ஞாயிறு, 16 டிசம்பர், 2012

இராஜவரோதயம் சம்பந்தர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் 1


எல்.ரீ.ரீ.ஈ யின் மறைவின் விளைவாக மட்டுமே தமிழர்களின் பிரச்சினைகள் மிகப்பெரிய தார்மீக பலத்தையும் மற்றும் பெரியளவிலான சட்டப்பேற்றையும் கையகப் படுத்திக் கொண்டுள்ளன. (1)
இராஜவரோதயம் சம்பந்தர் பா.உ.


(2012 டிசம்பர்,7ல் தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்)

நன்றி,சபாநாயகர் அவர்களே,

பல தசாப்தங்களாக ஸ்ரீலங்காவின் வடக்கு கிழக்கு பகுதிகளில் குமுறிக் கொந்தளித்த போர் ஒரு முடிவுக்கு வந்து மூன்று வருடங்களுக்கு மேலாகிறது. தமிழ் மக்கள் போரை தமக்கு பின்னுக்குத் தள்ளி வைத்துவிட்டு தமது வாழ்க்கையை தொடரவே விரும்புகிறார்கள். இந்த நாட்டிலுள்ள சில மக்களிடையே தமிழ் மக்கள் ஆயுதப் படையினரை வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து வெளியேற்றவே விரும்புகிறார்கள் என்கிற ஒருவகையான தவறான நம்பிக்கை இருந்துவருகிறது.

முழு நாட்டிலும் உள்ளதுபோல ஆயுதப் படையினர் வடக்கு மற்றும் கிழக்கிலும் பிரசன்னமாகி இருக்கவேண்டும் என்பதை உணர்ந்து அதை ஏற்றுக் கொண்டுள்ளோம் என்பதை பதிவு செய்யவும் தயார். நாங்கள் கேட்பதெல்லாம் வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள ஆயுதப் படையினரின் பிரசன்னம், தமிழ் மக்களை அடக்குமுறைக்கு உள்ளாக்குவதைப் போன்ற ஒரு வடிவத்தில் இருக்கக்கூடாது என்பதையே, அப்படி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது, இந்த நாட்டில் தாங்கள் ஒரு சமத்துவமான குடிமக்கள் இல்லை என்கிற ஒரு உணர்வை தமிழ் மக்களிடம் தோற்றுவிக்கும், மற்றும் தாங்கள் இந்த நாட்டில் மற்றவர்களைவிட தாழ்ந்த நிலையிலுள்ள பிரஜைகள் என்கிற உணர்வையும் அவர்களிடத்தில் ஏற்படுத்தும். அப்படியான ஒன்றை நாங்கள் விரும்பவில்லை.

தமிழ் மக்களாகிய நாங்கள் வடக்கு மற்றும் கிழக்கில் சுய கௌரவத்துடனும், தன்மானத்துடனும் வாழக்கூடியதாக இருக்கவேண்டும், அதேவேளை ஆயுதப் படையினரின் எண்ணிக்கை தேவைப்படும் அளவிலேயே இருக்க வேண்டும், இந்த தேவையான அளவு என்பது ஒரு நியாயமான வழிமுறையில் வடக்கு மற்றும் கிழக்கில் படையினர் தங்கள் பணிகளை கொண்டு நடத்தக்கூடிய அளவில் மட்டுமே இருக்கலாம். (குறுக்கீடு)

ஐயா, இந்தக் கட்டத்தில், தமிழ் போராட்ட வரலாற்றைப் பற்றி நான் பேசவேண்டியது அவசியம். சுதந்திரம் கிடைத்த சிறிது காலத்துக்குள்ளேயே தமிழர் போராட்டம் ஆரம்பமாகிவிட்டது. அதற்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது. அது பல்வேறு காரணங்களுக்காக, பல்வேறு மனக்குறைகள் காரணமாக ஆரம்பமானது, சட்டபூர்வமான அந்த மனக்குறைகள் இந்த நாட்டின் மிகவும் உயர்ந்த தலைவர்களான காலஞ்சென்ற கௌரவ. எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா மற்றும் காலஞ்சென்ற கௌரவ. டட்லி சேனநாயக்கா போன்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

பண்டாரநாயக்கா - செல்வநாயகம் ஒப்பந்தம் உருவாகியிருந்தது. டட்லி சேனநாயக்கா - செல்வநாயகம் ஒப்பந்தம் உருவாகியிருந்தது. அந்த ஒப்பந்தங்கள் நடைமுறைப் படுத்தப் பட்டிருந்தால் இன்று இந்த நாடு இந்த நிலைக்கு வந்திருக்காது. நாங்கள் ஒருபோதும் வன்முறையான மக்களில்லை. நாங்கள் சட்டபூர்வமான,ஜனநாயக,வன்முறையற்ற அரசியல் போராட்டத்தையே நடத்தினோம். நாங்கள் சத்தியாக்கிரகம் நடத்தினோம்,அகிம்சையை கடைப்பிடித்தோம். அப்படி நாங்கள் செய்த வேளைகளில் தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. 1956ல் அது நடந்தது, 1958ல் அது நடந்தது, 1961ல் அது நடந்தது,1977ல் அது நடந்தது, 1981லும் அது நடந்தது,மற்றும் 1983ல் தமிழ் இனத்துக்கு எதிராக ஒரு இனப்படுகொலையே நடந்தேறியது.

இவை மறுக்க முடியாதவை. பிளவுபடாத மற்றும் ஐக்கியமான ஸ்ரீலங்காவின் கட்டமைப்புக்குள் நியாயமான ஒரு அரசியல் தீர்வுக்கு நாங்கள் தயாராக உள்ளோம். எனது தலைவர் திரு. செல்வநாயகம் அந்த நிலைப்பாட்டை வெகு தெளிவாக எடுத்து விளக்கியிருந்தார். அதைப்பற்றி எந்தக் கேள்வியும் இருக்க முடியாது, அந்த விடயம் சம்பந்தமாக எந்த மறுப்பும் இருக்க முடியாது. ஆகவே அதுதான் எங்கள் போராட்டத்தின் வரலாறு, மற்றும் வன்முறையற்ற ஜனநாயக வழியில் எழுப்பப்பட்ட இந்த நியாயமான அரசியல் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை, ஏனெனில் மிக நீண்ட காலமாகவே, மீண்டும், மீண்டும் தமிழர்களுக்கு எதிராக தொடர்ச்சியான இனப் படுகொலைகள் நடந்தேறின. அப்படியான ஒரு சூழலில்தான் எல்.ரீ.ரீ.ஈ தோன்றியது.

எல்.ரீ.ரீ.ஈ தோற்றம் பெற்ற உண்மையான சூழ்நிலையை ஒருவர் விளங்கிக் கொள்ள வேண்டும். எல்.ரீ.ரீ.ஈ தமிழ் மக்களால் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல என்கிற கருத்தையே நான் எப்போதும் சொல்லி வருகிறேன், உண்மையில் எல்.ரீ.ரீ.ஈயை இந்த நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்கள்தான் உருவாக்கின. ஏனெனில் அந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களின் சட்டபூர்வமான அபிலாஷைகளை, அந்த மக்கள் வன்முறையற்ற, அமைதியான கீழ்படியாமை போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்திய பொழுது அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்து, அவர்கள்மீது வன்முறையை பிரயோகித்தன. எல்.ரீ.ரீ.ஈ தோன்றுவதற்கு அதுதான் காரணம்.

எல்.ரீ.ரீ.ஈ தோற்றம் பெறுவதற்கு சட்டபூர்வமான காரணங்கள் இருந்தன. யாராலும் அதை மறுக்க முடியாது. அது பொதுமக்களை, சிங்களப் பொதுமக்களை, தமிழ் பொதுமக்களை, முஸ்லிம் பொதுமக்களை தாக்கியபோது, சமூகத் தலைவர்களை தாக்க ஆரம்பித்தபோது அது ஒரு பயங்கரவாத அமைப்பு என்று அழைக்கப்பட நேர்ந்தது. அந்த நேரம்தான் எல்.ரீ.ரீ.ஈ ஒரு பயங்கரவாத அமைப்பு என்று பெயர் வாங்கிய நேரம்.

அவர்கள் மனித உரிமைகளை பேணவில்லை. அவர்கள் ஜனநாயகத்தை மதிக்கவில்லை. இவைதான் அவர்களின் தோல்விகள். எல்.ரீ.ரீ.ஈயை அழித்ததுக்கு நிறையப் பேர்கள் உரிமை கோருகிறார்கள். நான் சொல்லுகிறேன், ஜனநாயகத்தை அனுசரிக்காமல் மற்றும் மனித உரிமைகளைப் பேணாமல் நடந்து அவர்கள் தங்களை தாங்களே அழித்துக் கொண்டார்கள். இததான் உண்மை. எனது நண்பரும் மிகவும் மரியாதைக்குரிய பாராளுமன்ற உறுப்பினரருமான, எமது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான காலஞ்சென்ற கௌரவ. லக்ஷ்மன் கதிர்காமர், எல்.ரீ.ரீ.ஈ யினை பலவீனப்படுத்துவதில் மிகவும் முன்னணிக் கதாபாத்திரத்தை வகித்தார், அதனால்தான் எல்.ரீ.ரீ.ஈ முடக்கப்பட்டது, உலகெங்கும் உள்ள எல்.ரீ.ரீ.ஈ கட்டமைப்புகள் பல நாடுகளில் கலைக்கப்பட்டது அதனால்தான்.

எல்.ரீ.ரீ.ஈ யை தோற்கடிப்பதற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு ஸ்ரீலங்காவுக்கு கிடைப்பதற்கு அவர்தான் பெரும் பொறுப்பு வகித்தார். கௌரவ. லக்ஷ்மன் கதிர்காமர் இன்று உயிரோடிருந்தால் இன்று நடைபெறும் பல விடயங்களைப் பார்த்தும் மற்றும் இன்று பேசப்பட்டு வரும் பல விடயங்களைக் கேட்டும் உண்மையில் கடும் அதிர்ச்சியடைந்திருப்பார். எனவே நாங்கள் இதை கட்டாயம் நினைவில் கொள்ளவேண்டும்.

ஐயா, எனது சொந்த தலைவர்கள், எனது சக தோழர்கள் எல்.ரீ.ரீ.ஈ யினால் கொல்லப்பட்டார்கள். எல்.ரீ.ரீ.ஈ யின் தாக்குதல் பட்டியலில் நானும் இடம்பெற்றிருந்தேன். ஏன் நீங்கள் எங்களை எல்.ரீ.ரீ.ஈ யின் பிரதிநிதிகள் என்று அழைக்கிறீர்கள்? எல்.ரீ.ரீ.ஈயால் நாங்கள் கொல்லப்பட இருந்ததால்தான் நீங்கள் எங்களை அவர்களின் பிரதிநிதிகள் என்று அழைக்கிறீர்களா? எல்.ரீ.ரீ.ஈ யின் தாக்குதல் பட்டியலில் நாங்கள் இடம்பெற்றிருந்தபடியால்தான் நீங்கள் எங்களை அவர்களின் பிரதிநிதிகள் என்று அழைக்கிறீர்களா?

அவர்கள் ஒரு யுத்த நி்றுத்த ஒப்பந்தத்துக்கு வந்து பேச்சு வார்த்தை நடவடிக்கைகளில் நுழைந்தார்கள்,அப்போது மோதலுக்கு ஒரு சமாதானமான அரசியல் தீர்மானத்தை உறுதிப்படுத்துவதற்காக எல்லோரும் இயற்கையாகவே அவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டியிருந்தது. இப்போது எல்.ரீ.ரீ.ஈ இல்லை, எல்.ரீ.ரீ.ஈ நீக்கப்பட்டு விட்டது அது அகன்று போய்விட்டது,தமிழர்களின் பிரச்சினையும் அதனுடன் போய்விட்டது,என்று சிலர் எண்ணுகிறார்கள். தமிழர்கள் விடயம் அப்படி போய்விடாது. தமிழர்களின் கேள்விகளுக்கு ஒரு நியாயமான, வேலை செய்யக்கூடிய, ஏற்றுக் கொள்ளக்கூடிய, நீடித்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வு ஒன்று கண்டெத்தும்வரை தமிழர் பிரச்சினை இருக்கும். எல்.ரீ.ரீ.ஈ யின் மறைவின் விளைவாக மட்டுமே தமிழர்களின் பிரச்சினைகள் மிகப்பெரிய தார்மீக பலத்தையும் மற்றும் பெரியளவிலான சட்டப்பேற்றையும் கையகப் படுத்திக் கொண்டுள்ளன. தமிழர்களின் பிரச்சினைகள் இல்லாமல் போய்விட முடியாது.

இப்போது நான் சிலவற்றை தெரிவிக்க விரும்புகிறேன். என்னை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். போரில் இறந்தவர்களை நினைவுகூர்வதற்காக நினைவு நாள் அனுட்டிப்பதில் என்ன தவறு உள்ளது? இந்து மதத்தவர்கள் முருகக் கடவுளுக்கு தீபம் ஏற்றி வணங்கும் சமயச்சடங்கு இடம்பெறும் நாள், இந்த வருடம் நவம்பர் 27ந் திகதி தற்செயலாக இடம்பெற்று விட்டது. கார்த்திகை தீபம் மிகப்பெரிய ஒரு பண்டிகை. அதேபோல அன்றைய தினம் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களை நினைவுகூரும் நாளும் இடம்பெற்றுவிட்டது.

ஒரு சகோதரர் தனது இறந்த சகோதரருக்காக தீபம் ஏற்றுவதில் என்ன தவறு உள்ளது? ஒரு தாய் இறந்த தனது மகனுக்காக தீபம் ஏற்றுவதிலோ, அல்லது ஒரு தமிழ் பெண் இறந்த தனது கணவருக்காக தீபம் ஏற்றுவதிலோ என்ன தவறு உள்ளது? ஜேவிபி இறந்தவர்களை நினைவுகூர்ந்து விழா எடுக்கிறது. அதைப்பற்றி யாரும் புகார் தெரிவிப்பதில்லை. எதுவும் நடப்பதில்லை. நாங்களும் எங்களின் ஒரு அடிப்படை உரிமையாக ஏன் அதேபோலச் செய்யக்கூடாது? உலகெங்கும் அப்படி நடக்கிறது, எங்கெல்லொம் மக்கள் தங்கள் உயிரைக் கொடுத்து தியாகம் புரிந்திருக்கிறார்களோ, அந்த ஒவ்வொரு நாட்டிலும் அப்படி நடக்கிறது, நல்ல ஒரு செயலுக்காகவோ அல்லது ஒரு தீய ஒரு செயலுக்காகவோ, நல்ல காரணத்துக்கு வேண்டியோ கெட்ட காரணமாகவோ எதுவாக இருந்தாலும் அது ஒரு அடிப்படை உரிமை, மக்கள் அதற்கு உரித்துடையவர்கள்,அதை நிறுத்தக்கூடாது, மற்றும் நிச்சயமாக படையினரால் அது நிறுத்தப்படக்கூடாது.

நான் மிகவும் வருந்துகிறேன், ஐயா, யாழ்ப்பாணத்தில் உள்ள மாணவர்கள் மீது இப்படியான தேவையற்ற ஒரு சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. நான்கு மாணவர்கள் கைது செய்யப் பட்டதாகவும், அவர்களில் ஒருவர் விடுதலை செய்யப்பட்டதாகவும் ஏனைய மூவரும் இன்னமும் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக என்னிடம் இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 27 ந்திகதி மாலை பல்கலைக்கழக வளாகத்துக்குள் இராணுவம் நுழைந்திருக்க கூடாது என்பது என்னால் நன்கு கருத்தில் கொள்ளப்பட்ட சமர்ப்பிப்பாகும். அங்கு வன்முறை எதுவும் நடக்கவில்லை,அங்கு துப்பாக்கிகள் எதுவும் இருக்கவில்லை, யாரும் வன்முறையில் ஈடுபடவுமில்லை.

எல்லாமே அவர்கள் சில விளக்குகளை ஏற்றி,மௌனம் அனுட்டித்து, மரித்த அவர்களது சகோதரர்களுக்காக பிரார்த்திக்க இருந்ததுதான், அதைச் செய்வதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது - அதுமட்டுமன்றி அன்றைய தினம் தீபம் ஏற்றி முருகக்கடவுளை வழிபடும் கார்த்திகை தீபத் திருநாளாகவும்கூட இருந்துள்ளது - எனவே இராணுவம் செய்தது தவறு என்று நான் நினைக்கிறேன். அது ஒரு தேவையற்ற நுழைவு,ஒரு தேவையற்ற தலையீடு, இந்த செயற்பாடுகள்; யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் சட்டபூர்வமான செயற்பாடுகள்.

அவர்கள் அடித்து துன்புறுத்தப் பட்டுள்ளார்கள.; அவர்களது விடுதிகள் சேதமாக்கப் பட்டுள்ளன. அவர்களது சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. அடுத்த நாள் நால்வர் கைது செய்யப்பட்டு, அவர்களில் மூவர் இன்னமும் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த விடயத்தை மிகவும் அவதானமாக பரிசீலிக்கும்படி நான் அரசாங்கத்திடம் மிகவும் வன்மையாக முறையீடு செய்ய விரும்புகிறேன். நாங்கள் மோதலில் ஈடுபட விரும்பவில்லை. இந்த நாட்டில் இன்னும் ஒரு நெருக்கடியான சூழ்நிலையை கட்டியெழுப்ப நாங்கள் விரும்பவில்லை. இந்த விடயத்தில் கவனம் செலுத்தி காவலில் வைக்கப்பட்டுள்ள அந்தப் பையன்கள் விடுதலையாவதை உறுதிப்படுத்தும்படி அரசாங்கத்திடம் விண்ணப்பிக்கவே விரும்புகிறோம்.

ஐயா, உண்மையில் வடக்கு மற்றும் கிழக்கில் ஆயுதப் படையினரின் நடவடிக்கைகளையிடடு நாம் கவலைப்படுகிறோம், நாங்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்துவரும் அந்தப் பிரதேசங்களில் சுய மரியாதையுடனும் தன்மானத்துடனும் நாங்கள் வாழ்வதற்கு அவை இடையூறாக உள்ளன. நாங்கள் இராணுவக் குறைப்பு செய்யும்படிதான் கேட்டிருந்தோம், இராணுவத்தை முற்றாக அகற்றும்படி அல்ல. ஸ்ரீலங்கா இராணுவத்தின் 20 படைப் பிரிவுகளில் - என்னிடம் உள்ள தகவல்களின்படி - 15 பிரிவுகள் வடக்கிலும், இரண்டு பிரிவுகள் கிழக்கிலும்,ஏனைய மூன்று பிரிவுகள் நாட்டின் இதர பாகங்களிலும் நிலை கொண்டுள்ளன. 15 பிரிவுகள் வடக்கில் உள்ளதாக என்னிடம் சொல்லப்பட்டது, அதன் கருத்து ஆகக் குறைந்தது 150,000 படை வீரர்கள் வட மாகாணத்தில் இருக்கிறார்கள் என்பதே.

அது மிக மிக அதிக எண்ணிக்கையிலான படை வீரர்களாகும். உண்மையைச் சொன்னால் வட மாகாணத்தில் உள்ள மக்களின் எண்ணிக்கை, அநேகமாக 600,000 ஆகத்தான் இருக்கும், அதாவது ஒவ்வாரு நாலு பொதுமக்களுக்கும் ஒரு இராணுவ வீரர் இருப்பார். இது ஏற்றுக் கொள்ள முடியாதது. ஐயா, இராணுவம் வேறு பல விடயங்களிலும் தலையீடு செய்கிறது. உள்ளுராட்சி சபை தேர்தல்களுக்கு முன்னதாக யாழ்ப்பாணத்தில் முதலாவது கூட்டம் நடந்தபோது, இராணுவம் உள்நுழைந்து, ஒரு பாடசாலைக் கட்டிடத்துக்குள் குழுமியிருந்த ஆட்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் அந்தக் கூட்டம் குழப்பப்பட்டது.யாழ்ப்பாண உள்ளுராட்சி தேர்தல்களுக்கு முதல்நாள் குறிப்பாக வன்னியில் உள்ள கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் அவர்கள் எல்லா இடங்களுக்கும் சென்று மக்களின் வாக்காளர் அட்டைகள் மற்றும் அடையாள அட்டைகள் என்பனவற்றை பறித்துச் சென்றார்கள்.

அந்த விடயம் சம்பந்தமாக நான் தேர்தல் ஆணையாளரிடம் முறையிட்டு,அந்த மக்கள் வாக்களிக்க இயலும் வகையில் குறிப்பிட்ட சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. சமீபத்தில் கிழக்கில் மாகாணசபைத் தேர்தல்கள் இடம்பெற்ற சமயம்,இராணுவ புலனாய்வுப் பிரிவினர் அந்த விடயத்தில் ஒரு பங்களிப்பை நல்கியிருந்தார்கள்.தமிழ் தேசியக் கூட்டணிக்காக பணியாற்றுபவர்களிடம் சென்று அவர்களை அச்சுறுத்தினார்கள்.அதை செய்ய வேண்டாம் என்று அவர்களிடம் சொல்லப்பட்டது. “தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டணிக்காக வேலை செய்தீர்களானால்,தேர்தல் முடிவடைந்ததும் அதற்கான பின்விளைவுகளுக்கு நீங்கள் முகம் கொடுக்கவேண்டி இருக்கும்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டது. மக்கள் அச்சமடைந்தார்கள், மக்களால் தேர்தலில் சுதந்திரமமாக பங்குகொள்ள முடியவில்லை.

(தொடரும்)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல