செவ்வாய், 18 மார்ச், 2014

மலேசிய விமானத்தை கடத்தவில்லை:தலிபான் பயங்கரவாதிகள் மறுப்பு

கோலாலம்பூர்:'காணாமல் போன மலேசிய விமானத்தை நாங்கள் கடத்தவில்லை' என, தலிபான் பயங்கரவாதிகள் மறுத்துள்ளனர். மலேசியாவின்,கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து, இம்மாதம், 7ம்தேதி, சீனாவுக்கு புறப்பட்ட விமானம், வியட்நாம் நாட்டின் எல்லைக்குள் சென்ற போது மாயமானது. விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், அந்த விமானத்தின் நிலை குறித்து, 12 நாட்களாகியும், இதுநாள் வரை, எந்த தடயமும் கிடைக்கவில்லை.சென்னையை சேர்ந்த ஒரு பெண் உட்பட ஐந்து இந்தியர்களும், கனடா நாட்டு தமிழர் ஒருவர் உட்பட, 239 பேர் இந்த விமானத்தில் பயணித்துள்ளனர்.



சந்தேகம்:விமானத்தின் கம்ப்யூட்டரிலிருந்து சில சிக்னல்கள் வெளியானதை தொடர்ந்து, அந்த விமானம் கடத்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. கடத்தப்பட்டிருந்தால், இந்த விமானம் கஜகஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் பகுதியில் இருக்கக்கூடும், என கருதப்பட்டது. 30 ஆயிரம் அடியில் பறக்க வேண்டிய விமானம், ரேடார் சிக்னலிலிருந்து தப்பிக்க, 5,000 அடி உயரத்தில் பறந்ததாக தகவல் வந்ததால், அநேகமாக இந்த விமானம், ஆப்கானிஸ்தானில்,  தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள மலைபாங்கான பகுதியில் தரையிறக்கப்பட்டிருக்கலாம், என கூறப்பட்டது.ஆனால், 'இவ்விமானத்தை பற்றி தங்களுக்கு ஏதும் தெரியாது. கடத்தல்விவகாரத்தில் தங்களுக்கு எந்தசம்பந்தமும் இல்லை' என, தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விமானத்தில் பயணித்தவர்களில், 152 பேர் சீனர்கள். எனவே, சீன நாட்டின் பயங்கரவாதிகள் கடத்தியிருக்கலாம் எனவும், ஒரு கோணத்தில் ஆராயப்பட்டது.

ஆனால், தங்கள் நாட்டு பயங்கரவாதிகள் இதில் சம்பந்தபடவில்லை, என்பதை சீனாவும் தெளிவுப்படுத்தி விட்டது.மலேசிய விமானத்தின் பைலட், ஜகாரி, இந்த விமான கடத்தலில் சம்பந்தப்பட்டிருக்கலாம், என்ற சந்தேகம் உள்ளது.மாயமான விமானம் குறித்து, 23 செயற்கைகோள்கள் மூலம், சீன அரசு தேடி வருகிறது.நேற்று ஆஸ்திரேலிய பகுதியில், இந்த விமானம் தேடப்பட்டதாக, மலேசிய விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெளிவான துப்பு:விபத்துக்குள்ளாகியிருந்தால், அரபி கடல் பகுதியில் விமானம் விழுந்திருக்கக்கூடும் என்பதால், இலங்கை, தன் கடல் பகுதியில் மற்ற நாட்டு விமானங்கள் தேட அனுமதி அளித்துள்ளது. விமானத்தை பற்றிய தெளிவான துப்பு கிடைக்காததால், அமெரிக்க கடற்படை கப்பல்களும், விமானங்களும், தேடுதல் வேட்டையை நிறுத்தி விட்டன. விமானப்பயணிகளின் நிலை குறித்து தெளிவான பதிலை, மலேசியா கூறாததால், கோபமடைந்துள்ள சீன பயணிகளின் உறவினர்கள், காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க போவதாகஎச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய பக்கங்கள்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல