக்கூடப் போவதில்லை. எனவே அந்த பயன் அவர்களை தடுக்காது. இரண்டாவது வகையினர் இறுகிய மனம் உடைய கிரிமினல்கள். இவர்களும் (சாவுக்கு) மரண தண்டனைக்கு பயப்படப் போவதில்லை. மூன்றாவது வகையினர் கொள்கை அடிப்படையிலோ, தங்களுடைய ஆழ்ந்த நம்பிக்கை அடிபப்டையிலோ, அரசியல அடிப்படையிலோ கொலையில் ஈடுபட்டவர்கள். இவர்களும் மரணத்துக்கு அஞ்சுவதில்லை. எனவே மரண தண்டனை அச்சத்தை ஏற்படுத்தி கொலைக் குற்றங்களைக் குறைக்கும் என்று நம்புவது அர்த்தமற்றது.

இதை இங்கிலாந்தில் ராயல் கமிஷன் 1866லேயே சுட்டிக் காட்டியது. அங்கு ஒரு நகரத்தில் மரண தண்டனைக் கைதிகளாக இருந்த 167 பேரில் 164 பேர் தங்கள் கண் முன்பாகவே வேறு ஒருவர் தூக்கில் இடப்பட்டு கொல்லப்படுவதை பார்த்தவர்கள். ஆனால் அது ஒன்றும் அவர்கள் குற்றம் செய்வதை தடுத்துவிடவில்லை. எனவே தூக்கு தண்டனையை ஒழித்துவிடலாம் என்று ராயல் கமிஷன் தெரிவித்தது.

இன்று ஐரோப்பா முழுவதும் மரண தண்டனை இல்லை. மிக அதிகமான மரண தண்டனை விதிக்கும் நாடுகள் சீனா, சவுதி அரேபியா, காங்கோ, இரான், அமெரிக்கா ஆகியவைதான். ஆனால் இங்கே எங்கும் எந்தக் குற்றமும் குறைந்துவிடவில்லை. தவிர உலகம் முழுவதும் மரண தண்டனையிலிருந்து தப்பிக்கமுடியாமல் சிக்கிக்கொள்கிறவர்கள் பெரும்பாலும் அரசியல்பலமோ, பண பலமோ, அறிவுஜீவி பலமோ இல்லாத சமூகத்தின அடித்தட்டு ஏழை மக்களதான் என்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. குற்றம் செய்த பெரும் பணக்காரர்களோ, நிலப்பிரபுக்களோ, மரண தண்டனை பெற்று அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்டதாக வரலாறே இல்லை. மரண தண்டனை என்பது ஒரு சமூகம் சட்டத்துக்குள் ஒளிந்துகொண்டு கொலை செய்வது தவிர வேறல்ல. எப்படி தனி நபரின் கொலை கடுமையாகக் கண்டிக்கத்தக்கதோ அதே போலத்தான் இதுவும். சிறைக்குள் கைதியையும், சிறைக்கு வெளியே சமூகத்தையும் சீர்திருத்துவதுதான் சரியான வழிமுறை.

ஆயுள் தண்டனை கைதிகளையும் முழு ஆயுளுக்கும் சிறையில் வைத்திருக்கவேண்டும் என்பது தவறான பார்வை. தண்டனைக் காலமாக பத்தோ பதினான்கு ஆண்டுகளோ சிறையில் இருந்து பின்னர் வெளியே வந்துவிட்டால், மீண்டும் கொலை செய்வார்கள் என்று அஞ்சத்தக்க அளவு எந்த நிகழ்ச்சியும் இல்லை. வெளியே வரும்போது திருந்தி வந்து வாழ்ந்தவர்கள் எண்ணிக்கையே அதிகம். அவர்களை திருந்தவிடாமல் தடுக்கும் சமூகம்தான் பல சமயங்களில் பிரச்சினை. வெளியே விட்டால் ஆபத்து எனக் கருதக்கூடிய கொடூரர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவு.

ராஜீவ் கொலை வழக்கு மட்டுமல்ல, இன்னும் கோவை குண்டு வெடிப்பு போன்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட பல கைதிகள் பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்ய அரசாங்கங்கள் மறுத்துவருகின்றன. மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சி கவுன்சிலர் லீலாவதியைக் கொலை செய்ததாக தண்டிக்கப்பட்டோரை அவர்கள் அழகிரி ஆதரவாளர்கள் என்பதால், அண்ணா நூற்றாண்டில் விடுதலை செயத கருணாநிதி அரசு, நளினியையும் கோவை இஸ்லாமிய கைதிகளையும் விடுவிக்கத் தொடர்ந்து மறுத்தது. ஜெயலலிதாவோ மரண தண்டனையை ஆயுளாகக் குறைப்பதையே ஏற்கும் மனநிலை இல்லாதவர். இந்திய அரசாங்கமும் அது காங்கிரசானாலும், பா.ஜ.கவானாலும் மரண தண்டனை பற்றிய மாற்றுக் கருத்துக்கே தயார் இல்லை. கடந்த 2007லும் மறுபடி 2012லும் இந்தியா ஐ.நா பொது மன்றத்தில் மரண தண்டனை ஒழிப்புக்கான தீர்மானத்தை எதிர்த்தே வாக்களித்தது. அண்மையில் இந்தியாவில் கொடூரமான பாலியல் குற்றங்களுக்கும் மரண தண்டனை விதிக்க அவசர சட்டமே பிறப்பித்து பிறகு அதை சட்டத்திலும் சேர்த்திருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, அதுவும் டெக்னிகலான அடிப்படையில் மட்டுமான தீர்ப்பு, கொடுத்திருப்பது தற்காலிக ஆறுதல்தான். மரண தண்டனை முற்றாக ஒழிக்கப்படுவதற்கு தொடர்ந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வும் பிரசாரமும் தேவைப்படுகிறது. சிறை தண்டனை என்பது ஆயுள் முழுவதுமானதாக இருக்கத்தேவையில்ல; நன்னடத்தை அடிப்படையில் வெளியே வந்து வாழ்க்கையை இன்னொரு முறை வாழ்ந்து பார்க்க அனுமதிக்கும் சிறை தண்டனையே சரி என்ற பார்வையையும் நம் சமூகத்தில் வளர்க்க வேண்டியிருக்கிறது.

இப்போதைக்கு கிடைத்திருக்கும் தற்காலிக ஆறுதல் நிரந்த மகிழ்ச்சியாக மாற இவையெல்லாம் தேவை.

கல்கி 22.2.2014

(மேற்படி கட்டுரை உச்ச நீதிமன்றத்தில் ராஜீவ் கொலை வழக்கு தண்டனைக் கைதிகளின் மரண தண்டனை ஆயுளாகக் குறைக்கப்பட்ட தீர்ப்பு வெளியான உடனே எழுதப்பட்டது. அடுத்த சில தினங்களில் ஜெயலலிதா அரசு செய்த அதிரடி அறிவிப்பும் அதை மத்திய அரசு எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பெற்றிருக்கும் இடைக்காலத் தடையும், இந்தக் கட்டுரையின் அடிப்படை அம்சங்களை மாற்றவில்லை. நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை நன்னடைத்தை அடிப்படையில் விடுவிக்க மாநில அரசுகளுக்கு முழு உரிமை உண்டு என்பதும், அவர்கள் தண்டனை பெற்ற குற்றங்களின் தன்மைக்கும் விடுதலைக்கும் சட்டத்தின் முன் எந்த தொடர்பும் தேவை இல்லை என்பதும் என் நிலை. ஜெயலலிதாவின் மனமாற்றம் அரசியல், தேர்தல் காரணங்களால் விளைந்ததே எனினும் வரவேற்கவேண்டியதாகும். விடுவிக்கும் முடிவை அறிவித்துவிட்டு, மத்திய அரசின் கருத்தைக் கேட்க சட்டப்படியான கடிதம் மட்டும் அனுப்பிவிட்டு மூன்று நாள் கெடு விதிக்காமல் இருந்திருந்தாரானால், இப்போதைய சிக்கல் ஏற்பட்டிராது. ஒரு மாதம் கழித்து மத்திய அரசு பதில் அனுப்பவில்லை என்பதை சுட்டிக் காட்டிவிட்டு விடுதலை செய்திருந்தால் இப்போதைய எதிர்வினைகள் ஏற்பட்டிருக்காது. இப்போது செய்ததெல்லாம் ஒரு வேளை மத்திய அரசை சீண்டிவிட்டு, வழக்கு போடவைத்தும், ஒரேயடியாக அதன் மூலம் காங்கிரசை தமிழகத்தில் அடியோடு காலி செய்ய போட்ட அரசியல் வியூகமாகவும் இருக்கலாம். ஒரு கல்லில் மூன்று மாங்காய் – காங்கிரசுக்கு கொஞ்சநஞ்சம் இருக்கும் ஆதரவும் காலி. அப்படி காலியான காங்கிரசுடன் தி.மு.க சேர்ந்தாலும் சேராவிட்டாலும் ( இனி சேரமுடியாது ) தேர்தலில் எதிர்த்தரப்பு வலுவடையாது. ராஜீவ் வழக்குக் கைதிகளை தான் விடுவிக்க முன்வந்தும் கோர்ட்டும் மத்திய அரசுமே முட்டுக் கட்டை போடுவதாக சித்திரிப்பதால் இருக்கும் சுமார் அரை சதவிகித தமிழ் தேசிய ஓட்டுகளையும் கூட சுரண்டிக் கொள்ளலாம்.)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல