வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

என்னமோ நடக்குது... ஏதேதோ சொல்லுது...

 Arputham Ammal mother of Perarivalan one of the assassins of former prime minister Rajiv Gandhi meets Tamil Nadu Chief Minister Jayalalithaa

ஐயோ... ஐயோ... ஐயோ... பாக்கப் பாக்கக் கண்களால் சகிக்க முடியவில்லை. கேட்கக் கேட்கக் காதுகளால் முடியவில்லை. 'நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைக்கையிலே' என்று பாடுவதற்கு நானொன்றும் பாரதியார் இல்லை.



நான் ஒரு சாமானியன் ஐயா... ஆனால், பொய்யையும் புரட்டையும் எத்தனை நாளைக்குத்தான் பார்த்துக் கொண்டிருக்கலாம்?

இதையெல்லாம் பார்த்தால் நிச்சயம் நெஞ்சுக்குத்தோ மாரடைப்போ வந்தே தீரும்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்டகாலமாகச் சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன் என்ற மூன்று பேரின் தூக்குத் தண்டனைத் தீர்ப்பு நிராகரிக்கப்பட்ட பிறகு ஆளாளுக்கு ஒவ்வொருவரும் அடிக்கிற கூத்தும் போடுகிற நாடகங்களும் கொஞ்ச நஞ்சமல்ல.

கருணாநிதி சொல்கிறார், தான் எழுதிய கடிதங்களாலும் நிறைவேற்றிய தீர்மானங்களாலும்தான் இந்த நியாயம் கிடைச்சிருக்கு என்று.

என்ன சுத்துச் சுத்துறாரய்யா... சிங்கமென்றால் சிங்கம்தான். தமிழர்களுக்குக் கிடைத்த அருமையான ஒரு 'தங்கத் தலைவன்'.

இவர் குடும்பமானத்தைக் கூடக்காப்பாற்றக் கூடிய ஆளில்லை. குடும்பத்துக்குச் சொத்தும் அதிகாரமும் சேர்க்கிற ஆளல்லவா!

வை.கோ. என்ற கோபால்சாமியும் அவருடைய தொண்டர்களும் விண்டர்களும் சொல்கிறார்கள், தாங்கள் நடத்திய போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி இது என்று.

இவர்கள் நடத்திய எத்தனை போராட்டங்களுக்கு வெற்றிக்கு மேல் வெற்றி கிடைத்தது?

தன்னுடைய அரசிலையே ஒழுங்காகச் செய்ய முடியாமல், தன்னுடைய கட்சியையே வெற்றியடையச் செய்ய வக்கில்லாமல் தட்டுத்தடு மாறிக்கொண்டிருக்கும் கோபால்சாமி போராடித்தான் இந்த வெற்றி கிட்டியது என்றால்...

இதையெல்லாம் கேட்கிறவன் என்ன கேணையனா?

வை.கோ சட்ட ரீதியாக சில முயற்சிகளை எடுத்ததுண்டு. வாதாடியதுண்டு. தெருவில் இறங்கிக் குரல் எழுப்பியதுண்டு. ஆனால், அவருடைய கோமாளித்தனங்களைப் போல இதிலும் சறுக்கல்களே இருந்தன.

கருணாநிதியும் வை. கோவும் அவர்கள் சகபாடிகளும் இந்தத் தீர்ப்புக்கு விழுந்தடித்துக்கொண்டு உரிமை கோருவது ஏனென்றால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் தரப்புக்கு வெற்றி வாய்ப்பைப் பெறுவதற்காகவே.

இது ஒரு பக்கம் என்றால். இதைவிட தெருவில் நின்றவர்கள் போனவர்கள் எல்லாம் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளின் படத்தை எடுத்துப் போட்டுக்கொண்டும் அந்த அம்மாவோடு கூட நின்று எடுத்த போட்டோக்களைப் போட்டுக்கொண்டும் அடிக்கிற லூட்டி இருக்கிறதே...

தாங்க முடியல்லைடா சாமீ....

உண்மையாகவே இந்த மூவருடைய விடுதலைக்காகப் பலர் போராடியிருக்கிறார்கள். தங்கள் குரல்களை நியாயமாக உயர்த்தியிருக்கிறார்கள்.

இதன் மூலமாக இந்தியாவின் மரணதண்டனைச் சட்டத்தையே மறுபரிசீலனைக்குட்படுத்தியிருக்கிறார்கள்.

அவர்கள் எல்லாம் தங்கள் கடமை முடிந்து விட்டதாக, தங்கள் போராட்டத்துக்கும் முயற்சிக்கும் கைமேல் பயன் கிட்டியுள்ளதாக உணர்ந்து கொண்டு அமைதியாக இருக்கிறார்கள். அல்லது அடுத்த கட்டமாகச் செய்ய வேண்டிய கடமைகளைக் குறித்துச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது இப்படியிருக்க, நான் சொன்ன அரசியல் ஆசாமிகளை விட இன்னொரு கூட்டம் சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு அத்தர் பல்டி அடிச்சுக்கொண்டிருக்கு.

முகப்புத்தகத்துக்குப் போனீர்கள் என்றால்,தெரியும். அங்கே அற்புதம் அம்மாளைப்போட்டுப் படுத்துகிற பாட்டைக் கேட்கவே வேண்டாம்.

அற்புதம் அம்மாளை நடுவில் வைத்துக்கொண்டு போஸ்... போஸ்... போஸ்... கிளிக்...கிளிக்... கிளிக்....

ஒரே படமெடுப்பும் எடுத்த படத்தை அடுத்த கணமே பதிவேற்றலும்தான்.

இப்போதைய ரேஞ்சில் அற்புதம் அம்மாள்தான் இந்தியாவின் நம்பர் ஒன்...

சினிமாவில் வரும் நட்சத்திரங்களை எல்லாம் இவர்கள் தோற்கடித்து விடுவார்கள்.

அற்புதம் அம்மாளைப் பொறுத்தவரை ஒரு தாய் என்ற வகையில் தன்னுடைய மகனின் உயிர் காப்பாற்றப்பட்டதையிட்ட அவர் அடைகின்ற மகிழ்ச்சியை நாம் புரிந்து கொள்ளலாம்.

ஆனால், அதை வைத்தே அரசியல் பண்ணுவதைத்தான் சகிக்க முடியல்லைடீ...

அதெல்லாஞ்சரி, தூக்குத் தண்டனையை நிராகரித்தது தனியே பேரறிவாளனுக்கு மட்டும்தானா அல்லது சாந்தன், முருகன் உள்ளிட்ட மூவருக்குமா?

ஏனென்றால், எங்கே பார்த்தாலும் பேரறிவாளனைத் தவிர, ஏனைய இருவரைப்பற்றிய சேதிகளையும் அவர்களுடைய சொந்த பந்தங்களையும் காணவேயில்லை.

முழு இந்திய ஊடகங்களும் அற்புதம் அம்மாளையும் பேரறிவாளைனையும் மட்டுமே தூதூதூதூக்கிப் பிடிக்கின்றன.

இன்னொரு கைதியான சாந்தனின் வயதான தாய் மகேஸ்வரியை பி.பி.ஸி மட்டும் தேடிக் கண்டு பிடித்து அவருடைய கதையைக் கேட்டிருக்கிறது.

மகேஸ்வரி அம்மா சொல்வதைக் கேட்டால்... 'தன்னுடைய பிள்ளையை (சாந்தனை) ப் போய்ப்பார்க்கவே வசதியில்லை. அவனை இன்றுவரை தான் பார்க்கவில்லை. அவனுக்காக யாருமே (புலிகள் உள்பட) உதவி ஏதும் செய்யவில்லை' என்று கண்ணீர் வடிக்கிறார்.

இதைப்போலத்தான் முருகனின் பெற்றோரைப்பற்றியும் யாரும் கவலைப்பட்ட மாதிரித் தெரியவில்லை.

அவர்கள் தற்போது புலம்பெயர்ந்து அய்ரோப்பிய நாடொன்றில் வாழ்ந்தாலும் துயரம் துயரம்தானே.

என்னமோ நடக்குது... ஏதேதோ சொல்லுது... ஒண்ணுமே நல்லால்லே...

 - வடபுலத்தான்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல