திங்கள், 22 டிசம்பர், 2014

சாதியக் கனவுகள்

ராமாயணம் முதலில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட எண்பதுகளில் நான் பள்ளி மாணவன். எங்கள் வீட்டில் அப்போது டிவி வாங்கியிருக்கவில்லை. அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் பியூனாக வேலை பார்த்த ஒருவரைத் தவிர எங்கள் தெருவில் மற்ற யார் வீட்டிலும் டிவி இல்லை. அவர் வீட்டில் ராமாயணம் பார்க்க வேண்டும் என்றால் அவருக்கு வயல் வேலையில் சிறிய சிறிய உதவிகள் செய்ய வேண்டும். அதனால் சிறுவர்கள் அனைவரும் ராமாயணம் பார்க்க அக்ரஹாரத்துக்குத்தான் போவோம். பியூனின் மகனும் எங்களோடு வந்துவிடுவான்.


பெரும்பாலான பிராமணர்கள் அப்போதே வேறு ஊர்களுக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார்கள். மொத்தம் ஐந்து குடும்பங்கள்தான் இருந்தன. இப்போதும் அந்த குடும்பங்கள் அங்கு இருக்கிறார்கள்.

எங்கள் தெரு பிள்ளையார் கோவில் குருக்கள் அந்த அக்ரஹாரத்தில் தான் இருக்கிறார். குழந்தைகள் பயந்துபோனால் மந்திரிப்பதற்கு குருக்கள் வீட்டிற்கு கூட்டிபோவார்கள். எனக்கு அம்மை போட்டபோது ஒரு முறை அம்மாவோடு போயிருக்கிறேன். திண்ணையில் வைத்தல்ல வீட்டின் உள்ளே வைத்து தான் மந்திரிப்பார். லைன் மேன் வேலை செய்துகொண்டிருந்த இன்னொரு அய்யர் இருந்தார். அவர் குடிப்பார். டேய் உங்கப்பா எத்தனை முட்டை சாப்பிடுவாரு ஒரு நாளைக்கு என்று அந்த அய்யர் பையனிடம் வாத்தியார்கள் கிண்டலாக கேட்பார்கள்.

இந்த இரண்டு அய்யர் வீடுகளிலும் நாங்கள் தாராளமாக புழங்க முடிந்தது. குருக்கள் வீட்டை அடுத்து ஒரு முதிர்ந்த விதவைப் பெண்மணி இருந்தார். அவ்வளவு சிவப்பாக இருப்பார். கண்கள் கண்ணாடி போல் மின்னும். எப்போதும் தூய ஆடைகள் அணிந்திருப்பார். வாசலில் அமர்ந்து குழந்தைகள் நாங்கள் பள்ளி செல்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்.
எல்லோரிடமும் இரண்டடி தள்ளி நின்று தான் பேசுவார். பால் வாங்கும்போது கூட பாத்திரத்தை கீழே வைத்துவிட்டு கொஞ்சம் தள்ளி நிற்பார். காசை திண்ணையில் வைத்துவிடுவார். மீதி காசை பால்காரம்மா திண்ணையில் தான் வைக்கும். ஒரு சின்ன டம்ளரில் தண்ணீர் வைத்திருக்கும் ஐயரம்மா அதிலிருந்து இரண்டு மூன்று சொட்டு தண்ணீர் எடுத்து ஒரு மந்திரத்தை முணுமுணுத்துக்கொண்டே காசின் மீது தெளித்து தீட்டு கழித்த பிறகு எடுத்துக்கொள்வார்.

வீட்டில் காய்ந்த தென்னை மட்டையை வாங்கிக்கொள்ளும் மரமேறிகள் முதல், தெருவில் காய்கறிகள் கொண்டு வந்து விற்கும் வியாபாரிகள் வரை திண்ணையில் இருந்து தான் காசை எடுத்துக்கொள்ள வேண்டும். மீதி காசை தீட்டு கழித்து தான் அவர் எடுத்துக்கொள்வார்.

ஆனால் மற்ற எந்த ஐயர் வீட்டிலும் இவ்வளவு குழந்தைகளை ஒரே நேரத்தில் ராமாயணம் பார்க்க அனுமதிக்காதபோது, அந்த விதவைக்கிழவி எங்களை அனுமதித்தார். நாங்கள் உட்கார்ந்த பிறகு ஒரு நாற்காலியில் எங்களுக்கு பின்னால் கொஞ்சம் இடைவெளி விட்டு சுவரை ஒட்டி அமர்ந்திருப்பார். சிறுவர்கள் நாங்கள் பேசினால், லேசாக அதட்டுவார். வீடு அவ்வளவு சுத்தமாக இருக்கும். நாங்கள் வெளியேறியவுடன் தீட்டு கழிப்பாரா தெரியவில்லை. ஆனால் நாங்கள் ஆர்வமாக இராமாயணம் பார்ப்பதை அவர் பெருமிதமாக பார்த்தார்

இதற்கு சற்றும் குறைவில்லாமல் தான் நடந்து கொள்வார் எங்கள் பாட்டி. தலித்துகளைக் கண்டால் அவ்வளவு விலகுவார். முதன் முதலாக எங்கள் சித்தப்பா தான் தன்னுடன் கல்லூரியில் படித்த தலித் சிநேகிதனை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார். எங்கள் குடும்பத்தில் கல்லூரி சென்ற முதல் தலைமுறை. முதல் ஆள் எனது சித்தப்பா தான். அவர் தான் எனக்கு கார்ல் மார்க்ஸ் என்று பெயர் வைத்தார். அப்பா பள்ளிப் படிப்பை தாண்டவில்லை.

என் தாத்தாவை சித்தப்பாவின் நண்பர் அப்பா என்று தான் சொல்லுவார். சாதியில பறையனா இருந்தாலும் எவ்ளோ அறிவா பேசுது பாரு என்று குசுகுசுப்பார் எனது பாட்டி. அண்ணி என்று சொல்லும் அவரது அன்பில் நெகிழ்வார் எனது அம்மா. அவரது வரவுக்குப் பிறகு தான் வீட்டிலும் வயலிலும் வேலை செய்த தலித்துகளுக்கு எங்கள் வீட்டில் தட்டில் சோறு போட்டார்கள். வயாதான தலித்களை அவன் இவன் என்று பேசுவதை பெண்கள் நிறுத்தினார்கள். ஒட்டடை அடிப்பது போன்ற வேலைகளுக்கு தலித் பெண்களை வீட்டினுள் அனுமத்தித்தார்கள்.

நான் கல்லூரி போனபோது எனது தலித் நண்பர்கள் எனது வீட்டில் தங்கத்தொடங்கினார்கள். தலித் ஸ்நேகிதிகள், என்னம்மா செய்றீங்க என்று அம்மாவுடன் சமையலறையில் வளைய வந்தார்கள். குழம்பை கையில் ஊற்றி நக்கிப் பார்த்தார்கள்.

தலித்துகளை உடல் ரீதியாக ஒடுக்கும் ஒரு ஆதிக்க சாதியில் பிறந்தவன் நான். பெரியாரும் திராவிட இயக்கங்களும், ஒரு படித்த இளைஞன் வழி என்ன மாற்றத்தை கொண்டு வந்தது என்பதை என் சித்தப்பா மூலம் அனுபவத்தில் உணர்ந்தவன் நான்.

புகாராக அல்ல, சந்தேகமாக எனக்கு சில கேள்விகள் உண்டு. என்னுடைய அனுபவத்தில் ஒரு ஐயர் வீட்டிலும், உனக்கு தண்ணீர் வேணுமா என்று என்னை அவர்கள் கேட்டதில்லை. எனக்கு நெருக்கமான பிராமண நண்பர்கள் யார் வீட்டிலும் நான் தங்கியதே இல்லை. அப்படி ஒரு சூழல் ஏன் அமையாமல் போனது?? என்னுடன் கல்லூரியில் படித்த பிராமண நண்பர்கள் கூட, அவர்கள் எவ்வளவு நல்ல நண்பர்களான போதும் வீட்டிற்கு அழைத்து உணவளிப்பதையோ தங்கச் சொல்வதையோ ஏன் தவிர்த்தார்கள்??

(Karl Max)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல