புதன், 27 மார்ச், 2013

கருணாநிதி கூறும் பிளாஷ்பேக்: “அவர் அடிக்கல, ஓங்கி தட்டினார்! மூக்கில் ‘நச்’ என்று குத்தினார்”

சட்டசபையில் தே.மு.தி.க.வினருக்கு இடையே நடைபெற்ற குஸ்தி தொடர்பாக 6 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்ட பின்னணியில், கடந்தகால சட்டமன்ற சண்டைகள் சிலவற்றை பட்டியலிட்டு, அறிக்கை வெளியிட்டுள்ளார், தி.மு.க. தலைவர் கருணாநிதி!

சுவாரசியமான சம்பவங்கள் இவை. தமிழர்களின் வீரத்தை உலகுக்கு எடுத்துக் காட்டிய இந்த வீரதீர எம்.எல்.ஏ.க்களின் ‘டூப் போடாத’ சில சண்டைக் காட்சிகளை, கருணாநிதியின் அறிக்கையில் படித்துப் பாருங்கள்:

சட்டப்பேரவை கூட்டம் 8-2-2013-ல் நடைபெற்றபோது, நடந்த அடிதடி தகராறுக்காக, தே.மு.தி.க. 6 உறுப்பினர்கள் ஓராண்டு காலத்திற்கு பேரவைக்கு வர முடியாத அளவிற்குத் தடை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த ஓராண்டு காலத்திற்கு அவர்களுக்கு ஊதியமும் கிடையாது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது அ.தி.மு.க.வுடன் தோழமை கொண்டு அவர்களின் வெற்றிக்காக உழைத்த தோழமைக் கட்சிக்கு ஏற்பட்ட நிலை இது.

கொஞ்சம் பிளாஷ்-பேக் கேளுங்க

இதையொட்டி கடந்த காலங்களில் பேரவையில் நடைபெற்ற சில சம்பவங்களை நினைவூட்டினால் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

24-11-1986ல் எம்.ஜி.ஆர் ஆட்சியில், மொழி போராட்டத்தின் ஒரு கட்டமாக இந்திய அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக, பேரவைத் தலைவர், தி.மு.க.வைச் சேர்ந்த பேராசிரியரையும் மற்றும் எஸ். பாலன், ஏ.செல்வராசன், பரிதி இளம்வழுதி, பி.பொன்னுரங்கம், கோவை எம்.ராமநாதன், தர்மபுரி ஆர்.சின்னசாமி, ஆலந்தூர் ம.ஆப்ரகாம், மதுராந்தகம் சி.ஆறுமுகம், அரக்கோணம் வி.கே.ராசு ஆகியோரையும் பேரவையிலிருந்து நிரந்தரமாக நீக்கி தனது தீர்ப்பை படித்தார்.

எதிர்க்கட்சிகள் சார்பில் எவ்வளவோ கேட்டுக் கொண்டும் கூட அந்தத் தீர்மானத்தைத் திரும்பப் பெற அன்றைய ஆளும் கட்சியான அ.தி.மு.க. கடைசிவரை முன்வரவில்லை.

28-12-1988ல் சட்டப் பேரவையில் நடைபெற்றது என்ன?

ஜா. அணி, ஜெ. அணி மைக்குகளை பிடுங்கி அடிபட்டனரே!

ஜா அணியினரும், ஜெ அணியினரும் அவையில் உள்ள மைக்குகளைக் கையில் பிடுங்கிக் கொண்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டு, பேரவை வரலாற்றில் இல்லாத மிகப் பெரிய ரகளையைச் செய்ததை தமிழகம் மறந்துவிட்டதா என்ன?

உள்கட்சி விவகாரம் சட்டப் பேரவைக்கு வந்து ஊர் சிரித்ததைப் பார்த்து நாடே சிரித்தது.


மற்றொரு உதாரணம் 1991ம் ஆண்டு சட்டப்பேரவையில் அதிமுக ஆட்சியில் ஜூலை 4ம் தேதி ஆளுநர் உரையாற்றினார். ஆளுநர் உரையாற்றத் தொடங்கிய போது, பா.ம.க. உறுப்பினராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு அறிக்கையை அவையில் ஆங்கிலத்தில் படிக்கத் தொடங்கினார்.

அப்போது அதிமுக உறுப்பினராக இருந்த தாமரைக்கனி, பண்ருட்டி ராமச்சந்திரன் அருகில் வந்து தாக்கினார்.

இதைப்பற்றி 5-7-1991ல் பேரவைத் தலைவர் அவை கூடியதும் இரங்கல் உரை ஆற்றுவதற்கு முன்பாகவே அவசர அவசரமாக தீர்ப்பை படித்தார்.

அடிக்கல.. ‘ஓங்கி தட்டி’னாராம்!

பேரவைத் தலைவர்: 4-7-1991ல் ஆளுநர் உரை நிகழ்த்துகையில், பண்ருட்டி ராமச்சந்திரன் எழுந்து ஆளுநர் உரையாற்றுவதற்கு குறுக்கீடு செய்தார். அப்போது உறுப்பினர் தாமரைக்கனி தன் இருக்கையை விட்டு எழுந்து வந்து பண்ருட்டி ராமச்சந்திரன் இருக்கைக்குப் பின்னால் நின்று கொண்டு விரும்பத்தகாத வகையில் அவர் தோள் மீது ஓங்கித் தட்டினார்.

இவர்கள் இருவரது செயல்களுமே விதிகளுக்கு முரண்பாடானவை என்றும், எனவே இது குறித்து பேரவைத் தலைவர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் முதலமைச்சர் ஜெயலலிதா 4-7-1991ல் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தின் போது என்னைக் கேட்டுக் கொண்டார்.

மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் பேரவையின் ஒழுங்கிற்குப் பெருத்த ஊறு விளைவிப்பனவாகவே நானும் கருதுகிறேன்.

எனவே, பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் தாமரைக்கனி ஆகிய இரு உறுப்பினர்களையும் இன்று முதல் 3 நாட்களுக்கு பேரவை நடவடிக்கைகளில் இருந்து நீக்கி வைத்து தீர்ப்பு வழங்குகிறேன் என்றார்.

மோதிரக் கையால் மூக்கில் குத்தினார்!

22-3-1999ல் அன்று ஒரு சம்பவம். சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது அ.தி.மு.க. உறுப்பினராக இருந்த தாமரைக்கனி, அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் முகத்தில் குத்தினார்.

அவர் அணிந்திருந்த மோதிரம் வீரபாண்டி ஆறுமுகத்தின் மூக்கில் குத்தி ரத்தம் கொட்டியது. அதே தாமரைக்கனி பின்னர் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்தார்.

இதோ மற்றொரு உதாரணம்: 7-1-2011ல் திமுக ஆட்சியில் ஆளுநர் உரையாற்றிய போது, அதிமுக உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டு, வெளியேற்ற வந்த அவைக் காவலர்களை கடுமையாகத் தாக்கினார்கள்.

அதில் ஒருவர், அவைக் காவலர்களை எட்டி உதைத்து, தொப்பிகளை பறித்து அவர்கள் முகத்தில் அடித்தார். அந்தப் புகைப்படங்கள் ஏடுகளில் அப்போதே வெளிவந்தன.


ஆளுநர் உரையாற்றிய போது அத்து மீறிச் செயல்பட்ட அதிமுக உறுப்பினர்கள் 9 பேரை மாதக் கணக்கிலோ, ஆண்டுக் கணக்கிலோ அல்ல அந்தத் தொடர் முழுவதும் நீக்கம் செய்து பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன் உத்தரவிட்டார்.

அதை எதிர்த்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆனால் அதற்கு அடுத்த நாள் என்ன நடந்தது தெரியுமா?.

முதலமைச்சராக இருந்த நான் மறுநாள் பேரவையில் கூறும்போது, பேராசிரியர் உள்ளிட்ட 10 திமுக சட்டமன்ற உறுப்பினர்களை அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்டவர்களை மீண்டும் அந்த ஆட்சியில் அனுமதிக்கவில்லை. ஆனால் வெளியேற்றப்பட்ட அதிமுக உறுப்பினர்கள் மீண்டும் அவைக்கு வந்து ஒத்துழைக்க வேண்டுமென்று அண்ணா வழியில் நடைபெறுகின்ற இன்றைய திமுக அரசின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தேன்.

ஸ்டாலின் பேசியபோது என்ன செய்தார்கள்?

மற்றொரு நிகழ்ச்சி 18-10-2007ல் காலை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு உரிமை மீறல் பிரச்சனை குறித்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அவையில் இருந்த அதிமுக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து பயங்கரமாக கூச்சலும், குழப்பமும் விளைவித்து, அவரைப் பேச விடாமல் அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்துக் கொண்டிருந்தனர்.

மேலும் அவர்கள் அனைவரும் தங்கள் இருக்கைகளை விட்டுக் கும்பலாக எழுந்து, பேரவைத் தலைவரின் இருக்கை முன்பு தரையில் அமர்ந்து கண்ணியக் குறைவாக நடந்து கொண்டார்கள்.

பேரவைத் தலைவர் பலமுறை அவர்களை இருக்கைக்குத் திரும்புமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டும் அவர்கள் திரும்பாத காரணத்தினால், பேரவைத் தலைவர் அவைக் காவலர்களை அழைத்து, அவர்களை வெளியேற்ற உத்தரவிட்டார்.

தொப்பியை பிடுங்கினார்.. தூர எறிந்தார்!

அப்போது திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் தன்னை அப்புறப்படுத்த வந்த காவலர் பி.மதிவாணனின் தொப்பியை பிடுங்கி, பேரவைத் தலைவர் மீது தூக்கி எறிந்தார். அதை அவை உறுப்பினர்கள் அனைவரும் பார்த்தார்கள்.

பேரவைத் தலைவரையே தாக்கிய அந்தச் செயலுக்காக திமுக ஆட்சியில் முதலில் 6 மாத காலத்திற்கு அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்ட போதிலும், நான் உடனடியாகத் தலையிட்டு இந்தக் கூட்டத் தொடர் தவிர அடுத்த கூட்டத் தொடரின் முதல் 10 நாள்களுக்கு மட்டும் நீக்கம் செய்தால் போதும் என்று கூறி அவ்வாறே கடைப்பிடிக்கப்பட்டது.

இது திமுக ஆட்சியில் நடைபெற்ற மற்றொரு உதாரணம்.

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற விஜயகாந்த்தையே 10 நாட்களுக்கு பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளக் கூடாது என்று நடவடிக்கை எடுத்த நிகழ்ச்சி வேறு எப்போதாவது நடந்தது உண்டா? அதுவும் அதிமுக ஆட்சியில் தான் நடைபெற்றது.

நான் என்ன செய்தேன் தெரியுமா?

13-11-2008ல் திமுக ஆட்சியில் நான் அவையில் இல்லாத நேரத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்கள். இந்த செய்தி அறிந்து, அவர்கள் மின்சார வாரியம் பற்றிய விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று அக்கறையோடு இருந்தார்களே, வெளியேற்றப்பட்டு விட்ட காரணத்தால், அந்த விவாதத்தில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுமே” என்று நான் எண்ணினேன்.

நானே எதிர்க்கட்சித் துணைத் தலைவருடன் தொலைபேசியில் பேசிட முயற்சித்து அது கிடைக்காத காரணத்தால் ஆளும் கட்சியைச் சேர்ந்த மு.க.ஸ்டாலின், துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், கே.என்.நேரு ஆகிய அமைச்சர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.

எதிர்க்கட்சித் தலைவர் அறைக்கு சென்று, அதிமுகவினரைச் சமாதானம் செய்து மின்சாரம் பற்றிய விவாதத்தில் கலந்து கொள்ள வாருங்கள் என்று அழைக்கச் செய்தேன்.

மேலும் பேரவைத் தலைவரோடும் தொலைபேசியில் பேசி, வெளியேற்றப்பட்ட ஆணையைத் திரும்பப் பெற்று, அவர்களை கலந்து கொள்ள வாருங்கள் என்று அவையில் அழைப்பு விடுக்கவும் கேட்டுக் கொண்டேன்.

அவரும் அவ்வாறே அழைப்பும் விடுத்தார்.

ஆனால், இத்தனைக்கும் பிறகு என்ன காரணத்தாலோ அவர்கள் அவைக்கு வரவும் இல்லை. மின்சார விவாதத்தில் கலந்து கொள்ளவும் இல்லை.

ஆனாலும் அண்ணா கற்றுக் கொடுத்த அந்தப் பண்பாட்டுடன் நாம் நடந்து கொண்டோம் என்ற மன ஆறுதல் எனக்குக் கிடைத்தது.

25-3-1989. 13 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு 3ம் முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்று, நிதியமைச்சர் என்ற முறையில் நான் நிதிநிலை அறிக்கையைப் படிக்கத் தொடங்கிய போது நடந்தது என்ன?

ஜெயலலிதா என் கையில் இருந்த அறிக்கையை பிடுங்க…

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா எழுந்து, முதலமைச்சர் ஒரு கிரிமினல் குற்றவாளி, அவர் நிதிநிலை அறிக்கை படிக்கக் கூடாது என்று கூறி, என் கையில் இருந்த நிதிநிலை அறிக்கையைப் பிடுங்கிட முற்பட்டார்.

அவருக்குத் துணையாக அதிமுக உறுப்பினர்கள், அவரைச் சூழ்ந்து நின்று கொண்டு படிக்காதே, படிக்காதே என்று கூச்சலிட்டனர்.

அந்தியூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என் கையிலிருந்த நிதி நிலை அறிக்கைப் புத்தகத்தைப் பிடித்திழுத்து கிழித்தெறிந்தார். அதைத் தடுக்க முனைந்த போது என் முகத்தில் குத்தி, மூக்குக் கண்ணாடி கீழே நொறுங்கி விழுந்தது.


அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் தலையில் ஒலிபெருக்கிக் கம்பியால் தாக்கி, ரத்தம் ஒழுகிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இவ்வளவு பெரிய சம்பவத்திற்கே அப்போது என்ன தண்டனை வழங்கப்பட்டது தெரியுமா? கலவரம் செய்த அதிமுக உறுப்பினர்களை ஒரு வார காலம் தற்காலிக நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் 27-3-1989ல் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் துணைத் தலைவராக இருந்த குமரிஅனந்தன், அந்த தற்காலிக நீக்கத்தையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதுதாங்க.. தி.மு.க.!

அதையடுத்து நான், “எதிர்க்கட்சிகள் இல்லாமல் இந்த அவை நடவடிக்கைகளை நடத்த வேண்டும் என்கிற குறுகிய மனப்பான்மை எனக்கோ இந்த அரசுக்கோ நிச்சயமாக இல்லை. நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும் என்கிற அந்த எண்ணத்தின் அடிப்படையில் இந்தப் பிரச்சனையை நான் அணுகுகிறேன்.

அன்றைய தினம் ஏற்பட்ட ஒரு உணர்ச்சியின் காரணமாக, கொந்தளிப்பின் எதிரொலியாக நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானத்தைத் திரும்பப் பெற்று எதிர்க்கட்சித் தலைவரும், மற்றவர்களும் அவையில் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டேன்.

இது தான் திமுக.

இதனை அப்போது சி.சுப்ரமணியம் ஏடுகள் வாயிலாகப் பாராட்டியிருந்தார்.

என்னுடைய இந்த விளக்கங்களை படித்துப் பார்த்த பிறகாவது, அதிமுக ஆட்சியினர் தேமுதிக உறுப்பினர்கள் மீது தற்போது எடுத்திருக்கும் நடவடிக்கை பற்றி மறுபரிசீலனை செய்து, அதனை ரத்து செய்வதற்கோ அல்லது நாட்கள் கணக்கில் அல்லது வாரக் கணக்கில் குறைத்து அறிவிப்பதற்கோ முன் வருவார்கள் என்று நம்புகிறேன். முன் வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல