வியாழன், 12 ஆகஸ்ட், 2010

இடது கைப்பழக்கமானது உடலின் குறைபாடு அல்ல! இன்று ஆகஸ்ட் 13ம் திகதி சர்வதேச இடது கையாளர் தினம்

உலகில் கொண்டாடப்பட்டு வரும் விசேட தினங்களுள் சர்வதேச இடதுகை பழக்கம் உள்ளவர்களின் தினமும் ஒன்றாகும். இந்த உலகில் வாழ்பவர்களுள் நாற்பது சதவீதமானவர்கள் இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் என்பது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஏன் இதை வாசிக்கும் நீங்கள் கூட இடது கைப்பழக்கம் கொண்டவராக இருக்க முடியும்.

இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் திறமை மிக்கவர்கள், பெருமை பெற்றவர்கள், உயர் பதவிகளில் அமர்பவர்கள் என்றெல்லாம் நம்பிக்கை நிலவுகிறது. அது மட்டுமல்ல. ஆதாரங்களும் உள்ளன. உலக வல்லரசுகளில் ஒன்றான அமெரிக்க நாட்டின் அதிபர்களான ஜோர்ஜ் புஷ், ரொனல்ட் ரேகன், பில் கிளின்டன், பிரபல கிரிக்கெட் வீரர்களாக விளங்கிய எலன் போடர், வமம் அக்ரம், சனத் ஜயசூரிய, புகழ்பெற்ற ஓவியர்களான மைக்கல் அஞ்சலோ, பப்லோ பிக்காசோ, லியனாடோ டாவின்ஸி, இங்கிலாந்து அரச பரம்பரையைச் சேர்ந்த இரண்டாவது எலிசபெத் மகாராணி, இளவரசர்களான சார்ள்ஸ், வில்லியம், கியூபாவின் தலைவர் பிடல் கஸ்ட்ரோ, சாரணியத் தந்தை பேர்டன் பவல் பிரபு, உதைபந்தாட்ட வீரர் மரடோனா, நடிகர் சார்ளி சப்ளின், நடிகை மர்லின் மன்றோ மட்டுமன்றி உலகையே ஒரு திரும்புத்திருப்பிய நெப்போலியன் பொனபார்ட், ஜுலியஸ் சீசர், மகா அலெக்சாண்டர் போன்றவர்களெல்லாம் இடது கைக்காரர்கள் என்றால் ஆச்சரியமாக இல்லையா?

அரசியல், விளையாட்டு, கலை, கல்வி, மட்டுமல்ல எத்துறையை எடுத்துக் கொண்டாலும் அங்கே இடது கைப்பழக்கமுள்ளவர்களின் கையே ஓங்கியிருப்பதை நாம் காண முடிகிறது. இடது கை பழக்கம் என்பது ஒரு குறைபாடு அல்ல. அது ஒரு விசேட திறமை. வலது கைத்திறமை பொதுவான ஒன்று. ஆனால் இடது கைத் திறமையோ முக்கியமாக ஆர்வத்தோடு நோக்கக் கூடிய ஒரு திறன்.

வலது கை பழக்கம் கொண்டவர்களை விடவும் இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் உரிய பணிகளை விரைவில் நிறைவேற்றுவதை நாம் அவதானிக்க முடியும். உலகப் பிரசித்தி பெற்ற தலைவர்கள் உட்பட உயர் பதவிகளை அலங்கரிக்கும் அநேகமானவர்கள் இடது கையாளர்களே.

எனவே, இடது கைப்பழக்கம் கொண்டவர்களை அப்படியே விட்டு விடுங்கள் அவர்களைப் பற்றி நாம் அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இப் பழக்கமானது மனித உடலின் இயைபாக்கத்துடன் இணைந்த ஒரு செயற்பாடு. இது உருவாகிய பழக்கமே அன்றி உருவாக்கப்பட்ட அல்லது நிர்ப்பந்திக்கப்பட்ட ஒன்றல்ல.

ஒரு குழந்தையிடம் ஏதாவது ஒரு பொருளையோ அல்லது உணவுப் பண்டத்தையோ கொடுக்கும் போது அல்லது எதையாவது வாயுள் திணிக்க முற்படும் போது எந்தக் கையைப் பயன்படுத்துகிறது என்பதை அவதானித்து எதிர்காலத்தில் அக்குழந்தை எந்தக் கைவழக்கம் கொண்டதாக வளரும் என்பதை எம்மால் உறுதியாக ஊகிக்க முடியும். தானாகவே தன்னை அறியாமலேயே இப்பழக்கம் ஏற்படுகிறது என்பது இந்த இயல்பு மூலம் புலனாகிறது.

இது சூழலின் தாக்கத்தினாலோ, சூழ்நிலைகளின் தோஷத்தினாலோ உருவாகுவதல்ல. ஆகவே நிர்ப்பந்தத்தினாலோ, பயமுறுத்தலினாலோ இதனை மாற்ற முடியாது. மனிதன் மட்டுமன்றி பறவை, மிருகங்களிடமும்கூட இடது கைப்பழக்கம் உள்ளதாக அமெரிக்காவின் விலங்கியல் துறைப் பேராசிரியர்களான லோரஸ், மாஐரிவிலன் ஆகியோரின் ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கிளிகள், நண்டுகள் போன்றனவும் வலதைவிட இடதை உபயோகிப்பதாகவும், யானைகள் இடதுபுறத் தந்தம், கண், கால் போன்ற அவயவங்களின் இடது புறத்தை மிகத் தீவிரமாக செயல்படுத்துவதையும் இந்த ஆய்வுகள் தெளிவுபடுத்தி உள்ளன.

இடது கைப் பழக்கம் என்பது பிறவியிலிருந்தே உருவாகும் ஒரு வழக்கமல்ல என்பதும் சூழ் நிலைகளும் சுற்றுப்புறச் சூழலும் இதற்குக் காரணமாகிறது என்பதும் நவீனகால விஞ்ஞானிகள் கூற்றாகும். இடது கையாளர்களைக் கருத்தில் கொண்டு நவீன உற்பத்திகளும் இன்று சந்தைகளில் மலிந்துள்ளன.

தொலைபேசி, தட்டெழுத்து இயந்திரம் போன்ற அன்றாட தொழில் நுட்ப உற்பத்திகள் உட்பட அவர்களின் பாவனைக்கு உதவும் அத்தனை பொருட்களும் வித்தியாசமான வடிவமைப்பில் உருவாகிய வண்ணம் உள்ளன.

ஒரு இலட்சம் பேரை எடுத்துக் கொண்டால் அவர்களில் ஒவ்வொரு நான்கு பேருக்கும் ஒருவர் என்ற ரீதியில் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் உலகில் வாழ்வதாக ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. இவர்களுகென உலகளாவிய ரீதியில் சங்கங்கள் பலவும் கூட இயங்கி வருகின்றன.

எனவே இடது கையாளர்களை நாம் இம்சிக்க முடியாது. அவர்களுக்கு அது தனி உரிமை. அதனைத் தடுக்க எவருக்கும் உரிமை இல்லை. இடது கைகளால் உடலைப் பிளந்து உயிரைக் காக்கும் வைத்திய நிபுணர்களை நாம் காண்கிறோம். இடது கைகளினால் தீர்ப்பை எழுதி மரண தண்டனையோ அல்லது விடுதலையோ பெற்றுக் கொடுக்கும் நீதிபதிகளையும் நம்மால் காண முடிகிறது.

அந்த வகையில் 2001ம் ஆண்டு எமது நாட்டின் தலைநகரான கொழும்பிலே இடது கையாளர்களின் உரிமைக்கான மகாநாடொன்று கூட்டப்பட்டது. உலகளாவிய ரீதியிலான பிரதிநிதிகள் கலந்துகொண்ட இம்மகாநாட்டின்போது பல தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்பட்டன.

இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் சமூக அந்தஸ்தில் குறைந்தவர்கள் அல்ல. அத்தோடு இது ஒரு குறைபாடோ, இயலாமையோ அல்ல. இது உயிரினங்களின் தனித்துவ உரிமை. இதற்கு வேலியிட அல்லது அணை போடும் உரிமை எவருக்கும் இல்லை என்ற முடிவு இங்கு எட்டப்பட்டது. அதிக ஆளுமை கொண்ட ஒரு சாராராகக் கணிக்கப்பட வேண்டிய இடது கையாளர்கள் சமூகத்தினால் கழிக்கப்பட்டவர்களாக கருதப்படக்கூடாது. அவ்வாறு ஏற்றுக் கொள்ளவும் முடியாது. அவர்களுக்கும் அனைத்திலும் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்.

இடது கையால் எழுதினாலும், பிடித்தாலும், எடுத்தாலும் அவர்களும் மனிதர்களே. உலகம் இதனை ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் காரணமாகத்தான் ஆண்டுதோறும் ஒகஸ்ட் மாதம் 13ம் திகதி சர்வதேச இடது கையாளர் தினம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இது அத்தகையோரின் குரலுக்கும், தேவைகளுக்கும், சேவைகளுக்கும் கெளரவம் பெற்றுக் கொடுக்கும் ஒரு செயற்பாடாகும். உலகில் வாழும் இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் பற்றிய விபரங்களை அவ்வப்போது தெரிந்துகொள்ளக் கூடியதான வலைப்பின்னல் ஒன்றும் அவர்களுக்கென்றே உருவாக்கப்பட்ட வெப்தளம் ஒன்றும் கூட இயங்கி வருகிறது.

இடதுகை என்றால் என்ன? வலது கை என்றால் தான் என்ன? நாம் நமது கைகளின் மீது நம்பிக்கை வைத்தால் மட்டுமே நடப்பவை எல்லாம் நல்லவையாக நடக்கும். எம் கையே எமக்குதவி. எமது கைகள் மீதே நம்பிக்கை கொண்டு வாழ்ந்துய்வோம்.அதுவே கை கண்ட ஒளடதம். கை தேர்ந்த பழக்கம். கை கூடும் காரியம். கைராசியான செயற்பாடு!

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல