வியாழன், 13 மார்ச், 2014

ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 51


விடுதலைப் புலிகளை பெங்களூருவில் பிடிக்க சி.பி.ஐ. போகுமுன், போன லோக்கல் போலீஸ்!

அத்தியாயம் 51

“எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்கும் விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த சிவராசனும், மற்றவர்களும், தமது வீட்டை சுற்றி மறைந்து நிற்பவர்களை பார்த்து விட்டிருக்க கூடும். எப்படியோ, உள்ளே இருந்தவர்கள் அலர்ட் ஆகி விட்டனர்” என்று நினைத்துக்கொண்ட சி.பி.ஐ. புலனாய்வுப் பிரிவினர், அவர்கள் சயனைட் குப்பிகளை கடித்துவிட கூடும் என நினைத்து, உடனே அதிரடிப் படையினருக்கு உத்தரவிட்டனர்.



அடுத்த சில நொடிகளில் கறுப்புப்பூனைகள் அந்த வீட்டின் முன்புறம் மற்றும் பின்புறக் கதவுகளை உடைத்துக்கொண்டு அதிரடியாக உள்ளே நுழைந்தனர்.
அதே நேரம், உள்ளே நுழைந்த அதிரடிப் படையினர் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் சரமாரியாகச் சுட்ட வண்ணம் வீட்டுக்குள் ஓடினர். எந்திர துப்பாக்கி சத்தங்கள், அந்த ஏரியா முழுவதும் கேட்டதில், அக்கம்பக்கத்தில் வசித்தவர்களுக்கு, ஆபரேஷன் தொடங்கிவிட்டது என தெளிவாக புரிந்தது.

ஆனால், சுட்டுக்கொண்டே வீட்டுக்குள்ளே ஓடிய அதிரடிப் படையினருக்கு உள்ளேயிருந்து எதிர்ப்பு வரவில்லை. மாறாக, உள்ளே கண்ட காட்சி பயங்கரமானதாக இருந்தது.

ஓர் இளைஞர் சயனைட் குப்பியை மென்றுகொண்டிருந்தார். மற்றொருவர் குளியலறைக்கு ஓடினார்.

அடுத்த சில நொடிகளில் குளியல் அறைக் கதவு உடைத்துத் திறக்கப்பட்டது. உள்ளே இருந்த இளைஞரும் சயனைட் குப்பியை கடித்து விட்டிருந்தார்.

அந்த இரு இளைஞர்களுக்கும் சயனைட் எதிர்ப்பு மருந்தைச் செலுத்தினார் என்.எஸ்.ஜி. டாக்டர். உள்ளூர் பொலீஸாரின் உதவியுடன் அந்த இரு விடுதலைப் புலிகளும் வைத்தியசாலைக்குத் துரிதமாகக் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த இருவரை தவிர வேறு யாரும் அந்த வீட்டில் இல்லை. இந்த இருவரில், இவர்கள் தேடிவந்த சிவராசனோ, சாந்தனோ இல்லை. இருவரும் புதியவர்கள்.

வைத்தியசாலைக்குச் செல்லும் வழியிலேயே ஒருவரது உயிர் பிரிந்தது. மற்றவர் உயிருடன்தான் இருந்தார்; ஆனால், கோமா நிலையில் இருந்தார்.

அந்த வீட்டை சோதனையிட்டதில், அங்கு இரு பிஸ்டல்கள் கிடைத்தன. சிவராசன் பற்றிய தடயம் ஏதுமில்லை. இருவரும் சயனைட் குப்பிகளை கடித்ததால், அவர்கள் விடுதலைப் புலிகள் என தெரியவந்தது. அந்த இளைஞர்களின் பெயர்கள் அரசன் மற்றும் குளத்தான் என பின்னர் அடையாளம் காணப்பட்டது. இவர்களில், கோமா நிலையில் இருந்தவர் குளத்தான்.

பெங்களூருவில் விடுதலைப்புலிகளின் போராளிகள் தங்கியிருந்தார்கள் என்ற விவரம் அறிந்த நகர பொலீஸ் கமிஷனர் அதிர்ச்சியடைந்தார். இந்த ரெயிடு நடக்கும்வரை, அந்த விஷயம் அவருக்கு தெரிந்திருக்கவில்லை.

தீவிர சிகிச்சை அளித்தும் குளத்தான் உடல்நிலை தேறாமல், வைத்தியசாலையிலேயே 3 நாட்களுக்குப் பின் மரணமடைந்தார்.

பெங்களூரு வீட்டில் இரு புலிகள் தங்கியிருந்தது, மற்றும் போலீஸ் சுற்றிவளைத்தவுடன் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதில் இருந்து சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வுப் பிரிவினருக்கு தெரியவந்தது என்னவென்றால், சிவராசன், சுபாவும் பெங்களூருவில்தான் ஏதோ ஒரிடத்தில் ஒளிந்திருக்க வேண்டும் என்பதே.

எனினும், பெங்களூருவுக்கு அவர்கள் எப்படிச் சென்றார்கள் என்ற விவரம் அப்போது அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.

ஆனால், ரெயிடு செய்யப்பட்ட இந்த இந்திரா நகர் வீடு தெரிந்து விட்டதால், மறைந்திருந்த சிவராசனையும், மற்றவர்களையும் ட்ரேஸ் செய்ய ஒரு வழி கிடைத்திருந்தது. அது என்னவென்றால், இந்த இந்திரா நகர் வீட்டை இவர்களுக்கு வாடகைக்கு பிடித்துக் கொடுத்த நபர் யார் என்பதை தெரிந்து கொண்டு, அவர் மூலமாக வேறு தகவல்களை பெறலாம் என்பதே.

இந்திரா நகர் வீட்டின் உரிமையாளரிடம் விசாரித்ததில், அந்த வீட்டை இவர்களுக்கு வாடகைக்கு விட ஏற்பாடு செய்து கொடுத்தவரின் பெயர், ஜகன்னாதன் என்று தெரியவந்தது.

ஜகன்னாதனை பற்றி விசாரித்தபோது, அவர் பெங்களூருவில் வசிக்கும் தமிழர் என்பதும், விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர் என்பதும் தெரியவந்தது.

மறுநாள் ஆகஸ்ட் 3-ம் தேதி நண்பகலில், பெங்களூருவில் ஜகன்னாதனை சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் லோக்கல் போலீஸின் உதவியுடன் பிடித்தார்கள். விசாரித்தனர். விடுதலைப் புலிகளுக்கு பெங்களூருவில் வேறு எங்காவது வீடுகளை வாடகைக்கு எடுத்து கொடுத்தாரா என்ற விவரங்களை அவரிடம் விசாரிக்க தொடங்கினார்கள்.

நண்பகலில் கைது செய்யப்பட்ட ஜகன்னாதனிடம் விசாரணை நடத்தி, அவரிடம் இருந்து உருப்படியான ஒரு தகவலை பெறுவதற்குள் மாலையாகி விட்டது. அந்த தகவல்: இந்திரா நகருக்கு அருகே உள்ள டோமலூர் என்ற இடத்தில், மற்றொரு வீட்டை வாடகைக்கு எடுத்து கொடுத்திருந்தார்.

உடனடியாக அந்த வீட்டை அடையாளம் காட்டுவதற்காக ஜகன்னாதனையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இவர்கள் டோமலூர் சென்றபோது, இருள் சூழ்ந்து விட்டது. ஜகன்னாதன் வீட்டை அடையாளம் காட்டினார். அந்த வீட்டை பார்த்ததும், சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு திகைப்பு ஏற்பட்டது.

காரணம், வீட்டுக்கு வெளியே போலீஸ் நின்றிருந்தது. பொதுமக்களும் கூடியிருந்தனர்.

“இவர்களுக்கெல்லாம் எப்படி விஷயம் தெரிந்தது?”

சி.பி.ஐ. அதிகாரிகள் திகைப்புடன் விசாரித்தபோது, அங்கு நடந்த சம்பவம் தெரிய வந்தது.

இலங்கையில் நடந்த யுத்தத்தில் காயமடைந்த 16 வயதான விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் அந்த வீட்டில் தங்கியிருந்தார் (பின்னர் விசாரணையில் தமது பெயர் மிரேஷ் என்றார்). பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வராத அவர், இருள் சூழ்ந்த பின்னர்தான் வெளியே வந்து, கடைக்கு சென்று தமக்கு தேவையான பொருட்களை வாங்குவது வழக்கம்.

இது நடந்த நாட்களில், டோமலூர் பகுதியில் திருடர் பயம் அதிகம் இருந்ததால் அப்பகுதிவாசிகள், கண்காணிப்புக் குழு அமைத்திருந்தனர். இரவு ரோந்துகளும் செல்வது வழக்கம். கடைக்கு சென்றுவிட்டு வீட்டை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்த மிரேஷை திருடன் எனக் கருதி அப்பகுதி கண்காணிப்பு குழுவினர் மடக்கினர்.

மிரேஷை இவர்கள் பிடித்து விசாரிக்க, அவரோ சட்டைப் பையில் இருந்து சயனைட் குப்பியை எடுத்து கடிக்க முயன்றிருக்கிறார்.

நல்லவேளையாக அது என்ன பொருள் என்பதை கண்காணிப்புக் குழுவில் இருந்த சிலருக்கு தெரிந்திருந்ததால், மிரேஷ் மீது பாய்ந்து, அவரை வீழ்த்தி, சயனைட் குப்பியை கடிக்காமல் செய்துவிட்டார்கள்.

அதன்பின் லோக்கல் போலீஸூக்கு தகவல் கொடுத்து, போலீஸூம் வந்துவிட்ட நிலையில்தான், ஜகன்னாதனிடம் விசாரணை நடத்தி இவர் மூலமாக தகவல் தெரிந்து அங்கு வந்திருந்தனர், சி.பி.ஐ. புலனாய்வு குழுவினர்.

உடனடியாக, டோமலூர் வீட்டை தமது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது சி.பி.ஐ. குழு. வீடு சோதனையிடப்பட்டது.

அந்த வீட்டில் கிடைத்த தடயங்களில் இருந்து இவர்களுக்கு தெரிய வந்த விஷயம்: முதல் நாள் வரையில் சிவராசன், சுபா, நேரு ஆகியோர் இந்த வீட்டில்தான் தங்கியிருந்துள்ளனர்.

அதாவது, டோமலூர் வீட்டில் இருந்து வெறும் 2 கிலோ மீற்றர் தொலைவில் இந்திரா நகர் வீட்டுக்குள் சி.பி.ஐ. குழு அதிரடியாகப் புகுந்து சிவராசனை தேடிய நேரத்தில், சிவராசன் குழுவினர் டோமலூர் வீட்டில்தான் இருந்துள்ளனர்.

ஆகஸ்ட் 3-ம் தேதி இரவு சி.பி.ஐ. குழு அந்த டோமலூர் வீட்டை சென்றடைந்தபோது, அங்கு மிரேஷ் மட்டுமே தனித்து தங்கியிருந்தார். ஆனால், அன்று காலை வரை அந்த வீட்டில், காயமடைந்த விடுதலைப்புலிகள் வேறு சிலரும் தங்கியிருந்தனர். காயமடைந்த விடுதலைப்புலிகளை சுரேஷ் மாஸ்டரின் உதவியாளரான மூர்த்தி, அன்று காலையில்தான் வேறு இடத்துக்கு மாறச் செய்வதற்காக அழைத்து சென்றிருந்தார்.

அவர்களை மூர்த்தி எங்கே அழைத்துச் சென்றார் என்ற விபரம், மிரேஷூக்கு தெரியவில்லை.

உண்மையில், காயமடைந்த விடுதலைப்புலிகளை அழைத்துச் சென்ற மூர்த்திக்கு, அவர்களை தங்க வைக்க வேறு வீடு ஏதும் அங்கு இருக்கவில்லை. மூர்த்தியும், மற்ற விடுதலைப் புலிகளும் 3-ம் தேதி இரவை நடைபாதையிலும், பூங்காக்களிலும், பஸ் நிலையங்களிலும் கழித்துள்ளனர்.

ஆகஸ்ட் 3-ம் தேதி காலைவரை, டோமலூர் வீட்டில் காயமடைந்த 3 பெண் விடுதலைப்புலிகளும் இருந்தனர். அவர்களுக்கு மட்டும் தங்குவதற்கு ஏற்பாடு உள்ளதாக மூர்த்தி கூறியிருந்தார்.

பெங்களூருவில் இருந்த திராவிடர் கழக இளைஞரணியை சேர்ந்த ஒருவரின் உறவினர்களது வீடுகளில் 3 பெண் விடுதலைப்புலிகள் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருப்பதாக மூர்த்தி கூறி அழைத்து சென்றதாக மிரேஷ் தெரிவித்தார். ஆனால், இலங்கையில் இருந்து புதிதாக இந்தியா வந்திருந்த மிரேஷூக்கு, பெங்களூருவில் இருந்த திராவிடர் கழக இளைஞரணி உறுப்பினர் யார் என்ற விபரம் தெரிந்திருக்கவில்லை.

மிரேஷிடமிருந்து இந்த தகவல்களை பெற்று, மூர்த்தியையும், மற்ற விடுதலைப் புலிகளையும் இரவு நேரத்தில் நடைபாதையிலும், பூங்காக்களிலும், பஸ் நிலையங்களிலும் தேடலாம் என சி.பி.ஐ. குழு புரிந்துகொண்டபோது, 4-ம் தேதி பகலாகி விட்டது.

4-ம் தேதி இரவு, சி.பி.ஐ. குழுவினர் லோக்கல் போலீஸின் உதவியுடன் நகரை சுற்றிவந்தபோது, 3-ம் தேதி இரவு நடைபாதைகளிலும், பூங்காக்களிலும் இரவைக் கழித்த விடுதலைப்புலிகள் மாயமாய் மறைந்துவிட்டனர். (தொடரும்)

விறுவிறுப்பு.காம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல