ஞாயிறு, 16 டிசம்பர், 2012

பிரபாகரனும் துரோகிப் பட்டியலில் இணைக்கப்படுவாரா?

துரோகி: ஈழ அரசியலின் பூமறாங்


1

எனக்கு இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது - அது 1990 - விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவர் கோபால சாமி மகேந்திரராஜா எனப்படும் மாத்தையா எனது சொந்தக் கிராமமான தம்பலகமத்திற்கு வருகிறார். ஊரே திரண்டு அவரை வரவேற்கிறது. வீதிகள் தோறும் நிறைகுடம் சகிதமாக மக்கள் அவரை மலர் தூவி வரவேற்றனர். எங்கள் முறையின் போது நான் மாத்தையாவிற்குச் சந்தனப் பொட்டு வைத்த நினைவுகள் இப்போதும் பசுமையாகவே இருக்கின்றன. அப்போது இயக்கம் என்ற சொல்லைத் தவிர வேறு ஏதும் அறிந்திராத வயது. தமிழ்த் தேசியம் என்னும் சொற்தொடரை நான் ஒருபேச்சுக்குத்தானும் கேள்வுற்றிராத காலம் அது. எனது கிராமத்தில் ‘இயக்கம்’ என்னும் சொல்கூடப் பெரியளவில் புழக்கத்தில் இருந்திருக்கவில்லை. பொதுவாக இயக்கங்களைப் ‘பொடியள்’ என்றே மக்கள் அழைப்பதுண்டு. பின்னர் காலம் என்னையும் தமிழ்த் தேசிய அரசியலின் பக்கமாக நகர்த்தியது. ஆனால் ஆச்சரியம் - தமிழ்த் தேசியத்தைச் சொற்களாகக்கூடக் கேள்வியுற்றிராத காலத்தில் மலர் தூவி வரவேற்கப்பட்ட மாத்தையா, நான் தமிழ்த் தேசிய அரசியல் குறித்து அறிந்துகொள்ள முற்பட்டபோது, எனக்குத் துரோகியாகவே அறிமுகமானார்.


எவ்வாறு மாத்தையா துரோகியானார்? எந்த அரசியல் மாத்தையாவைத் துரோகியாக்கியது? எவ்வாறு பல்வேறு இயக்கங்களின் தலைவர்களும் துரோகியானார்கள்? இந்தத் துரோக வாதங்களை மக்கள் எவ்வாறு எதிர்கொண்டனர்? நான் நன்கு அறிவேன், இது பற்றி வெளிப்படையாகப் பேசுவதால் என்னையும் இந்தப் பூமறாங் துரத்தும். ஆனால் இப்போது சில விடயங்கள் குறித்துப் பேசாது விட்டால் பிறகு எப்போதுமே பேச முடியாமல் போய்விடும். இன்று ஒரு போராட்டம் எப்படியிருக்கக் கூடாது என்பதற்கு ஈழ விடுதலைப் போராட்டம் உதாரணமாகியிருக்கிறது. ஆகவே நாம் பல்வேறு விடயங்கள் குறித்தும் வெளிப்படையாகப் பேசியே ஆக வேண்டும். இது நமது தலைமுறைக் கடமையாகும்.

ஈழ அரசியலைப் பொறுத்தவரை இன்று யாரெல்லாம் துரோகி அல்ல என்பதைக் கண்டுபிடிப்பது தான் கடினமானது. அந்தளவிற்குத் துரோகிகள் மலிந்துகிடக்கும் தேசமிது. விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து நேற்றுவரை போராளிகளாக இருந்த பலர் துரோகிகளாக்கப்பட்டிருக்கின்றனர். நாளுக்கு நாள் துரோகிகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. யுத்தத்தின் தீர்மானகரமான முடிவின்போது, அரச படைகளிடம் சரணடைந்த ஆயிரக்கணக்கான போராளிகள்கூட நாளை துரோகப் பட்டியலில் இடம்பெறலாம். ஏலவே சிலர் சேர்க்கப்பட்டும் விட்டனர். இறுதியில் ‘துரோகி’ அது எவரையுமே விட்டுவைக்காது போகலாம்.

2

ஈழ அரசியலைப் பொறுத்தவரை எந்தப் பக்கம் திரும்பினாலும் - அவன் துரோகி - அவங்கட ஆள் - எங்கடயவங்கள் இல்ல - இவ்வாறான கோஷங்களைத்தாம் கேட்க முடிகிறது. உண்மையில் துரோகவாதத்தின் ஊற்று எது? இதைத் தீர்மானிக்கும் அரசியல் எத்தகையது? அதைத் தீர்மானிப்பவர்கள் யார்? இந்தக் கட்டுரை அரசியல் அர்த்தத்தில் துரோகி அல்லது துரோகம் என்னும் சொற்களைக் கட்டுடைக்க விளைகிறது. இதை விளங்கிக்கொள்வதற்குச் சற்றுப் பின்நோக்கிச் சொல்ல வேண்டியிருக்கிறது. ஈழ அரசியல், தமிழீழ அரசியலாக உருமாறுவதற்கு முற்பட்ட காலத்து மேடை அரசியல் கோஷங்களை இந்த இடத்தில் நாம் நினைவுகொள்ள வேண்டியிருக்கிறது. ஈழத்து அரசியல் சூழலில் முதல்முதலாகத் துரோகி அல்லது துரோகம் என்ற சொற்களை அரசியலுக்கு அறிமுகம் செய்தவர்கள் மிதவாதத் தலைவர்களே தவிர ஆயுத இயக்கங்களல்ல.

இலங்கையின் முதலாவது தமிழ் அரசியல் கட்சியான ஜி. ஜி. பொன்னம்பலத்தின் அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் கூட்டத்தில்தான் எங்களது தீர்மானத்திற்கு எதிராகக் கைகளை உயர்த்துவோர், கைகளை இழக்க வேண்டிவரும் என்ற எச்சரிக்கை குரல் ஒலித்தது. ‘அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் ஊடாகத் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த, தந்தை செல்வா என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட எஸ். ஜே. வி. செல்வநாயகம், காங்கிரசிலிருந்து வெளியேறித் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தார். இப்போது காங்கிரஸ் தரப்பினரைப் பொறுத்தவரையில் செல்வநாயகம் ஒரு துரோகி. இப்படித்தான் துரோகவாத அரசியல் கருக்கொண்டது. தமிழரசுக் கட்சிக் கூட்டங்களின்போது பாம்பை விடுதல், கூட்டத்தின்போது பறை மேளமடித்துத் தொந்தரவு செய்தல், கட்சிப் பந்தலை இரவோடு இரவாக உடைத்தல் - இப்படித்தான் அன்று (தங்களின்) துரோகிகளான, தமிழரசுக் கட்சியினரைக் காங்கிரஸ் பழிதீர்த்தது. மறுபுறமாக செல்வநாயகம் தரப்பினர் ஜி. ஜி. பொன்னம்பலம், (அப்போதைய சிங்கள ஆட்சித் தலைவர்) டல்லி சேன நாயக்க அரசில் அங்கம் வகித்ததைக் காரணம் காட்டி அவரைத் துரோகியென விளித்தனர். பின்னர் செல்வ நாயகம் டட்லி சேனநாயக்க அரசுடன் கைகோத்துக்கொண்டபோது தமிழரசுக் கட்சியில் அங்கம்வகித்த வி. நவரெட்ணம் செல்வநாயகத்தைத் துரோகி என்றார். இதன் தொடர்ச்சியாக நவரெட்ணம் தமிழர் சுயாட்சிக் கழகத்தை உருவாக்கினார். பின்னர் இடதுசாரிகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ‘தோசே மசால் வடே அப்பட்ட எப்பா’ (தோசையும் மசால் வடையும் எங்களுக்கு வேண்டாம் - தமிழ் மக்களின் உணவுப் பழக்கத்தை சுட்டுவதன் மூலம், தமிழர்களின் அரசியல் கோரிக்கைளுக்கு எதிரான சுலோகத்தை இவ்வாறு முன்னிறுத்தினர்) என்று பிரச்சாரம் செய்தபோது ஒட்டுமொத்த இடதுசாரிகளும் துரோகியானார்கள்.

பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி மேடைகளில் ‘துரோகி’ - என்னும் சொல் தாராளமாகவே பயன்படுத்தப்பட்டது. அப்போது அரசாங்கத்துடன் இணைந்திருந்த அரசியல் தலைவர்கள் குறிப்பாக அல்பிரட் துரையப்பா இயற்கை மரணத்திற்குரியவர் அல்ல என்றே அன்றைய கூட்டணியின் முக்கியத் தலைவர்களான காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன் போன்றோர் மேடைகளில் முழங்கிக்கொண்டிருந்தனர். இதையே பின்னர் பிரபாகரன் தத்தெடுத்துக்கொண்டார். 1975ஆம் ஆண்டு பிரபாகரன் அல்பிரட் துரையப்பாவைத் ‘துரோகி’ என்ற அடைமொழியுடன் படுகொலை செய்தார். ஈழத் தமிழர் அரசியலில் துரோகிகள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்னும் அரசியல் அறிமுகமாகிறது. அல்பிரட் துரையப்பாமீதான படுகொலை நடவடிக்கையே புலிகளின் முதலாவது தாக்குதலாகப் பின்னர் பதிவுசெய்யப்பட்டது. அல்பிரட் கொலைக்கு எந்தவொரு கூட்டணித் தலைவரும் கண்டனம் தெரிவித்திருக்கவில்லை. ஏனெனில் அவர்கள் அதைத்தான் விரும்பியிருந்தனர். ஆனால் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கத்தைத் ‘துரோகி’ என்னும் அடைமொழியுடன் புலிகள் படுகொலைசெய்தபோதுதான் தாங்கள் வீசிய ‘துரோகி’- பூமறாங் தங்கள் கழுத்தையும் குறிவைக்கிறது என்னும் உண்மை கூட்டணித் தலைவர்களுக்கு உறைக்கத் தொடங்கியது. ஆனால் பிரபாகரனோ அதை விடுவதாக இல்லை. எப்படித் தமிழர் விடுதலைக் கூட்டணி அறிமுகப்படுத்திய தமிழீழ சுலோகத்தைப் பிரபாகரன் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாரோ, அப்படியே ‘துரோகி’ என்னும் அழித்தொழிப்புவாத அரசியலையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்.

3

வரலாற்றில் எந்தவொரு பெறுமதியுமற்ற ‘துரோகி’ என்னும் சொற் பிரயோகத்தை ஒரு கருத்தியலாக வளர்த்தவர்கள் மிதவாதத் தலைவர்களே. விடுதலைப்புலிகள் அந்தக் கருத்தியலைத் தங்களது ஏகப்பிரதி நிதித்துவவாதத்துக்குப் பயன்படுத்திக்கொண்டனர். தமது அரசியல் வேலைத் திட்டத்திற்குத் தொந்தரவாக அல்லது இடைஞ்சலாக இருந்தவர்கள் அல்லது எதிர்காலத்தில் அத்தகையதொரு நிலைக்கு வரக் கூடியவர்கள் என்று கருதப்பட்டோர் அனைவரையும் மக்கள் மத்தியில் இருந்து அன்னியப்படுத்தும் தந்திரோபாயமாகவே இந்தத் ‘துரோகி’ அல்லது ‘துரோகம்’ என்னும் சொற்கள் அடுத்தவர்களின் மீது சுமத்தப்பட்டன. மிதவாத அரசியல் தலைவர்களால் முன்தள்ளப்பட்ட அரசியல் சுலோகத்தை அப் பழுக்கில்லாமல் தழுவிக்கொண்ட ஆயுத விடுதலை இயக்கங்கள் அனைத்தும் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘துரோகி’ என்னும் அடைமொழிப்படுத்தி அழிக்கும் அரசியல் வாதத்தையும் அப்பழுக்கில்லாமல் உள்வாங்கிக்கொண்டன. ஆனால் புலிகள் போன்று இதை மிகவும் மூர்க்கமாகவும் நுட்பமாகவும் எந்தவொரு இயக்கமும் பயன்படுத்தியிருக்கவில்லை. ஆனால் புலிகள் வீசிய பூமறாங் இப்போது அவர்கள் கழுத்துகளையும் குறிவைத்திருப்பதுதான் இதிலுள்ள முரண்நகை.

புலிகள் டெலோவைத் தாக்கி அழித்ததிலிருந்து ஏனைய இயக்கங்களைப் போராட்ட அரசியலிலிருந்து அப்புறப்படுத்தியது வரை அனைத்தையும் ‘துரோகம்’ என்னும் ஒரு வார்த்தை கொண்டே நியாயப்படுத்தினர். டெலோவைத் தாக்கியழித்தமைக்குப் புலிகள் சொன்ன காரணம் - அவர்கள் இந்தியாவை இங்குக் கொண்டுவர முயல்கின்றனர். டெலோவைப் புலிகள் தாக்குவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் ‘பொது மக்கள்’ என்ற பேரில் பல சுவ ரொட்டிகள் ஒட்டப்பட்டன. டெலோ இந்தியாவைக் கொண்டு வந்து போராட்டத்தை அழிக்கப் போகின்றது என்றவாறு எழுதப்பட்ட சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டன. டொலோ ஒரு மக்கள் விரோத அமைப்பு என்றவாறான கருத்து வெகுசன மனோநிலையாக்கப்பட்டது. பின்னர் புலிகள் டெலோவை அழித்தபோது ஏற்கனவே தயார்படுத்தப்பட்டிருந்த மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இதே போன்று பின்னர் ஈ. பி. ஆர். எல். எப் தாக்கப்பட்ட போதும் அதே மக்கள் புலிகளுக்கு இளநீர் வெட்டிக் கொடுத்தனர்.

புலிகளே மற்றைய இயக்கங்களை முதலில் தாக்கியழிக்க முயன்றனர். எந்தவொரு இயக்கமும் புலிகளைத் தாக்கியழிக்க முயன்றதற்குச் சான்றில்லை. ஆங்காங்கே சிறிய சச்சரவுகள் இடம்பெற்றிருப்பினும் புலிகளை அழித்துத் தங்கள் தலைமையை உறுதி செய்துகொள்ள வேண்டுமெனும் முனைப்பில் எந்தவொரு இயக்கமும் செயற்பட்டிருக்கவில்லை. இதை விடயமறிந்த அனைவரும் அறிவர். ஆனால் சகல போராட்ட இயக்கங்கள் மத்தியிலும் தலைமை குறித்த ஈடுபாடும் எதிர்பார்ப்பும் இருந்ததையும் மறுப்பதற்கில்லை. அத்தகைய தலைமை குறித்த எதிர்பார்ப்பே டெலோவை அழிக்க முயலும் புலிகள், நாளை தங்களையும் அழிக்கத் தயங்கமாட்டார்கள் என்ற உண்மையை விளங்கிக்கொள்ள முடியாத நிலைக்குள், அவர்களைத் தள்ளியது எனலாம். புலிகள் டெலோவை அழிக்க முற்பட்ட போது ஏனைய இயக்கங்கள் அனைத்தும் ஒன்றுபட்டுப் புலிகளை எச்சரித்திருந்தால் அல்லது தடுத்திருந்தால் புலிகள் அடங்கியிருப்பர் அல்லது அழிந்திருப்பர். ஆனால் அந்த நேரத்தில் அவ்வாறு எந்தவொரு அமைப்பும் சிந்தித்திருக்கவில்லை. டெலோவை அழிப்பதில் வெற்றிகொண்ட புலிகள், அனைத்து இயங்கங்களையும் கட்டுப்படுத்த முடியும் என்ற இறுமாப்பில் ருசி கண்டனர். இதற்கு அந்த நேரத்தில் புலிகள் தவிர்த்த இயக்கங்கள் இந்தியாவுடன் தொடர்பிலிருந்ததைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர்.

ஆனால் இவ்வாறு புலிகளால் வஞ்சிக்கப்பட்ட இயக்கங்கள், பிற்காலத்தில் தங்களின் பாதுகாப்பு கருதிச் சில நடவடிக்கைகளை முன்னெடுத்ததும் உண்மையே! அதில் விமர்சனங்கள் இல்லாமலில்லை. ஆனால் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராட முன்வந்த பலரையும் அரசின் பக்கமாகச் சாய வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கியவர்கள் புலிகள்தாம். புலிகள் தமிழ் மக்களுக்காகப் போராடும் ஏகபோக உரிமையைக் குத்தகைக்கு எடுத்துக்கொள்ள முற்பட்டதன் விளைவால், மிக உயர்ந்த இலட்சிய எண்ணத்தோடு வந்த பலர் போராட்ட அரசியலிலிருந்து அன்னியப்பட நேர்ந்தது. இது பற்றிப் புலிகளால் தடைசெய்யப்பட்ட ஒரு முன்னணி இயக்கத்தின் மூத்த உறுப்பினருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, அவர் கூறினார் - தமிழ் மக்களுக்காக நீங்கள் போராடக் கூடாது என்று சொல்லுவதற்குப் பிரபாகரனுக்கு என்ன உரிமை இருக்கிறது. அவர் எவ்வாறு அப்படிச் சொல்ல முடியும். எப்போது புலிகள் ஏனைய இயக்கங்களை அழித்து, தாங்கள் மட்டுமே போராடுவதற்குத் தகுதியுள்ளவர்கள் என்றனரோ அப்போதே தமிழர் விடுதலைப் போராட்ட அரசியல் முற்றுப்பெற்றுவிட்டது. தவிர பிரபாகரனால் ஒருபோதுமே எதையும் அடைய முடியாது என்பதும் அப்போதே தெளிவாகிவிட்டது.

இதிலுள்ள இன்னொரு முரண் நகையான விடயம் என்னவென்றால், தங்களுடைய நலனுக்காக அரசுடன் கூட்டுச் சேரும் அரசியலைத் தொடங்கிவைத்தவர்களும் புலிகள்தாம். இது பலரும் தொட்டுக் காட்டாத விடயமாகும். நான் இங்குப் புலிகள் என்று குறிப்பிடுவது அதன் தலைமையே அன்றி, தன்னலமற்றுப் புலிகள் அமைப்பில் இணைந்துகொண்ட போராளிகளை அல்ல. இந்தியாவை வெளியேற்றும் நோக்கில் புலிகளே முதன்முதலாக அரசுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டனர். இந்தியப் படைகள் வடகிழக்கில் நிலை கொண்டிருக்கும்வரை தனது ஏகத்தலைமைவாத அரசியலை முன்னெடுக்க முடியாது என்று கருதிய பிரபாகரன் பிரேமதாசவுடன் கூட்டணியமைத்துக்கொண்டார். அன்றைய சூழலில் புலிகளுக்கு எதிர் நிலையில் இருந்த இயக்கங்கள் அரசுடன் கூட்டுச் சேர்ந்திருக்கவில்லை. அப்போது தங்களது செயற்பாட்டிற்கு விளக்கமளிக்கும் வகையில் ‘அரசு -புலிகள் பேச்சு - புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு தந்திரோபாய நடவடிக்கை’ என்னும் தலைப்பில் சிறு கைநூல் ஒன்றையும் வெளியிட்டிருந்தனர். நான்கு கேள்விகளுக்குப் பதிலளிப்பது போன்று தொகுக்கப்பட்டிருந்த மேற்படி நூலில் - இனவாத சிறிலங்கா அர சாங்கத்துடன் பேசுவது சரியான ஒன்றாகுமா என்னும் கேள்விக்கு - இந்திய இராணுவத்தை வெளியேற்றுவதில், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையில் பொது நலன்கள் சந்தித்துக்கொள்கின்றன. எங்கள் நடவடிக்கை, யப்பானைச் சீனாவிலிருந்து வெளியேற்றுவதற்காக மாவோ, சியாங்காய் ஷேக்குடன் சமரசம் செய்துகொண்டதற்கு ஒப்பானதாகும் என்று பதிலளித்திருந்தனர்.

இதன் மூலம் தங்களது சொந்த நலன்களுக்காக எதிரியுடன் கூட்டுச் சேரும் அரசியலைத் தொடங்கிவைத்த புலிகள், மற்றவர்கள் தங்களது அரசியல் தெரிவுக்காக அரசுடனோ அல்லது இந்தியாவுடனோ சேர்ந்தியங்கும்போது அதைத் துரோகம் என்றனர். இராணுவத்துடன் தங்களது இருப்புக்காகச் சேர்ந்தியங்க முடியுமென்னும் வழிமுறையைச் சொல்லிக் கொடுத்தவர்களும் புலிகள்தாம். மன்னார் முள்ளிக்குளத்தில் அமைந்திருந்த புளோட் இயக்கத்தின் பிரதான முகாமைக் கடற்படையின் உதவியுடனேயே புலிகள் தாக்கி அழித்தனர். அதில் புளொட் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கொல்லப்பட்டனர். ஈழத் தமிழர் போராட்ட அரசியலில், (சொந்த நலன் கருதிய) எங்களின் இருப்புக்காக இராணுவத்துடனும் இணைந்திருப்பதும் தவறல்ல என்னும் தந்திரோபாயத்தை முதலில் அறிமுகம் செய்தவர்கள் புலிகளேயன்றி வேறு எவருமல்லர். எல்லாவற்றிலும் தாங்களே முதன்மை பெற வேண்டுமென்னும் பிரபாகரனின் பிடிவாதம்தான், இறுதியில் தன்னலமற்றுப் போராடப் புறப்பட்ட பல்லாயிரக்கணக்கானோரை இலக்கற்று அலைய வைத்தது. சமூகத்தையே தலைகீழாக மாற்றப் புறப்பட்ட பல ஈ. பி. ஆர். எல். எப் போராளிகள், பிற்காலங்களில் நாட்கூலிகளாக வேலை செய்ததை நான் கண்டிருக்கிறேன். இப்போது அந்த நிலை புலிகளின் போராளிகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. புலிகளின் எதேச்சாதிகாரச் செயற்பாடுகளால் ஏற்பட்ட வெறுப்பால் தான், புலிகளால் தடைசெய்யப்பட்ட இயக்கங்கள் பலவும் அரசில் தஞ்சமடைய நேர்ந்தது. அத்தகையதொரு நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர் என்பதைத்தான் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் அரசும் புலிகளின் இராணுவரீதியான செயற்பாடுகளை எதிர்கொள்ளுவதற்கு மற்றைய இயக்கங்களைப் பயன்படுத்திக்கொண்டது.

சுருக்கமாகச் சொன்னால் ஈழத் தமிழர்களுக்கான அரசியல் எனின் அதில் ஒருவர்தான் இருக்க முடியும் - அது பிரபாகரன் தலைமையிலான புலிகள் மட்டும்தான். பிரபாகரனின் முடிவுக்கு மாறாக எவர் சிந்திப்பினும் அது துரோகம். எனது சிறு பிராயத்தில் மலர் தூவி வரவேற்கப்பட்ட மாத்தையா துரோகியானதும் இந்தப் பின்புலத்தின் விழைவுதான். டெலோவை அழிப்பதற்குப் புலிகள் என்ன பழியைப் போதித்தனரோ அதே பழியையே மாத்தையா மீதும் சுமத்தினர். மாத்தையா இந்திய உறவுத் துறையான ‘றோ’ உடன் இணைந்து பிரபாகரனைக் கொல்லச் சதி செய்தார் என்பதுதான் மாத்தையாமீதான குற்றச்சாட்டு. ஆனால் அது குறித்த எந்தவொரு ஆதாரத்தையும் புலிகள் பகிரங்கப்படுத்தவில்லை. ஆனால் புலிகளிடம் அப்படி எந்தவொரு ஆதாரமும் இல்லை என்பதுதான் உண்மை. மாத்தையாவின் குழுவில் இருந்த ஒருவருக்கு இந்திய உளவுத் துறை நடிகையொருவரை செட் பண்ணிக் கொடுத்தே மாத்தையாவைத் தங்கள் வலையில் வீழ்த்தியதென்றுகூடக் கதை சொல்லப்பட்டது. உண்மையில் பிரபாகரனின் முடிவு பிழை என்று வாதிட்டால், அதைச் செயல்படுத்த எத்தனித்தால் அதன் விழைவு துரோகியாகச் சாவதுதான்.

4

இன்று ஈழத் தமிழ் மக்கள் தங்களின் தலைவராக அங்கீகரித்திருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் ஒரு காலத்தில் புலிகளின் துரோகிப் பட்டியலில் இருந்தவர் என்பது பலருக்கும் தெரியாத சங்கதி. சந்திரிகா அரசின் ஊடாகத் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கு முயன்றதால், சம்பந்தன் ‘போட்டுத்தள்ள வேண்டிவர்கள்’ பட்டியலில் இணைக்கப்பட்டார். அன்றைய சூழலில் சம்பந்தன் தனது வீட்டிற்கு நூறு மீற்றர் தொலைவிலுள்ள தனது குடும்ப ஆலயத்திற்குக்கூடப் பாதுகாப்பு இல்லாமல் போக முடியாமல் இருந்தவர், என்பதும் பலருக்கும் தெரியாத சங்கதியே! ஏற்கனவே சம்பந்தனின் ஆலோசகராகத் தொழிற்பட்டுக்கொண்டிருந்த கலாநிதி நீலன் திருச் செல்வம் புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்த நிலையில், அடுத்து சம்பந்தன்தான் என்று வெகுசனப்பரப்பில் பேசப் படுமளவிற்கு நிலைமைகள் இருந்தன. நோர்வேயின் சமாதான முயற்சி சம்பந்தனின் உயிரைக் காப்பாற்றியது. அன்றைய நிலைமையில் சம்பந்தன் போன்ற ஜனநாயக அரங்கில் தடம் பதித்திருந்த தலைவர்களின் ஆதரவு புலிகளுக்குத் தேவைப்பட்டது. புலிகளுடன்தாம் பேச வேண்டும் புலிகள்தாம் எல்லாம் என்பதைச் சம்பந்தன் ஒப்புக்கொண்டதால் ‘துரோகி’ சம்பந்தன் புலிகளின் வட்டத்திற்குள் சிறந்த தலைவரானார். இது பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது நண்பர் ஒருவர் சுவாரசியமான தகவலொன்றைப் பகிர்ந்துகொண்டார். புலிகள் அமிர்தலிங்கத்தைத் துரோகி என்று சுட்டபோது உடுவில் சிவா எனப்படும் சிவசிதம்பரம் காயத்துக்குள்ளானார். பின்னர் அதிர்ஷ்டவசமாகத் தப்பித்தும்கொண்டார். ஒரு வேளை சிவசிதம்பரம் அன்றே கொல்லப்பட்டிருந்தால் ‘துரோகி’ ஆனால் பிழைத்துக்கொண்டதால் தம்பிதான் எல்லாம் என்று சொல்லித் தியாகி ஆகிவிட்டார்.

ஆனால் இதிலுள்ள சுவாரசியம் என்னவென்றால், பிரபாகரன் யாரையெல்லாம், துரோகியென்று துரத்தினாரோ, அவர்களே இன்று ஈழத் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்களாக வெளித் தெரிவதுதான்.

சிவராம் - இந்தப் பெயர் நான் எழுதத் தொடங்கிய காலத்தில் எனக்கு ஆதர்ஷமான பெயர். ஒரு வகையில் நான் அரசியல் ஆய்வுத் துறைக்குள் வர வேண்டுமென்னும் உத்வேகத்தை அளித்த பெயரென்றும் சொல்லலாம். ஆனால் இப்போது வெளிவரும் தகவல்களோ அனைத்தையும் புரட்டிப் போடுவதாக இருக்கிறது. நண்பர் நடராஜா குருபரன் எழுதிவரும் ‘மௌனம் கலைகிறது’ என்னும் தொடரில் 2004இல் விடுதலைப்புலிகளின் இராணுவக் கட்டமைப்பை நிலை குலையச் செய்த, கிழக்குத் தளபதியும் பிரபாகரனின் நம்பிக்கை நட்சத்திரமுமான கருணாவின் பிளவின் பின்னணியில் செயலாற்றிய மூளை சிவராமே என்று பதிவுசெய்திருக்கின்றார். கருணா பிளவின் பின்னரான நிலைமைகள் தனக்குப் பாதகம் என்பதை அறிந்ததும், சடுதியாக சிவராம் பிரபாகரனின் பக்கமாகச் சாய்ந்துகொண்டு, இராணுவ அர்த்தத்தில் வன்னியின் முக்கியத்துவம் என்ன என்பதை விளக்கும் வகையில் கருணாவுக்குப் பகிரங்கக் கடிதமொன்றையும் எழுதியிருந்தார். பின்னர் விடுதலைப்புலிகள் கருணாவை இராணுவரீதியாக எதிர்கொண்டபோது, அதற்கும் பிறிதொரு விளக்கத்தைக் கொடுத்திருந்தார். இதுவரை சிறிலங்கா இராணுவத்தை எதிர்கொண்டு வந்த புலிகள் தங்களது படைப்பிரிவொன்றையே வெற்றிகரமாக எதிர்கொண்டதன் மூலம் புதியதொரு அனுபவத்தைப் பெற்றுக்கொண்டனர் என்றவாறு, புலிகள் கிழக்கின் கருணா அணியினரைத் தாக்கியழித்ததை நியாயப்படுத்தியிருந்தார். வாசித்த நாங்களோ சிவராமின் இராணுவ விஞ்ஞான அறிவையெண்ணி மெச்சிக்கொண்டோம். ஆனால் அதன் சூத்திரதாரியே சிவராம் எனும்போது என்ன சொல்வது! பின்னர் சிவராம் படுகொலை செய்யப்பட்டபோது பிரபாகரன் தனது அதியுயர் விருதான ‘மாமனிதர்’ விருதை வழங்கிக் கௌரவித்திருந்தார். புலிகளின் இராணுவ மரியாதையோடுதான் சிவராமின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இப்போது ஈழத் தமிழ்த் தேசிய அரசியலில் சிவராமின் இடம் என்ன - மாமனிதரா, தேசியவாதியா, துரோகியா, தியாகியா - சிவராம் யார்? எனவே இங்கு ஒரு விடயம் தெளிவாகிறது - பிரபாகரனின் முடிவுகளைக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்தால் அவர் தியாகி, சிறந்த தமிழ்த் தேசியவாதி - எதிர்த்தால் அவர் பக்கம் எத்தகைய நியாயம் இருப்பினும் அவர் ஒரு துரோகியே! கடந்த முப்பது வருட கால அரசியலில் துரோகி - தியாகி என்பவை - பிரபாகரனை ஆதரித்தல் எதிர்த்தல் என்பதில்தான் தங்கியிருந்தது.

5

புலிகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இந்த (துரோக) முத்திரை குத்தும் அரசியல் நகைப்பிற்கிடமாகியது. அதுவரை புலிகளை எதிர்த்து நின்றவர்களையும் புலிகளை நிராகரித்தவர்களையும் மக்கள் மத்தியிலிருந்து அன்னியப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்ட ‘துரோகி’ என்னும் வாதம், ஆச்சரியகரமான வகையில் அதன் மூத்த உறுப்பினர்களுக்கும் பல வருடங்களாகப் புலம்பெயர்ந்த நாடுகளில் பிரபாகரனுக்குச் சேவகம் செய்தவர்களுக்கும் எதிராகத் திரும்பியது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் போரின்போது வீரச்சாவடைந்து விட்டார் என்னும் தகவலை வெளியிட்ட புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளராக இருந்த கே. பி துரோகியானார். பின்னர் புலிகளின் சொத்துகளைப் பதுக்கிக்கொள்வதில் ஏற்பட்ட கோஷ்டி மோதல்களின் காரணமாகப் பலர் துரோகிகளாக்கப்பட்டனர். காஸ்ரோ பிரிவினரின் கட்டுப்பாட்டில் ஊடகங்கள் இருந்ததால் தங்களது செயற்பாடுகளுக்குக் குந்தகமானவர்கள் என்று கருதப்பட்டோர் மீதெல்லாம் பிரபாகரன் வீசிய துரோகி - பூமறாங் அவரது சகாக்களையே பதம் பார்த்துக்கொண்டிருக்கிறது.

அல்பிரட் துரையப்பா, அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், சபாரத் தினம், மாத்தையா பத்மநாபா, நீலன் திருச்செல்வம், கருணா- இன்னும் நூற்றுக் கணக்கானோருடன் நீண்டுகிடக்கும் பிரபாவின் துரோகிப் பட்டியலில் இப்போது பல புலிகள். இறுதியில் அது பிரபாகரனையாவது விட்டுவைக்குமா என்பது சந்தேகமே!

இன்று கருத்தியல் தளத்தில் இயங்கும் எங்களைப் போன்றவர்களையும் இந்தப் பூமறாங் அச்சுறுத்திக்கொண்டேயிருக்கிறது. ஏலவே நான் காலச்சுவட்டில் எழுதிய இரண்டு கட்டுரைகளை அத்தகையதொரு கண்ணோட்டத்திலேயே சிலர் அணுகியிருந்தனர். காலச்சுவடு புலிகளுக்கு ஆதரவான இதழா அல்லது எதிரான இதழா என்னும் விவாதமொன்றும் சிலர் மத்தியில் இடம்பெற்றதைக் காண முடிந்தது. இது மாற்றுக்கருத்துகளை எதிர் கொள்வதிலுள்ள அச்சத்தின் விளைவேயன்றி வேறல்ல. இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் மாற்றுக் கருத்துகளை முன்வைப்பதாகத் தங்களை இனம்காட்டிக் கொள்வோர் மத்தியிலும் இது குறித்துத் தெளிவானதொரு பார்வை இல்லை என்பதுதான். காலச்சுவடில் வெளிவரும் புலிகளை விமர்சிக்கும் எழுத்துக்களைக் கொண்டு அதைப் புலி எதிர்ப்பு ஊடகம் என்பதும், புலிகளுடன் உடன்பாடுள்ளவர்கள் எழுதும்போது, அதைப் புலிகளுக்கு ஆதரவான ஊடகமாகப் பார்ப்பதும் அடிப்படையிலேயே தவறானது. இதுவும் ஒருவகை துரோக வாத அரசியலின் நீட்சியே. இங்குப் பிறிதொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். காலச்சுவடு என்னிடம் குறித்த விடயங்கள் தொடர்பில் கட்டுரைகளைக் கேட்கவில்லை. நான்தான் எனது கருத்துகளை வெளியிடுவதற்காகக் காலச்சுவட்டை அணுகியிருக்கிறேன். அது காத்திரமான வாசிப்பிற்குரிய இதழ் என்பதால் அதில் எழுதுவதன் மூலம் எனது எழுத்துக்கள் பரந்த வாசிப்பிற்குள்ளாகும், கூடவே ஆரோக்கியமானதொரு உரையாடலுக்கும் வழி சமைக்கும் என்னும் நம்பிக்கையின் பேரிலேயே காலச்சுவட்டில் எழுத முயல்கிறேன். எனவே இதைத் தேவையற்றுப் புலி ஆதரவு - புலி எதிர்ப்பு - பார்ப்பனியம் - போன்ற புரிதல்களுக்கு ஊடாக அணுக விளைவ தானது, கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாமையின் பலவீனமேயன்றி வேறில்லை என்பது என் அபிப்பிராயம்.

ஈழத் தமிழர் அரசியலுக்கும் பார்ப்பனிய எதிர்ப்பிற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. இது குறித்துப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பேசுவேன். முன்னர் நானும் அப்படியொரு கற்பனாவாதத்துக்குள் கட்டுண்டு கிடந்தது உண்மையே!

தவிர, எங்களைப் போன்றவர்கள் மீது வைக்கப்படும் பிறிதொரு குற்றச்சாட்டு - நாங்கள் முன்னர் புலிகளின் ஆதரவாளர்களாக இருந்தோம். புலிகள் அழிந்ததும் அதை விமர்சிக்கிறோம். முன்னர் புலிகளின் ஆதரவாளர்களாக இருந்ததை மறைக்க வேண்டிய எந்தவொரு அவசியப்பாடும் எனக்கில்லை. நானே மறைத்தாலும் எனது முன்னைய எழுத்துக்கள் என்னைக் காட்டிக் கொடுத்து விடும். புலிகளின் அழிவிற்குப் பின்னர் நாங்கள் முன்வைக்க முயலும் கருத்துகளை நண்பர்கள் சிலர் சந்தர்ப்பவாதமாகவும் காட்ட முயலலாம். ஆனால் இங்குக் கருத்தூன்ற வேண்டிய விடயம் - புலிகளை நாங்கள் மட்டுமல்ல தொண்ணூறு வீதமான ஈழத் தமிழ் மக்களும் தாம் ஆதரித்திருந்தனர். அதே மக்கள்தாம் தற்போது புலிகளால் துரோகியாகக் காண்பிக்கப்பட்ட தலைவர்களை ஆதரித்து நிற்கின்றனர். தங்களது தேர்தல் மேடைகளில் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தரப்பினர் தங்களைப் பகிரங்கமாகவே பிரபாகரனின் ஆதரவாளர்களாகக் காண்பித்த போதும்கூட மக்கள் அவர்களை ஆதரிக்கவில்லை. ஏன் - அவ்வாறாயின் வடகிழக்கில் வாழ்கின்ற மக்கள் அனைவருமே சந்தர்ப்பவாதிகளா? எனவே இங்குக் கவனிக்கப்பட வேண்டிய விடயம் மாற்றமே தவிர - புலி ஆதரவு - எதிர்ப்பு என்னும் கோஷங்களல்ல.

ஒரு விடயம் தவறு என்று தெரிந்தால் அதைத் திருத்திக்கொள்வதற்கான தற்துணிவு இருக்க வேண்டியது அவசியம். அத்தகைய துணிவு இருப்பதாலேயே சில விடயங்கள் குறித்துப் பகிரங்கமாகப் பேசி வருகிறோம். நிகழ்காலத்தின் சவால்களை வெற்றிகொள்வதற்காகக் கடந்த காலத்திலிருந்து கற்றுக் கொள்தல் என்னும் அடிப்படையிலேயே என் போன்றவர்களின் விமர்சனங்கள் அமைந்திருக்கின்றன. ஒரு வகையில் எங்களது விமர்சனங்கள் எங்களது கடந்த காலத்தின் மீதான விமர்சனங்கள். எங்களின் ஒரு காலகட்டத்து எழுத்துக்களை நாங்களே நிராகரிக்கின்றோம் - நாங்களே விமர்சிக்கின்றோம். எங்களை நாங்களே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருக்கிறோம்.

யதீந்திரா

மதிப்பீட்டு அடிப்படையில் முடிவுசெய்வதில்
உறுதியற்ற நிலை
உன்னதங்கள் பற்றிய நிரந்தரமின்மை
போன்றவற்றுக்கு நாம் பயந்துசாகிறோம்.

விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா

காலச்சுவடு
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல