வியாழன், 1 அக்டோபர், 2015

அன்று... பிச்சை எடுத்த மாணவி: இன்று... ரஷ்யாவில் மருத்துவ மாணவி!

சில ஆண்டுகளுக்கு முன் பிச்சை எடுத்த ஒரு மாணவி இன்று மருத்துவம் படிக்க ரஷ்யா சென்றுள்ளார்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவர், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், தனது 2 மகள்களுடன் தேனி பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். இதை அறிந்த பழனிசெட்டிபட்டியில் உள்ள அவருடைய உறவினர்கள் லட்சுமி குடும்பத்தினரை தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர்.


அதன்பின் லட்சுமியின் மகள்களான கார்த்திகா மற்றும் சர்மிளாவை தேனி அருகே, கோடாங்கிபட்டியில் உள்ள ஒரு ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்துள்ளனர். அங்கு, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், கார்த்திகா 8 ஆம் வகுப்பிலும், சர்மிளா 6 ஆம் வகுப்பிலும் சேர்க்கப்பட்டனர். கார்த்திகா எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 454 மதிப்பெண்கள் எடுத்தார். அதன்பின் கடந்த கல்வி ஆண்டில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் அவர் 892 மதிப்பெண்கள் எடுத்திருந்தார்.

இந்நிலையில், ரஷ்யாவில் உள்ள மருத்துவக்கல்லூரியில் படிக்க ஆண்டு தோறும் 200 மாணவிகளை தேர்வு செய்து அனுப்பும் சென்னையை சேர்ந்த ஒரு கல்வி அமைப்பு, ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்தை சேர்ந்த ஒரு மாணவியையும் தேர்வு செய்து அனுப்புவது வழக்கம். அந்த மாணவி 50 சதவீத கல்விக்கட்டணம் மட்டும் செலுத்தினால்போதும். அதன்படி இந்த ஆண்டு, அன்று பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்த சிறுமி கார்த்திகா ரஷ்ய மருத்துவக்கல்லூரியில் படிக்க தேர்வு செய்யப்பட்டார். அடுத்த மாதம் முதல் வாரத்தில் ரஷ்யா செல்ல இருந்தார் கார்த்திகா. ஆனால் அவசர அழைப்பு காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன் தேனியில் இருந்து புறப்பட்டு, நேற்று ரஷ்யா சென்றடைந்துள்ளார்.

இந்த வாய்ப்பு குறித்து கார்த்திகா கூறும்போது, ''நான் சங்கரன்கோவிலில் 4 ஆம் வகுப்பு வரை படித்தேன். பின்னர் அம்மாவுடன் சேர்ந்து நானும், என் தங்கையும் பிச்சை எடுத்தோம். அப்போது நாங்கள் 2 பேரும் காப்பகத்தில் சேர்க்கப்பட்டோம். மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த எங்கள் அம்மா, உறவினர் வீட்டில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டு இருந்தார். எனது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியான மறுநாள் எங்கள் அம்மா இறந்து விட்டார்.

எனக்கு ரஷ்யாவில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது கடவுளின் அருளால்தான். அவர் மனித உருவில் வந்து உதவுகிறார். என்னிடம் அணிந்து செல்ல நல்ல ஆடைகள் கூட கிடையாது. எனக்கு புதிய ஆடைகள், செருப்பு, பைகள் என எல்லாவற்றையும் பலரும் வாங்கிக் கொடுத்து வழியனுப்பி வைத்தனர். நான் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்து, அங்கிருந்து ரஷ்யா சென்றடைந்தேன்.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் பலர் என் மருத்துவப் படிப்புக்கு தேவையான புத்தகங்களை வாங்கிக் கொடுத்தனர். எனக்கு கலெக்டர் ஆக வேண்டும் என்று ஆசை. ஏனெனில், நான் ஆட்சியராகி பணியாற்றும் இடங்களில் பிச்சைக்காரர்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பது என் விருப்பம். என்னைப் போலவே வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் சிறுவர், சிறுமிகளை மீட்டு அவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது லட்சியம்" என்று தெரிவித்து உள்ளார்.

- Vikatan
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல