ஞாயிறு, 24 அக்டோபர், 2010

ராமேஸ்வரம் பகுதியில் மர்ம படகில் வந்தவரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்

ராமேஸ்வரம் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம படகு, இலங்கையில் திருடப்பட்டு, அதில் வந்த நபர் தப்பி ஓடிவிட்டதால், பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். சில தினங்களுக்கு முன் ராமேஸ்வரம் வடகாடு பகுதியில், இலங்கை மன்னாரைச் சேர்ந்த இன்ஜின் பொருத்திய பைபர் படகு கரை ஒதுங்கியது. படகில் வந்தவர் தப்பி ஓடிவிட்ட நிலையில், படகு குறித்து புலனாய்வு துறையினர் இலங்கை ஹைகமிஷனிடம் கேட்டனர்.

ராமேஸ்வரத்தில் கரை ஒதுங்கிய படகில் எழுதப்பட்டிருந்த 0631 என்ற எண் கொண்ட படகு இலங்கையில் உள்ளதாகவும், 0781 என்ற படகு இருக்கிறதா, இல்லையா என்பதை தேடி வருவதாகவும் கூறியுள்ளனர். மர்ம நபர் இலங்கையில் படகை திருடி, அதில் வேறு எண்ணை எழுதி (ஒரே படகில் இரண்டு எண்கள் இருந்துள்ளது) தனியாக வந்துள்ளார். கச்சத்தீவு அருகே வந்தபோது, வழி தெரியாமல் மீனவர்களிடம், தான் அகதியாக தமிழகத்திற்கு செல்வதாகவும் ராமேஸ்வரத்திற்கு எந்த வழியாக செல்ல வேண்டும் எனவும் விசாரித்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

படகு திருடப்பட்டு வந்துள்ளதால், வந்தவர் அகதியாகவும் தமிழகத்திற்குள் வந்து, இங்கிருந்து வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர். ஆனால், வந்த நபர் குறித்து வேறு தகவல்கள் ஏதும் கிடைக்காததால், தப்பிய நபரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர். போலீசார், "மர்ம படகில் இன்ஜின் கழற்றப்படாமல் உள்ளதால், படகில் வந்தது அகதியாகத்தான் இருக்கும்' என, பழைய கதையை நம்பி வருகின்றனர். முன்பு இலங்கையில் போர் நடந்தபோது, ஊடுருவும் புலிகள் அமைப்பினர் படகில் வந்து, படகிலுள்ள இன்ஜினை கழற்றி கடற்கரையில் புதைத்துச் செல்வது வழக்கம்.

அதே பாணியில் தற்போதும், "படகில் இன்ஜின் இருந்தால் அகதி, கழற்றினால் தான் பயங்கரவாத ஊடுருவல்' என்ற கோட்பாட்டில் போலீசார் உள்ளனர். இதன்படி தான் தற்போது, மர்ம படகில் வந்தவர் அகதி என கூறி போலீசார் சமாதானமாகி வருகின்றனர். இருப்பினும், அகதியாக யாரும் இதுவரை பதியாமல் உள்ளதால், சந்தேகம் வலுக்கிறது.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல