வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

அற்புதம் அம்மாவே! உங்களை ஆதரிக்க முடியும்; உங்களை வைத்து நடக்கும் அரசியலை எப்படி ஆதரிக்க முடியும்?

மரண தண்டனை ரத்து செய்யப்படவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அரசியல்/கொள்கை சம்பந்தப்பட்ட கைதிகளுக்கானாலும் சரி! சாதாரண கைதிகளுக்கானாலும் சரி ஏனென்றால், அரசியல் விஷயத்தில் எந்தத் தரப்பின் பக்கமும் முழு நியாயம் இருப்பதில்லை. சாதாரண கைதிகளோ ஒரு உணர்ச்சி வேகத்தில் தவறு செய்துவிட்டிருப்பார்கள். அவர்களுக்குத் திருந்த ஒரு வாய்ப்பு தரவேண்டும். இந்தக் காரணங்களினால் மரண தண்டனை என்பது தார்மிக ரீதியிலும் தவறு. சட்டரீதியிலும் சரியாக இருக்க வாய்ப்பு குறைவு. அதிலும் ஓர் அரசு என்பது பல்வேறு ஊழல்கள் மலிந்த அமைப்பு. எனவே அதன் கையில் ஓர் உயிரைப் பறிக்கும் அதிகாரத்தை ஒருபோதும் தரவே கூடாது.



இது பொதுவான ஒரு கருத்து. ஆனால், குற்றங்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு வகைப்பட்டவை என்பதால் அதற்கான தீர்ப்பும் பொத்தாம் பொதுவாக இருக்கவும் முடியாது.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் சிக்கியவர்கள் சிலர். தப்பித்தவர்கள் பலர். சிக்கியவர்களில் அந்தப் படுகொலையில் சொற்ப பங்களித்தவர்களில் ஆரம்பித்து கொஞ்சம் கூடுதலாகப் பங்களித்தவர்கள்வரை பல அடுக்குக் குற்றவாளிகள் உண்டு. இவர்களில் யாரும் நிச்சயமாக இந்தக் குற்றத்தைப் பொறுத்தவரையிலும் மரண தண்டனை தரவேண்டிய அளவுக்குக் குற்றவாளிகள் அல்ல. இத்தனை வருடங்கள் சிறையில் அடைக்கப்படும் அளவுக்கான குற்றம் செய்தவர்களும் அல்ல. எனினும் பிடிபட்டவர்கள் அந்த முக்கிய குற்றவாளிகளைக் காட்டிக்கொடுக்காமல் இருந்து வந்திருக்கும் நிலையில் அவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதாகச் சொல்லி பயமுறுத்தி வந்ததில் ஒருவித நியாயம் இருக்கவே செய்கிறது.

இந்த வழக்கில் இன்னொரு விந்தையான விஷயம் என்னவென்றால், காவலர்களின் பிடியில் இத்தனை ஆண்டுகள் இருந்த பிறகும் எந்தவொரு குற்றவாளியும் கிடைத்த ஆதாரங்களுக்குக் கூடுதலாக ஒற்றை வார்த்தைகூட வழக்கு தொடர்பாக கக்கியிருக்க இல்லை. பிரதான குற்றவாளிகளை அடையாளம் காட்டியிருக்கவும் இல்லை. இவர்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்தியவர்கள் அந்த அளவுக்கு சாமர்த்தியசாலிகள் என்பது மட்டுமே இதற்கான காரணமாக இருக்கமுடியாது. விசாரணை நடந்தவிதத்திலும் பல குழறுபடிகள் இருக்கின்றன. பிரதான குற்றவாளிகளை நோக்கி ஒருபோதும் விசாரணை போய்விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றம் தேர்தல் நெருங்கும் இந்தப் பொன்னான நேரத்தில் காங்கிரஸ் அரசுக்கு தமிழகத்தில் இழந்த செல்வாக்கை மீட்டெடுத்துக் கொள்ள ஒரு வாய்ப்பைத் தரும் வகையில் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்ததோடு மத்திய அரசு விரும்பினால் இவர்களை விடுதலைகூடச் செய்து கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியது. கருணை மனு தொடர்பாக முடிவெடுப்பதில் தாமதம் செய்யப்பட்டால், அதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். கருணை மனு தொடர்பாக இத்தனை நாட்களுக்குள் முடிவெடுத்தாகவேண்டும். மவுனம் சாதித்தால், தண்டனைக்கு ஒப்புக்கொள்வதாகவே அர்த்தம் என்று கடைசியாக ஒரு கெடுவை நிதிமன்றம் விதித்திருக்கவேண்டும். ஆனால், அது தொடர்பாக எந்த அழுத்தமான தீர்மானமும் எடுக்காமல், பாதிக்கப்பட்டவர்களின் தண்டனையை மட்டும் குறைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

இந்தத் தீர்ப்போடு நாடகம் நிறைவுற்றிருந்தால் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் தி.மு.க., தே.மு.தி.க. கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது எளிதாகியிருக்கும். ஆனால், அப்படியான ஒரு சாதகமான சூழல் எதிரணிக்குப் போவதைத் தடுக்கும் நோக்கில் ஜெயலலிதா ஏழு பேரையும் விடுதலை செய்வதாக பதறிக்கொண்டு அறிவித்தார். அது உண்மையிலேயே ஈழ அரசியல் அன்கோவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்தான். ஏனென்றால் ஈழப் போராலிகள் தொடர்பாக ஜெயலலிதா இதுவரை எடுத்துவந்திருக்கும் நிலைப்பாட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அவருக்கு அது மிகப் பெரிய பின்னடைவே. எனவே அவரை அந்த முடிவை எடுக்கவைத்தவர்களின் சாமர்த்தியம் என்றுதான் அதைச் சொல்லவேண்டும்.

ஏனென்றால், தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்ததன் மூலம் காங்கிரஸ் தலைமையில் தேமுதிக, திமுக கூட்டணி உருவாகியிருக்கும் என்பது உண்மைதான். ஆனால், அதன் மூலமாக மக்கள் மத்தியில் அந்தக் கூட்டணிக்கு செல்வாக்கு அதிகரித்துவிடும் என்று ஜெயலலிதா நம்பியது ஒருவகையில் மிகப் பெரிய தவறு. அவர்கள் தனித்தனியாக இருந்தால் அதிமுகவுக்கு எவ்வளவு சாதகமோ அதைவிட அதிக பலன் அவர்கள் கூட்டாகச் சேர்வதில் உண்டு. ஏற்கெனவே மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மீது மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது. இலங்கைத் தமிழர் பிரச்னையில் அதுநடந்துகொண்டவிதம் தொடர்பாக கோபம் இருக்கிறது. போதாத குறையாக ஊழல் தொடர்பாக பெரும் வெறுப்பும் அந்தக் கட்சி மீது இருக்கிறது. இந்தநிலையில் காங்கிரஸுடன் யார் சேர்ந்தாலும் அவர்களுக்கு அது பின்னடைவையே தரும். எனவே ஜெயலலிதா அந்தக் கூட்டணியைக் கண்டு இந்த அளவுக்குப் பயந்து தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருக்கவேண்டிய அவசியமே இல்லை. எனினும் அவர் திரைப்படங்களில் வாழ்க்கையில் துடுக்குத்தனம் மிகுந்த பெண்ணாக நடித்துப் பெற்ற வெற்றியை மனத்தில் கொண்டு அரசியல் வாழ்க்கையில் அதிரடிப் பெண்மணியாக ஒரு பிம்பத்தை வளர்த்தெடுக்க விரும்பியிருக்கிறார். சந்தர்ப்ப சூழல் அதற்குத் தோதாக அமைந்திருக்கவே அவரும் அந்த வேடத்தை இதுநாள் வரை வெற்றிகரமாக நடிக்கவும் முடிந்திருக்கிறது. இன்றைய சூழலில் அவருடைய இலக்கு இந்திய இறையாண்மைக்கு எதிராகக் காய் நகர்த்தும் அதிரடியாக மாறியிருக்கிறது (அவருடைய பிரதமர் கனவு நிறைவேறினால் இந்தியாவுக்கு ஏற்படும் இழப்பைவிட அவர் ஆகாவிட்டால் கூடுதலாக நடக்கும் என்பதே இப்போதைய யதார்த்தம்).

ராஜீவ் கொலை என்ற வழக்கில் பேரறிவாளர் என்ற அப்பாவியும் அற்புதம்மாள் என்ற போராளியும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னிலைப்படுத்தப்பட்டு வந்திருப்பதைக் கூர்ந்து கவனித்தால் புரிந்துகொள்ளமுடியும். இது மிகவும் தந்திரமான வலை.

இலங்கைத் தமிழர் பிரச்னையின் பிற அனைத்து விஷயங்களும் பின்னுக்குத் தள்ளப்பட்டு ஒரு அப்பாவியைத் தூக்கிலிடலாமா என்ற தார்மிகக் கேள்வியில் வந்து நிற்கிறது. இதனூடாக இந்தியாவின் அற உணர்வு இன்று கேள்விக்குபடுத்தப்பட்டிருக்கிறது.

பேட்டரி செல் வாங்கிக் கொடுத்தார் என்ற பூஞ்சையான குற்றச்சாட்டுடன் ஒருவரை நளினி, முருகன், சாந்தன் போன்ற ஒரிஜினல் குற்றவாளிகளுடன் கோர்த்துவிட்டதில் இருக்கிறது கிரிமினல் சாணக்கியத்தனம். ராஜீவ் கொலையாளிகள் அனைவரும் அந்த அப்பாவியின் பின்னால் ஒளிந்துகொண்டு எளிதாக வெளியே வந்துவிட ஒரு வழி அன்றே ஏற்படுத்திவைக்கப்பட்டிருக்கிறது. ராஜீவ் கொலையை நியாயப்படுத்துபவர்கள் அதை வெளிப்படையாகச் செய்வது சிரமம் என்பதால் அவர்களுக்கு ஒரு துருப்புச் சீட்டு பேரறிவாளர் உருவில் அழகாக உருவாக்கித் தரப்பட்டிருக்கிறது.

அவர் சொல்லாததைச் சொன்னதாக வாக்குமூலம் பதிவு செய்தேன் என்று காவலர் இன்று சொல்லியிருக்கிறார். அன்று அவருக்கு (மே)லி(டம்) இட்ட உத்தரவின்படி பொய் வாக்குமூலத்தைப் பதிவு செய்திருக்கிறார். உண்மைக் குற்றவாளிகளைத் தப்புவிக்க உள் நுழைக்கப்பட்ட பலியாடுதானே பேரறிவாளர். அல்லது தெரிந்தே இந்த தியாகத்தை அவர் செய்ய முன்வந்திருக்கலாம். நிச்சயம் இந்தக் கொலை வழக்கில் தூக்குதண்டனை வழங்கப்படமாட்டாது என்ற உத்தரவாதம் நம்பத் தகுந்தவட்டாரங்களில் இருந்து வந்திருக்கும். எனவே இந்தப் பிரச்னையை போராளித் தாய் – அப்பாவி மகன் ஆகியோரின் பாசப் போராட்டம் என வெறும் உணர்ச்சிமயத்தோடுமட்டுமே ஆராய்ந்து கொண்டிருந்தால் உண்மை நிலையைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுவோம்.

ஏழு பேரை விடுவிக்க வேண்டும் என்று சொல்பவர்கள் சொல்லாமல் விடும் பல விஷயங்கள் இருக்கின்றன. அவையே இந்தப் பிரச்னையின் முக்கிய கூறுகள். மரண தண்டனை தரலாமா கூடாதா என்பதெல்லாம் உண்மையான பிரச்னையே அல்ல.

உண்மையில் ஏழு பேருக்கு விடுதலை தரவேண்டும் என்பவர்களின் மனத்தில் இருக்கும் முக்கியமான ஒரு விஷயம் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதில் எந்தத் தவறும் இல்லை; அமைதிப்படையை அனுப்பி இலங்கைத் தமிழர்களை அவர் கொன்றொழித்தார். எனவே, அவருக்கு தக்க தண்டனை தரப்பட்டது என்பதுதான்.

இதுதான் பேரறிவாளரின் விடுதலையை விரும்புபவர்களில் பெரும்பாலானவர்களின் மனத்தில் இருக்கும் விஷயம். ஆனால், அது தொடர்பான கேள்வி அவர்களிடம் கேட்கப்படுவதில்லை. பேட்டரி வாங்கிக் கொடுத்தவருக்குத் தூக்கா என்ற வசனத்தை அவர்கள் தர்ம ஆவேசத்துடன் கேட்க மற்றவர்கள் வாய் மூடி பார்த்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.

ஒரு கோட்டை அழிக்காமலேயே அதைச் சிறியதாக ஆக்கவேண்டும்னெறால், பக்கத்தில் இன்னொரு பெரிய கோட்டை வரை என்றுசொல்வார்களே அதுபோல் ஒரு கொலைகாரனை கொலைப் பழியில் இருந்து தப்புவிக்கவேண்டுமென்றால், ஒரு அப்பாவியை அவனோடு கோர்த்துவிடு. அப்பாவியின் வெகுளித்தனத்தை மட்டுமே பேசிப் பேசி கொலைகாரனையும் எளிதில் வெளியில் கொண்டுவந்துவிடலாம். இந்த தந்திரமே இங்கு கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த உண்மை புரியவேண்டுமென்றால், அப்பாவி பேரறிவாளரை விடுதலை செய்துவிடுகிறோம். எஞ்சியவர்களைத் தூக்கில் இடுகிறோம் உங்களுக்கு இது சம்மதமா என்று கேட்டுப்பாருங்கள். அமைதிப்படைப் படையின் படுகொலைகளில் போய் அந்த பதில் முட்டிக்கொண்டு நிற்கும்.

இந்த இடத்தில் இந்த அடிப்படை விஷயம் தொடர்பான தெளிவு பிறந்தாக வேண்டியிருக்கிறது.

உண்மையில் அமைதிப்படையினர் தமிழ் பெண்களைக் கற்பழித்தல், ஈழத் தமிழ் போராளிகளையும் அப்பாவிகளையும் கொன்றழித்தல் என அத்துமீறினார்களா? இந்தக் குற்றச்சாட்டில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது? சிங்கள அண்ணனும் தமிழ் தம்பியும் சேர்ந்துகொண்டு இந்திய அமைதிப் படையை இலங்கை மண்ணில் இருந்து விரட்டியடிக்க நடத்திய நாடகத்தின் ஓர் அங்கமா இந்திய அமைதிபடையின் மீதான அவதூறுகள்? அப்படியே அமைதிப்படையினர் அத்துமீறி நடந்திருந்தாலும் அதற்காக ராஜீவைக் கொன்றது எந்தவகையில் நியாயம்? தமிழர்களை நிர்மூலமாக்கு என்று சொல்லியா அவர் அமைதிப்படையை அனுப்பினார். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய கோட்பாட்டின்படி இலங்கையின் ஒரு மாநிலமாக ஈழம் இருக்கட்டும் என்பதுதானே அவருடைய அமைதிப் பேச்சுவார்த்தையின் சாராம்சம். பங்களாதேஷைப் போல் தனி நாடாகப் பிரிக்கப்பட முடிந்த நாடு அல்லவே இலங்கை. இந்த அமைதி முயற்சியை வெற்றி பெற வைக்கத்தானே ராஜீவின் அரசு அமைதிப்படையை அனுப்பியது. யாழ்பாணம் சிங்களப் படைகளால் முற்றுகையிடப்பட்டபோது பூமாலை ஆப்பரேஷன் நடத்தியதுகூட தமிழர்களின் நலனுக்காகத்தானே. அமைதிப்படை செய்த அல்லது செய்ததாகச் சொல்லப்படும் அத்துமீறல்களுக்கு ராஜீவை எப்படிப் பொறுப்பாக்க முடியும்? எப்படி அவரைப் படுகொலை செய்ய முடியும்? இந்தக் கேள்விகள் எதற்குமே விடை கிடையாது.

உண்மையில் இரண்டாம் முறை ராஜீவ் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் அமைதிப்படையை அனுப்பும் வாய்ப்பு மிகவும் குறைவே. ஆனால், அவர் இந்தியப் பிரதமரானால், தனி நாடு கிடைக்கும் வாய்ப்பு முற்றிலும் இல்லாமல் ஆகிவிடும் என்ற அச்சமே அவரைக் கொல்லக் காரணமாக இருந்திருக்கிறது. அமைதிப்படையின் அட்டூழியங்கள் என்பவை அதற்கான நியாயப்படுத்தலாகக் கண்டடையப்பட்டிருக்கிறது. எனவே, ராஜீவைக் கொன்றவர்களுக்கு மன்னிப்பு என்பது எந்தவகையிலும் நீதியின்பாற்பட்டதாக இருக்க முடியாது.

அப்படியே அமைதிப் படை செய்த தவறுகளுக்கு ராஜீவைக் கொன்றது சரி என்றால், 18 அப்பாவி காவலர்களையும் பொதுமக்களையும் கொன்றதற்கு இவர்களுக்கு மரண தண்டனை வழங்கியதில் என்ன தவறு இருக்கிறது?

ஈழப் போராட்டத்தில் சக போராளிக் குழுக்களைக் கொன்றது, முஸ்லீம்களை அகதிகளாக வீட்டை விட்டுத் துரத்தியது, அவர்களைப் படுகொலை செய்தது, போரை விரும்பாத மக்களையும் மிரட்டி பண வசூலில் ஆரம்பித்து படையில் சேர்த்துப் பலி கொடுத்ததுவரை எத்தனையோ அநீதிகளை பிரபாகரன் தரப்பும் செய்திருக்கிறது. அதற்கு யார், என்ன தண்டனை தருவது? இந்தியாவில் இனி யாரும் பிரபாகரன் பெயரை உச்சரிக்கவோ, படத்தைப் பயன்படுத்துவதோ கூடாதுஎன்ற குறைந்தபட்ச தண்டனையாவது அவர்களுக்கு விதிக்க முடியுமா? அல்லது அவர்களாகவே பொறுப்புணர்ச்சியுடன் அந்த முடிவை எடுப்பார்களா? நிச்சயமாக மாட்டார்கள். ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரையில் நீதி, தார்மிகம் எல்லாம் அவர்களுக்குத் தரப்படும் தண்டனைகளில் மட்டுமே கடைப்பிடிக்கப்படவேண்டும். அவர்களுடைய செயல்களில் அந்த நற்பண்புகளை யாரும் தேடக்கூடாது. ஏனென்றால் அவர்கள் ஒரு மாபெரும் விடுதலைப் போராட்டத்தில் இருக்கிறார்கள். எனவே, அவர்கள் செய்வது எல்லாமே சரி. அல்லது சூழ்நிலை அவர்களை அப்படிச் செய்ய வைக்கிறது. ஆனால், மற்றவர்கள் யோக்கியர்களாக இருந்தாகவேண்டும். ஒரு நாட்டின் தலைவரை அவர்களுடைய நாட்டில் வைத்துக் கொன்றாலும் அவர்கள் மட்டும் நீதியின்படி நடந்துகொண்டாகவேண்டும்.

உண்மையில் ஈழப் பிரச்னை என்பது இன்று தமிழர்களை/தமிழகத்தை இந்திய அரசுக்கு / ஒட்டுமொத்த இந்தியாவுக்கு எதிரானதாக ஆக்கும் நோக்குடனே முன்னெடுக்கப்படுகின்றன. ஒட்டு மொத்த இந்தியா ராஜீவைக் கொன்ற பயங்கரவாத இயக்கமாக புலிகள் இயக்கத்தைப் பார்க்கிறது. அவர்களுக்கு ஆதரவாகப் பேசும் தமிழர்களை பிரிவினைவாதிகளாகப் பார்க்கிறது. தமிழ் போராளிகள் தரப்போ ஈழம் கிடைக்காமல் போனதற்கு இந்தியாதான் காரணம் என்று சொல்லிக்கொண்டு ஒட்டு மொத்த இந்தியாவைத் தன்னுடைய எதிரியாகப் பார்க்கிறது. இப்படியாக எதிரும் புதிருமான இரண்டு சக்திகள் உருட்டி விளையாடும் பகடைக் காய்களே இந்த ஏழு உயிர்கள். எனவே இந்த ஏழு உயிர்களின் அம்மா அப்பாக்கள், மகன் மகள்கள், மாமன் மச்சான்கள், தம்பி தங்கைகள் கோணத்தில் இருந்து பிரசனையைப் பார்ப்பது எந்தவகையிலும் சரியாக இருக்காது.

சுய முனைப்பு இல்லாமல் தோற்பது அல்லது சாதகமாக இருந்த அநீதியான சூழல் மாற்றி அமைக்கப்படும்போது ஏற்படும் இழப்புகளை அராஜகமாகச் சித்திரிப்பது, வெறுப்பை அடிப்படையாக வைத்து பிரிவினை நெருப்பை மூட்டிக் குளிர் காய நினைப்பது போன்ற வழிகளைப் பின்பற்றுபவர்களைவிட கூடுதல் பொறுப்பு உணர்வும் அற நெறியும் நிச்சயம் ஒரு தேசத்துக்கு இருந்தாகவேண்டும். அந்த வகையில் அது ஏழு பேரை நிச்சயம் விடுதலை செய்தாகவேண்டும். ஆனால், அந்த தேசம் வேறு சில உத்தரவாதங்களையும் பெற்றுக்கொண்டாக வேண்டும்.

உங்களை விடுவிக்கிறேன். பதிலுக்கு நீங்கள் என்ன செய்வீர்கள்.? உங்கள் பிரிவினைவாத கோஷங்களைக் கைவிடுவீர்களா? ராஜீவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து விழுந்து வணங்குவீர்களா? 18 அப்பாவித் தமிழர்களின் உருவப்படங்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கும். ஈழத் தமிழர்களின் விடுதலைக்காகப் போராடி புலிகளால் கொல்லப்பட்ட சக குழுக்களின் தலைவர்களின் படங்களும் அங்கு வைக்கப்பட்டிருக்கும். மசூதிகளில் தொழுகை நடத்தியபோது கொல்லப்பட்ட இஸ்லாமியத் தமிழர்களின் திருவுருவப்படங்களும் அங்கு இருக்கும். வலுக்கட்டாயாமாக துப்பாக்கி திணிக்கப்பட்டு போர்க்களத்துக்கு அனுப்பப்பட்டு கொல்லப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்களும் அங்கு இருக்கும். அந்த நினைவு மண்டபத்தில் ஒரு மிதியடியும் போடப்பட்டிருக்கும். அதில் பிரபாகரனின் உருவப்படம் பதித்திருக்கும். அதை மிதித்தபடி சென்று நீங்கள் அத்தனை படங்களுக்கும் அஞ்சலி செலுத்தவேண்டும் செய்வீர்களா போராளி அற்புதம் அம்மாவே அப்பாவி பேரறிவாளரே உங்களைப் போலவே அப்பாவிகள்தானே கொல்லப்பட்ட அத்தனை பேர்களும். அவர்களைக் கொன்ற இயக்கத்தின் சார்பில்தானே இன்றும் நீங்கள் இயங்கிவருகிறீர்கள். உங்களை ஆதரிக்க முடியும். ஆனால், உங்களை முன்வைத்து நடத்தப்படும் அரசியலை எப்படி ஆதரிக்க முடியும்?

அற்புதம் அம்மா உங்கள் மகன் இன்னமும் உயிருடன் இருக்கிறான். நீதி கேட்டு மன்றாட ஓர் இடம் இந்த இந்தியாவில் இன்றும் இருக்கிறது. பிரபாகரனின் ஈழத்தில் அப்படியான ஒரு இடம் ஒருபோதும் இருந்ததே இல்லையே. திராவிட இயக்கப் பின்புலம் இருந்த பிறகும் சுய சிந்தனை கொண்டவராக நீங்கள் இருக்கக்கூடும். உங்கள் நிஜமான கண்ணீர்த்துளிகளைக் கொஞ்சம் இவர்களுக்காகவும் சிந்துங்களேன். ஒட்டு மொத்த இந்திய மனசாட்சியை நோக்கி அல்லவா உங்கள் மன்றாடல்களை முன்வைக்கிறீர்கள். நீங்களும் அதன் பெருங்கருணைக்குக் கொஞ்சம் உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளுங்களேன். ஏனென்றால் உங்கள் மகன் வெறும் உங்கள் மகன் மட்டுமே அல்ல. துரோக நாடகத்தின் துருப்புச் சீட்டு. பிரிவினை விளையாட்டின் பிரதான அம்பு.

 B.R. மகாதேவன்

தமிழ்பேப்பர்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல