வெள்ளி, 27 ஜனவரி, 2017

சுவிசர்லாந்தில் இலங்கைத் தமிழருக்கு 30ஆயிரம் ஈரோ நஷ்டஈடு!!

நாடு கடத்தப்பட்ட இலங்கையருக்கு 30ஆயிரம் ஈரோ நஷ்டஈடு வழங்குமாறு சுவிஸ் அரசுக்கு ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவு!



சுவிஸில் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட இலங்கையருக்கு 30ஆயிரம் ஈரோவும், வழக்கு செலவாக 4770 ஈரோவும் செலுத்த வேண்டும் என்றும் சுவிசர்லாந்து அரசுக்கு ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

1990ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்த இந்நபர் 2003ஆம் ஆண்டு கொழும்பில் கைது செய்யப்பட்டு சில மாதங்களின் பின் விடுவிக்கப்பட்டார்.

2007 ஏப்ரல் 2ஆம் திகதி இந்நபர் இத்தாலிக்கு சென்று தங்கியிருந்தார்.

மார்ச் 2009ல் இவரின் மனைவியும் இத்தாலியை சென்றடைந்தார். இதன் பின்னர் 25 மே 2009ல் சுவிட்சர்லாந்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து புகலிடம் கோரியிருந்தனர். 2009 டிசம்பர் 8ஆம் திகதி முதல் குழந்தையும் 2011 யூன் 9ஆம் திகதி இரண்டாவது குழந்தையும் பிறந்தது.

இவர்களின் புகலிடக்கோரிக்கையை விசாரித்த சமஷ்டி குடிவரவு திணைக்களம் 2011ஆம் ஆண்டு யூன் முதலாம் திகதி புகலிடக்கோரிக்கையை நிராகரித்திருந்தது.

இவர்கள் புகலிடம் கோருவதற்கான சரியான காரணங்களையும் ஆதாரங்களையும் முன்வைக்கவில்லை என அவர்களின் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்ததுடன் அவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறும் அறிவித்திருந்தனர்.

எனினும் யூலை 5ஆம் திகதி விண்ணப்பதாரி நீதிமன்றில் மேன்முறையீடு செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் இவர்களின் புகலிடக்கோரிக்கையை 2012 நவம்பர் 27ஆம் திகதி நிராகரித்திருந்தது.

நாட்டை விட்டு வெளியேறுமாறும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து செங்களான் மாநில காவல்துறையினர் இக்குடும்பத்தை தடுத்து வைத்து 2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் 21ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தினர்.

கொழும்பு விமான நிலையத்தை சென்றடைந்த இவர்களை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் ஆரம்பத்தில் குடிவரவு சட்டத்தை மீறி நாட்டை விட்டு வெளியேறிய குற்றத்தின் கீழ் விசாரித்தனர்.

இவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்ததை அடுத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் இந்நபர் ஒப்படைக்கப்பட்டதுடன் மனைவியும் பிள்ளைகளையும் 13மணி நேரத்தின் பின்னர் விடுவித்தனர்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த இந்நபர் படையினரிடம் சரணடையாது நாட்டை விட்டு தப்பி சென்றார் என குற்றம் சாட்டப்பட்டு பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

தனது கணவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது சித்திரவதைக்கு உள்ளாகியிருக்கிறார் என அவரின் மனைவி ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்திலும் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்திலும் முறைப்பாடு செய்திருந்தார்.

இதன் பின்னர் இவரின் குடும்பத்தினர் சுவிட்சர்லாந்திற்கு திருப்பி அழைக்கப்பட்டனர்.

இந்நபர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு 2015 ஏப்ரல் 12ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டார்.

21 ஏப்ரல் 2015 அன்று இவர் மீண்டும் சுவிட்சர்லாந்திற்கு வருவதற்கு சுவிஸ் குடிவரவு திணைக்களம் அனுமதி வழங்கியது. ஏப்ரல் 25ஆம் திகதி சுவிசர்லாந்திற்கு மீண்டும் வந்த இந்நபருக்கு 2015ஆம் ஆண்டு யூன் 26ஆம் திகதி சுவிஸ் சமஷ்டி குடிவரவு திணைக்களத்தால் இவருக்கும் இவரின் மனைவி மற்றும் இரு பிள்ளைகளுக்கும் புகலிடக்கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டது.

2013ஆம் ஆண்டு யூலை 25ஆம் திகதி இன்னுமொரு நபரும் சுவிசர்லாந்திலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார். இவரும் விசாரித்த இலங்கை குடிவரவு அதிகாரிகள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்திருந்தனர்.

இதனையடுத்து அகதிகள் தொடர்பான வாதாடும் சட்டத்தரணி ஒருவர் 2013 ஓகஸ்ட் 2ஆம் திகதி சுவிஸ் நீதி மற்றும் குடிவரவு அமைச்சருக்கு இதனை தெரியப்படுத்தியிருந்தார்.

இதனை அடுத்து புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கையர்களை நாடுகடத்தும் நடவடிக்கைகள் 2013 ஓகஸ்ட் மாதத்தில் நிறுத்தப்பட்டதுடன் பெருந்தொகையான இலங்கையர்களின் புகலிடக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின் இலங்கையில் அமைதி நிலவுவதாக கூறி இலங்கையர்களின் புகலிடக்கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு சிலர் இலங்கைக்கு திரும்பி அனுப்பபட்டனர்.

2013ல் திருப்பி அனுப்பபட்ட இரு இலங்கையர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதை அடுத்து புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கையர்களை நாட்டிற்கு திருப்பி அனுப்புவதில்லை என சுவிஸ் குடிவரவு திணைக்களம் அறிவித்திருந்தது.

இலங்கைக்கு தாம் நாடு கடத்தப்பட்டதால் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளானதாக ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் சுவிட்சர்லாந்து அரசாங்கத்திற்கு எதிராக நஷ்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமை நீதிமன்றம் இன்று 26ஆம் திகதி ( 26.01.2017) தீர்ப்பை வழங்கியது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான சுவிட்சர்லாந்து தூதுவர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.

நாடு கடத்தப்பட்ட நபர் பின்னர் மீண்டும் சுவிட்சர்லாந்திற்கு அழைக்கப்பட்டு அவருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் நீதிமன்றில் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமை நீதிமன்றத்தலைவர் லுயிஸ் லொபெஷ் குர்ரே வழங்கிய தீர்ப்பில் நாடு கடத்தப்படும் போது அவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல் செயல்பட்டது என சுட்டிக்காட்டியதுடன் அவருக்கு நஷ்டஈடாக 30ஆயிரம் ஈரோவும் ( 32ஆயிரம் சுவிஸ் பிறாங்.

இலங்கை ரூபாவில் சுமார் 50 இலட்சம் ) வழக்கு செலவாக 4770 ஈரோவும் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

சுவிஸ் பத்திரிகையில் வெளிவந்து தொடர்புடைய செய்தி:
La Suisse a enfreint la loi interdisant la torture

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல