சனி, 25 பிப்ரவரி, 2012

கைகளும் கால்களும் கவலையும் இல்லை!

ஆசையோடு எதிர்பார்த்திருந்த தலைப் பிரசவம் ஏமாற்றத்தில் முடிந்தால் நமக்கு எப்படியிருக்கும்? அதுவும் அழகிய குழந்தையை எதிர்பார்த்திருந்த நமக்கு கைகளோ கால்களோ இல்லாத வழமைக்கு மாறான தோற்றத்தைக் கொண்ட குழந்தைதான் கிடைக்குமாயின் நமது நிலைதான் என்ன?

இந்தக் கேள்விக்கு விடை சொல்வது இலகுவானது. ஆனால் அதை நிஜமாகவே அனுபவிக்க வேண்டி நேர்ந்தால்....?

சேர்பியாவைப் பூர்வீகமாகக் கொண்ட, அவுஸ்திரேலியாவின் மெல்போர் நகரில் வாழ்ந்து வந்த கிறிஸ்தவ பாதியார் “பொரிஸ் வுஜிசிக்'கிற்கும் அவரது இளம் மனைவி “துஷ்கா வுஜிசிக்'கிற்கும் இவ்வாறானதொரு அனுபவம் ஏற்பட்டபோது அவர்கள் அதிர்ந்துதான் போனார்கள்.

1982 ஆம் ஆண்டு டிம்பர் 4 ஆம் திகதி. மெல்போர்ன் நகரிலுள்ள வைத்திய சாலை ஒன்றில் தலைப் பிரவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த துஷ்கா வுஜிசிக் கிற்கு கைகளும் கால்களும் இல்லாத நிலையில் “நிக் வுஜிசிக்' பிறந்த போது அவளால் தன்னையே நம்ப முடியவில்லை.

கடவுள் ஏன் நமக்கு வழமைக்கு மாறான தொரு தோற்றத்தைக் கொண்ட குழந்தையைத் தந்திருக்கிறார்? நான் ஒரு கிறிஸ்தவ பாதிரியாராகவிருந்து இறை பணி செய்கின்ற போதிலும் கடவுள் ஏன் இப்படி ஒரு குழந்தையைத் தந்து என்னைச் சோதிக்க வேண்டும்? இவைதான் அப் போதுகளில் நிக் வுஜிசிக்கின் தந்தையிடம் எழுந்த கேள்வி.

நிக் வுஜிசிக்கைப் பார்த்த வைத்தியர்களும் அதிர்ந்துதான் போனார்கள். அப்போ துகளில் இந்தக் குறைபாடு பற்றிய மருத்துவ அறிவு வளர்ந்திராத நிலையில் இதற்கான காரணத்தைக் கூட வைத்தியர்களால் கண்டறிய முடியாதிருந்தது. பின்னர்தான் டெட்ரா அமீலியா (Tetra Amelia) எனப்படும் குறைபாடுடையவர்கள்தான் இவ்வாறு அவையவங்களை இழந்த அரிதான பிறப்பு நிலைக்குட்படுபவர்கள் என்று மருத்துவர்கள் கண்டறிந்தார்கள்.

குழந்தை பிறந்துவிட்டது. ஆனாலும் வழக்கமான குழந்தைகளைப்போல் இல்லை. அதுவும் இந்தக் குறைபாடு சாதாரணமானதும் அல்ல. ஒரு கை இல்லாவிட்டாலே சமூகத்திலிருந்து ஒதுக்கப்படும் நிலையில் இரண்டு கைகளும் இரண்டு கால்களும் கூட இல்லாத நமது பிள்ளை யின் நிலை என்னாவது? இந்தக் குழந்தையின் எதிர்காலம்தான் எப்படியிருக்கும்?

இப்படிப்பட்ட ஓராயிரம் கேள்விகள் தினம் தினம் மனதுக்குள் உதித்தபோதிலும் நிக் வுஜிசிக்கின் பெற்றோர் மனந்தளர்ந்துவிடவில்லை.

பின்னர் என்ன நடந்தது? அதை நிக் வுஜிசிக்கிடமே கேட்டுவிடுவோம்.

““என்னை மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவயவங்கள் இல்லை என்பதைத் தவிர நான் நல்ல தேகாரோக்கியமாக இருப்பதை உறுதி செய்தார்கள். இது எனது பெற்றோருக்கு நம்பிக்கையைக் கொடுத்தது.

தமது பிள்ளைக்கு இயன்ற வரையில் சிறந்ததொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது என்று அவர்கள் உறுதிபூண்டார்கள்.

நான் பாடசாலைக்குச் செல்லும் வயதானபோதான் பிரச்சினை எழுந்தது.
உடல் ஊனற்றவர்களை பொதுவான பாடசாலைகளில் அனுமதிக்க முடியாது எனும் அவுஸ்திரேலிய சட்டம் எமக்கு பேரிடியாக விழுந்தது. பாடசாலையில் என்னை அனுமதிப்பதற்காகச் சென்றபோது நிருவாகம் அனுமதி தர மறுத்து விட்டது. அங்கவீனர்களுக்கான பாடசாலையில் கொண்டு போய்ச்சேர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் என்னுடைய தாய் அதற்கு உடன்படவில்லை. என்னுடைய பிள்ளைக்கு கைகளும் கால்களும் இல்லை என்பதைத் தவிர வேறு எந்தக் குறைபாடுமில்லை. அவனும் சாதாரண பிள்ளைகளைப் போன்று அனைத்தையும் விளங்கிக் கொள்ளக் கூடியவன்தான். அவனுக்கு அனுமதி தரத்தான் வேண்டும் எனக்கேட்டு நீதிமன்றத்தை நாடினார். ஈற்றில் எனது தாய் வெற்றியும் பெற்றார். அந்த சட்டத்திலும் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அந்த வகையில் பொதுவான பாடசாலை ஒன்றில் அனுமதி கிடைத்த முதலாவது அங்கவீனற்ற பிள்ளை எனும் பெருமையும் எனக்குத்தான் கிடைத்தது.

இப்படிப் போராடி பாடசாலைக்குச் சென்ற போதிலும் ஏனைய மாணவர்களோடு இணைந்து கல்வி கற்பது என்பது எனக்கு சற்று சிரமமானதாகவே இருந்தது.
அவர்கள் எல்லோரும் என்னை அந்நியமாகவே பார்த்தார்கள். என்னைப் பார்த்து பரி தாபப்பட்டார்கள். அருகில் வரக்கூட அஞ்சினார்கள். இது என்னைப் பெரிதும் பாதித்தது.

நான் தனிமைப்படுத்தப்பட்டேன்.
எனது வயதையொத்த மற்ற மாணவர்களெல்லாம் நண்பர்களாக ஒன்று சேந்து கூடிக் குலாவுகையில் நான் மாத்திரம் தனியாளாக இருந்து கொண்டிருந்தேன்.

இது எனக்கு பெரும் மனஅழுத்தத்தையும் கவலையையுமே தந்தது. வீட்டுக்குச் சென்றாலும் பெற்றோரைத் தவிர வேறு யாரும் என்னை நெருங்கவில்லை. அயல் வீட்டுப் பிள்ளைகள் கூட என்னைத் தேடி வரவில்லை.

இந்தத் தனிமையும் மன அழுத்தம் என்னை பல தடவைகள் தற்கொலை செய்து கொள்ளவும் தூண்டின.

ஆனாலும் இறைவன் என்னைக்கைவிட்டுவிடவில்லை. எனது பெற்றோர் என்னை ஊக் கப்படுத்தினார்கள். வகுப்பிலுள்ள சக மாணவர்களோடு நெருங்கிப் பழகுமாறும் அவர்களோடு கதைக்குமாறும் கூறி என்னை உற்சாகப்படுத்தினார்கள். சில வாரங்களிலேயே எனக்கு நண்பர்கள் கிடைத்து விட்டார்கள். அவர்களோடு சேர்ந்து நானும் மகிழ்ச்சியாக பொழுதைப் போக்கத் தொடங்கினேன்.

எனது குடும்பத்தவர்களும் அயலவர்களும் சமூகத்திலுள்ளவர்களும் என்னை அங்கீகரிக்கத் தொடங்கினார்கள். அவர்களது எதிர்பார்ப்பையும் மீறிய எனது இயலுமையின் காரணமாக அவர்கள் என்னுடன் நெருங்கிப் பழகினார்கள். உற்சாகப்படுத்தினார்கள். இதுவே எனது வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது.

அடுத்தவர்களின் உதவியோடு என்னாலும் வாழ்ந்து காட்ட முடியும் என்ற தன்னம்பிக்கை என்னுள் உறுதியாக வளரத் தொடங்கியது.

சிறு வயதிலேயே கல்வியில் மிக ஆர்வம் காட்டினேன். பாடசாலைக் கல்வியை வெற்றிகரமாக முடித்துவிட்டு 23 வயதானபோ “வணிக திட்டமிடல் மற்றும் கணக்கியல்' துறையில் பட்டப்படிப்பையும் பூர்த்திசெய்தேன்.

இக் காலத்தில்தான் நான் மற்றவர்களுக்கு உந்துக்தியளிக்கும் ஒரு பேச்சாளராக (Motivational Speaker) மாற்றம் பெற்றேன்.
ஆரம்பத்தில் எனது தந்தையார் பணி புரிந்த தேவாலயத்தில் சிறு குழுவினர் மத்தியில் உரையாற்றத் தொடங்கிய நான் பின்னர் பெரிய பெரிய இடங்களுக்கெல்லாம் சென்று எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டேன். நான் சொந்தமாக உழைத்து பொருளாதார ரீதியாக சிறந்து விளங்கவே விரும்புகிறேன். பாரிய தொழிற்துறையில் முதலீடு செய்ய விரும்புகிறேன்.
என்னால் சுயமாக இயக்கக் கூடிய வகையிலான புதிய கார் ஒன்றை வடிவமைக்க வேண்டும் என்பது எனது இலட்சியங்களில் ஒன்று.

விற்பனையில் சாதனை படைக்கக் கூடிய பல புத்தகங்களையும் நான் எழுத விரும்புகிறேன்.'' இவை நிக் வுஜிசிக் சில வருடங்களுக்கு முன்னர் ஆற்றிய உரையொன்றில் கூறியவை.

இப்போது அவர் தனது இலட்சியங்களை நோக்கி மிக வேகமாக நடைபயின்று கொண்டிருக்கிறார்.

அவரால் ஆடவும் பாடவும் முடிகிறது. கைகள் இல்லாவிட்டாலும் பற்களால் பேனை பிடித்து எழுத முடிகிறது. விரல்களில்லாவிட்டாலும் அவரால் கணினியை இயக்க முடிகிறது. இசைக் கருவிகளை இசைக்க முடிகிறது. கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி உரையாட முடிகிறது.
கோல்ப் விளையாடவும் கிரிக்கெட் விளையாடவும் மாத்திரம் இவரால் முடியும் என்பதல்ல. கடலலைகளில் சறுக்கி விளையாடவும் நீச்சல் தடாகத்தில் நீந்தி மகிழவும் அவரால் முடியும்.

பல் துலக்குவார். கண்ணாடி முன் நின்று தலை சீவி மகிழுவார். மாடிப்படிகளில் துள்ளிக் குதித்து ஏறி இறங்குவார்.

ஏன் சாதாரண மனிதர்களால் கூடமுடியாத அசாத்தியமான விடயங்களைக் கூட அவர் செய்கிறார்.

உடல் அவயவங்களின்றி மிகவும் சிரமமான வாழ்க்கை ஒன்றைச் சந்திக்க வேண்டியிருந்த நிக் அதற்கு முற்றிலும் ரேர் மாற்றமாக மற்றவர்களுக்கு புத்தூக்கமளிப்பவராக விளங்குவதன் காரணமாக 2005 ஆம் ஆண்டிற்கான “இளம் அவுஸ்திரேலியர்' விருது இவருக்கு வழங்கப்பட்டது. அவுஸ்திரேலியாவில் மிகுந்த பெறுமதிமிக்கதாகக் கருதப்படும் இவ்விருது அந்நாட்டின் தேசிய மற்றும் உள்ளூர் சமூகங்களின் வளர்ச்சிக்காக பாடுபடும் இளைஞர்களுக்காக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

இவரது “கைகளும் இல்லை, கால்களும் இல்லை, கவலையும் இல்லை' என்ற முதல் நூல் விற்பனையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இப்போது “வரையறைகள் இல்லாத வாழ்க்கை', “அவயவங்களில்லாத வாழ்க்கை' எனும் நூல்களும் விற்பனையில் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றன.

இதுவரைக்கும் சுமார் 25 க்கும்மேற்பட்ட நாடுகளுக்கு விஜயம்செய்து பாடசாலை மாணவர்கள், ஆசியர்கள், இளைஞர்கள், வர்த்தகர்கள், பெண்கள், தொழில் முயற்சியாளர்கள் என 8 மில்லியனுக்கும் அதிகமானோர் மத்தியில் உரையாற்றியிருக்கிறார்.

அமெரிக்க பாடசாலை ஒன்றில் மாணவிகள் மத்தியில் இவர் ஒரு சமயம் உரையாற்றியபோது இவரது வாழ்க்கைக் கதையைக்கேட்டு அங்கிருந்த அனைவரும் கண்ணீர்விட்டு கதறியழுதவாறு ஓடிச்சென்று நிக்கை கட்டியணைத்து முத்தமிடும் காட்சி “யூ டியூப்' இணையதளத்தில் பல வருடங்களாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக அவர் கடந்த 10 ஆம் திகதி திருமண பந்தத்தில் இணைந்து கொண்டபோது உலகமே அவரைத் திரும்பிப் பார்த்தது. நீண்ட நாட்களாக காதலித்த “கனே மியாஹரா' என்ற பெண்ணை தனது 29 ஆவது வயதில் நிக் கரம்பிடித்தார். தற்போது இவர்கள் ஹவாய் தீவுகளில் தேனிலவு கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

நிக் வுஜிசிக்கைப் பார்த்து நாம் ஆச்சர்யப்படுவதோடு மாத்திரம் நின்றுவிடக் கூடாது. மாறாக அவரது வாழ்க்கையிலிருந்து நிறையப் படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அவற்றை நமது வாழ்விலும் கடைப்பிடித்து முன்னேற முயற்சிக்க வேண்டும்.

சிறு சிறு குறைபாடுகள் அல்லது நோயுடன் குழந்தை பிறந்துவிட்டாலே முகம் சுழிக்கின்ற, வேதனைப்படுகின்ற, வாழ்க்கையே முடிந்துவிட்டதாக கருதப்படுகின்ற மனிதர்கள் வாழுகின்ற நமது சமூகத்தில் நிக் வுஜிசிக்கின் பெற்றோர் நமக்கு பெரும் முன்மாதிரியாகத்திகழ்கிறார்கள்.

“ஊனம் என்பது குறையல்ல.மாறாக அதுவும் இறைவனின் ஓர் அருள்தான்' என்ற நிக்கின் பெற்றோரது நேர்மறையான மனப்பாங்குதான் (Positive Thinking) இன்று அவரை உலகமே திரும்பிப் பார்க்கின்ற புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றிருக்கிறது.

இவ்வாறான குறைபாடுகளுடன் பிறந்த பல குழந்தைகள் இன்றும் வெளியுலகு தெரியாது வீடுகளிலேயே அடைத்து வைக்கப்பட்டிருப்பதையும் நாம் அறிவோம். இக் குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்வதற்குக் கூட சில பெற்றோர் வெட்கப்படுகிறார்கள். இவ்வாறான வர்களுக்கு நிக்கும் அவரது பெற்றோரும் சொல்கின்ற செய்திகள் அளப்பரியவை.

நிக்கின் தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் இருக்கிறதே... அது நம் அனைவருக்கும் படிப்பினை தருவது. உற்சாகம் தருவது. உந்து சக்தியளிப்பது.

கைகளும் கால்களும் இருந்தே நீச்ல் தடாகத்தில் இறங்க அஞ்சுபவர்களுக்கு மத்தியில் துள்ளிக்குதித்து மீன் குஞ்சுபோல் நீந்தித்திரியும் நிக்கின் துணிச்ல் நமக்கெல்லாம் வியப்பையே தருகிறது.

இரு வாரங்களுக்கு முன்னர் நிக் திருமணம் செது கொண்டபோது எல்லோரும் ஆச்சரியப்பட்டதற்கு காரணம் இருக்கிறது. மாப்பிள்ளை கறுப்பாக இருக்கிறார்...மணப் பெண் சிகப்பாக இல்லை என்ற அற்பகாரணங்களுக்காக சீர்குலைந்துபோன எத்தனையோ திருமண உறவுகளை நமது சமூகத்தில் கண்டிருக்கிறோம்.

காலில் அல்லது கையில் ஒரு விரல் இல்லை என்றாலே ச்மூகத்தால் ஓரங்கட்டப்படுகின்ற, திருமணம் முடிப்பதற்கு தகுதியற்றவர்களாகக் கருதப்படுகின்ற துர்ப்பாக்கியம் நமக்கு மத்தியில் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது.

இவ்வாறான எதிர்மறையான மனப்பாங்கு (Negative Thinking) சமூகத்திலிருந்து துடைத்தெறியப்பட வேண்டும்.
அதற்கு நிக் வுஜிசிக்கின் வாழ்க்கை வரலாற்றை முன்னிறுத்திய பிரசாரங்கள் முன் னெடுக்கப்பட வேண்டும்.

நமது நாட்டில் பஸ் வண்டிகளில் பயணம் செய்யும் போதும் பொது இடங்களுக்குச் செல்லும்போதும் அங்கவீனற்ற பல நூற்றுக் கணக்கானோர் பிச்சையெடுத்துத் திரிவதை காணும் போதெல்லாம் எனது மனதில் உதிப்பவர் நிக் வுஜிசிக்தான்.

இவ்வாறானவர்களுக்கு நாம் பிச்சைகொடுத்து ஊக்குவிப்பதை விடுத்து நிக் வுஜிசிக் போன்றவர்களை முன்னுதாரணமாகக் காட்டி அவர்களையும் சொந்தக் காலில் நிற்க வழிகாட்ட வேண்டும்.

இறைவன் ஒரு மனிதனுக்கு சில குறைபாடுகளைக் கொடுத்திருந்தாலும் பல நிறைகளைக் கொடுத்திருக்கிறான் என்பதற்கும் நிக்கை உதாரணமாகக் கொள்ளமுடியும்.

நிக்கைப்போன்ற அசாதாரண திறமை படைத்த பலர் நம்மத்தியிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களையோ அவர்களது திறமைகளையோ சமூகம் கண்டு கொள்வதில்லை.
அவர்களைத் தேடியறிந்து சமூகத்தின் முன் கொண்டு வர முயற்சிப்பதுமில்லை.
அவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படுமானால் நமது நாட்டிலும் பல நிக் வுஜி சிக்களை நம்மால் கண்டறிய முடியும்.

மொத்தத்தில் நிக் நமக்கெல்லாம் மிகுந்த முன்மாதிரிமிக்கவராக விளங்குகிறார். உடலாலும் உள்ளத்தாலும் சோர்வடைந்து போய் வாழ்க்கையையே வெறுத்தொதுக்கும் மனிதர்களுக்கெல்லாம் அவர் உற்சாகமளித்து மீண்டும் வாழ்க்கையைத் தொடங்க வழிகாட்டுகிறார். முயன்றால் முடியாதது எதுவுமல்ல என்பதற்கு ஒட்டு மொத்த உதாரணமாக நிக் திகழ்கிறார்.

“ஆமையும் முயலும்' கதையை எத்தனை நாட்களுக்குத்தான் நமது பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொண்டிருப்பது?
இன்று முதல் நிக் வுஜிசிக்கைப் பற்றியும் அவரது விடா முயற்சி, தன்னம்பிக்கை, துணிச்ல், திறமை பற்றியும் நமது பிள்ளைகளுக்குச் சொல்வோம். நமது பிள்ளைகளையும் நிக் வுஜிசிக் போன்ற முயற்சியாண்மைமிக்கவர்களாக வளர்த்தெடுப்போம்!


எம்.பி.எம்.பைறூஸ்


Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல