வெள்ளி, 17 ஜூலை, 2015

யாழ் விரிவுரையாளரின் அறைக்குள் மேலாடை கிழிந்த மாணவி…!

தமிழ் மக்களின் விடுதலை உயிர்மூச்சாக விளங்கிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழம் இன்று மோசமான பாலியல் வன்முறைக் கூடமாக மாறி வருகின்றமை குறித்து ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வெட்கப்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.



இங்கு பட்டப்படிப்பை மேற்கொண்டு வெளியேறியவன் என்ற ரீதியில் எமது பல்கலைக்கழகத்தின் தற்கால செல்நெறி குறித்து நானும் எனது வேதனையை இங்கு பதிவுசெய்கின்றேன். வெளியே இடம்பெறுகின்ற அத்துமீறல்களுக்காக குரல்கொடுக்கின்ற யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் ஆசிரியர் சங்கம், ஊழியர் சங்கம் என்பனவும் உள்ளே இடம்பெறுகின்ற அசிங்கங்களை கண்டும் காணாமல் இருப்பது ஆச்சரியத்துக்குரியது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் சில துறைகளில் கல்வி கற்கும் மாணவிகள் அதிக புள்ளிகளைப் பெறவேண்டும் என்றால், ஏன் பாடங்களில் சித்தியடைய வேண்டும் என்றால் குறித்த விரிவுரையாளர்களின் ஆசைக்கு இணங்கவேண்டும்.

அவர்களின் ஆசைக்கு எதிர்ப்புக் காட்டும் மாணவிகள் பல ஆண்டுகள் சென்றாலும் பட்டப்படிப்பை பூர்த்தி செய்ய முடியாத பரிதாபம். இதனால் சில மாணவிகள் விரும்பியோ விரும்பாமலோ அவர்களின் ஆசைக்கு இணங்கவேண்டிய நிலை.

அண்மையில், ஒரு மாணவியை தனது அறைக்கு அழைத்த விரிவுரையாளர் ஒருவர் அந்த மாணவியின் விருப்பத்திற்குமாறாக அவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்த முயன்றார்.

இதன்போது குறித்த மாணவியின் மேலாடையின் முன்பக்கம் கிழிந்த நிலையில் அவர் அறையை விட்டு தப்பி வெளியேறியதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு மேலாக விரிவுரையாளர் ஒருவர் ஏமாற்றிய காரணத்தாலேயே அண்மையில் அப்பாவி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் தகல்கள் தெரிவிக்கின்றன.

கல்வி என்ற பெயரில் விரிவுரையாளர்களால் அரங்கேற்றப்படும் இந்த அசிங்கத்தனமான செயல்களைத் தடுத்து நிறுத்த வேண்டியது யார்?

கடந்த காலங்களில் பல்கலைக்கழகத்தில் செயல் திறன் உள்ள மாணவர் ஒன்றியம் இருந்ததால் விரிவுரையாளர்கள் அடங்கியிருந்தார்கள். மாணவர்களின் சக்தி அவர்களை அடக்கி வைத்திருந்தது.

ஆனால், இன்று பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு எதிராக இழைக்கப்படுகின்ற இம்சைகளைப் பார்க்கும்போது இவ்வாறான மாணவர் ஒன்றியம் இருக்கின்றதா என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது.

மாணவர் ஒன்றியத் தெரிவின்போது தமிழ் அரசியல்வாதிகளை விடவும் அதிக பிரச்சாரம் செய்து தங்களுக்கு வாக்களிக்குமாறு கோரி தலைமைப் பதவிக்கு வருகின்ற மாணவர் ஒன்றியத்தினர், விரிவுரையாளர்களால் அரங்கேற்றப்படும் நாசகார செயலை பார்த்துக்கொண்டிருப்பது எந்த வகையில் நியாயம்?

கடந்த காலத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ் மக்களின் அடையாளமாக, தமிழ் மக்களின் பேசு பொருளாக திகழ்ந்தது.

அந்த ஒன்றியம் ஒரு அறிக்கை விட்டால் யாழ்ப்பாண மக்கள் மட்டுமன்றி சர்வதேசம் பூராகவும் பரந்து வாழ்கின்ற தமிழ் மக்கள் அதற்கு மதிப்பளித்தனர். மாணவர்களின் கருத்துக்கு பின்னால் அணி திரண்டனர்.

ஆனால், இன்று அந்த வகிபாகம் கேள்விக்குறியாகியுள்ளமைக்கு மாணவர் ஒன்றியத்தின் செயற்றிறன் அற்ற நிலையே காரணமாகும் என்பதை இந்த இடத்தில் பதிவுசெய்ய விரும்புகின்றேன்.

இந்தப் பதிவு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவிகள் அனைவரையும் பாதிக்கப்பட்டவர்களாக சித்திரிக்கவில்லை.

ஆனால், சில துறைகளில் கற்கும் மாணவிகள் தினமும் கண்ணீரும் கம்பலையுமாக பல்கலைக்கழகம் சென்று திரும்புவதையே சுட்டிக்காட்டுகின்றது.

அண்மையில் புங்குடுதீவு மாணவி வித்தியாவிற்கு இடம்பெற்ற மோசமான செயலுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் ஆசிரியர் சங்கமும் உள்ளே பல வித்தியாக்கள் உருவாகுவதை பார்த்துக்கொண்டே ஏன் மௌனமாக இருக்கின்றனர்?

சர்வதேச ரீதியாக மதிப்பு பெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தை அதன் புனிதமும் கௌரவமும் கெடாத வகையில் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு வழிவழியாக வருகின்ற மாணவர் ஒன்றியங்களுக்கு மட்டுமே இருக்கின்றது. இந்த பாத்திரத்தில் இருந்து மாணவர் ஒன்றியம் விலகக்கூடாது.

அன்பான மாணவர்களே,

மாணவர் சக்தி மாபெரும் சக்தி என்பதை அறிந்திருந்தும், நடைமுறை வாழ்க்கையில் தெரிந்திருந்தும் உள்ளே சில காமுகர்களால் உங்கள் சகோதரிகள் வதைக்கப்படுவதை பார்த்துக்கொண்டு ஏன் மௌனமாக இருக்கின்றீர்கள்?

உங்கள் மௌனம் அந்தக் காமுகர்களுக்கு வாய்ப்பாக அமைகின்றது என்பது உங்களுக்கு தெரியாதா? ஏத்தனை காலம்தான் இதைப் பொறுத்துகொள்ளப்போகின்றீர்கள்???

யாழ் சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.பொன்ராசா


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல