திங்கள், 16 மார்ச், 2015

பலிக்குமா சேரனின் கனவு?


தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் எல்லாத் துறைகளிலும் மாற்றங்கள் நிகழ்வது சகஜம். அந்த மாற்றங்கள் சினிமாவிலும் அவ்வப்போது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படிச் சமீபத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் சேரன். அந்த மாற்றத்தின் பெயர் "சினிமா 2 ஹோம்' (சி2ஹெச்).



ஒரு வருடத்திற்கு ஏறக்குறைய 300 படங்களுக்கும் மேல் வெளியீட்டிற்குத் தயாராகின்றன. ஆனால், அவற்றில் பாதி படங்கள்கூட வெளியாவதில்லை. வெளியாகும் 100க்கும் மேற்பட்ட படங்களில்கூட விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு மட்டுமே வெற்றி பெறுகின்றன.

இது ஒருபுறம் இருந்தாலும், மீதிப் படங்கள் திரையரங்குகள் கிடைக்காமல் பெட்டிக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றன. முடங்கியிருப்பது படங்கள் மட்டுமல்ல, அந்தப் படத்தில் பணியாற்றியவர்களின் உழைப்பு, கனவு, சந்தோஷம், அடுத்த வாய்ப்புகள் எல்லாமே.

இப்படி முடங்கிக் கிடக்கும் படங்களில் ஏதாவது ஒன்று தேசிய விருதையோ, இன்னபிற விருதுகளையோ வெல்லும் வாய்ப்புகள்கூட இருக்கலாம். வெற்றி நாயகனாக, நாயகியாக வரக்கூடிய ஒருவரின் முதல் படம்கூட பெட்டிக்குள் முடங்கியிருக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக பணத்தைப் போட்டு இந்தப் படங்களைத் தயாரித்தவர்களின் கதி?

இதற்குத்தான் மாற்றுவழி கண்டுபிடித்திருக்கிறார் சேரன். இன்றைக்கு எந்தப் படம் வெளிவந்தாலும், உடனடியாக இணையதளங்களிலோ அல்லது திருட்டு டி.வி.டி.யிலோ வெளியாகிவிடுகிறது. "திருட்டு வி.சி.டி. டாட் காம்' என்ற பெயரில் ஒரு இணையதளமே இயங்கி வருகிறது. ஆனால், எத்தனையோ பேர் முயற்சி செய்தும் திருட்டைத் தடுக்க முடிவதில்லை. மக்களும் அதற்குப் பழகிவிட்டனர். இப்படியே சென்றால் பூனைக்கு மணிகட்டுவது யார்? அந்த முயற்சியைக் கையில் எடுத்திருக்கிறார் சேரன்.

சேரன் - "சி2ஹெச்' நிறுவனர்

திருட்டு டி.வி.டி. வாங்குபவர்களிடம், படம் வெளியாகும் அன்றே ஒரிஜினல் டி.வி.டி.யை விற்றால்...? வெளியாகாமல் தவிக்கும் படங்களையும் வெளியிடலாம். டி.வி.டி. விற்பனை மூலம் கிடைக்கும் பணம் தயாரிப்பாளருக்குக் கிடைக்கும். திருட்டு டி.வி.டி.யும் ஒழியும். இதன்படி, சிறிய படங்களைப் படம் வெளியாகும் தினத்தன்றும், பெரிய படங்களை ஒரு வாரம் கழித்தும் ஒரிஜினல் டி.வி.டி. மூலம் பார்க்க முடியும். டி.வி.டி. மட்டுமல்ல, புளுரே, கேபிள், செட்டாப் பாக்ஸ், டி.டி.ஹெச்., இணையதளங்கள், செயற்கைக்கோள் மூலமாகவும் பார்க்க முடியும். ஒரிஜினல் டி.வி.டி.க்களை எங்கு வாங்குவது? உங்கள் வீட்டுக்கே தேடி வரும் அளவுக்கு விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள் சுமார் 7000 பேர் தமிழகம் முழுவதும் உள்ளனர். தவிர, சந்தா முறையிலும் டி.வி.டி. உங்களின் வீடு தேடி வரும். மேலும், ஆன்லைன் ஷாப்பிங், டெலி ஷாப்பிங் முறையிலும் டி.வி.டி.யை வாங்க முடியும்.

பெரிய படங்களின் டி.வி.டி. ஒரு வாரம் கழித்துக் கிடைக்குமென்றால், அதுவரைக்கும் அந்தப் படங்களின் திருட்டு டி.வி.டி.யோ அல்லது இணையத்தில் டவுன்லோடோ செய்ய முடியாதா என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். அதற்காக வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. திருட்டு டி.வி.டி. வராமல் பாதுகாக்க வேண்டியது இவர்கள் பொறுப்பு. பெரிய படங்கள் மட்டுமல்ல, ஒரிஜினல் டி.வி.டி.க்களில் வரும் சிறிய படங்களையும் திருட்டு டி.வி.டி.யில் வராமல் பார்த்துக் கொள்வதும் அவர்கள் பொறுப்புதான்.

இந்த முறையில், நான் சொந்தமாகத் தயாரித்து இயக்கியுள்ள "ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை' முதலில் வெளிவர இருக்கிறது. தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ் குமாரின் "ஆள்', "சிவப்பு எனக்கு பிடிக்கும்', "மேகா' ஆகிய படங்கள் அதற்கடுத்து வெளியாக இருக்கின்றன. தொடர்ந்து, என் தயாரிப்பில் "அப்பாவின் மீசை' வெளிவர இருக்கிறது.தொடர்ந்து பல படங்கள் பேச்சுவார்த்தையில் உள்ளன.

திரையுலக பிரபலங்கள் இந்தத் திட்டம் பற்றி என்ன நினைக்கிறார்கள்...

ஜே.எஸ்.கே.சதீஷ் குமார் - தயாரிப்பாளர்

எந்தப் படமாக இருந்தாலும், தமிழ்நாடு முழுக்க வியாபாரம் ஆகியிருந்து, அவுட்ரேட் அல்லது மினிமம் கியாரண்டி முறையில் விற்றிருந்தால் நான் டி.வி.டி.யில் விற்க மாட்டேன். நானே சொந்தமாக வெளியிடும்போது டி.வி.டி.யில் விற்பேன். மினிமம் கியாரண்டி அல்லது அவுட்ரேட்டில் வியாபாரம் ஆகியிருந்தாலும், திருட்டு டி.வி.டி. வரத்தான் போகிறது. சாதாரணமான படத்துக்குக்கூட குறைந்தபட்சம் 50 ஆயிரம் திருட்டு டி.வி.டி.க்கள் தயாராகின்றன. இந்த லாபம் யாருக்குப் போகிறது? அது தயாரிப்பாளருக்குக் கிடைக்க வேண்டும்.

கேயார் - தயாரிப்பாளர் சங்கத் தலைவர்

தயாரிப்பாளர்களுக்கு இதனால் சாதகமே தவிர, எந்தப் பாதகமும் இல்லை. கடந்த நான்கைந்து வருடங்களாக கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றன. அதற்கு மாற்று வழி என்னவென்று யாருமே சொல்லவில்லை. அதற்குத்தான் சேரன் வழி கண்டுபிடித்திருக்கிறார்.

மூன்றாவது நபர் யாரும் இந்த யோசனையைச் சொல்லவில்லை. சினிமாவை நேசிக்கக் கூடிய, சினிமாவில் வாழ்ந்து கொண்டிருப்பவர் சேரன். இப்படிப் படத்தை வெளியிடுங்கள் என்று மற்றவர்களுக்கு அவர் உபதேசம் செய்யவில்லை. தன்னுடைய சொந்தப் படத்தையே "சி2ஹெச்' மூலம் வெளியிடப் போகிறேன் என்று சொல்லி, ஒரு முன்னுதாரணமாகவே இருக்கிறார். எனவே, நிச்சயம் இதில் ஏதாவது ஒரு நியாயம் இருக்கும். பலன் இருக்கும். இந்த முயற்சியில் அவர் வெற்றிபெற்றால், எல்லோரும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாமே...

ராம் - இயக்குநர்

ஒரிஜினல் கிடைக்காததால் மக்களும் திருட்டு டி.வி.டி. வாங்கிப் பார்க்கிறார்கள். எனவே, ஒரிஜினல் டி.வி.டி.யை விற்றால் மக்களும் வாங்குவார்கள். அதனுடைய லாபம் தயாரிப்பாளர்களுக்கும் வந்துசேரும். நடுவில் யாருமே கொள்ளையடிக்க முடியாது.

சமுத்திரக்கனி - இயக்குநர்

உண்மையிலேயே அற்புதமான விஷயம். யாரோ இடையில் உள்ளவர்கள் சாப்பிட்டுப் போவதற்கு, பணம் போட்டு படத்தை எடுத்த தயாரிப்பாளர்களுக்கு அந்த லாபம் சென்று சேர்கிறது எனும்போது அதை நாம் ஆதரிக்க வேண்டும். வெள்ளி விழா கண்ட பல படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்கள் இன்று வாடகை வீட்டில் குடியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் படங்களின் காட்சிகள், பாடல்கள் இன்று வரைக்கும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன. இதனால் எந்தவிதமான பலனும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இதை மாற்றி, பலன் கிடைப்பதற்கான வழியைச் செய்திருக்கிறார் சேரன். அவருக்கு நாம் கைகொடுக்க வேண்டும்.

இந்த முயற்சி மற்றவர்களால் மங்கலாகப் பார்க்கப்பட்டு, ஆரம்பத்தில் வேண்டுமானால் தடைகள் தோன்றலாம். பிற்காலத்தில் இந்த முயற்சி வெற்றிபெற்று மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மாற்றம் நிகழும்போது அந்த மாற்றத்தை நாம் அங்கீகரித்தே ஆகவேண்டும், வேறு வழியே கிடையாது.

ரா.பார்த்திபன் - இயக்குநர், நடிகர்

நல்ல முயற்சி. மனிதனுக்குப் பிரச்னை வரும்போது, அதில் இருந்து வழி பிறக்கும். எல்லா கண்டுபிடிப்புகளுமே அப்படித்தான் உண்டாகியிருக்கின்றன. புதிய முயற்சிகள் எல்லாமே தேவையை முன்னிறுத்தி வந்தவைதான். இன்றைக்கு சினிமா சந்தித்துக் கொண்டிருக்கின்ற பல்வேறு பிரச்னைகளில் இருந்து மீண்டுவருவதற்கு "சி2ஹெச்' முக்கியமான விஷயம். நிறைய பேர் தோள் கொடுத்து அதை இன்னும் வலிமையாக்க வேண்டும்.

-சி.காவேரி மாணிக்கம்

ஒரிஜினல் கிடைக்காததால் மக்களும் திருட்டு டி.வி.டி. வாங்கிப் பார்க்கிறார்கள். எனவே, ஒரிஜினல் டி.வி.டி.யை விற்றால் மக்களும் வாங்குவார்கள். அதனுடைய லாபம் தயாரிப்பாளர்களுக்கும் வந்துசேரும். நடுவில் யாருமே கொள்ளையடிக்க முடியாது.


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல