சவூதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்ற தனது தாயை மீட்டுத்தர உதவுமாறு 7வயதுச் சிறுவனான அனுலக்ஷன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-
பெரியநீலாவணை கோப்ரேசன் சுனாமி வீட்டுத்திட்டத்தில் வசித்து வந்த 29 வயதுடைய கணபதி சுகந்தினி என்ற பெண் கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் திகதி சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.
கடந்த யுத்தத்தினால் தனது கணவனை இழந்த குறித்த பெண் தனது பிள்ளையை வளர்ப்பதற்காகவே வெளிநாடு செல்ல முடிவு எடுத்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிணங்க தனது குழந்தையை உறவினர்களின் பராமரிப்பில் விட்டுச் சென்று இரண்டு வருடங்கள் உறவினர்களுடன் தொடர்புடன் இருந்ததாகவும் பின்னர் 2012ஆம் ஆண்டில் இருந்து எந்தத் தொடர்பும் அற்று எவ்வித தகவல்களையும் பெறமுடியாத நிலையில் இருப்பதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இப்பெண்ணை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த முகவருடன் தொடர்பு கொண்டு அவர் மூலம் பணிப்பெண்ணாக கடமையாற்றிய எஜமானிடம் தொடர்பை ஏற்படுத்தியபோது சுகந்தினி இலங்கை வந்துவிட்டதாக தெரிவிப்பதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, இவ்விடயம் தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தி தனது தாயை மீட்டுத்தர உதவி செய்யவேண்டும் என அனுலக்ஷன் கோரிக்கை விடுத்துள்ளார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக