ஞாயிறு, 31 ஜனவரி, 2010

யாழ் நகரின் சொக்கட்டான் சந்தையும் குட்டுக்காய் மரமும் (பாகம் 5)

பழைய மாநகர சபை கட்டடம்

தந்தை செல்வநாயகம் தூபிக்கு முன்னால் தெற்குப் பக்கத்தில் பழைய மாநகர சபை முன்பு அமைந்திருந்தது. அது கோட்டை யுத்தத்தில் தரை மட்டமாகியது. கொழும்பு நகர சபைக்கு நிகரான கட்டடமாக இருந்த கட்டடம் அது. கம்பீரமான கட்டடம். இக்கட்டிடத்து முகப்பில் மேயர் அல்பிரெட் துரையப்பாவின் வெண்கலச் சிலை நிறுவப்பட்டிருந்தது. இக்கட்டிட த்தில் கேட்போர் கூடம் ஒன்றிருந்தது. மேல் நீதிமன்ற அமர்வுகள் இங்கேயே நிகழ்ந்தன. புகழ்பெற்ற கோகிலாம்பாள் கொலை வழக்கு இம்மண்டபத்தில்தான் நடந்தது.


1949 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாநகர சபை தோற்றம் பெற்றது. யாழ். மாநகர சபையின் முதல்வர்களாக சாம் சபாபதி, க. பொன்னம்பலம், பொ. காசிப்பிள்ளை, அ. த. துரைராஜா, செ. மகாதேவா, சி. நாகராஜா, அல்பிரட் துரையப்பா, இரா. விசுவநாதன், சரோஜினி யோகேஸ்வரன், பொ. சிவபாலன், ந. ரவிராஜ், செ. கந்தையன் முதலானோர் இருந்துள்ளனர். இவர்களில் சரோஜினி, சிவபாலன், ரவிராஜ் என்போர் கொலையுண்டனர்.

மாநகர சபை ஆணையாளர்களாக கே. பாலசுப்பிரமணியம், கே. சண்முகம், சி. வி. கே. சிவஞானம், வி. பி. பாலசிங்கம், இராமலிங்கம், கலாநிதி க. குணராசா முதலானோர் விளங்கியுள்ளனர். சிவஞானம் இரண்டு தடவைகள் ஆணையாளராக இருந்துள்ளார். நிழல் நிர்வாகியாக இரு தசாப்தங்கள் தன்னிச்சையாக தமிழ்ப் பிரதேசத்தை ஆட்சி புரிந்த சின்னப்பா மாஸ்ரர் என்பவரின் கடும் கட்டளையால் பிரதம செயலாளராக இருந்த ரங்கராஜாவால் இவர் இரண்டாம் தடவையாக ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.


சொக்கட்டான் சந்தை


முற்றவெளியில் அமைந்திருந்து மாநகர சபைக் கட்டடம் யுத்தத்தினால் தரை மட்டமாகியதும் நல்லூரில் குத்தகைக் காணிக்கு சபையை சிவஞானம் கொண்டு சென்றார். பழைய மாநகர சபை கட்டடம் மாடிக் கட்டிடமாகும். இடவசதி கொண்டது. யாழ்ப்பாணகரத்துக்கு மையமானதாகும். மீண்டும் அவ்விடத்துக்கு மாநகர சபை செல்ல வேண்டும். யாழ்ப்பாணம் திறந்தவெளி அரங்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பயனற்றுள்ளது.


கங்காசத்திரம்

யாழ்ப்பாணத்தில் முன்பு ஒரு சத்திரம் இருந்தது. நகரத்தின் மிக முக்கியமான தொரு அடையாளம். இன்றும் யாழ்ப்பாணத்தில் சத்திரத்துச் சந்தி என்று அவ்விடம் அழைக்கப்படு கின்றது. ஒரு பொதுக் கிணற் றுடன் காணப் பட்ட அச்சத்திரம் கங்கா சத்திரம் என்றழைக்கப் பட்டது. யாழ்ப் பாணச் சத்திரம் எனப்பட்ட கங்கா சத்திரத்தையும் கிணற்றையும் பெரிய கடையில் அமைத்துக் கொடு த்தவர் வல்லிபுரம் என்பவராவார். இவரே முதன் முதல் யாழ்ப்பாணத்தில் தேயிலைக் கடை ஒன்றினைத் தொடக்கி நடத்தியவர். இச்சத்திரம் அன்றைய காலவேளையில் மிகவும் பயனுடையதாக விளங்கியது.


பழைய அரசாங்க மாளிகை எச்சம்


யாழ்ப்பாணம் பெரிய கடைக்கும் வைத்தியசாலைக்கும் வண்டில் கட்டி வரும் வெளிக்கிராம மக்கள் தங்கி இளைப்பாறி உணவருந்திச் செல்லுமிடமாக விளங்கியது. தீவுப் பகுதிகளிலிருந்து வள்ளங்களில் பல மணித்தியாலங்கள் பயணப்பட்டு வரும் மக்கள் தங்கி இளைப்பாற இச்சத்திரம் உதவியது. தீவுகளை இணைக்கும் பண்ணைப்பாலம், வாணர்பாலம், பொன்னாலைப்பாலம் என்பன இல்லாத காலவேளையில் சிறிய வள்ளங்களின் மூலம் யாழ்ப்பாணக் கரையில் இறங்கும் மக்களின் தங்குமிடமாக இச்சத்திரம் தொண்டாற்றியது.

போக்குவரத்துக்கள், மின்சாரம் என்பன அபிவிருத்தியடைந்த காலத்தில் இச்சத்திரத்தின் பயன்பாடு குறைந்து போனது. இரவு நேரங்களில் தகாத செயல்களுக்கு இச்சத்திரம் பயன்பட்டது. இச்சத்திரத்தை ஆக்கிரமித்து ஒருவர் தேநீர்க் கடை வைத்திருந்தார். யாழ்ப்பாணக் கடைகள் பலவற்றிற்கு இன்றும் தண்ணீர் அளிக்கும் கிணறாக இச்சத்திரத்தின் கிணறுள்ளது. எமது கலாசாரத்தின் முக்கிய சின்னமாகப் பதுகாக்கப்பட வேண்டிய இச்சத்திரத்தை இடித்து அகற்றி அவ்விடத்தில் தற்காலிகக் கொட்டில் கடைகளை அமைத்த பெருமை அக்கால மாநகர சபை ஆணையாளர் சி. வி. கே. சிவஞானத்திற்குரியதாகும்.


சொக்கட்டான் சந்தைகள்

அன்றைய யாழ்ப்பாண நகர், மத்தியில் இரண்டு சொக்கட்டான் வடிவ சந்தைக் கட்டிடங்கள் இருந்தன. இன்று அவற்றைக் காண முடியாது. சொக்கட்டான் வடிவ சந்தையை இன்று சுன்னாகத்தில் காணலாம். இக்கட்டிடங்களில் கிழக்கே இருந்த கட்டிடத்தில் பல வகையான பழ கடைகள் இருந்தன. மேற்கே இருந்த கட்டிடத்தில் பாக்குச் சீவல், வெற்றிலை, புகையிலைக் கடைகள் இருந்தன. இக்கடைகள் யாவும் நிலத்தில் சாக்குகளை விரித்து அவற்றின் மீது கடை பரப்பப்பட்டிருந்தன. இரவு வேளைகளில் பெரும் பெட்டிகளுள் (பத்தாயங்கள்) பொருட்கள் வைத்து மூடப்படும். மேற்குப் பக்கச் சந்தையில் பாய்க்கடைகள் பலவும் இருந்தன. பிற்காலத்தில் இக்கடைகள் நிலத்தில் சாக்கு விரிக்காமல் 3 அடி உயரமான பெட்டிகளில் வைத்து விற்கப்பட்டன. விற்கப்படும். விற்கப்படும் பொருட்கள் உமல் என்று சொல்லப்பட்ட பனையோலைப் பைகளில் வழங்கப்பட்டன. பல்வேறு அளவுகளில் உமல்கள் இருந்தன.


குட்டுக்காய் மரம்


இச்சொக்கட்டான் சந்தைகள் யாழ்ப்பாணம் எரிந்த போது சாம்பலாகின. 1977 ஆகஸ்ட் மாதம் யாழ்ப்பாணத்தில் நடந்த வன்செயல்களில் பழைய சந்தை தீ மூட்டப்பட்டது. 1977 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இரவு பழைய சந்தைப் பாய்க்கடைக்கு தீ மூட்டப்பட்டது. அரைகுறையாகத் தீ மூண்டது. 16 ஆம் திகதி சொக்கட்டான் சந்தைகள் கொழுந்து விட்டெரிந்தன.

யாழ்ப்பாண நகர வீதிகளில் பொலிஸாரின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தாத மக்கள் சிலர் கொளுத்திய றயர்களைப் பொலிஸார் தூக்கி பழைய சந்தைக்குள் எரிந்து விட்டார்கள். அதனால் சொக்கட்டான் சந்தைகள் கொழுந்துவிட்டு எரிந்து தரை மட்டமாகின. சொக்கட்டான் சந்தை கட்டடம் சுண்ணாம்புக் கற்களைக் கொண்டது. அக்கட்டடங்களின் தடித்த தூண்கள் யாவும் சுண்ணாம்பினால் கட்டப்பட்டிவை. இன்று சொக்கட்டான் சந்தைகள் இல்லை. அந்த இடத்தைப் புதிய திட்டமிடாத கடைகள் ஆக்கிரமித்துள்ளன.

சொக்கட்டான் கிழக்குச் சந்தையின் ஒரு பகுதியிடத்தையும் பழைய பஸ் நிலையத்தையும் மீன் சந்தையையும் உள்ளடக்கியதாக நவீன சந்தைகள் அமைந்தன. யாழ்ப்பாண நகரின் மத்தியில் முன்னர் ஒரு சொக்கட்டான் வடிவ மீன் :s(> இருந்தது. யாழ்ப்பாணத்தின் நவீன சந்தைகள் வெளிக்கடைகளையும் உட்கடைகளையும் கொண்டுள்ளன. நவீன சந்தைக்குள் புகுந்தால் ஒரு பொருட்காட்சிச்சாலைக்குள் நுழைந்த அனுபவம் ஏற்படும். மலேஷியா, சிங்கப்பூர் என்றெல்லாம் சொல்கி றார்கள். அவை எல்லாம் தோற்றுப் போகுமளவிற்கு இங்குள்ள கடைகள் அமைந்திருக்கும். இக்கடைகளில் இல்லாத பொருட்களே இல்லை.

யுத்த காலத்தில் இந்த நவீன சந்தைக் கட்டிடத்தின் கிழக்குப் பகுதி சற்று அழிந்தது. கிழக்குக் கட்டிடத்தின் தென் மேற்குப்பகுதி எரியுண்டது. யாழ்ப்பாண ஆஸ்பத்திரி பழைய கோலத்திலேயே உள்ளது. புதிய சில கட்டடங்கள் வந்த போதிலும் இட நெருக்கடி காணப்படுகின்றது. பஸ் நிலை யம் புதிய இடத்தில் அமைந்துள்ள போதிலும் இடநெருக்கடி காணப்படு கின்றது. வசதிகள் போதயனவாக இல்லை. பஸ் நிலையத்தை முற்றவெளிக்குக் கொண்டு போகும் முயற்சிகள் நடந்தன. நிறைவு பெறவில்லை. பஸ் நிலையத்தின் வடபுறம் தனியார் மின் பஸ்களினால் நிரம்பி வழிகின்றன. மக்கள் ஒதுங்குவதற்குரிய மலசலகூட வசதிகள் அமையவில்லை.


யாழ்ப்பாணம் கச்சேரி

புதிய கட்டடத்தில் யாழ்ப்பாணக் கச்சேரி இன்று காணப்படுகின்றது. யாழ்ப்பாண நிர்வாக மையமாக போர்த்துக்கேய, ஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பாணக் கோட்டை விளங்கியது. அரசாங்க அதிபரான பேர்சுவல் டயிக் பழைய பூங்காவை விருத்தி செய்து அரசாங்க மாளிகையை அங்கு அமைத்தார். அதனருகில் பழைய கச்சேரியை நிறுவினார். இன்றைய புதிய கச்சேரி அமைந்துள்ள இடத்துக்கு தெற்காக அது அமைந்திருந்தது. யுத்தம் காரணமாகப் பழைய கச்சேரி இடிந்து பாழடைந்து விட்டது. பழைய பூங்காவிலிருந்த அரச மாளிகையும் இடிந்து விட்டது. பாழடைந்த கட்டடங்கள் எஞ்சி நிற்கின்றன. நீண்ட காலமாக பழைய கச்சேரியில் முதலாம் மாடியில் தேர்தல் காரியாலயம் அமைந்திருந்தது. அதுவும் இன்று இடம்மாறிவிட்டது.


பழைய கச்சேரி


யாழ்ப்பாண கச்சேரி குட்டுக்காய் மரம்

யாழ்ப்பாணம் கச்சேரியில் அதிசயமான மரம் ஒன்று காணப்படுகிறது. இலங்கையில் வேறெங்கும் காண முடியாதது. புதிய கச்சேரியின் கிழக்குப் பாகத்தில் இம்மரம் வளர்ந்துள்ளது.

இதனைக் குட்டுக்காய் மரம் என்பர். நுனியில் வட்டவடிவமான காயையும் நீண்ட காம்பையும் இது கொண்டிருக்கும்.

அக்காலத்தில் இதன் காம்பைப் பற்றி மாணவர்கள் ஒருவர் தலையில் மற்றொருவர் அடித்துக் கொள்வார்கள். அதனால் குட்டுக்காய் மரம் என்று பெயர். துவைனம் துரை இக்குட்டுக்காயை எடுத்துத் தன் தலையில் அடித்துக் கொள்ளும் போது மனைவியிடம் அகப்பட்டு வேட்கமடைந்தாராம். இக்குட்டுக்காய் மரத்தை கவனமாகப் பாதுகாத்து வருகின்றார்கள்.


குருநகர் தண்ணீர் தாங்கி

யாழ்ப்பாண நகரத்துக்குத் தண்ணீர் வழங்குவதற்காக குருநகர் தண்ணீர் தாங்கி கட்டப்பட்டது. நகரத்துக்கு குடிநீர் கொண்டு வருவதற்காகப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆரம்பத்தில் நிலாவறைக் கிணற்றிலிருந்து நீர் கொண்டு வரத்திட்டமிடப்பட்டது.

துவைனம் அரச அதிப் சம்மதிக்கவில்லை. இன்று திருநெல்வேலிக் கணிற்றிலிருந்து குழாய் மூலம் நீர் எடுத்துச் சென்று குருநகர் தொட்டியில் சேகரித்து பின்னர் யாழ்ப்பாண நகர சபைப் பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றது. யாழ்ப்பாண மாநகர சபையால் இந்த விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றது.

Thinakaran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல