அத்தியாயம் 23
அல்-ஜசீராவின் ஒளிபரப்பை சிதைக்கும் முயற்சியில் இறங்கிய அமெரிக்க அரசு, முதல் கட்டமாக, அல்-ஜசீராவில் ஒளிபரப்பான காட்சிகளை மற்ற அமெரிக்க சேனல்கள் பெற்று மறு ஒளிபரப்பு செய்வதைத் தடுக்கும் முயற்சிகளை தொடங்கியது என்று கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டு இருந்தோம்.
அந்த நாட்களில், ஆப்கானில் நடைபெறும் செய்திகளை அமெரிக்க தொலைக்காட்சிகளான ஏ.பி.சி., சி.பி.எஸ்., சி.என்.என்., பாக்ஸ் மற்றும் என்.பி.சி. ஆகிய 5 முக்கிய தொலைக்காட்சிகள், அல்-ஜசீராவில் ஒளிபரப்பான காட்சிகளை மறு ஒளிபரப்பு செய்தே வெளியிட்டுக் கொண்டிருந்தன (அதற்காக அல்-ஜசீராவுக்கு முறைப்படி பணம் கொடுக்கப்பட்டது)
இந்த ஐந்து அமெரிக்க மீடியாக்களையும் தொடர்பு கொண்ட அமெரிக்க நிர்வாக அதிகாரிகள், அல்-ஜசீராவின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், “அல்-காய்தா மற்றும், பின்லேடன் பற்றிய செய்திகளை தணிக்கை (சென்சார்) செய்து ஒளிபரப்புங்கள்” என்று தெரிவித்தனர்.
அதாவது, அல்-காய்தா பற்றிய செய்திகளை தரும் ஒரே தொலைக்காட்சியான அல்-ஜசீராவில் இருந்து எடுத்து மறு ஒளிபரப்பு செய்ய வேண்டாம் என்ற ‘மறைமுக’ உத்தரவாகவே இருந்தது, அதிகாரிகளின் இந்தச் செயல்.
அந்த செய்திகளை தணிக்கை செய்வதா, இல்லையா என முடிவு எடுக்க தயங்கிய அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனங்களின் தலைவர்களை, அப்போதைய அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் காண்டலீசா ரைஸ் அழைத்து சந்தித்தார். சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில், “அல்-காய்தா மற்றும் பின்லேடன் பற்றிய செய்திகளை ஒளிபரப்ப வேண்டாம்“ என அவர் கேட்டுக் கொண்டார்.
அமெரிக்க தொலைக்காட்சி நெட்வொர்க்குகளின் தலைவர்களிடம் பாதுகாப்பு ஆலோசகர் காண்டலீசா ரைஸ் பேசும்போது இதை வேண்டுகோளாகத்தான் தெரிவித்தார். உத்தரவாக தெரிவிக்கவில்லை.
காரணம், பின்லேடன் தொடர்புடைய செய்திகளை அமெரிக்க தொலைக்காட்சிகளில் இருட்டடிப்புச் செய்வதை அமெரிக்க அரசின் முதல் சட்ட திருத்தம் வலியுறுத்தினாலும், அதை வெளிப்படையாகக் கட்டாயப்படுத்தவில்லை. அதாவது, “அந்த செய்திகளை வெளிடாமல் இருந்தால் நல்லது. வெளியிட்டால் சட்ட நடவடிக்கை கிடையாது” என்ற விதத்தில் இருந்தது அமெரிக்க சட்டம்.
அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் காண்டலீசா ரைஸ் நேரில் அழைத்து விடுத்த வேண்டுகோளை ஐந்து மெகா செய்தி ஒளிபரப்பு நிறுவனங்களின் தலைவர்களும் ஏற்றுக் கொண்டனர். அல்-ஜசீராவின் நேரடிக் காட்சிகளை மறுஒளிபரப்பு செய்வதில்லை என்று முடிவு செய்தனர்.
ஆனால், தொலைக்காட்சி வாசகர்கள் இந்த மீடியா சேனல்களிடம், “ஆப்கானில் இருந்து வந்த காட்சிகளை ஏன் திடீரென நிறுத்தி விட்டீர்கள்?” என்று கேட்பார்கள் அல்லவா? அப்படி கேட்டால், “அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் காண்டலீசா ரைஸ் நேரில் அழைத்து வேண்டுகோள் விடுத்தார். அதுதான் நிறுத்தி விட்டோம்” என்று சொல்ல முடியாதல்லவா?
இதனால், ஒவ்வொரு டி.வி. சேனலும், ஒவ்வொரு காரணத்தை தமது வாசகர்களுக்கு தெரிவித்தது.
வால்ட் டிஸ்னியின் ஏ.பி.சி. நியூஸ் நிறுவனம், விசித்திரமான காரணம் ஒன்றை தெரிவித்தது. “முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட அல்-காய்தா மற்றும் தலிபான் அறிவிப்புகள் மூலம் அந்த இயக்கங்கள், தங்களது உறுப்பினர்களுக்கு மறைமுகமான மெசேஜ்களை தருகின்றது என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், அப்படியான விஷயங்களை நாம் ஒளிபரப்ப போவதில்லை” என்று கூறியது.
நியூஸ் கார்ப்பொரேஷன் நிறுவன உரிமையாளரான மீடியா ஜாம்பவான் ருபர்ட் முர்டோச், “ஆப்கானில் யுத்தம் வெடிக்கலாம் என்ற நிலையில், எங்கள் தேசபக்தியை வெளிப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. அதற்காக சில விஷயங்களை சுய தணிக்கை செய்வது எமது கடமை” என்றார்.
ருபர்ட் முர்டோச்சின் நியூஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு சொந்தமாக மிகப்பெரிய மீடியா நெட்வெர்க்கே இருந்தது. பாக்ஸ் நியூஸ் சேனல், பாக்ஸ் டெலிவிஷன், டிவெண்டியத் செஞ்சுரி பாக்ஸ், வேறு சில மாநில தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் நீண்ட கால பாரம்பரியம் உள்ள பல பத்திரிகைகள் எல்லாமே, இந்த நிறுவனத்துக்கு சொந்தமானவை.
மற்றொரு மெகா மீடியா நிறுவனமான சி.என்.என். வெளியிட்ட அறிக்கையில், “தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் என்று கருதும் எதையும் ஒளிபரப்பாமல் தவிர்ப்பது எங்களது கொள்கை” என்று தெரிவித்திருந்தது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, அல்-ஜசீராவுக்கு வேறு விதமான சிக்கல் ஒன்றை ஏற்படுத்தியது.
எல்லைகள் மூடப்பட்ட ஆப்கானிஸ்தானில் இருந்து வீடியோக்களை சாட்டலைட் மூலம் அப்-லிங்க் செய்து தோகாவில் இருந்து ஒளிபரப்புவதற்கு, அல்-ஜசீராவுக்கு ஏகப்பட்ட பணம் செலவாகியது. தமது ஒளிபரப்புகளை மேலை நாட்டு மீடியாக்கள் மறு ஒளிபரப்பு செய்வதால் கிடைக்கும் ராயல்டி தொகையில் இருந்தே, அந்த மேலதிக செலவை சமாளித்துக் கொண்டிருந்தது, அல்-ஜசீரா.
அமெரிக்காவின் பெரிய ஐந்து மீடியா நிறுவனங்களும் அல்-ஜசீரா மறு ஒளிபரப்புகளை நிறுத்தியதால், அந்த வருமானத்தில் பெரிய வெட்டு விழுந்தது.
அடுத்த இரு தினங்களில், அல்-ஜசீராவின் வருமானத்தில் விழுந்தது மற்றொரு பெரிய அடி விழ இருந்தது.
அமெரிக்காவின் நம்பிக்கைக்கு உரிய கூட்டாளியான பிரிட்டனும், அமெரிக்க பாணியில் நடவடிக்கையில் இறங்கியது. இங்கிலாந்தில் செயல்பட்ட முக்கிய ஒளிபரப்பு நிறுவனங்களான பி.பி.சி., ஐ.டி.என்., ஸ்கை நியூஸ் ஆகியவற்றின் தலைவர்களை தனது டவுனிங் ஸ்டீரீட் இல்லத்துக்கு வருமாறு பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் அழைப்பு விடுத்தார்.
பிரதமர் டோனி பிளேர் தமது வேண்டுகோளை முன்வைத்தபின், பிரதமரின் மீடியா ஆலோசகர் அலிஸ்டர் கேம்ப்பெல், “பிரிட்டிஷ் அரசால் ஏற்கத்தக்க செய்தி ஒளிபரப்பு எது தெரியுமா?” என ஒளிபரப்பு நிறுவன தலைவர்களுக்கு பாடம் நடத்தத் தொடங்கினார்.
அலிஸ்டர் கேம்ப்பெல், “அமெரிக்க குண்டு வீச்சின்போது மக்கள் கொல்லப்படுவதாக தலிபான்கள் கூறும் தகவல்களை சந்தேகத்துடனேயே பாருங்கள். இஸ்லாமியர்களில் தீவிரவாதிகளாக உள்ளவர்களின் கருத்துகளை ஒளிபரப்புவதைத் தவிர்த்து விடுங்கள்” என்றார்.
“உங்களது மீடியா நெட்வொர்க் மூலம் தீவிரவாத உறுப்பினர்களுக்கு மறைமுகமாக மெசேஜ் அனுப்பப்படலாம். அது என்ன மெசேஜ் என்று உங்களுக்கு புரியாமல் இருக்கலாம். ஆனால், தீவிரவாதிகளுக்கு அந்த மெசேஜ் புரியும். இதனால் ஏற்படும் அபாயத்தை உணர வேண்டும்.
இதனால், தீவிரவாதிகள் பற்றி பிரஸ்தாபிக்கும் ஒளிப்பதிவுகள் கிடைத்தால் அவற்றைத் தணிக்கை செய்து விடுங்கள்” என்று விளக்கம் கொடுத்தார் அவர்.
ஆனால் ஆச்சரியமாக, டோனி பிளேர் அரசின் இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொள்வதில் பிரிட்டிஷ் ஒளிபரப்பு நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை.
இது குறித்து பி.பி.சி., ஐ.டி.என்., ஸ்கை நியூஸ் ஆகிய தொலைக்காட்சிகள் இந்த விஷயத்தில் தமக்குள் ஒரு கூட்டணி அமைத்துக் கொண்டன. மூன்று நிறுவனங்களும் இணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டன.
“ஒரு பொறுப்புள்ள ஒளிபரப்பாளர் என்ற முறையில் தேசிய மற்றும் சர்வதேசப் பாதுகாப்பு விஷயங்கள் மற்றும் நாங்கள் வெளியிடும் செய்திகள் வெவ்வேறு சமுதாயத்தினர் மற்றும் கலாசாரத்தை கொண்டவர்களிடையே எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் அறிந்துள்ளோம்.
தன்னிச்சையாக, பாரபட்சமற்ற முறையில் செய்திகளை வெளியிடும் முடிவை எடுக்கும் ஆசிரியர் குழாம் (எடிட்டோரியல்) உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம். சுதந்திரமான சமூகம் மற்றும் ஜனநாயக முறையில் தன்னிச்சையாகவும், பாரபட்சமின்றியும் செய்திகளை வெளியிடுவது எமது அடிப்படை உரிமை” என்றது அந்த கூட்டறிக்கை.
அமெரிக்க மீடியாக்கள் அடங்கிப்போக, பிரிட்டிஷ் மீடியாக்கள் அடிபணிய மறுத்த விசித்திர நிலை ஏற்பட்டது.
“அல்-காய்தா மற்றும் தலிபான் அறிவிப்புகள் உள்ள அல்-ஜசீரா செய்திகளை நாம் மறு ஒளிபரப்பு செய்வதன் மூலம் அந்த இயக்கங்கள், தங்களது உறுப்பினர்களுக்கு மறைமுகமான மெசேஜ்களை தருகின்றன” என்ற அமெரிக்க மீடியாக்களின் வாதம், சிந்திக்கத் தெரிந்த வாசகர்களுக்கு ஒரே தமாஷாக இருந்தது.
தலைமறைவாக உள்ள அல்-காய்தா உறுப்பினர்கள், பின்லேடனின் ரகசியத் தகவல்களைப் பெற ஆங்கிலத்தில் ஒளிபரப்பாகும் வால்ட் டிஸ்னியின் ஏ.பி.சி. நியூஸ், அல்லது சி.என்.என். தொலைக்காட்சிகளையா பார்ப்பார்கள்?
பேசாமல் அல்-ஜசீராவுக்கு சந்தாதாரராகி, அதில் தணிக்கை செய்யப்படாத செய்தித் தொகுப்புகளை அரபு மொழியில் பார்த்தலோ போதுமானது அல்லவா?
வால்ட் டிஸ்னியின் ஏ.பி.சி. நியூஸ் சேனலில் ஒளிபரப்பாகும் பின்லேடனின் பேச்சுகள் மூலம் அவரது உத்தரவை, அல்-காய்தா உறுப்பினர்கள் பெறுவார்கள் என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டால் கூட, அவரது பேச்சு ஏ.பி.சி. நியூஸ் சேனலில் எத்தனை நிமிடங்கள் ஒளிபரப்பாகும்?
சுமார் 25 நிமிடங்கள் நீளும் பின்லேடனின் பேச்சில் ஒரு நிமிடத்துக்கும் குறைவான பேச்சு மட்டுமே ஏ.பி.சி. நியூஸ் சேனலில் ஒளிபரப்பாகும். இதன் மூலம் அவரது பேச்சில் மறைந்திருக்கும் உத்தரவை பெறுவது என்பது கில்லாடித்தனமான காரியமாக அல்லவா இருக்க வேண்டும்?
ஒருவேளை, தலைமறைவாக உள்ள அல்-காய்தா உறுப்பினர்கள் அல்-ஜசீராவை அமெரிக்காவில் பார்க்க வசதி கிடையாதோ?
இது நடந்த காலத்தில் அமெரிக்காவில் சேட்டிலைட் டிஷ் வைத்திருந்த வீடுகளில் எக்கோஸ்டார் கம்யூனிகேஷன் கார்ப்பரேஷனின் டிஷ் நெட்வொர்க்கை அணுகினால் அல்-ஜசீராவை காண முடியும்.
ஏழு அலைவரிசைகள் கொண்ட ‘அராபிக் எக்ஹேன்ஸ்ட் பேக்’குக்கு மாதம் சுமார் 25 டாலர் செலுத்தி சந்தாதாரர் ஆனாலே போதும், அல்-ஜசீரா தொலைக்காட்சியைப் பார்க்கலாம்.
2001-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் எக்கோஸ்டார் டிஷ் நெட்வொர்க்கில் 60 லட்சம் சந்தாதாரர்களுக்கும் மேல் இருந்தனர். இவர்களில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே அல்-ஜசீராவுக்காக சந்தா செலுத்தி பார்த்தவர்கள் என்றாலும், தலைமறைவாக உள்ள அல்-காய்தா உறுப்பினர்கள் பின்-லேடனின் உரை மூலம் ரகசிய உத்தரவை பெறமுடியும் என்றால், வெறும் 25 டாலர் மூலமே, உத்தரவை பெற்றுக் கொள்ளலாம்.
நாம் மேலே குறிப்பிட்டது, ஒரு தமாஷ் என்றால், அதைவிட பெரிய தமாஷ் என்ன தெரியுமா?
அல்-ஜசீரா தொலைக்காட்சியை அமெரிக்காவில் ஒளிபரப்புச் செய்வதை நிறுத்துமாறு எக்கோஸ்டார் கம்யூனிகேஷனை அமெரிக்க அரசு வலியுறுத்தவில்லை.
இதற்கு கிண்டலாக ஒரு காரணத்தை சொல்வார்கள். அது என்னவென்றால், மற்றவர்களைப் போல சி.ஐ.ஏ. உட்பட அமெரிக்க உளவு அமைப்புகளும் பின் லேடனின் பேச்சுகளைப் பார்க்க, அல்-ஜசீராவையும், அதை முழுமையான ஒளிபரப்பிய எக்கோஸ்டார் கம்யூனிகேஷனையும் நம்பியிருந்தனவாம். (தொடரும்)
விறுவிறுப்பு.காம்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக