இதோ! ஒரு கற்பனை நாடகம்
இடம் : வடக்கு மாகாணம்
பாத்திரங்கள்: தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் களும் வெற்றியீட்டிய மாகாணசபை உறுப்பினர்களும்
கதை, வசனம், நெறியாள்கை: வடக்கு மாகாண வாக்காளப் பெருமக்கள்
அவதானிப்பாளர்கள்: வடக்கின் ஆளுநர், நாட்டின் அரசு, புலம் பெயர் தமிழர்கள், சர்வதேச சமூகம்
- இதோ திரை விலகுகிறது.
மேடையில் வடக்கின் முதல் மந்திரி, கூட் டமைப்பின் தலைவர் ஆகியோர் சோகத்துடன் அமர்ந்திருக்கின்றனர்.
அப்பாவித் தமிழ்மகன் ஒருவர் மேடைக்கு வருகிறார் -
தமிழ்மகன் : மரியாதைக்குரிய முதலமைச்சர் அவர்களே! கூட்டமைப்பின் தலைவர் கெளரவத்திற்குரிய சம்பந்தப் பெருமகனார் அவர்களே! ஏன்தான் தாங்கள் இத்துணை சோகமாக இருக் கிறீர்கள்.
வரலாறு காணாத வெற்றி என்று தமிழ் மக்களும் சர்வதேசமும் புகழ்பாட, இதனால் இலங்கை அரசு அதிர்ந்திருக்க தாங்கள் இருவரும் தாளாத துன்பத்தில் இருப்பது ஏனோ!
முதல் அமைச்சர்: என் நிம்மதியை இழந்து போனதுதான் காரணம். நீதிமன்றங்களில் எத்தனையோ பிரச்சினைகளைக் கண்டுள்ளேன். அதற்குத் தீர்ப்பும் எழுதியுள்ளேன். ஆனால் இங்கோ தீர்ப்பு எழுத முடியாத அளவில் தீராப்பிரச்சினை. என் செய்வது என்று புரியவில்லை.
தமிழ்மகன்: (சம்பந்தனை பார்த்து) ஐயா, முதல் அமைச்சர் வேட்பாளரைக் கொண்டு வருவதில் மிகவும் இறுக்கமாக இருந்து அதனைச் சாதித்த தாங்கள், நான்கு அமைச்சர்களை நியமிக்கமுடியாது தடுமாறுவது ஏன்?
சம்பந்தர்: கைகேயிக்கு தசரதன் கொடுத்த வரம்போல் யானும் சில வரங்களைக் கொடுத்து விட்டேன் மகனே! அந்தத் துன்பம் என்னை இப்போது துரத்துகிறது.
தமிழ்மகன்: யாழ்ப்பாணத்தில் கூடினீர்கள். கொழும்பிலும் கூடிப்பார்த்தீர்கள். எதுவும் சரி வரவில்லை. அடுத்த கட்ட நடவடிக்கை யாதோ!
சம்பந்தர்: அமைச்சுப்பதவி தேவையானோர் தங்கள் விண்ணப்பத்தை எங்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என அறிவிக்கவுள்ளோம். திரை மூடித் திறக்கிறது.
பேரிகை முழங்குகிறது
சேவகன்:
டும்… டும்… டும்…
நாட்டுமக்களுக்கோர் நற்செய்தி
வாக்களித்த தமிழ்மக்களுக்கோர்
இனிய செய்தி
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தப் பெருமகனார் வடக்கு மாகாண சபைக்கு மந்திரிகளைத் தேடுகிறார். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய கூட்டமைப்பின் தமிழ்ப்பெரும் புதல்வர்களும் ஏக புதல்வியும் இப்பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். நான்கு அமைச்சுப் பதவியாயினும் பலர் இதற்குப் போட்டியிடுவர் எனக் கருதப்படுவதால், எங்கள் பழந்தமிழர் மரபுப்படி வில்வித்தை, வாள்வித்தை, தேரோட்டம், போர் வியூகம் என்றவாறான போட்டிகள் நடத்தப்படும். காளை மாடுகள் இடறிவிட்டால் போட்டியாளர்களின் வேட்டி கிழிந்துவிடும் என்பதால் ஜல்லிக் கட்டுப் போட்டிக்கு இடமில்லை.
ஆயினும் சீதையை இராமர் மணம் செய்வ தற்காக வில் முறித்தது போல, பாஞ்சாலியை கரம்பிடிப்பதற்காக அருச்சுனன் மச்ச யந்தி ரத்தை வில் நாண் கொண்டு வீழ்த்தியது போன்ற போட்டிகளும் இடம்பெறலாம்.
குற்றவாளிக் கூண்டில் கூட்டமைப்புப் போன்ற வழக்காடு மன்றங்களும் நடத்தப்படலாம். க.பொ.த. சாதாரண தரத்தில் ஆறுபாடச் சித்தி, உயர்தரத்தில் மூன்று பாடச்சித்தி என்ற அரச நியமன நடைமுறைக்குத் தொடுகிலும் இட மில்லை.
டும்… டும்… டும்…
திரைமூடி விலகுகிறது
- வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மேசை யில் கூடியிருந்து விண்ணப்பப்படிவங்களைத் தயாரிக்கின்றனர் -
உறுப்பினர் ஒருவர்: சம்பந்தன் ஐயாவுக்குத் தொலைபேசியில் தொடர்புகொள்கிறார்.
ஐயா, பிற தகைமை என்பதில் எதைக் குறிப் பிடுவது.
சம்பந்தர்: யாரைப்பிடித்து வேட்பாளராக வந்தனீர் என்பதைக் குறிப்பிடும்.
உறுப்பினர்: நாசமறுக்க; அமைச்சுப் பதவிக்கு விண்ணப்பம் கோரும் நீங்கள் மாகாண சபைக்கான வேட்பாளர்களுக்கு விண்ணப்பம் கோரியிருந்தால், தகைமையான, தகுதியான, தரமானவர்கள் கிடைத்திருப்பார்களே! விண்ணப்பம் கோரவேண்டிய இடத்தில் விண்ணப் பத்தைக் கோராமல் இப்ப அமைச்சுப்பதவிக்கு விண்ணப்பம் கோருவது நியாயமாகுமா?
சம்பந்தர்: ஓம் ஓம். இனி நீங்கள் கேட்பீர்கள். இதுவும் கேட்பீர்கள். இன்னமும் கேட்பீர்கள். வேட்பாளர் பதவிக்கு விண்ணப்பம் கோரினால் நான் விரும்பியவரை, கூட்டமைப்புக் கட்சிகள் விரும்புபவர்களை வேட்பாளர்களாக நிறுத்தமுடியுமா என்ன?
திறமையானவர், தரமானவர், தகுதியானவர் எங்களுக்குத் தேவையில்லை. நாங்கள் சொல்வதைக் கேட்டு அதற்கேற்றவாறு தாளம் போடக் கூடியவர்கள்தான் தேவை.
உறுப்பினர்: ஐயா!வயது மூப்புப் பார்ப்பீர்களா?
சம்பந்தர் : ஐந்து வருடத்திற்குள் முடியாத, வயது மூப்புப் பார்ப்பம்.
உறுப்பினர் : நீங்கள் சொல்வது விளங்க வில்லை ஐயா.
சம்பந்தர் : விளக்கம் இல்லாதவர்கள்தான் எமக்குத் தேவை. உனக்கு அந்தத் தகுதி இருக்கிறது. உன்னுடைய விண்ணப்பத்தைச் சாதக மாகப் பரிசீலிப்போம்.
- குறித்த உறுப்பினர் மகிழ்வோடு விண் ணப்பத்தை நிரப்புகிறார்
திரை மூடி விலகுகிறது
முதலமைச்சர் மற்றும் சம்பந்தர் ஆகியோர் மேடையில் அமர்ந்திருக்கின்றனர். மாகாண சபை உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிக்கான விண்ணப் பங்களை முண்டியடித்துக் கொண்டு சம்பந்தரிடம் ஒப்படைக்கின்றனர் -
சேவகன் : அமைதி… அமைதி.. அமைச்சராகப்போகும் தாங்கள் இவ்வாறு முண்டியடிப்பது சரியானதல்ல. எனவே வரிசையில் நின்று ஒழுங்காக வாருங்கள். அதுவே உங்களுக்கு அழகு.
- சேவகன் இப்படிக்கூறியதும் மாகாண சபை உறுப்பினர்களுக்குக் கடுங் கோபம் வருகிறது-
உறுப்பினர்கள் : (சேவகனைப் பார்த்து) நீ ஒரு சேவகன். எங்களுக்குச் சரி பிழை சொல்ல முடியாது.
சேவகன்: ஐயா! துரைமாரே! நீங்கள் சரியாக நடந்துகொண்டால் நான் ஏன் சரி பிழை சொல்லப்போகிறேன். நீங்கள் பிழையாக நடந்தால் நான் மட்டுமல்ல எவரும் உங்களைச் சரிப்படுத்த முற்படுவர். ஆகையால் முதலில் நீங்கள் சரியாக நடக்கப்பாருங்கள்.
உறுப்பினர்கள்: பதவி எடுத்ததும் உமக்குச் செய்து காட்டுகிறோம் பார்.
சேவகன்: ஐயாமாரே! அமைச்சுப் பதவி தா? என்று விண்ணப்பம் கொடுத்துப் பதவி கேட்கும் போக்கணம் கெட்ட உங்களின் கீழ் வேலை செய் வதை விட, இந்தப் பதவியை இராஜினாமா செய்வதே மேல்.
- சேவகன் தனது பதவி விலகல் கடிதத்தை முதலமைச்சரிடம் கையளித்துவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறான் -
முதல் அமைச்சர் : நான் செய்யவேண்டியதை அவன் செய்துவிட்டுப் போகிறான். அவன் ஒரு தன் மானம் உள்ள தமிழன். ஒரு சேவகனைக்கூட உங்களால் சமாளிக்கமுடியவில்லை. அமைச்சுப் பதவியில் ஆசைகொண்டு மக்கள் தந்த ஆணையை ஏன்தான் கொச்சப்படுத்துகிறீர்கள்.
-இவ்வாறு கூறும்போது ஓர் அசரீரி ஒலிக்கிறது-
வடக்கு மாகாணத்தின் மரியாதைக்குரிய முதல் அமைச்சர் அவர்களே!
நான்கு அமைச்சுகளையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். நிர்வாகத்திறன் உள்ள செயலாளர்களை நியமித்து அந்த அமைசசுக்களைத் திறம்பட இயக்குங்கள். அது உங்களால்முடியும்.
- அசரீரி ஒலித்ததும் உறுப்பினர்கள் குழம்பிப் போய் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களை மாறி மாறிக் குற்றம்சாட்டியபடி ஊர்வலமாக வெளி நடப்புச் செய்கின்றனர்.
அந்நேரத்தில் எங்கிருந்தோ… என் சனமே, என் இனமே என்னை உனக்குத் தெரிகிறதா… என்ற பாடல் ஒலிக்கத் திரை மெல்ல மூடிக்கொள் கிறது-
- விதுரன்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக