வெள்ளி, 29 நவம்பர், 2013

பெரிய பட்ஜெட்.. பெரிய இழப்பு : சிந்திக்குமா சினிமா...!!

சினிமா என்பது கலை என்பது உண்மைதான். நடிகர்களும், இயக்குனர்களும் நாங்கள் கலைச்சேவை செய்ய வந்திருக்கிறோம் என்றும் சொல்லலாம். ஆனால் சினிமா தயாரிக்க வருகிறவர்கள் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் பணம்போட்டு லாபம் எடுக்கத்தான் வருகிறார்கள். அதுதான் உண்மை. சும்மா மேடையில் வேண்டுமானால் நாங்கள் கலைச்சேவை செய்ய வந்திருக்கிறோம் என்று சொல்லிக்கலாம்.

ஒரு வியாபாரத்திலோ, அல்லது தொழிலிலோ இறங்கும் முன் இதற்கு இவ்வளவு பணம் முதலீடு செய்யலாம். இவ்வளவு லாபம் வரும் என்று கணக்கு போட்டுத்தான் தொடங்குவார்கள். சினிமாவில் மட்டும் இப்படி எந்த கணக்கும் போடாமல் "எப்படியும் வந்திடும்" என்கிற அசட்டுத்தனமாக நம்பிக்கையில் பணத்தை வாரி இறைத்து விட்டு பிறகு திண்டாடிக்கொண்டிருப்பார்கள்.

தமிழ் சினிமா வியாபாரம் என்பது ஹாலிவுட், பாலிவுட் படங்களை போன்று பெரியதில்லை. தமிழ்நாடு, பாண்டிச்சேரி தவிர தமிழர்கள் அதிகமாக வாழும் பெங்களூரு, மும்பை, கேரளா மற்றும் உலகத்தின் பல பகுதிகளில் பரவலாக வாழும் தமிழர்கள்தான் தமிழ் சினிமாவின் வியாபார களம். இதைத்தாண்டி தமிழ் சினிமா போகாது. இந்தி படங்களுக்கு 8 மாநிலங்கள் இருக்கிறது. ஹாலிவுட் படங்களுக்கு உலகம் முழுவதும் நாடுகள் இருக்கிறது.

புலியை பார்த்து பூனை சூடுபோட்டுக் கொண்ட கதையாக ஹாலிவுட் ரேன்ஞ்சுக்கு படம் எடுக்கிறேன் என்று நூற்றுக்கும் மேற்பட்ட கோடிகளை வாரி இறைத்து தயாரிப்பாளர்களை கடனாளியாக நடுத் தெருவுக்கு கொண்டு வருகிற வேலைதான் நடந்துக்கிட்டிருக்கு.

இந்த வேலையை முதலில் ஆரம்பித்தவர் கமலஹாசன். 15 வருடங்களுக்கு முன்பே 100 கோடி பட்ஜெட்டில் மருதநாயகத்தை தொடங்கினார். பிரிட்டீஷ் மகாராணி வந்து தொடங்கி வைத்தார். மருதநாயகத்தால் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியவில்லை. அப்போதே எல்லோரும் இந்த மெகா பட்ஜெட் தமிழுக்கு ஒத்துவராது என்று முடிவு செய்திருக்கணும் ஆனால் செய்யல. அப்புறம் நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்தது. சிவாஜியும், எந்திரனும், சிவாஜி 60 கோடியில் எடுத்து 100 கோடி வசூல் என்றார்கள். எந்திரன் 120 கோடியில் எடுத்தோம் 200 கோடி வசூல் என்றார்கள். படத்தை தயாரித்தவர்களுக்கு வேண்டுமானால் லாபம் கிடைத்திருக்கலாம். ஆனால் வாங்கிய விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்களை கேட்டால் நிறைய கண்ணீர் கதைகள் கிடைக்கும். தசாவாரம் வரவுக்கும் செலவுக்கும் சரியாப்போச்சு என்றார்கள்.

இப்போது இரண்டாம் உலகம் 25 கோடியில் திட்டம்போட்டு 60 கோடியை விழுங்கிய படம். விழுங்கியதில் பத்துகோடியைகூட திரும்ப தராது என்கிறார்கள். ஆயிரத்தில் ஒருவனின் அனுபவம் கிடைத்தும் செல்வராகவனும், தயாரிப்பாளரும் திருந்தவில்லை. அடுத்து ஐ வர இருக்கிறது. பெரும் பட்ஜெட்டால் படத்தை முடிக்ககூட முடியாமல் தவிக்கிறார் தயாரிப்பாளர். கமலஹாசன் மர்மயோகியை தொடங்கப் பார்த்தார் அதுவும் மருதநாயகம் போல படுத்துவிட்டது.

பொதுவாக பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீசாகும் போதும் அதில் போதிய லாபம் கிடைப்பதில்லை என்பது விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களின் குற்றச்சாட்டு. பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீசாகும்போது அதில் பாதிக்கப்படுவது இயக்குநரோ, நடிகர்களோ - நடிகைகளோ கிடையாது. முழுக்க தயாரிப்பாளர், விநியோகதஸ்ர்கள், தியேட்டர் அதிபர்கள் மட்டுமே... ஆகவே படம் எடுப்பவர்கள் இவர்களையும் மனதில் வைத்து படம் எடுக்க வேண்டும்.

தமிழ் சினிமா என்கிற சிறிய வட்டத்துக்குள் எதற்கு பெரும் பட்ஜெட்டில் படம் எடுக்கிறார்கள். பிரமாண்டத்தை ரசிக்க ஹாலிவுட் படங்கள் இருக்கிறது. தமிழ் சினிமாக்கள் பேச இன்னும் ஆயிரக்கணக்கான கதைகள் நம்மிடம் இருக்கிறது. அதை சிறிய பட்ஜெட்டில் எடுத்து பெரிய வெற்றியை பெறலாமே. பீட்சா, சூதுகவ்வும், வருத்தப்படாத வாலிபர் சங்கம், பாண்டியநாடு போன்ற படங்கள் அதைத்தானே சொல்லித் தருகிறது.

விரலுக்கேத்த வீக்கம்ங்றத சினிமா எப்போதுதான் சிந்திக்கப்போகிறதோ?


Dinamalar
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல