சனி, 25 பிப்ரவரி, 2012

வன்னியில் உயிர் தப்பி சிரியாவில் உயிரை அர்ப்பணித்த மேரி கொல்வின்

சாட்சியில்லாத சண்டைகளில் சிக்கி, சாவின் விளிம்பில் தத்தளித்தவர்களின் சோகக் கதைகளை வெளியில் கொண்டுவந்த மேரி கொல்வின் கொல்லப்பட்டுவிட்டார்.யுத்த பிரதேசங்களில் மழையெனப் பொழியும் குண்டுத் தாக்குதல்கள், இடையற்ற ஷெல் வீச்சுக்கள், தொடர்ச்சியான துப்பாக்கிச் சண்டைகளுக்கு மத்தியில் இருந்து அவர் அனுப்பிய செய்திக் கதைகள் படிப்பவர்களைக் கண்ணீர் மல்கச் செய்தன.



அதேபோன்று, அவர் யுத்த முனையில் உயிரிழந்த செய்தியும் படிப்பவர்களைக் கண்ணீர் விடச் செய்திருக்கின்றது.அவரது இழப்பு உலக ஊடக வரலாற்றில் ஈடு செய்ய முடியாத ஒன்றாகப் பதிவாகியிருக்கின்றது.

உண்மையே யுத்தத்தில் முதலில் பலிகொள்ளப்படும் என்பார்கள். அந்த உண்மையைத் தேடி அவர் மேற்கொண்ட பயணங்கள் பல. பிரித்தானியாவின் பிரபல செய்தித்தாளாகிய சண்டே டைம்ஸின் போர்முனைச் செய்தியாளராகக் கிட்டத்தட்ட 30 வருடங்களாக அவர் பணியாற்றி வந்துள்ளார். செச்னியா தொடக்கம் சிறிலங்கா, சிரியா வரையில் பல யுத்த முனைகளை அவர் தரிசித்திருக்கின்றார்.

அரச படைகளுக்கும் அரசியல் உரிமைகளுக்காக போராடும் கிளர்ச்சியாளர்கள் அல்லது விடுதலைக்காகப் போராட்டம் நடத்தியவர்களுக்கும் இடையிலான மோதல்களில் சிக்கிக் கொள்ளும் அப்பாவிப் பொதுமக்கள் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்கள் படுகொலைகள் அவர்கள் மீதான அடக்குமுறைகள், அநியாயங்கள் பற்றிய உண்மைகளை அவர் அபாரமான
துணிச்சலோடு வெளிக்கொண்டு வந்தார்.

பேனா என்ற ஆயுதமேந்தியவராக, போர்முனைகளில் இடம்பெற்ற அநியாயங்கள், அத்துமீறல்களுக்கு எதிரான, கண்கண்ட சாட்சியாக அவர் நடமாடினார். இவரது போர்முனை சாட்சியங்கள் எட்ட முடியாத இடங்களில் இருந்து சொல்லமுடியாத விடயங்களின் முதல்தரத் தகவல்களாக செய்திக் கட்டுரைகளில் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் பிரசுரமாகின.

போர்முனைச் செய்திகளைத் தேடி அவர் மேற்கொண்ட பயணங்கள் அத்தனையும் உயிராபத்துக்கள் மிக்கவை. பல இடங்களில் அவர் மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டிருக்கின்றார். ஆயினும் சிரியா நாட்டு அரச படைகளினால் முற்றுகையிடப்பட்டிருந்த ஹோம்ஸ் நகரில் நடத்தப்பட்ட ஷெல் மற்றும் மோட்டார் தாக்குதல்களில் இருந்து அவரால் தப்ப முடியவில்லை. பெப்ரவரி 22 ஆம் திகதி புதன்கிழமை இறக்கும் போது அவருக்கு வயது 56.

கடந்த 1956 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி பிறந்த அவர் தனது 57 ஆவது பிறந்த தினத்தன்று உயிரிழந்தார்.துப்பாக்கி முனைகளிலும், அதன் நிழல்களிலும் அவல வாழ்க்கை நடத்தும் அப்பாவிப் பொதுமக்களின் குரல்களை உலகத்தின் கவனத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்பதில் அவருக்கு அளவற்ற ஆசை. அந்த வாழ்க்கையின் கண்கண்ட சாட்சியாக இருக்க வேண்டும் என்ற விருப்பமே அவரை ஒரு போர்முனைச் செய்தியாளராகச் செயற்படத் தூண்டியிருந்தது.
போர்முனைகளின் ஆபத்துக்களை அவர் நன்றாகவே உணர்ந்திருந்தார்.
இந்த ஆபத்துக்களில் இருந்து உயிர் தப்புவது என்பது நிலையற்ற, நிச்சயமற்ற வெறும் அதிர்ஷ்டத்திலேயே தங்கியுள்ளது என்ற போர்முனைத் தத்துவத்தை அவர் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார்.

சீறி வருகின்ற துப்பாக்கிக் குண்டுகள் வெடித்துச் சிதறுகின்ற ஷெல்கள் மோட்டார்குண்டுகளினால் ஏற்படுகின்ற அழிவுகள், உடல்கள் சிதறி சின்னாபின்னமாகின்ற மரணங்கள்,கடும் காயங்கள் என்பவற்றில் இருந்து அல்லோலகல்லோலப்பட்டு அவலப்படுகின்ற காட்சிகள் நிலைமைகளை எதிர்கொள்வதும், அவற்றின் நேரடி சாட்சியாவதுமே, யுத்தனையில் செய்தியாளர்கள் சந்திக்கின்ற அனுபவமாகும் என்று யுத்த முனையில் செய்தி சேகரிப்பது பற்றி மேரி கொல்வின் விபரித்திருந்தார்.

“அதுமட்டுமல்ல. அரச படைகளுக்கும் கிளர்ச்சியாளர்கள், பிரதேசவாசிகளுக்கும் இடையில்இடம்பெறுகின்ற யுத்த மோதல்களின்போது மணற்புயலாக எழுகின்ற இருதரப்பு பிரசாரங்களுக்கு நடுவே, உண்மை என்ன என்பதைக் கண்டறிவதுவே போர்னைப் பணியாகும்' என்றும் மேரி கொல்வின் கூறியிருக்கின்றார்.

அவருடைய திறமை, துணிச்சல், செயற்றிறன், உண்மையைப் பகுத்தறியும் ஆற்றல்எல்லாவற்றிற்கும் மேலாக எட்ட முடியாத இடங்களில் செல்ல முடியாத பிரதேசங்களில் குரல் இல்லாத அப்பாவிகளின் குரல்களை வெளிக்கொண்டு வருவதில் அவர் காட்டிய ஆர்வம் பற்று என்பவையே, அவரை இன்று உலகமே அவரைப் போற்றச் செய்திருக்கின்றது. அவர் கொல்லப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கவும், அவரது இழப்புக்காக வருந்தவும் செய்திருக்கின்றது.

அவரை அறியாத சர்வதேச செய்தியாளர்கள் இல்லையென்றே சொல்ல வேண்டும். அமெரிக்கரான, அழகிய இளம் செய்தியாளராக நியு யோர்க் நகரத்தில் யூனைட்டட் பிரஸ் இன்ரநெஷனல் என்ற செய்தி நிறுவனத்தில் நள்ளிரவு தொடக்கம் அதிகாலை 6 மணிவரையிலான நேரத்துக்குரிய நிருபராக ஊடகத்துறையில் அவர் பிரவேசித்தார்.
1985 ஆம் ஆண்டு அவர் பிரித்தானியாவின் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் இணைந்துகொண்டார்.

1986 ஆம் ஆண்டு முதல் மத்திய கிழக்கு பிராந்திய செய்தியாளராக வெளிநாட்டு
விவகாரங்களைக் கையாளுபவராகவும் அவர் பணியாற்றினார். இந்தச் சந்தர்ப்பத்திலேயே 1986 ஆம் ஆண்டு முதன் முதலாக அவர் மொகமட் கடாபியைப் பேட்டி கண்டார். அந்தப் பேட்டியின் பின்னர், கடாபியின் கண்களில் இருந்து, அவர் அழகிய ஆனால், துணிகரமான
இளம்பெண்ணாகத் தப்பினார்.

மத்திய கிழக்கு விவகாரங்களில் தேர்ச்சி பெற்றிருந்த அவர் செச்னியா, கொசோவா, சியாராலியோன், ஸிம்பாப்வே, இலங்கை ஆகிய நாடுகளின் யுத்த முனைகளுக்குச் சென்று செய்திகளைத் திரட்டினார்.

துணிகரமான ஊடகவியலாளர் என்பதற்கான விருது 1999 ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டது சிறந்த வெளிநாட்டு செய்தியாளர் என்ற பிரித்தானிய விருதை இரண்டு தடவைகள் அவர் தட்டிக்கொண்டார். சிறந்த துணிகரமிக்க, அர்ப்பணிப்புள்ள ஊடகவியலாளர் என்பதற்கான விருதுகள் அவரைத் தேடி வந்தன.

அவலம் மிகுந்த சூழல்களில் உணவு மருந்துக்கும் வழியின்றி பாதுகாப்பின்றி, கௌரவத்தையும், மானம் மரியாதையையும் காத்துக்கொள்ள முடியாத நிலையில் குரல் கொடுக்க முடியாதவர்களாக உயிருக்காகப் போராடிய அப்பாவிப் பெண்கள், சிறுவர் சிறுமிகள் பொதுமக்களின் குரலாக ஒலித்த மேரி கொல்வின் 2001 ஆம் ஆண்டு இலங்கையில் வன்னிப் பிரதேசத்திற்கு விஜயம் செய்தார் இலங்கையின் அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வன்னியில் கடும் மோதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நேரம்.
வன்னிப்பிரதேசத்தின் மீது அரசு கடுமையான பொருளாதாரத் தடையை விதித்திருந்தது. உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த நேரம். இலங்கையின் அப்போதைய வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரைச் சந்திப்பதற்காக அவருக்கு விசா வழங்கப்பட்டிருந்தது. மார்ச் மாதம் 21 ஆம் திகதி கொழும்பிற்கு வந்த அவர் அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரை ஏப்ரல் 4 ஆம் திகதி பிற்பகல் ஒரு மணிக்கு சந்திப்பதற்கு ஏற்பாடாகியிருந்தது.

ஆனால் அந்தச் சந்திப்பிற்கு அவர் செல்லவில்லை. அதற்குப் பதிலாக அவர் யுத்தப்பிரதேசமாகிய வன்னிப்பகுதிக்கு இரகசிய பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

யுத்த மோதல்களில் சிக்கியிருந்த வன்னிப்பிரதேசத்தின் நிலைமைகள், மக்கள் மீது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள், அடக்குமுறைகள் தொடர்பாகத் தகவல்களை வெளியிட்ட செய்தியாளர்கள், சட்டத்தரணிகள் மனித உரிமைச் செயற்பாட்டளார்கள் கொல்லப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்த ஒரு மோசமான சூழலிலேயே மேரி கொல்வின் வன்னிக்கான தனது இரகசிய பயணத்தை
மேற்கொண்டிருந்தார்.

ஊடகவியலாளர்களின் நலன்களுக்காக சர்வதேச அளவில் செயற்பட்டு வரும் அமைப்பாகிய ஆர்எஸ்எவ் என்ற நிறுவனம், 1988 ஆம் ஆண்டு 31 ஊடகவியலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது கொல்லப்பட்டிருந்ததாக அப்போது தகவல் வெளியிட்டிருந்தது.

இக்காலப்பகுதியில் 29 ஊடகவியலாளர்கள் தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியிருந்ததாக முறைப்பாடுகள் செய்யப் பட்டிருந்ததாகவும், அவற்றில் 22 முறைப்பாடுகள் தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என் எடுக்கப்படவில்லை என்றும் அப்போது அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

தமிழ் மக்கள் வசித்து வந்த வன்னிப்பிரதேசத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த மோசமான பொருளாதாரத் தடை, உணவு மருந்து விநியோகத்திற்கான பல்வேறு தடைகள் கட்டுப்பாடுகள் என்பன குறித்து ஐ.நா இராஜதந்திகளும், மனித உமைச் செயற்பாட்டாளர்கள், தொண்டர் சேவையாளர்கள், மத அமைப்புக்கள், சர்வதேச மனித உமை அமைப்புக்கள் என்பன அப்போதைய அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்திருந்தன.

இத்தகைய சூழலில்தான் அபாரமான துணிச்சலோடு அரச படைகளுக்கும் அரச
அதிகாரிகளுக்கும் தெரியாத வகையில் ஆறு வருடங்களாக வெளிநாட்டு செய்தியாளர்கள் எவரும் சென்றிராத இடமாகிய வன்னிக்குள் மேரி கொல்வின் நுழைந்திருந்தார். அங்கு மக்களின் உண்மை நிலைமைகளை அவர் நேரடியாகக் கண்டறிந்தார். விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனையும் அவர் சந்தித்திருந்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவியில் இருந்து இந்த வன்னி விஜயம் பற்றி மேரி கொல்வின் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு எழுதியிருந்த கட்டுரையில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள புலிகள் சமாதான வழியில் இணைவதற்கு விரும்புகின்றார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இராணுவ ரீதியாகப் புலிகள் பலம் வாய்ந்தவர்களாக இருந்தபோதிலும், யுத்தத்தில் வெல்ல முடியாது என்பதை உணர்ந்ததன் விளைவாகவே இராஜதந்திர ரீதியிலான வழிமுறைக்கு அவர்கள் வருவதற்கு விரும்புகின்றார்கள் போலத் தெரிகின்றது என்றும் மேரி கொல்வின் தனது கட்டுரையில் தெரிவித்திருந்தார்.

“பொருளாதார முற்றுகைக்கு உள்ளாகியிருக்கின்ற வன்னிப்பிரதேசத்தை, இராணுவத்தினரும் கடற்படையினரும் சுற்றி வளைத்திருக்கின்றார்கள். இந்தப் பிரதேசத்தின் உள்ளே ஊடகவியலாளர்கள் எவரும் பிரவேசிக்க முடியாதவாறு அரசாங்கம் தடை விதித்திருக்கின்றது' என்று வன்னியின் நிலைமை குறித்து அவர் குறிப்பிட்டிருந்தார்.

வன்னிப்பிரதேசத்தின் மீது பொருளாதாரத் தடைகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்று கொழும்பில் அமைச்சர்கள் மறுக்கின்றார்கள்.
ஆனால் வன்னிப்பிரதேசத்திற்கான எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ வீதிச் சோதனைச் சாவடிகளின் ஊடாக எரிபொருள், சீமெந்து, பிளாஸ்டிக் தாள்கள், உடன் சமைக்கக் கூடிய நூடில்ஸ், மரக்கறி எண்ணெய் என்பவற்றைக் கொண்டு செல்ல முடியாதவாறு தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.

காயங்களுக்குக் கட்டுப்போடுவதற்குப் பயன்படுத்தக் கூடும் என்பதற்காக சனிட்டரி டவல்களும் தடைசெய்யப்பட்டுள்ளன.சர்வதேச நிறுவனங்கள் உணவு விநியோகம் செய்வதைக் கொழும்பு தடுத்திருக்கின்றது. வன்னியில் உள்ள 40 வீதமான சிறுவர்கள் போஷாக் கின்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாக சர்வதேச நிறுவனங்கள் மதிப்பிட்டிருக்கின்றன' என்று மேரி கொல்வின் வன்னி பற்றி எழுதியிருந்த அந்தக் கட்டுரை விரிந்து செல்கின்றது.

போர்ப்பிரதேசமாகிய வன்னியின் நிலைமைகள் குறித்து அரசாங்கத்தினால் பல வருடங்களாகத் தெரிவிக்கப்பட்டு வந்த தகவல்களுடன் மேரி கொல்வின் வன்னியில் இருந்து எழுதி சண்டே டைம்ஸில் பிரசுரமாகியிருந்த கட்டுரை முற்றாக முரண்பட்டிருந்தது.

இந்தக் கட்டுரை ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி சண்டே டைம்ஸில் பிரசுரமாகியிருந்தது. அப்போது மேரி கொல்வின் வன்னியில் மறைந்திருந்தார். சித்திரை மாதத்தின் தமிழ் சிங்களப் புத்தாண்டையொட்டி, அப்போது அரசாங்கம் ஐந்து தினங்கள் போர்நிறுத்தத்தை அறிவித்திருந்தது.

இந்த வேளை, ஏப்ரல் 17 ஆம் திகதி வன்னியில் இருந்து கொழும்பு திரும்புவதற்கு மேரி கொல்வின் திட்டமிட்டு வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள பறையனாலங்குளம்பிரதேசத்தை யொட்டிய இராணுவ தடை வேலியைக் கடந்தார்.நள்ளிரவு நேரம் கடும் இருட்டு காட்டுப்பாதையில் எதுவுமே தெளிவாகத் தெரியாத நிலையில் மேரி கொல்வின் எல்லையைக் கடந்தபோது இராணுவத்தினன் தாக்குதலுக்கு உள்ளாகினார்.

தான் ஒரு ஊடகவியலாளர் என சத்தமிட்ட போதிலும் தாக்குதல் நிறுத்தப்படவில்லை என அவர் பின்னர் தெரிவித்திருந்ததாகத் தகவல் வெளியாகியிருந்தது.
இந்தத் தாக்குதலின்போது அவரது இடது கண், தோள்பட்டை, நெஞ்சுப் பகுதி, தொடை என்பவற்றில் காயங்கள் ஏற்பட்டன. இடது கண் மோசமாகப் பாதிக்கப்பட்டதனால் அவர் கண் பார்வையை இழந்தார். சுமார் பத்து மணித்தியாலங்களின் பின்னர் அவர் இராணுவ வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு முதலுதவி வழங்கப்பட்டு கொழும்புக்குக்
கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவரது நிலைமை சீரடையாத போதிலும், அவரது நண்பர்கள் அவரை
பிரித்தானியாவுக்குக் கொண்டு சென்று வைத்தியம் செய்து அவரைக் காப்பாற்றினார்கள்.
வெளிநாட்டு அமைச்சருடனான சந்திப்பிற்கு மேரி கொல்வின் செல்லவில்லை மாறாக அனுமதிக்கப்படாத பிரதேசத்திற்குள் சென்று அங்குள்ள நிலைமைகள் குறித்து சர்வதேச அளவில் அரசுக்கு விரோதமான வகையில் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி வெளியிட்டிருந்தார் என்பது போன்ற காரணங்களினால் அரசு அவர் மீது கோபம் கொண்டிருந்தது.

இதனால் அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நியாயப்படுத்தும் வகையிலேயே அரசாங்கம் கருத்துக்களை வெளியிட்டிருந்தது. அத்துடன் அவர் இலங்கையில் தங்கியிருப்பதற்கென வழங்கப்பட்டிருந்த காலம் முடிந்து மேலதிகமாக சட்ட விரோதமாகத் தங்கியிருந்தார் என்றும் அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசாங்கத்தின் இந்தக் கருத்துக்கள் குறித்து மனித உரிமைகள் சீற்றமடைந்திருந்தன. விசா முடிந்தபின்னும் ஒருவர் நாட்டில் தங்கியிருந்தால் அவர் மீது துப்பாக்கிப்பிரயோகம்
செய்வதுதான் சட்டமா என்று அவைகள் வினா எழுப்பியிருந்தன.
இராணுவத்தினரால் தான் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அரசாங்கமோ இராணுவமோ மன்னிப்பு கோரவில்லை.

தவறுதலாக நடந்துவிட்டது என்றுகூட கூறவில்லை என பின்னர் மேரி கொல்வின் கவலையோடு குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு வன்னிக்குச் சென்று அங்கிருந்த மனிதாபிமான நிலைமைகளை வெளிக்கொண்டு
வந்த மேரி கொல்வின் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் நடைபெற்ற போது
விடுதலைப்புலிகளின் தலைவர்களாகிய நடேசன் புலித்தேவன் ஆகியொர் இராணுவத்திடம் சரணடைவது குறித்த விடயத்திலும் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தார்.

அவரைத் தொடர்புகொண்ட புலித்தேவன் தாங்கள் இராணுவத்திடம் சரணடைய விரும்புவதாகவும், தமது பாதுகாப்பை அமெரிக்காவும், பிரித்தானியாவும் உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்ததையடுத்து, மேரி கொல்வின் அரச முக்கியஸ்தர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு முயற்சிகளை
மேற்கொண்டிருந்தார். எனினும் அவரது முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என்பது சோகமானது.

வன்னி விஜயத்தின்போது படுகாயமடைந்து இடது கண் பார்வையை இழந்துவிட்ட போதிலும், குரலில்லாதவர்களின் குரல்களை வெளியில் கொண்டு வருவதற்கான அவரது ஊடகப் பணி தொடர்ந்தது.
இறுதியாக சிரியாவில் அரச படைகளினால் முற்றுகைக்கு உள்ளாகியிருந்த ஹோம்ஸ் நகரத்தில் அரச எதிர்ப்பாளர்களின் தரப்பில் அவர் தங்கியிருந்த வீட்டின் மீது நடத்தப்பட்ட ஷெல், மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களின்போது அவரும் அவருடன் இருந்த பிரஞ்சு புகைப்படச் செய்தியாளருமான ரெமி ஒச்லிக்கும் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலைகளை உலக நாடுகளின் தலைவர்கள், ஊடக அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்கள் பிரபல ஊடகவியலாளர்கள் என பலதரப்பட்டவர்களும் கண்டித்திருக்கின்றார்கள்.

அவரது நண்பர்களும் ஊடக சகாக்களும், அவரது செய்திகளினால் கவரப்பட்டவர்களும் அவரது இழப்பினால் ஆறாத சோகத்தில் மூழ்கியிருக்கின்றார்கள்.

போர் முனைச் செய்தியாளர்களில் அவர் தன்னிகரற்றவராக ஒரு ஜாம்பவானாகத் திகழ்கின்றார். அவரது போர் முனை அனுபவங்களினால் பண்பட்ட பழுத்த ஊடகவியலாளராக அவர் விளங்கினார்.
எளிமையானவர். பழகுவதற்கு இனிமையானவர் என அவரது நண்பர்கள் அவரை வர்ணித்திருக்கின்றாரர்கள்.

அவரது இழப்பினால் சர்வதேச ஊடகத் துறை மட்டுமல்லாமல், இடையூறுகளுக்குள் சிக்கி குரல் கொடுக்க முடியாதவர்களாக, மனிதாபிமான உதவிகளையும், மனித நேயத்தையும் எட்ட முடியாதவர்களாக, உதவிகளுக்கும், ஆறுதலுக்கும் அரவணைப்புக்கும் ஏங்குகின்ற
லட்சக்கணக்கான அப்பாவிகளுக்கும் பேரிழப்பு என்றால் அது மிகையாகாது.
உயிரே முக்கியம். ஊடகவியலாளனின் பாதுகாப்பைவிட செய்தி என்பது பெரிதல்ல என்பது பொதுவான ஊடகவியலாளர்களுக்கான அறிவுரையாகும். ஆயினும் உயிரைக் கொடுத்தாவது குரல் இல்லாதவர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்ற இலட்சியத்தை வரித்துக் கொண்டு தன்னிகரற்ற துணிச்சலோடு செயற்பட்ட மேரி கொல்வினின் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்.

யுத்த முனைகளில் பல்வேறு துயரங்களையும் சோகங்களையும் கண்டும் கேட்டும், அவைபற்றி எழுதியும் பல தடவைகள் உயிராபத்துக்களுக்கு முகம் கொடுத்து தப்பிப்பிழைத்த மேரி கொல்வின் உளவியல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாகியிருந்தார் அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் சோகம் மிகுந்ததாகவே அமைந்துவிட்டது.

மூன்று தடவைகள் திருமணம் முடித்த அவர் இறக்கும் போது தனியாக தாயுடனேயே வாழ்ந்திருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை.


பி. மாணிக்கவாகம்

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல