ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

சிவபெருமானின் அருள் பெற்றவர் நித்தியானந்தா: மதுரை ஆதீனம்

இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டுள்ள நித்தியானந்தா, மதுரை மீனாட்சியம்மன் கோயிலை மதுரை ஆதீன கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார் என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.நேற்று பெங்களூருவில் நடைபெற்ற மதுரை ஆதீனத்தின் 293வது இளைய ஆதீனமாக நித்யானந்தாவை மதுரை ஆதீனம் பட்டம் சூட்டி நியமித்தார்.


இந்நிலையில் இன்று நித்தியானந்தா மதுரை பீடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு சிறப்பு பூஜை நடத்துகிறார்.சுவாமி நித்தியானந்தாவை மதுரை ஆதினமாக நியமித்தது குறித்து ஊடகங்களுக்கு மதுரை ஆதினம் பேட்டியளித்தார்.

கேள்வி: மதுரையின் இளைய ஆதீனமாக திடீரென நித்யானந்தாவை நியமித்தது ஏன்?

பதில்: தலைமை ஆதினமாக நான் தான் உள்ளேன். இளைய ஆதீனமாக பட்டம் சூட்டப்பட்டுள்ள நித்தியானந்தா எனது கட்டளையின் படி பணிகளை கவனிப்பார்.

கேள்வி: மீனாட்சி அம்மன் கோவிலை, மதுரை ஆதீனத்திற்குள் கொண்டு வருவேன் என்று நித்தியானந்தா கூறியுள்ளது பற்றி?

பதில்: மீனாட்சி அம்மன் கோவில், கடந்த 1865ம் ஆண்டு வரை மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

எனவே தான் மீனாட்சி அம்மன் கோவிலை மீண்டும் ஆதீன கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன் என்று நித்தியானந்தா கூறியுள்ளார். அவர் மதுரை சன்னிதானத்திற்கு மீனாட்சி அம்மன் கோவிலை மீட்டுக்கொடுப்பார் என்ற அவரது கருத்தில் எனக்கும் உடன்பாடு தான் என்றார்.

கேள்வி: இதுவரை நீங்கள் இந்த முயற்சியில் ஈடுபடாதது ஏன்?

பதில்: எனக்கு நிறைய ஆன்மீக பணிகள் இருந்த காரணத்தால் அதுபற்றி சிந்திக்கவில்லை. ஆனால் சிவபெருமானின் அருள் பெற்ற நித்யானந்தாவால் இது முடியும் என்று நினைக்கிறேன்.

கேள்வி: நடிகை ரஞ்சிதாவுடன் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்கு ஆளான நித்யானந்தாவுக்கு இளைய ஆதீனம் பட்டம் வழங்குவது ஏற்புடையதா?

பதில்: நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தாவை சம்பந்தப்படுத்துவது அறியாமையினாலும், பொறாமையினாலும், புரிந்து கொள்ளுதல் இல்லாததாலும் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆகும்.

இந்த குற்றச்சாட்டுகளில் சிறிதளவும் உண்மை இல்லை. அவரது நடவடிக்கைகளை பல தடவை கவனித்த பின்னர் தான் இந்த பொறுப்பிற்கு அவர் தகுதியானவர் என்று முடிவு செய்தேன்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல