ஞாயிறு, 9 நவம்பர், 2014

மீரியபெத்தை மக்கள் மீளெழுவதற்கு சக்தி கொடுங்கள்


கொஸ்லந்தை, மீரியபெத்த தோட்டத்தில் இயற்கையின் கோரத் தாண்டவம் நிகழ்ந்து ஒருவாரம் கடந்துவிட்டது.

தேயிலைத் தேசத்தில் இருபது தசாப்தங்களாக காற்று, நீர் கொடுத்த மலை கண்ணிமைக்கும் பொழுதில் ஒரு கிராமத்தை விழுங்கிவிட்டது.



வலி நிறைந்த வாழ்க்கையானாலும் எத்தனையோ எதிர்பார்ப்புக்களுடன் வாழ்ந்த மக்களின் கனவுகள் எல்லாம் மண்ணுக்குள்ளேயே புதைந்து போயின.
பாரியதொரு அனர்த்தம் இடம்பெறப்போகிறது என்று அறிந்தும் கூட அதனை தவிர்த்துக்கொள்ள முடியாத துர்ப்பாக்கியசாலிகளாகி விட்டார்கள் அந்த மக்கள்.

பாதிப்பை நேரில் கண்ட சிறுவர்கள் இன்னும் அந்த மன அழுத்தத்திலிருந்து விடுபடவில்லை.

ஒருவித ஏக்கம் அவர்களுடைய கண்களைச் சூழ்ந்திருக்கிறது. ஒருவகை பயம் அவர்களுடைய பேச்சில் கலந்திருக்கிறது.

வறுமைக்கோட்டில் வாழ்ந்தாலும் சந்தோஷத்துக்குக் குறைவில்லாத கிராமமாக, ஒற்றுமையாக வாழ்ந்த மக்களுக்கு இயற்கை பேரிடியை கொடுத்திருக்கிறது.
அனர்த்தம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும் தோட்ட நிர்வாகம், அரச அதிகாரிகளின் அசமந்தப் போக்கினால் பேரழிவு ஏற்பட்டிருப்பதை யாராலும் மறுக்க முடியாது.


தோட்ட மக்களுக்கு வேறு இடத்தில் காணிகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் வீடுகளோ, அடிப்படை வசதிகளோ செய்துகொடுக்கப்படவில்லை.

சிறுபிள்ளைகளுடன், முதியோர்களுடன் திடீரென ஓரிடத்தில் சென்று தங்கிவிட முடியுமா? அவர்கள் வளர்க்கும் கால்நடைகளின் கதிதான் என்ன?
இருநூறு வருடங்களாக நாட்டுக்காக உழைத்த மக்களை கண்டும் காணாததுபோல நிர்வாகம் அசமந்தப்போக்கை கடைப்பிடித்திருக்கிறது.

காடு மலைகளைத் தாண்டி, இரத்தம் உறிஞ்சும் அட்டைகளுக்கு மத்தியிலும் வியர்வை சிந்தி, உழைத்து உழைத்தே உடல் தேய்ந்துபோனவர்களை நிர்வாகம் கைவிட்டிருக்கிறது.

பல தலைமுறைகள் இந்த மண்ணுக்காக உழைத்திருக்கிறார்கள். மண்ணுக்காகவே தங்களை தியாகம் செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஏன் கைவிடப்பட்டார்கள்?

அபாய எச்சரிக்கை விடுவது மாத்திரம்தான் அமைச்சின் வேலையா? அப்படியெனின் அவர்களை பாதுகாப்பான இடத்தில் குடியமர்த்துவது யாருடைய பொறுப்பு?
உண்மையில் 200 வருடங்களாக பல தலைமுறைகளாக சிறு லயன் அறைகளில் வாழ்ந்து வருகிறார்கள் என்ற உலகுக்குத் தெரியாத உண்மை மீரியபெத்த சம்பவத்தால் வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது.

நாட்டின் முதுகெலும்பாக இருப்பவர்களை அரசாங்கம் இப்படித்தான் நடத்துகிறதா என்ற கேள்வி இன்று அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.

லயன் குடியிருப்புக்களை விடுத்து தனி வீட்டுத் திட்டம் அமைக்கப்பட வேண்டும் என ஊடகங்கள் வாயிலாக அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போதும் மலையகத் தலைமைகள் மௌனிகளாகவே இருந்து வருகின்றனர்.

முதலாளிகளுக்கு உழைத்துக் கொட்டுவதற்கும் தலைவர்களுக்கு வாக்கு கொடுப்பதற்குமா இந்த மக்கள் பிறந்திருக்கிறார்கள்?
மீரியபெத்த அனர்த்தம்போல இன்னுமொரு அழிவுக்கு முகங்கொடுக்காத வண்ணம் மலையத்தின் அனைத்து தோட்டப்பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மீரியெபெத்த மக்கள் மீளெழுவதற்கு தலைமைகள் சக்தி கொடுக்க வேண்டும். அத்தோடு லயன் முறைகளை மாற்றியமைத்து தனி வீடுகள் அமைக்கும் திட்டத்தை மலையகத் தலைவர்கள் துரிதமாக முன்னெடுக்க வேண்டும்.

அதேபோன்று பருவத்தில் பூக்கும் காளான்கள் போல தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்களிடம் சென்று வாக்குக் கேட்டுக் கெஞ்சும் அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் இனிமேலும் மௌனம்சாதிக்கக் கூடாது.

ஒரு சமூகம் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் ஒதுக்கப்பட்டிருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. உலகம் நொடிக்கு நொடி மாற்றம் கண்டுகொண்டிருக்க இங்கே ஒரு சமூகம் அடுத்த நிமிடத்தை நினைத்து ஏங்கிக்கொண்டிருக்கிறது. ஆதலால் உரிய தரப்பினர் இணைந்து தீர்வினை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும்.

(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)

இராமானுஜம் நிர்ஷன்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல