(கருணாகரன்)--“ஆறாவடு” என்றவொரு தமிழ் நாவல் அண்மையில் வெளிவந்து வாசிப்பு ஆர்வமுள்ளவர்களின் மத்தியில் அறிமுகமாகியுள்ளது. ஈழத்தைச் சேர்ந்த சயந்தன் (தற்போது சுவிற்ஸ்லாந்தில் வாழ்கிறார்) என்பவரால் இந்த நாவல் எழுதப்பட்து. இந்த நாவல் சட்டவிரோதமாக அல்லது வெளிநாட்டுக் கனவோடு ஆபத்தான கடல் வழியே படகில் பயனிப்போரின் கதையைச் சொல்கிறது.
இதையும் கடந்து போனால் அவுஸ்ரேலியா அரசு இவர்களுடன் விளையாடுகிறது. பாருங்கள் இந்தக் கனவாளிகளுடன் யார் யாரெல்லாம் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று.

இது சொல்வது ஏதோ பிறரின் கதையல்ல. நம்முடைய கதையை. நாங்கள் சந்திக்கிற உண்மையை. முற்று முழுவதுமான உண்மையை.வெளிநாட்டுக் கனவோடு, ஆபத்தான கடல்வழிப் பயணத்தை மேற்கொள்வோரைப் பற்றிய உண்மைக் கதைகளை அப்படியே சொல்கிறது.
ஆனால், இந்த நாவலைப் பலரும் வாசிக்கவில்லை. அவர்கள் அவுஸ்ரேலியக் கனவை ஏந்தியபடி ஆபத்துடன் விளையாடுகிறார்கள். (முந்தி இத்தாலிக் கனவோடு படகேறியவர்கள் பலர். கரைசேர்ந்தவர் சிலர். கடலிலே கரைந்தவர்கள் அநேகர்) இப்ப தினமும் இலங்கையின் கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரைகளில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கென ஆயிரக்கணக்கானவர்கள் களவாக அல்லது இரகசியமாகப் படகேறுகிறார்கள். இப்படிப் படகேறுவோருடன் இலங்கைக் கடற்படையினரும் பொலிஸாரும் விளையாடுகின்றனர். இலங்கையிலிருந்து தப்பிப் பிழைத்து வெளியேறினால் இவர்களுடன் இயற்கை விளையாடுகிறது. நீண்ட பெரும் கடலில் நீண்ட நாட்கள் தொடரும் சிறு படகுப் பயணத்தில் இயற்கையின் மாற்றாங்களைச் சந்திக்காமல் தப்புவதென்பது மிகக்கடினம்.
இதையும் கடந்து போனால் அவுஸ்ரேலியா அரசு இவர்களுடன் விளையாடுகிறது. பாருங்கள் இந்தக் கனவாளிகளுடன் யார் யாரெல்லாம் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று.
இதைத்தான் சயந்தன் தன்னுடைய ஆறாவடுவிலும் மிகத் தெளிவாகச் சொல்கிறார். ஆனால் இப்படிப் படகில்ப் பயணிக்கிறவர்கள் தப்பித் தவறிச் சயந்தனின் ஆறாவடுவை படகிற்குள் வைத்து வாசித்தால் அவ்வளவு தான். அப்படியே கடலிற்குள் குதித்துக் கரைக்குத் திரும்பி விடுவர். அல்லது படகோட்டியைக் கெஞ்சிக்கூத்தாடிப் படகைத் திருப்பிக்கொண்டு கரைக்கே வந்து விடுவர்.
படகேறுவதற்கு முன், கரையில் நின்று ஆறாவடுவைப் படித்தால், மறுகணத்தில் ஆளை வீட்டிற் காணமுடியும்.
ஆனால் ஒரு கனவு துளிர்ந்து அது ஒருவருக்குள் புகுந்து விட்டால் அவரை அது சும்மா இருக்க விடுவதில்லை. அது எதையாவது செய்துகொண்டேயிருக்கும். “எதையாவது செய்” என்று எப்படியாவது அது அவரைத் தூண்டிக் கொண்டிருக்கும். விடுதலைக் கனவும் அப்படித்தான். வெளிநாட்டுக்கனவும் அப்படித்தான்.
ஆயிரக்கணக்கானவர்கள் ஆபத்துடன், அபாயத்துடன் இடையறாது விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். என்ன நாசமோ தெரியவில்லை, ஈழத்தமிழர்களுக்கு இப்படி அபாய விளையாட்டுக்களும் இடப்பெயர்தல்களும் அவலப்படுதல்களும் பிடித்துப் போயிருக்கிறது. போர் நடந்தாலும் சரி, அது முடிந்தாலும்சரி இந்தப் பித்து மட்டும் தீரவில்லை.
இதேவேளை இந்த ஆபத்திலிருந்தும் அபாயத்திலிருந்தும் வென்று விட்டால் பிறகு வெற்றி தான். ஆகவே அந்த வெற்றிக்கனியைப் புசிப்பதற்காக அவர்கள் கடினமான வழிகளால் தங்களின் பயணத்தைச் செய்கிறார்கள்.
பெரும்போரில் வாழ்ந்து கழித்தவர்களுக்கு இந்தக் கடல்ப்பயண அபாயமெல்லாம் சிறு தூசிக்குச் சமன் என்று சொல்கிறார் ஒரு நண்பர்.
எனவே அவர்கள் கடலிற் போகத்தான் போகிறார்கள். படகில் ஏறத்தான் போகிறார்கள். தங்களுடைய வெற்றிக்கனியைப் பறிப்பதற்காக அவர்கள் எதையும் செய்யத் துணிந்து விட்டார்கள். இதை யாராலும் எதனாலும் தடுக்க முடியாது என்பதே இதற்கு இறுதிப் பதில். அது அமெரிக்கா எண்டாலும் சரி, அவுஸ்ரேலியா எஸ்டாலும் சரி, இலங்கை எண்டாலும் சரி.
ஆனால் இதன் விளைவுகள் என்பது சாதாரணமானதல்ல. ஒரு சமூகம் இடம்பெயர்வதோ, புலம்பெயர்வதோ என்பது எப்போதும் சாதாரணமாக அமைந்து விடுவதில்லை. அது துயரத்திலும் இழப்பிலும் பாதிப்பிலுமே போய் முடிகிறது.
இலங்கையிலிருந்து வெளியேறுவோர் அல்லது வட கிழக்கில் இருந்து இப்படி வெளியேறுவோர் பெரும்பாலும் இளைஞர்களாகவே உள்ளனர். குறைந்தது 35 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களே இந்த மண்ணின் உழைப்புச் சக்திகள். அடுத்த புதிய தலைமுறை. இன விருத்திக்கும் சரி, பொருளாதார விருத்திக்கும் சரி ,அரசியல் நிர்மானத்திற்கும் சரி, துறைசார் வளர்ச்சிகளுக்கும் சரி இவர்களே ஆணி வேர் அல்லது அச்சாணி.விடுதலைக்காக, அரசியல் உரிமைகளுக்காகப் போராட வேண்டியவர்களும் இவர்களே.
ஆனால், இவர்கள் இதையெல்லாத்தையும் விட்டிட்டு வெளியேறுகிறார்கள். இப்படி வெளியேறிப்போய் வேறொரு நாட்டில் தங்களுடைய உழைப்பையும் ஆற்றலையும் செலவழிக்கப் போகிறார்கள். தங்களின் இளமைக் காலத்தை அங்கே செலவிடப் போகிறார்கள்.தாங்கள் பட்ட கடனுக்காகவும் போவதற்கான வழிப்பயண பணத்துக்காகவும் தங்களின் இளமைக்காலத்தை முழுதாக அர்ப்பணித்து உழைக்கப் போகிறார்கள். மாடாக உழைக்கப் போகிறார்கள். உழைத்து உக்கப் போகிறார்கள்.
தங்கள் தாய்மண்ணில் நிறக வேண்டியதற்குப் பதிலாக இப்படி வேரைப் பிடிங்கிக் கொண்டு வெளிநாடுகளை நோக்கி ஓட வேண்டுமென அலைக்கழிப்பது எது?
ஏறக்குறைய கடனுக்கு உழைத்து, பிறகு தங்களை ஒழுங்குபடுத்துவதற்கு முறிந்து முடிய இவர்களுக்கு வயதாகிவிடும். அதற்குப் பிறகே இவர்களை அவுஸ்ரேலியா நாடு தன்னுடைய செலவில் வைத்துப் பராமரிக்கும் ஒரு நிலை வரும்.
பதிலாக இங்கே இவர்களில்லாத வெற்றிடம் ஏற்படுகிறது. இந்த வெற்றிடத்தை எதைகட கொண்டு நிரப்புவது? ஏற்கனவே வாக்காளர் இடாப்புக்கள் நலிந்து போயுள்ளன. போதாக் குறைக்குப்பல காணிகள் வெறுமையாகக் கிடக்கின்றன. சாதாரணமான வேலைகளைச் செய்வதற்கே பொருத்தமானவர்கள் இல்லை. எல்லாவற்றிற்கும் தென்னிலங்கையிலிருந்து ஆட்கள் வருகின்றார்கள் அல்லது மலைநாட்டிலிருந்து வரவேண்டியிருக்கு. மேசன் வேலைக்கு, தச்சு வேலைக்கு, றோட்டுப் போடுவதற்கு, கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு, வயறிங் வேலைக்கு,பிளம்பிங் செய்வதற்கு, மருத்துவம் பார்க்க…. என போகிற போக்கில் ஆசிரியர்களாகப் படிப்பிப்பதற்கும் இனி சிங்களவர்கள் தான் வரவேண்டும்.
இருக்கின்ற பெரும்பாலான வீடுகளில் வயதாளிகளே- முதியவரே உள்ளனர்.
இவர்களுடைய பிள்ளைகளைப் போர் தின்றது. அல்லது புலம்பெயர்வு கொண்டு போனது. ஆகவே வாக்காளர் இடாப்புக்களிலும் மிஞ்சியிருக்கும் வீடுகளிலும் முதியோர் எஞ்சியிருக்கின்றனர்.
இந்த நிலையில் இப்ப அவுஸ்ரேலியக் கனவு பலரையும் பித்துபோல பிடித்தாடுகின்றது. இந்தக் கனவினால் செய்த தொழிலை விட்டே பலர் படகேறுகிறார்கள். அதற்காகக் கடன் படுகிறார்கள். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இப்படிப் பலர் தொழிலையும் குடும்பத்தையும் விட்டுவிட்டு படகேறியிருக்கிறார்கள்.
இந்தப் படகுப் பயணத்தில் அரசாங்கத்தின் பெரிய கைகளே சம்மந்தப்பட்டிருப்பதாக ஊரெல்லாம் பகிரங்கமாகவே பேசுகின்றனர். ஜனாதிபதியின் புதல்வர் நாமல்ராஜபக்ஸவே இதற்கான ஏற்பாடுகளின் பின்னணி என்று சிலர் மிகப் பகிரங்கமாகவே சொல்கிறார்கள். வெளிநாடுகளிலும் இப்படித்தான் பேசப்படுகின்றது.
ஆனாலும் படகேறும் பொழுது பலர் பிடிபடுகின்றனர். இந்தா, இந்தப் பந்தியை எழுதிக் கொண்டிருக்கும் போது புல்மேட்டைப் பகுதியில் 57 பேரை சிறிலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளதாக செய்தி வந்துள்ளது.
இதைப்போல தினமும் 20 கைது, 30 பேர் கைது, 60 பேர் கைது என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இது பயணம் போவதற்கு முன் நடக்கும் கைதுகள் அல்லது கடலில் மறித்து நடக்கும் கைதுகள். இந்தக் கைதுகள் உயிராபத்துக்களை தவிர்த்து விடுகின்றன. பொருளாதார இழப்போடு முடிந்து விடுகின்றன.
இதைக் கடந்து நடுக்கடலில்படகு கவிழ்ந்தோ, உடைந்தோ சாகிறவர்களின் இழப்பு…..? அதை யார் தான் சரியாகக் கணக்கெடுத்தார்கள்? அப்படித்தான் தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் என்று செத்தாலும் ஒரு பத்து நாள் அந்தத் துக்கத்தில், அது ஏற்படுத்திய பயத்தில் இந்தப் பயண ஆசை தணிந்திருக்கும். பிறகு அது துள்ளி எழுந்து கொண்டு மீண்டும் உலுப்பத் தொடங்கிவிடும். பிறகென்ன? அவனைப் பிடித்து, இவனைப் பிடித்து , வழிதேடி, ஓட்டியைப் பிடித்து படகில் ஏறவேண்டியது தான்.
சிலர் லீஸிங்கில் வாகனம் எடுத்தவர்கள் அதை அப்படியே விட்டு விட்டுப் போக லீசிங் கொம்பனிகள் வந்து அவற்றை எடுத்துப் போகின்றன. ஜரோப்பிய, அமெரிக்க, அவுஸ்ரேலியநாடுகள் சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தி “ஓப்பின்” விசாவைக் கொடுத்தால் ஒரு பயல் ஊருக்குள்ள நிற்கமாட்டார்கள் என்று சில நாட்களுக்கு முன்னர் பகிடியாக ஒரு நண்பர் சொன்னார். அவர் சொன்னது உண்மை தான் என்பதை நிலவரங்கள் தாராளமாகக் காட்டுகின்றன.
முன்னர் நாட்டுப் பிரச்சனை , பொலிஸ், இராணுவக்கெடுபிடி உச்சம், இடப்பெயர்வுகள், போர் போன்ற காரணங்களால் வெளியேற்றம் என்ற காரணங்கள் இருந்தன.இப்போதும் நெருக்கடிகள் உள்ளனதான். ஆனால் முன்னரைப்போல நேரடியான நெருக்கடிகள் அல்ல.
ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் பணத்தைச் செலவழித்து பரதேசம் போவதென்பது இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான். அல்லது இந்த நாட்டின் தொப்புள்க் கொடி உறவையே துண்டித்துவிடத்தான் போகிறோமா? ஒரு சீசனுக்கு சுற்றிலாப் பயணிகளைப் போல் வந்து போவதற்குத்தான் இந்த மண் பொருத்தமானதா? அல்லது இணைய வெளியிலோ றிமோட் கொன்றோலின் மூலமோஇந்த நாட்டின் இயங்கு விசையைத் தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையின் பாற்பட்ட செயலாகத்தான் இந்த வெளிப்பயணங்கள் அமைகின்றனவா?
தாய்நாட்டை விட்டுப் போவதென்பது எளிதான ஒன்றல்ல. அதையும் கடந்து இந்த மனிதர்கள் கடினவழியே போகிறார்கள் என்றால் அதற்கான காரணங்கள் எளிதானவையல்ல. பொருளாதாரமும் உத்தரவாதமற்ற அரசியலுமே அதற்கானவை.
இல்லையென்றால் மீண்டும் உயிராபத்துக்களின் மத்தியில் எதற்காக இந்தப் பயணங்களுக்காக இரவும் பகலும் கள்வர்களைப்போல் இந்த மனிதர்கள் ஆலாய்ப் பறக்கிறார்கள்?
இரண்டு கரைகளுக்கிடையில் ஆடிக்கொண்டிருக்கும் படகுகளில், விளையாடிக் கொண்டிருக்கும் மரணத்திற்கிடையில் இலங்கைத் தீவின் நினைவுகள் எப்படியிருக்கும? இலங்கைத் தீவின் மதிப்பீடு எவ்வாறிருக்கும்?
தாய் நாட்டை விட்டு பிறநாடு நோக்கி களவாகப் பயணிக்கும் நிலையில் தான் சுதந்திர இலங்கை இருக்கிறது. இதை மறுவளமாக ஒரு தடவை சிந்தித்துப் பாருங்கள்.
1,500 களில் இதே மாதிரிப் பாதுகாப்பற்ற படகுகளில் தொலைதூர நாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்தனர் ஒரு சாரார். இன்று இங்கிருந்து தொலைதூர நாடுகளை நோக்கிப் போகின்றனர் இலங்கையர்கள்.
ஆனால் ஒரு வித்தியாசம்.
அவர்கள் ஆளவந்தனர்.
நாமோ அகதிகளாகப் போகின்றோம்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக