திங்கள், 20 ஆகஸ்ட், 2012

மனக்கோலங்கள் -நாடகம் -முள்ளிவாய்கால் முடிவை 20 வருடங்களுக்கு முன் எதிர்வு கூறியது..


முகவுரை

முள்ளிவாய்க்கல் முடிவை 20 வருடங்களுக்கு முன்பே எதிர்வு கூறியதாக வியக்கப்பட்ட நாடகம். இது 89ம் ஆண்டு எழுதப்பட்ட நாடகம். (சில தரவுகள்: விடுதலைப் புலிகள் ஆரம்பித்த பொழுது பிரபாகரனுக்கு பதின்ம வயது…

அக்காலத்தில் , பலர் அரசியல் தஞ்ச, பொருளாதார தேவைகருதி வெளிநாடு சென்றார்கள் ..

(இது நோர்வேயில் 1989ம் ஆண்டு கடைசியில் மேடையேற்றப் பட்ட்து)

_______________________________________________________________

காட்சி 1 படித்த இளைஞர் ,இவருக்கு ஆதரவாக இரு பொதுமக்கள், ஓர் இளைஞன் ,சமூக அறிஞர்,இவரது நண்பன்(பொதுமகன் 3). இவர்கள் மேடையின் அனைத்துப் பகுதிகளையும் நிரப்பிய வண்ணம் அசையாது நிற்கின்றனர்.மேடையில் ஒளி பரவியுள்ளது..

(திரை மூடாது காட்சிகள் தொடர்ச்சியாகச் செல்லும்)

ஒருகுரல் (மேடையின் பின்பக்கம் இருந்து)

”எமது போராட்ட்த்துக்கு நாங்கள் ஒடுக்கப்பட்ட மக்களை இணைக்கிறோம் ,மலையகமக்களை இணைக்கிறோம் , வெளி மாவட்ட்த்தினரை இணைக்கிறோம்”…

படித்த அறிஞர் எதையும் கவனியாது போல் அவரின் புத்தகத்துடன் அங்கும் இங்குமாக் நடந்து திரிகின்றார்..

சமூக அறிஞர் : (மேடையை நோக்கி) நீங்கள் யார் ? நீங்கள் ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் இல்லை , மலையக மக்கள் இல்லை,முஸ்லீம்கள் இல்லை , வெளிமாவட்டம் இல்லை ..அப்போ நீங்கள் யார் ..

ஒருகுரல் மீண்டும் (மேடையின் பின்பக்கம் இருந்து): ”எமது போராட்டத்திற்கு பல்வேறு காரணங்கள் இருந்தபொழுதும் தரப்படுத்தல் ஒரு முக்கிய காரணமாகும். ஆகவே தரப்படுத்தலை நீக்கப் போராடுவோம்” ..

சமூக அறிஞர் : தரப்படுத்தல் என்ற சட்டம் வந்தபிதான் மட்டக்களப்பு ,அம்பாறை ,மூதூர்,திருமலை,முல்லைத்தீவு,மன்னார்,வவுனியா , புத்தளம் ,கிளிநொச்சி ஆகிய இடங்களில் இருந்து பல மாணவர்கள் பல்கலைக் கழகம் போனார்கள். ஆகவே தரப்படுத்தலை நீக்கு என்ற கோசம் யாழ் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்ட்த்தினருக்கு எதிரான கோசமாகும்….

சமூக அறிஞரின் நண்பன் : இங்கு அரசியல் வேண்டாம் .

( அனைவரும் மேடையில் இருக்க குழந்தைகள் மேடையைச் சுற்றி ஆடி வருகின்றனர் , நடனம் ஆரம்பிக்கும் பொழுது ஏனையோர் ஆரம்பத்தில் நின்றுவிட்டு இருக்கின்றனர் – பாடல் மெட்டு செம்மீன் மலையாளப் பட்த்தில் காணாப்பு மீனணு போனணு தோணிக்காரா.. சாகரா கடற்புறத்தில்….வரிகள் மீட்கப் படுகின்றன.)

பாடல் :

குழந்தைகள் ஆனவர்ஐவர் மக்களை நோக்கி …

குறைகளைப் போக்க எண்ணி இங்கு வந்தார் ..

அறிஞர்கள் இவர்களை மக்கள் இனம்காண

அறியாமை போக்க எண்ணி இங்கு வந்தார்.

(பாடலின் முடிவில் ஒரு குழந்தை திடீரென மயங்கி விழுகின்றது. சமூக அறிஞர் பதற்றத்துடன் எழுந்து செல்கிறார். மேடையில் திடீரென சற்றுப் பலத்த ஒலி . மற்ரவர்கள் எழுந்து குழந்தை இருக்கும் இடம் நோக்கி வருகின்றனர்…படித்த அறிஞர் எழுந்து வாசித்த வண்னம் இருக்கிறார் .)

குழந்தை : கடவுள் …

பொதுமகன் 1: குழந்தை கடவுள் என்கிறது.

குழந்தை : விடு……

பொதுமகன் 2: குழந்தை விடுதலை என்கிறது ..

பொதுமகன் 1: ஆமாம்! இது தெய்வக் குழந்தை!!

சமூக அறிஞர்: குழந்தைக்கு மூளையில் தாக்கம் ஏற்பட்டுவிட்ட்து.

பொதுமகன் 1, 2 இணைந்து : இல்லை இல்லை இது தெய்வக் குழந்தை.

படித்த அறிஞர்:  இந்தியாவில் ஒரு சிறிய குழந்தை எதிர்காலத்தைப் பற்றிய உண்மைகளைக் கூறுவதாகப் படித்தேன். அமெரிக்கவிலும் அப்படியொரு சம்பவம் நடந்த்தாக ஒரு புத்தகத்தில் படித்தேன். இது ஞானக்குழந்தை தான் .

பொதுமக்ன்1: அமெரிக்காவில் நடந்ததாம் ! அப்ப அது உண்மைதான் .

பொதுமகன்2: திருஞான சம்பந்தரும் மூன்று வயதிலை தேவாரம் பாடினவர் தானே !

இளைஞன்(முழு ஆளுமையை எடுத்து) : ஆமாம் இது தெவக்குழந்தை தான். இந்த மகிழ்ச்சியை நாங்கள் கொண்டாடுவோம்.

பாடல் :

(இந்தப் பாடலில் சிறுவர்கள் , பொதுமக்கள் எல்லோரும் ஆடுகின்றனர் அரோகராச் சொல்கிறார்கள் )

தெய்வம் பிறந்த்து ஞானம் பிறந்தது அரக்ரோகரா

ஞானம் பிறந்தது ஞாயிறு உதித்தது அரகரோகரா

ஏழ்மைகள் நீங்கும் கல்விகள் ஓங்கும் அரகரோகரா

வாழ்க்கை ஓங்கும் வழிகள் பிறக்கும் அரகரோகரா

காட்சி 2 :

சமூக அறிஞர்: சும்மா ஆடல் பாடல்களை விட்டிட்டு உங்கடை பிரச்சனைகளைத் தீர்க்க வழிகளைப் பாருங்கோ .

அந்தக் குழந்தையின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தியுங்கோ.

அந்தக் குழந்தையின் மன்நோயைப் பற்றி மனநோய் மருத்துவரைக் கல்ந்தாலோசியுங்கோ.

பொதுமகன் 1: நாங்கள் இந்த அறிஞரிடமும், அந்த தெய்வக்குழந்தையிடமும் எங்கள் பிரச்சனைகளைப் பற்றி ஆராய்வோம்..

பொதுமகன் 2: நாங்கள் எங்கள் பிரச்சனையை இந்தக் குழந்தையிடம் கேட்போம்.

எல்லோரும் குழந்தையைச் சூழ்கின்றனர் …

குழந்தை : வெளி….

பொதுமகன் 1: குழந்தை வெளி என்று கூறுகிறது ,அதன் விளக்கம் தெரியவில்லையே …

பொதுமகன் 2: அறிஞரிடம் கேட்போம்.

(படித்த அறிஞரிடம் இருவரும் சென்று மிக்க பணிவுடன் இது பற்றிக் கேட்கின்றனர் )

படித்த அறிஞர்: வெளி என்று தொடங்கினால் வெளிநாடு என்று பொருள் படும். இப்போது பலநாடுகளில் இருந்தும் மக்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்து பணம் சம்பாதிக்கின்றனர். உங்கள் பிரச்சனை தீர நீங்கள் வெளிநாடு போகலாம் …

பொதுமகன் 1: நான் நோர்வேக்குப் போறன் .

பொதுமகன் 2: நான் அமெரிக்காவுக்குப் போறன் .

இளைஞன: நான் கனடாவிற்குப் போறன்.


(இவர்கள் நடப்பது போல் அசைய குழந்தைகள் பாடலுக்கு ஆடுகிறார்கள்)

பாடல்:

நோர்வேயில் வாழப்போகும் சின்னமாமா
நொஸ்க்கு நல்லாப் படிக்கவேணும் சின்னமாமா
கனடாவிற்குப் போகப்போகும் கனகுமாமா
களவொன்றும் செய்யக்கூடாது நல்லமாமா

அமெரிக்கா போகப்போகும் ஆசை மாமா
அமைதியாக வாழவேணும் ஆசைமாமா
இங்கிலாநது போகப்போகும் எங்கள் மாமா
இங்கிலீசு படிக்கவேணும் எங்கள் மாமா

வெளிநாடு போகப்போகும் எங்கள் மாமா
எமது நாட்டை மறக்க வேண்டாம் எங்கள் மாமா
காசுபணம் சேர்க்க வேண்டும் எங்கள் மாமா
கலைகள் பல செய்யவேண்டும் எங்கள் மாமா
வெளிநாடு போகப்போகும் எங்கள் மாமா
தாய் நாட்டை மறக்க வேண்டாம் எங்கள் மாமா


சமூக அறிஞர்: எல்லோரும் போனால் நமது நாட்டை யார் பார்க்கிறது. நான் எங்கடை நாட்டிலை எங்கடை மக்களோடை வாழப்போகிறேன்.

பொதுமகன் 3:நானும் எமது மக்களுடன் வாழ்ந்து எமது பிரச்சனையைத் தீர்க்கப் போராடப் போகின்றேன் ..


காட்சி 3:

பொதுமகன்1: இங்கை பாருங்கோ எங்கடை தெய்வம் ஏதோ சொல்லுது .

பொதுமக்ன்2: கிடைக்கும் எண்டு சொல்லுது.

பொதுமகன்1:கிடைக்குமாம் கிடைக்குமாம் ..

(இப்பாடலுக்கு சமூக அறிஞர், பொதுமகன் 3 தவிர எல்லோரும் ஆடுகிறார்கள்)

பாடல்:

கிடைக்கும் கிடைக்கும் எமக்குக் கிடைக்கும்
கிழவிகள் எல்லாம் குமரிகள் ஆகிட
குடிசைகள் எல்லாம் மாடிகள் ஆகிட
மண்கட்டி எல்லாம் பொன்கட்டி ஆகிடக்
கிடைக்கும் கிடைக்கும் எமக்குக் கிடைக்கும்..

பொதுமகன்1: என்னாலை ஏலாது,(சலித்துக் களைப்பில் சோர்ந்தபடி) என்னாலை ஏலாது.

பொதுமகன்2: எனக்கும் களைக்குது , நல்லாக் களைக்குது.

சமூக அறிஞர்: என்ன உங்களுக்குக் கிடைக்கும்?

பொதுமகன்1: அது தெரியாது, அதுதான் விளங்கேல்லை.

பொதுமகன்2: எனக்கும் ஒன்றும் விளங்கவில்லை ..

பொதுமகன்3: ஒன்றுமே விளங்காமல் ஏன் ஆடிகினம் என்று எனக்கு ஒன்றும் விளங்கேல்லை



காட்சி 4
பொதுமகன்1: (மிகவும் உணர்ச்சியுடன்) செய்திவாற நேரமாச்சு கொஞ்சம் அமைதியாக இருங்கோ .

செய்தி(கறுப்புத் துணியுடன் தலை சுற்றியவாறு சிறிய ஆட்டத்துடன் வந்து நடுவில் நின்று)

இது எங்கள் செய்தி. அவர்கள் செய்வது எல்லாம் தவறு. நாங்கள் செய்வது எல்லாம் சரி. நாங்கள் சரியானவற்றையே செய்கிறோம், அவர்கள் பிழையானவற்றையே செய்கிறார்கள். அவர்களில் பலர் இறந்தார்கள்.அவர்களில் பலர் காயமடைந்தார்கள். இது எங்கள் செய்தி.

சமூக அறிஞர் : செய்தியெல்லாம் தலைச்சுத்தும் இருட்ட்டிப்புமாகத்தான் இருக்கு.

பொதுமக்ன்1: எத்தனை பேராம் செத்த்து?.

பொதுமகன்2: அங்க குழந்தை கையைக் காட்டுது.

பொதுமகன்1: ஐந்து பேராம்..

பொதுமகன்2: இல்லை ஐம்பது பேராம்.

இளைஞன்: இல்லை அவர்களில் ஐநூறு பேர் செத்திட்டினம்.இது மகிழ்ச்சியான நாள்.

படித்த அறிஞர்: அன்று வியட்னாமில் 500 பேர் செத்தார்கள். இதுவும் உண்மையாக இருக்கலாம்.

சமூக அறிஞர் : பிள்ளைக்கு வருத்தம் கடுமையாகி விட்டது, பிள்ளையைக் காப்பாற்றுவோம்.

(சமூக அறிஞரும் நண்பரும் குழந்தையத் தூக்கிச் செல்கின்றனர்.. சிறிது நேரத்தில் இருவரும் வருகின்றார்கள்)

சமூக அறிஞர் : அந்தப் பிள்ளை இறந்து விட்டது

இளைஞன் : அந்தப் பிள்ளை இறந்தாலும் அவர்களில் 500 பேர் செத்த செய்தியைச் சொல்லிப் போட்டுத்தான் செத்திருக்கிறது.இந்த ம்கிழ்ச்சியைக் கொண்டாடுவோம்.

சமூக அறிஞர்: அவர்கட்கோ அங்கு திண்டாட்டம். இந்தத் தரம்கெட்ட மாந்தர்க்கோ மரணம் கொண்டாட்டம்.

(இப்பாடலில் விரைவான மெட்டுக்கு எல்லோரும் ஆடுகிறார்கள் ..ஆனால் சோக மெட்டுக்கு சமூக அறிஞரும் அவர்து நண்பரும் அசைகிறார்கள் மற்ரவர்கள் அமிதியாக இருக்க.)

பாடல்:

எலுமிச்சம்பழத்துக்குக்ப் புளிப்புக் கொண்டாட்டம் – இந்தத்
தரம் கெட்ட மாந்தர்க்கு மரணம் கொண்டாட்டம்
அவர்கட்கு அங்கு திண்டாட்டம் .இந்தத்
தரம்கெட்ட மாந்தர்க்கு மரணம் கொண்டாட்டம்
மனிதர்கள் உணவின்றி அங்கு திண்டாட்டம் –இந்தத்
தரம்கெட்ட மாந்தர்க்கு மரணம் கொண்டாட்டம்
மனிதர்கள் வீடின்றி ஆங்காங்கே ஓட்டம் –இந்தத்
தரம் கெட்ட மாந்தர்க்கு மரணம் கொண்டாட்டம்

காட்சி 5

சமூக அறிஞர்: (கோபமாக) அமைதி, அமைதி! இது உங்களுக்கு மகிழ்ச்சியான நாளா? ஏன் நீங்கள் முட்டாள்களாக நடந்துகொள்கிறீர்கள்..

இளைஞன்: இவர் எங்கள் சந்தோசத்தைக் கெடுத்ததும் அல்லாமல், பெரும்பான்மையை எதிர்த்ததுடன், எங்கள் அறிஞர் உட்பட அனிவரையும் முட்டால் என்று விட்டார். எனவே ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்காக இவருக்கு நாங்கள் மரனதண்டனை வழங்குகிறோம்.

(இளைஞன் பொதுமகனைச் சுடுகிறான்)

பொதுமகன் 3: (சற்றுத் தயங்கி- மிக உறுதியான குரலில்) கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் தோன்றிய மூத்தகுடி மக்களே! நாங்கள் எதிரிக்கும் மதிப்பளித்தே வந்துள்ளோம். இந்த இறந்த அறிஞர் உங்கள் எதிரியாயினும் எனது நண்பன் என்ற முறையில் அவரைப்பற்றிச் சிறிது உரையாற்றுவத்ற்கு எனக்கு அனுமதி வழங்குமாறு வேண்டுகிறேன்..

இளைஞன்: ஒழுங்கான முறையில் பேச அனுமதி வழங்குகிறேன்.

பொதுமகன்3: இந்தச் சமூக அறிஞருக்கு இந்த இந்த இளைஞன் வழங்கிய தண்டனை நியாயமானது தான். ஆனாலும் இறந்த அறிஞரைப் பற்றி நீங்கள் முழுவதும் அறிந்திருக்கவில்லை. இங்கு இருக்கும் அறிஞரைப்போல் இறந்த அறிஞருக்குப் பொறியியல் அறிவு இல்லைத்தான். உலகளாவிய சஞ்சிகைகள் பற்றிய அறிவு இந்த அறிஞரைப் போல் இல்லை. இந்த அறிஞரோ இத்துறைகளில் சிறந்தே விளங்கினார். ஆனால் இவருக்கு நேரப் பற்றாக்குறையால் மருத்துவத்தைப் பற்றிப் படிக்கவில்லை. ஆனால் இறந்த அறிஞருக்கோ ஓரளவு மருத்துவத்தைப் பற்றித் தெரியும், மக்களைப் பற்றியும் ஓரளவு அறிந்திருந்தார். ஆகையால் இங்கு இறந்த குழந்தையின் தலையில் ஏற்பட்ட காயத்தின் தாக்கம் காரணமாகத்தான் அது வித்தியாசமான முறையில் கதைத்தது என்பதையும், குழந்தைக்கு ஏற்பட்ட நோயையும் அறிந்து, அதன் ஆதாரங்களைச் சேர்ந்திருந்தார்.ஆனால் துரதிர்ஷ்டமான முறையில் குழந்தையின் நோய் கடுமையாகிக் குழந்தை இறந்துவிட்ட்து.குழந்தை மீது கொண்ட பாசம் காரணமாகவே அவர் உங்களை எதிர்த்தார். ஆனால் அவர் உங்களை எதிர்த்தமைக்காக நீங்கள் வழங்கிய தண்டனை நியாயமானது தான்.

படித்த அறிஞன்: என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு இருந்த நேரக்குறைவாலும் நான் எனது படிப்பில் செலுத்திய தீவிரக் கவனம் காரணமாகவும் சமுதாயத்தைப் பார்க்கவில்லை. மனநோய்களைப் பற்றி அறியவில்லை. நானும் பெரும்பான்மையுடன் இருந்தால், எனது கல்விக்கும் தொழிலுக்கும் பிரச்சனை இருக்காது என்பதற்காக, பெரும்பான்மையுடன் இணைந்து, இந்த உயிர்கள் வீணாகப் பலியாக்க் காரணமாகிவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் , என்னை மன்னித்துவிடுங்கள்.

பொதுமகன் 3: (தொடர்ந்து)இந்த இளைஞன் பாராட்டப் பட வேண்டியவன். இந்தச் சமுதாயத்தில் உள்ள பெரியவர்கள் இந்தச் சமுதாயத்தைப் பற்றி சரியான முடிவு எடுக்காதபோதே இந்த இளைஞன் முடிவுகளை எடுத்தான்.அந்த வகையில் இந்த இளைஞன் பாராட்டப் படவேண்டியவன் தான். அந்த வகையில் இந்த இளைஞன் வழங்கிய மரணதண்டனை நியாயமானது தான். ஆனால் இந்த இளைஞன் ஜனநாயகத்தைப் பற்றித் தவறாகப் புரிந்து கொண்டான். ஜனநாயகம் என்பது அனைவரும் பிரச்சனையைத் தெளிவாகப் புரிந்து கொண்டு முடிவு எடுப்பதில் தங்கியுள்ளது. ஜ்ந்னநாயகம் என்பது சிறுபான்மையின் உணர்வுகளையும் அபிப்பிராயங்களையும் மதிப்பதுமாகும். அவர்களது சுதந்திரத்தையும் ஏற்றுக் கொள்வதுமாகும். ஆனால் இந்த இளைஞன் இவ்ற்றைப் புரிந்து கொள்ள போதிய அனுபவம் இருக்கவில்லை,சிறந்த ஆலோசனைகள் கிடைக்கவில்லை. எனவே அந்த இளைஞனை மன்னிப்போம்.


இளைஞன்: என்னை மன்னித்துவிடுங்கள்…., என்னை மன்னித்துவிடுங்கள்....

(பொதுமகன் 3பேசிக்கொண்டிருக்கும் பொழுது இளைஞன் பக்கமாக இருந்த மக்கள் படிப்படியாக இடம் பெயர்ந்து இவரது திசையில் வருகிறார்கள். பேச்சு முடிவில் அனைவரும் அவ்ரது பக்கம் வந்துவிடுகிறார்கள். பின்னால் மன்னிப்பு வேண்டிய படி இளைஞனும் இணைகின்றான்)

(யாவும் கற்பனை என்றால் அது பொய்)


இந்த நாடகம் நோர்வேச் சுவடுகள் மாத சஞ்சிகையில் பிரசுரிக்கப் பட்டது

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல