செவ்வாய், 24 ஜூன், 2014

சித்தார்த்தரைக் கண்டியளோ...


நேற்றிரவு பதறியடிச்சுக் கொண்டு நடுச்சாமத்தில அவசரமாகத் தொலைபேசியில கூப்பிட்டார் ஒரு வெளிநாட்டுவாசி. ஆள் புளொட்டின்ரை பழைய காய். நாடு, போராட்டம் எண்டதெல்லாத்தையும் விட்டிட்டுத் தூரப்போனாலும் அரசியல் தொடர்புகளை மட்டும் சிங்கன் கைவிடேல்லை. 'கரண்ட் பொலிற்றிக்ஸ்ஸிலை' எப்பவும் வலு ஆர்வமான ஆள்.

தூரப்போனாலும் தொப்புள்கொடி உறவாக இந்தக் 'கரண்ட் பொலிற்றிக்ஸ்'தானே புலம்பெயர்வாசிகள் கனபேருக்கு இருக்கு! அதில இருந்து இவரும் தப்பேல்ல.

சரி எப்பிடியோ இந்த நேரத்தில அவதிப்பட்டுக்கொண்டு போன் எடுக்கிறார் எண்டால்... என்ன ஏதெண்டு தெரியாமல் நானும் கொஞ்சம் பதறித்தான் போனேன்.

எடுத்தவர் கேட்டார், 'சித்தார்த்தண்ணை எங்கயண்ணை?' எண்டு.

'ஏன்? அவருக்கென்ன? உங்கினைதான் எங்கேனும் நிப்பார்' எண்டன்.

'அண்ணை விளையாடாதேங்கோ... நான் உண்மையாகத்தான் கேட்கிறன். ஆள் எங்க? போன் அடிச்சாலும் தூக்கிறாரில்லை. ஆளைப்பற்றின சேதிகள் ஒண்டையும் காணேல்ல. ஆளுக்கு என்ன நடந்திது?' எண்டு பதறிக்கொண்டிருந்தார்.

அதுக்குப் பிறகுதான் நானும் கொஞ்சம் நிதானமாக யோசிச்சன்.

'சித்தார்த்தன் எங்கே?'

சித்தார்த்தனைக் காணேல்லைத்தான். வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்குப் பிறகு ஆளின்ரை சிலமன் பெரிசா இல்லை.

இடையில பதவிப் பிரமாண நேரத்தில நாலைஞ்சு நாள் பேர் அடிபட்டுது. பிறகு மாகாணசபை வாசலில கூட்டமைப்புக்காரரோட பலதும் பத்துமாக – பத்தில் ஒன்றாக நிண்டார்.

இப்ப அதையும் காணேல்ல.

அதுக்கு முந்தி புளொட்டின்ரை தலைவர் எண்டோ உடுவில் தருமற்றை (உடுவில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தருமலிங்கத்தின்ரை) மகன் எண்டோ, தமிழ் அரசியலில கொஞ்சம் நிதானமாகச் சிந்திக்கக் கூடிய ஆள் எண்டோ ஒரு மரியாதையோட நாலு பேருக்கு முன்னால் மதிப்பாகத் திரிஞ்சார்.

ஆளையும் அடிக்கடி எங்கயாவது காணலாம். அல்லது நாலு பேரோட பாக்கலாம். நாங்களும் நேரில போய்க்கதைக்கலாம். இல்லாட்டிலும் அங்க, இங்க எண்டு சந்திப்பார்.

இப்ப இந்த மாகாணசபையில காலை வைச்சதோட காலையும் கையையும் கட்டி, வாய்க்கும் பிளாஸ்ரர் ஒட்டிவிட்டதைப்போல சத்தம் சலாரில்லாமல் இருக்கிறார்.

நேற்று முந்தநாள் வந்த சின்னப்பெடியள் எல்லாம் கிலுக்கியடிக்கிறாங்கள்...

இவர் முப்பது முப்பத்தஞ்சு வருசத்துக்கு முந்தியே போராட்டக்களத்தில குதிச்சு, இத்தினை காலமாக நீச்சலடிச்சு, முக்குளிச்சு, படாத பாடெல்லாம் பட்ட ஆள்...

கோப்பாயில இருந்த பத்துப் பதினைஞ்சு ஏக்கர் தன்ரை சொந்தக் காணியை ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி அமைக்கிறதெண்டு அன்பளிப்பாக எழுதிக்குடுத்தவர்....

போதாக்குறைக்கு தன்ரை மாகாணசபைச் சம்பளத்தையும் ஆதரவில்லாத – வசதி குறைஞ்ச பிள்ளையளின்ரை படிப்புக்கெண்டு குடுத்துக் கொண்டிருக்கிற மனிசன்...

தகப்பன் தருமர் கூட மதிப்பும் மரியாதையுமாக அரசியல் தொண்டு செய்து பேரெடுத்த ஆள்.

இப்பிடியெல்லாம் இருந்தும் இப்ப சித்தார்த்தன் பேசாமல் - வாயைத்திறக்க முடியாமல் இருக்கிறாரெண்டால்....?

இதுதான் சேராத இடம் சேர்ந்தால் வாராது வந்து சேரும் வினையெண்டு சொல்லிறது.

அப்பிடியெண்டால் சித்தார்த்தனுக்கு என்ன நடந்தது?

சித்தார்த்தனுக்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புப் பொருந்தேல்ல.

அங்க (கூட்டமைப்பில) இருந்து கொண்டு இவர் தன்ரை அரசியலைக் கதைக்கேலாது. தன்ரை அரசியலைக் கதைக்கிறதெண்டால் இவர் அங்க (கூட்டமைப்பில) இருக்கேலாது.

கூட்டமைப்பில இருக்கிறதெண்டால் புலிவாலைப் பிடிச்சுக்கொண்டிருக்கோணும். ஒரு காலமுமே நடக்க முடியாத விசயங்களைப் பற்றிக் கதைக்கோணும். சனங்களுக்குக் காதில பூ வைக்கோணும். அந்தா ஐ.நா வருது, இந்தா இந்தியா பாத்துக்கொண்டிருக்குது எண்டு எப்பவும் ஏதாவது படங்காட்டிக்கொண்டிருக்கோணும். இப்பிடி ஏதாவது தகிடு தித்தம் பண்ணிக் கொண்டேயிருக்கோணும்...

இதெல்லாம் சித்தார்த்தனுக்குச் சரிவருமோ...!

அதால ஆள் பேசாமல் பறையாமல் எங்கேயோ ஒரு மூலைக்குள்ள போய் ஒடுங்கீட்டுது.

யுனெஸ்கோவின்ரை விருதை வாங்கின ஆனானப்பட்ட ஆனந்தசங்கரியையே தூக்கிச் சாப்பிட்ட – ஆளை மூலைக்குள் முடக்கிக் களைப்படைய வைச்சுக் களத்தை விட்டே அகற்றிய தமிழ்த்தேசியம், சித்தார்த்தனை மட்டும் விட்டு வைக்குமா?

சித்தார்த்தனுக்கு ஒரேயொரு அறிவுரை சொல்லலாம், வெட்கத்தையெல்லாம் விட்டுப்போட்டு, கண்ணை மூடிக்கொண்டு பேசாமல் நீங்களும் புலிவாலைப் பிடியுங்கோ... உங்களோட இருந்த பெடியள்தான் கொஞ்ச நாளைக்குக் கண்ணுக்குள்ளயும் மனசுக்குள்ளயும் நினைவுக்குள்ளயும் வருவாங்கள்...

இதுக்கும் கொஞ்சம் பல்லை இறுக்கிக் கடிச்சுக் கொண்டு நிண்டீங்கள் எண்டால்...

நீங்களும் சுரேஸ் பிரேமச்சந்திரனைப்போல, செல்வம் அடைக்கலநாதனைப்போல ஹீரோதான்.

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...

- வடபுலத்தான்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல