சனி, 3 செப்டம்பர், 2016

பெத்தால் இப்படிப்பட்ட பிள்ளைகளைப் பெத்துக்கணும் என்று அனைவரையும் ஏங்க வைக்கும் உண்மைச் சம்பவம் இது!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் தேஜ் பகதூர் வர்மா. அங்குள்ள பாபா சாகிப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சாயா குடும்பத்தலைவி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள். பெரியவள் பெயர் சுஷ்மா. வயது 15. இரண்டாவது பையன் சைலேந்திரா வயது 10. கடைக்குட்டி அனன்யா வயது 4. இந்த மூன்று குழந்தைகளையும் பார்த்துத்தான் உத்தரப் பிரதேச மாநில மக்கள் மூக்கில் விரலை வைக்கின்றனர்! அப்படி என்ன சாதித்து விட்டார்கள்?



இந்தக் குழந்தைகள் நமது வயிற்றில் பிறக்கவில்லையே என ஏங்க வைக்கும் அளவுக்கு சாதனை செய்து விட்டார்கள்.

ஒரு நாள் கடைக்குட்டி அனன்யாவை மார்க்கெட்டுக்கு அழைத்துச் செல்கிறார் அவரது தந்தை தேஜ் பகதூர் வர்மா. அப்போது எதிர்பாராத விதமாக அவரது மற்ற இரு குழந்தைகளும் படித்த செயின்ட் மீரா கல்லூரியின் ஆசிரியையைச் சந்திக்கிறார். இருவரும் குழந்தைகளின் படிப்பு பற்றி பேசிக்கொண்டிருந்த போது, அந்த ஆசிரியையின் பையிலிருந்த ஒரு புத்தகத்தை எடுத்து 'கடகட'வென வாசிக்கத் தொடங்குகிறார் அனன்யா. அந்த ஆசிரியைக்கோ பயங்கர ஷொக். என்னடா இது இன்னும் பள்ளிக்கே போகாத இந்தக் குழந்தை அசால்டாக காலேஜ் புத்தகத்தை வாசிக்கிறதே என்று ஆச்சரியம்.

உடனே தேஜ் பகதூரிடம், 'நீங்கள் நாளைக்கு அனன்யாவை அழைத்துக்கொண்டு எங்கள் பள்ளிக்கு வாருங்கள்' என்று அழைக்கிறார் அந்த ஆசிரியை. மறுநாள் சென்ற போது அனன்யாவுக்கு டெஸ்ட் வைத்துள்ளது பள்ளி நிர்வாகம். இதில் 9ஆம் வகுப்பு படிப்பதற்கான தகுதி அனன்யாவிடம் இருந்ததைக் கண்ட பள்ளி நிர்வாகத்துக்கும் பயங்கர ஷொக்.
உடனே அந்தக் குழந்தையை தங்களது பள்ளியில் 9ஆம் வகுப்பில் சேர்த்துக் கொள்வதாகப் பள்ளி நிர்வாகம் அறிவித்தது. ஆனால் தன்னிடம் தற்போது வசதி இல்லாததால் அடுத்த ஆண்டு சேர்ப்பதாக கூறியிருக்கிறார் தேஜ் பகதூர். அதற்கு பள்ளி நிர்வாகமோ பீஸாவது மண்ணாவது. நீங்கள் குழந்தையை சேர்த்தால் மட்டும் போதும் என்று தெரிவிக்கவே தேஜ் பகதூருக்கு குஷி. கையோடு அட்மிஷனைப் போட்டுவிட்டுத்தான் வீட்டுக்கு வந்தார்.

4 வயதே ஆன அனன்யா 9ஆம் வகுப்பு படிக்கும் விஷயம் எப்படியோ மீடியாக்களுக்கு தெரிந்துவிட்டது. அப்புறம் என்ன... அனைத்து டி.வி.க்கள் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் அனன்யாதான் ஹொட் டாபிக். 9ஆம் வகுப்புப் புத்தகத்தை அவர் அசால்டாக படித்துக் காட்டும் வீடீயோ தற்போது வைரலாக பரவி வருகிறது. தினமும் ஏதாவது ஒரு டி.விக்கோ, செய்தித்தாளுக்கோ பேட்டி எனப் படு பிஸியாக இருக்கிறது அனன்யாவின் குடும்பம்.

இது குறித்து அனன்யாவின் தந்தை தேஜ் பகதூரிடம் கேட்டபோது எனது மூத்த மகள் சுஷ்மா 5 வயதில் 9ஆம் வகுப்பில் சேர்ந்தாள். தற்போது 15 வயது நடந்து கொண்டிருக்கும் நிலையில் டாக்டரேட் (பி.எச்.டி) படித்துக் கொண்டிருக்கிறாள் என்று மிரட்டுகிறார்.

சரி பையன் என்ன செய்யுறான் என்று அடுத்த அஸ்திரத்தைத் தொடுத்தால், அவன் 9 வயதில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டுத் தற்போது காலேஜில் படித்து வருகிறான் என்றார் கூலாக. (என்ன தலை சுற்றி மயக்கம் வருகிறதா? இன்னும் படிங்க மூர்ச்சையாகிடு வீங்க)

அது சரி உங்கள் குழந்தைகளுக்கு எப்படி இவ்வளவு அறிவு வந்தது என்று கேட்டதற்கு எல்லாம் கடவுள் கொடுத்த வரம்தான். எனது குழந்தைகளுக்கு டியூஷன் அது இதுன்னு எந்த வசதியும் நான் செய்து கொடுக்கல. அவங்க படிக்கணும்னு ஆசைப்பட்டாக்கூட நல்ல கல்வியை குடுக்க முடியாத நிலைமையில் தான் நான் இருக்கேன். அதனால் தானோ என்னவோ எனது குழந்தைகளுக்கு அபரிமிதமான அறிவை ஆண்டவனே கொடுத்துவிட்டான் என்றார்.

அனன்யாவின் தாய் சாயாவிடம் கேட்டபோது, அனன்யா எல்லாத்தையும் ஈசியா பிக் அப் பண்ணிக்குவா. வீட்ல சும்மாவே இருக்க மாட்டா. சதா ஏதாச்சும் புத்தகத்தை எடுத்துப் படிச்சுக்கிட்டே தான் இருப்பா. இராமாயணம் கூட படிச்சிருக்கான்னா பாருங்களேன். இப்பகூட அதை மனப்பாடமா சொல்லுவா. ரொம்ப சமத்து. மத்தக் குழந்தைங்க மாதிரி இதுவேணும் அது வேணும் என்று அடம்பிடிக்கமாட்டா என்கிறார் பெருமையாக. நீ என்னவாக ஆசைப்படுகிறாய் என்று அனன்யாவிடம் கேட்டால், அதைப்பற்றி நான் இன்னும் முடிவு செய்யவில்லை என்கிறார் பெரிய மனுஷியைப் போல!
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல