புதன், 10 ஏப்ரல், 2013

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் ! பகுதி 32

தொடர்ந்து வவுனியாவைத் தளமாகக் கொண்டு இயங்கிய மகிழ்ச்சியின் மறுபெயர் கொண்ட அந்தப் பாராளுமன்ற உறுப்பினரை கிளிநொச்சிக்கு உடனடியாக வருமாறு பொட்டம்மானிடமிருந்து தகவல் அனுப்பப்படுகிறது. இருந்த போதிலும் தான் வன்னிக்குச் சென்றால் நிலைமை பாதகமாக அமைந்து விடுமோ என்ற அச்சத்தில் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் தான் அவசரமாக இந்தியாவிற்கு செல்லவேண்டி உள்ளதால் இந்தியாவிற்கு சென்றுவிட்டு வந்து உடனடியாக சந்திப்பதாக தகவல் அனுப்பி வைக்கிறார்.

இத் தகவலை அனுப்பிவிட்டு தனது கட்சித் தலைவரான பிரேமமானவரை சந்தித்து தனக்கு ஏற்பட்டிருந்த அல்லது தற்போது ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி தொடர்பில் விளக்கம் அளிக்கிறார். இவ் விளக்கத்தை பெற்றுக்கொண்ட பிரேமமானவர் உடனடியாக தானும் இந்தியாவிற்கு வருவதாக கூறி, இருவரும் இந்தியாவிற்குச் செல்கின்றனர். இருவரும் தங்களது தனிப்பட்ட விடயமாக இந்தியாவிற்கு சென்ற போதிலும், இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து ஈழத் தமிழர்கள் பிரச்சினை தொடர்பில் விளக்குவதற்காக கூட்டமைப்பின் தூதுக்குழு ஒன்று இந்தியா செல்வதாக தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் இந்தியா சென்ற இவர்கள், அங்கு அரசியல் தலைவர்கள் எவரையும் சந்திக்கவில்லை என்பதும், புலனாய்வுத் துறையினருடன் விரிவான ஆலோசனைகளை நடத்தியதாகவும், புலிகளின் இராணுவக் கட்டமைப்பை எப்படி சிதைக்க முடியும்? என்பது தொடர்பிலும் மேலும் சில விடயங்களையும் அவர்களுடன் கலந்தாலோசித்ததை புலிகள் அறிந்துகொண்டனர்.

இந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தியாவில் சுமார் ஒருமாத காலத்தைக் கழித்துவிட்டு
மீண்டும் இலங்கைக்குத் திரும்பிய பொழுது வன்னி யுத்தமுனை கடுமையான நெருக்கடிகளை சந்தித்துக்கொண்டிருந்த காலமாக இருந்தது. இக்காலப் பகுதியில்தான் சுகயீனம் காரணமாக விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரும், பிரதான களமுனைத் தளபதியாகவும் திகழ்ந்த பால்ராஜ் சாவைத் தழுவியிருந்தார்.

ஏற்கனவே கிழக்கு மாகாணத்தில் கருணாவின் பிரிவினால் பலவீனப்பட்டிருந்த புலிகள் இயக்கம் பிரிகேடியர்பால்ராஜின் இழப்பினால் மேலும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியது. களமுனைகளில் கருணா, பால்ராஜ்போன்றவர்கள் செயற்பட்டது போன்று ஏனைய தளபதிகளால் சண்டையை வழிநடத்துவது கடினமான ஒன்று எனவிடுதலைப் புலிகளின் தளபதிகள் வெளிப்படையாகவே கூறிக்கொள்வார்கள். அந்தளவிற்கு குறித்த இரண்டு தளபதிகளும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரதான தளபதிகளாக களமுனையை வழிப்படுத்தும் நெறிப்படுத்தும் தளபதிகளாக செயற்பட்டு வந்தனர்.

புலிகள் படையினர்மீது பெரியளவிலான இராணுவ ரீதியிலான மரபு வழித்தாக்குதல் ஒன்றை நடத்துவதற்காக குடாரப்புப் பகுதியில் மேற்கொண்ட தரையிறக்கத்தின் போது அந்தக் களமுனையை வழிநடத்தியவர் பிரிகேடியர் பால்ராஜ். குடாரப்பில் தரையிறங்கிய விடுதலைப் புலிகளின் படையணியினர் இத்தாவில் வரை முன்னேறிச்சென்று இத்தாவில் பகுதியில் நிலைகொண்டவாறு படையினரை எதிர்த்து அச் சண்டையை இராணுவ ரீதியில் தங்களிற்கு சாதகமானதாக மாற்றி வெற்றிகண்டதற்கு பிரதான தளபதியாக திகழ்ந்தவர் பால்ராஜ். படையணியை நகர்த்துகின்ற திறமையும், சாதூரியமும் பால்ராஜிடம் நிறைந்து காணப்பட்டதை இலங்கையின் இராணுவத் தளபதிகளும் விதந்து கூறியுள்ளனர். பால்ராஜ் போன்ற புலிகள் இயக்க தளபதிகளின் இராணுவ வியூகங்களை எவ்வாறு உடைக்கலாம் என்பது தொடர்பிலே படையினரிற்கு பிரத்தியேகமான வகுப்புகளை நடத்தவேண்டிய தேவை ஒரு காலத்தில் இலங்கைப் படையினரிற்கு இருந்துள்ளது.

இவ்வாறு போரியல் ரீதியிலான மிகுந்த பட்டறிவை கொண்டிருந்த பால்ராஜின் இழப்பு புலிகளிற்கு தோல்வியின் முன்னறிவிப்பாகவே நிகழ்ந்தது. ஏற்கனவே கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பின்னடைவை ஈடுசெய்ய முடியாமல் இருந்த புலிகளுக்கு வடக்கு மாகாணத்தில் பால்ராஜின் இழப்பும் ஒரு பெரும் இழப்பாகவே அமைந்தது. அத்தோடு விடுதலைப் புலிகளின் படையியல் சமநிலையும் பெரியளவில் மாற்றம் கண்டிருந்தது. இந்த மாற்றங்கள் படையினரின் மனோவலிமையை அதிகரிக்க ஏதுவான காரணிகளாக இருந்தன. இதனை அடுத்து களமுனை படைத்தளபதிகள் தங்களுக்கு வெற்றி அளிக்கக்கூடிய போர் வாய்ப்பை உணர்ந்து அரச உயர் மட்டத்தின் உத்தரவுகளுக்காக காத்திருக்கவும் தொடங்கினர்.

மறுபுறம் சர்வதேச அரசியலின் போக்கை புலிகள் சரியாக கணிப்பிடத் தவறியமை, தமிழ் ஊடகங்கள்தொடர்ந்து வண்டிவண்டியாக ஏற்றிக்கொண்டிருந்த உசார்மடத்தனப் பிரலாபங்கள், இவற்றால் உருவாகிவளர்ந்துவிட்ட இனமேன்மையுணர்வு மற்றும் தற்பெருமைப் பொறிக்குள் விழுந்து மீளமுடியாமற் போனமைபோன்ற காரணங்களால் புலிகள் சாத்தியமற்ற வெளியாரின் வாக்குறுதிகளையும் நம்பி எதிர்பார்க்கத்தலைப்படும் நிலைமைக்கு வந்தார்கள். படையினர் மனவலிமையுடனும் சர்வதேச ஆதரவுடனும் போரை உக்கிரமாக ஆரம்பிக்க தொடங்கியதை அடுத்து கிளிநொச்சி தொடக்கம் முக்கிய நகரங்கள் படையினர் வசம் விழத்தொடங்கியபொழுது களமுனைகளில் நின்ற புலிகளின் தளபதிகள் நிச்சயம் பால்ராஜ் தங்களுடன் இல்லாதது குறித்துப் பேசியிருப்பர். பால்ராஜ் இருந்திருந்தால் களமுனைகளில் சிறியளவிலான மாற்றங்களையாவது ஏற்படுத்தியிருப்பார் என புலிகளின் தளபதிகள் தங்களுக்குள் கதைத்தும் இருந்தனர்.

இத்தாவில் களமுனையில் படையினரின் பொக்சுக்குள் முழுமையாக அகப்பட்டிருந்த பால்ராஜ் உள்ளிட்ட தளபதிகளை பிரபாகரன் பாதுகாப்பாக வெளியேறி கடல் மார்க்கமாக உடனடியாக முல்லைத்தீவிற்கு வருமாறு அவசரமான அழைப்பொன்றை அனுப்பியிருந்தார். களமுனை தொடர்பில் முக்கியமான ஆலோசனை நடத்தவேண்டி உள்ளதால் உடனடியாக பால்ராஜ் முல்லைத்தீவிற்கு வந்து தன்னைச் சந்திப்பதற்குரிய ஏற்பாட்டைச் செய்யுமாறு சூசை ஊடாக அந்த தகவல் அனுப்பப் படுகிறது. உடனடியாகவே பால்ராஜ் தன்னால் கடல் மார்க்கமாக வரமுடியாது.

எனவும் நான் தரை மார்க்கம் ஊடாகவே தலைவரை வந்து சந்திப்பேன் என்ற செய்தியை தலைவரிடம் கூறுமாறுசூசைக்கு தகவல் சொல்லிவிட்டு சூசையுடனான தொடர்புகளை பால்ராஜ் துண்டித்துவிடுகிறார். இதனை அடுத்து பதட்டம் அடைந்த பிரபாகரன், பொட்டம்மான், தமிழ்ச்செல்வன் போன்றோர் பால்ராஜை எப்படியாவது இந்த சிக்கலில் இருந்து மீட்டு வரவேண்டும் என்று முடிவெடுத்து கேணல் தீபன் ஊடாக அந்த அவசர தகவல் அனுப்பப்பட்டு பால்ராஜை கடல் மார்க்கமாக வருமாறு தலைவரின் கட்டளை என்று பால்ராஜிற்கு தகவல் வழங்கப்படுகிறது. இதற்குப் பதில் அளித்த பால்ராஜ் தீபனிடம் உங்களது படையணியிலிருந்து ரீம் ஒன்றை தருமாறும் நான் தலைவரைச் சந்திக்கின்ற வழியை ஏற்படுத்துகிறேன் என்றும் கூறுகிறார்.

இதனை அடுத்து அன்று இரவு களமுனையில் பெரியளவிலான மாற்றங்கள் ஏற்பட்டு தரைவழியிலான பாதை ஒன்று ஏற்படுத்தப்படுகிறது. இத்தாவில் இருந்து பளைவரைக்கும் இருந்த படையினர் தாக்கப்பட்டு விடுதலைப் புலிகள் அந்தக் களமுனையில் வெற்றிவாகை சூடிக்கொண்டனர். இவ்வாறு பல களமுனைகள் விடுதலைப் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்டதிற்கு பால்ராஜே பிரதான காரணியாக இருந்துள்ளார். இவரின் இழப்பு விடுதலைப் புலிகளின் இராணுவ ரீதியிலான பலவீனத்தின் முதல் பெரிய அடியாக இருந்தபோதிலும் இதனை தமிழ் ஊடகங்கள் எவையும் கண்டுகொள்ளவுமில்லை வெளிப்படுத்தவுமில்லை.

தமிழ் ஊடகங்கள் எந்தநிலையில் விடுதலைப் புலிகளை தொடர்ந்து பார்த்தனர்? இவ்வாறு பார்த்த ஊடகங்கள்
எவ்வாறு விடுதலைப் புலிகளை அழித்தனர் என்பதை தொடர்ந்து பார்ப்போம்…..

(வே. அர்ச்சுணன்)

(தொடரும்)
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல