செவ்வாய், 6 மே, 2014

ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 63

விடுதலை புலிகளை இந்தியாவில் தேடிய ஆபரேஷன் திருச்சி சாந்தனுடன் முடிவுக்கு வந்தது!

அத்தியாயம் 63

தி.க. பிரமுகர் ஆனந்தராஜாவின் புதிய வீட்டுக்கு சி.பி.ஐ. புலனாய்வுக் குழு போய் சேர்ந்தது. ஆனந்தராஜாவின் வீட்டைச் சுற்றிலும் சுவர் எழுப்பப்பட்டிருந்தது. ஒரு பக்க சுவரில் ‘கடவுள் இல்லை’ என பெரிதாக எழுதப்பட்டிருந்தது. மறுபக்க சுவரில் பெரிய எழுத்துக்களில், ‘இந்த வீடு, தம்பி பிரபாகரனுக்குச் சொந்தமானது’ என்று எழுதப்பட்டு இருந்தது.



கிரில் போடப்பட்டிருந்த வராண்டாவில், பிரபாகரன் மற்றும் தந்தை பெரியாரின் போட்டோக்கள் மாட்டப்பட்டு இருந்தது தெரிந்தது.

நவம்பர் 13-ம் தேதி, அதிகாலை 4.15 மணி.

வீட்டுக்குள் லைட் எரியவில்லை. அனைவரும் தூங்கிக்கொண்டு இருக்க வேண்டும். ஆனந்தராஜாவை அழைக்குமாறு செபாஸ்டியானிடம் கூறினார்கள், சி.பி.ஐ. அதிகாரிகள்.

செபாஸ்டியான், ஆனந்தராஜாவைக் கூப்பிடத் தொடங்கினார். திருச்சி ஆயுதப் படை பொலிஸார் சுற்றிலும் தயாராக நின்றனர். சி.பி.ஐ. புலனாய்வுக் குழுவினர், நுழைவாயிலில் சுவர் மறைவில் நின்றார்கள். செபாஸ்டியான் மட்டுமே, பூட்டப்பட்டிருந்த நுழைவாயில் கதவு அருகில் நின்றிருந்தார். வீட்டுக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவர்களுக்கு, செபாஸ்டியான் மட்டுமே தெரிவார்.

சிறிது நேரம் அழைத்தபின், வீட்டுக்குள் லைட் போடப்பட்டது. ஆனந்தராஜா வராண்டாவுக்கு வந்தார்.

கதவு அருகில் செபாஸ்டியான் நிற்பதைக் கண்டதும் சாவியை எடுத்து வருவதற்காக மீண்டும் வீட்டுக்குள் நுழைந்தார். பின்னர், வராண்டா கிரில் கதவைத் திறந்தார்.
அதே நேரத்தில் வீட்டின் கதவுக்கு பின்னால் இருந்து வெளியே ஒரு நபர் எட்டிப் பார்ப்பதை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்டார்கள். எட்டிப் பார்த்த, உயரமான, பருமனான நபர்தான் திருச்சி சாந்தன் என்பதை உடனே அடையாளம் கண்டுகொண்டார்கள். “ஆகா.. இங்கேதான் இருக்கிறார்”

முதலில் திருச்சி சாந்தனை செபாஸ்டியான் கவனிக்கவில்லை. ஆனந்தராஜா வராண்டா கிரில் கதவைத் திறந்த பின்னரே, உள்ளே திருச்சி சாந்தனும் இருப்பதை புரிந்து கொண்டார் செபாஸ்டியான்.

உடனடியாக, சி.பி.ஐ. அதிகாரிகள் எதிர்பார்த்திராத காரியம் ஒன்று நடந்தது. தி.க. உறுப்பினரான செபாஸ்டியான் சத்தமான குரலில், திருச்சி சாந்தனை எச்சரித்து விட்டார்: “சி.பி.ஐ. வந்திருக்கிறார்கள். மறைவில் நிற்கிறார்கள்.. இங்கிருந்து ஓடிவிடுங்கள்”

செபாஸ்டியான் எச்சரித்தது, அதையடுத்து திருச்சி சாந்தன் கதவை அடித்து மூடியது… எல்லாமே மின்னல் வேகத்தில் நடந்துவிட்டன.

அடுத்த சில நொடிகளில் சி.பி.ஐ. குழுவினர் கதவை நோக்கி பாய்ந்தார்கள். 10-க்கும் மேற்பட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் கதவை தள்ளித் திறக்க முயன்றனர். திருச்சி ஆயுதப் படை பொலிஸார் மறைவிடங்களில் இருந்து ஓடி வந்தார்கள். கதவை உள்ளே பூட்டிக்கொண்டார் திருச்சி சாந்தன்.

கதவு புதியது என்பதால் உடைத்து திறக்க முடியாமல் இருந்தது. கதவை உடைத்து திறக்க சிறிது அவகாசமே அவர்களுக்கு இருந்தது. திருச்சி சாந்தன் சயனைட் குப்பியை கடிப்பதற்குமுன் கதவை உடைக்க வேண்டும்.

கதவுத் தாழ்ப்பாளின் மீது துப்பாக்கியால் இரு தடவைகள் சுட்டார்கள். அப்படியும் கதவு திறக்கவில்லை.

இதற்கிடையில், சி.பி.ஐ. அதிகாரிகளில் ஒருவர், பக்கவாட்டு ஜன்னல் வழியே திருச்சி சாந்தனைப் பார்த்துவிட்டார். திருச்சி சாந்தன், சயனைட் குப்பியை கடிக்க முனைந்து கொண்டிருந்தார். அவரது கையை நோக்கி அதிகாரி சுட்டார். குறி தவறிவிட்டது. அந்தத் தோட்டா, சுவற்றில் பட்டுத் தெறித்தது.

அதற்குள் திருச்சி சாந்தன் சயனைட் குப்பியை கடித்து, உயிருக்குப் போராட ஆரம்பித்துவிட்டார்.

விறுவிறுப்பு.காம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல