வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

படகேறுதலும் படுகுழி அரசியலும்!

கிளிநொச்சியில் காணிகள், வீடுகளின் விலை குறைந்து வருகிறது என்றார் நண்பர். அது கொஞ்சம் விசித்திரமாக இருந்தது. கிளிநொச்சி அபிவிருத்தியடைந்துவரும் வேகத்தைப் பார்க்கும் எவருக்கும் அங்கு காணிகள், கடைகளுக்கான இடங்கள் நெருப்பு விலையாக இருக்கும் என்று தோன்றுவதில் வியப்பில்லை. இலங்கையிலேயே மிக நீண்ட கடைத்தெருக்களைக் கொண்ட பெரிய நகராக கிளிநொச்சியின் பாரிய வளர்ச்சி கண்முன்னால் தெரியும்போது, அங்கே வீடுகள் கடைகளின் விலை மலிவதற்கு காரணம் என்ன?

காரணத்தை அறிந்தால், அது நம் நாட்டின் தற்போதைய மற்றொரு விசித்திரமாக விரிகிறது. கிளிநொச்சியில் கடைகள் பூட்டப்பட்டுக் கிடக்கிறது. காரணம் கேட்டால் அவர்கள் இருப்பதையெல்லாம் விற்றுவிட்டு அவுஸ்ரேலியாவுக்குப் படகேறிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த அவுஸ்ரேலியப் படகேற்றத்திற்காகவே பலர் வீடுகளையும் கடைகளையும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதுவே விலை மலியக் காரணம் என்று சொல்கிறார்கள்.

அரசியல் தலைவர்களைத் தவிர மக்கள் எல்லோருமே இதுபற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். கடற்கரை உள்ள ஊர்களிலிருந்தெல்லாம் படகுகள் புறப்படுவதாகத் தினமும் கதைகள் வருகின்றன. இது ஒன்றும் சுகமான பயணம் அல்ல, உயிரை வெறுத்த பயணம். ஆனாலும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். நேற்றும் இந்தோனேசியாவுக்கு அருகே 150 பேருடன் படகு மூழ்கியதாகச் செய்தி வந்திருக்கிறது. பிடிபடுகிறார்கள், சிறைக்குப் போகிறார்கள், கடலில் மூழ்கிப் பலர் இறந்தும் போகிறார்கள். ஆனாலும் இருப்பதையெல்லாம் விற்றுச்சுட்டுக் காசைக் கட்டி வெளிநாடுகளுக்குப் படகேறுகிறார்கள். குறிப்பாக இளைஞர்கள்!இதன்மூலம் உருவாகிக் கொண்டிருக்கும் சமூக இழப்பு பற்றி, தமிழர்களுக்காக வாய்கிழிய வசனங்கள் பேசும் தலைவர்கள் எவரும் அக்கறைப்படுவதாகக் காணோம். அவர்கள் கிழக்குத் தேர்தலையும் வென்று சர்வதேசத்திற்கு இன்னும் ஒருதடவை தமிழொற்றுமையைக் காட்டிவிடும் மாயையில் மூழ்கிக் கிடக்கிறார்கள். அல்லது இப்படியே பலரும் வெளியேறிப்போய், புலம்பெயர்ந்த தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தேர்தல் வெற்றிகளுக்கு வாய்ப்பானது என்று இரகசிய ஆசை கொண்டிருக்கிறார்களோ என்னவோ!

சுயலாப நினைவுகளிலேயே மூழ்கியிருந்தால், மக்கள் சாவதும் தெரியாது@ இருக்கும் உரிமைகளையும் இழந்துகொண்டிருப்பதும் தெரியாது. நாடாளுமன்றத்திற்கு வன்னி தேர்தல் மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையிலும் ஒன்று குறைய இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் கடந்த ஆண்டு யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை பத்திலிருந்து ஆறாக குறைக்கப்பட்டது. இப்போது வன்னியிலும். ஆக மொத்தம், தமிழ் மக்கள் அதிகமாக உள்ள வடக்கின் தேசிய அளவிலான நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் ஐந்து குறைந்துள்ளது.

புலம்பெயர் மக்களின் காசையும், இங்குள்ள வாக்குகளை எடுத்துத்தர அவர்களது ஆதரவையும் வேண்டிநிற்பதொன்றே இந்தத் தலைவர்களின் அரசியலாக இருக்கிறது. தமிழ் இளைஞர்களின் இந்த வகைதொகையில்லா வெளியேற்றம் இங்கு எதை மிச்சப்படுத்தும்? நமது மனிதவள இழப்புப் பற்றியோ எதிர்காலம் பற்றியோ கவலையேதும் படாத தலைவர்களையே தேர்தல்களில் தெரிவுசெய்து கொண்டிருக்கிறது தமிழ்ச்சமூகம்.

இப்படிக் கள்ளத்தோணிகளில் வந்திறங்குபவர்களுக்கு குடியுரிமை வழங்கப்போவதில்லை@ தனித்தீவில் கைதிகளாகத்தான் வைத்திருக்கப் போகிறோம் என்று அவுஸ்ரேலியப் பிரதமர் அறிவிக்கிறார். தமிழ்த் தலைவர்கள் எனப்படுவோர் இப்போதும் “சர்வதேசம் தீர்வை எடுத்துத் தரும்” வசனத்திலேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்குச் சுயமரியாதை கூடவா இல்லை?
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல