சனி, 1 மார்ச், 2014

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் இன்றைய தீர்ப்பும் நீதிபதியின் உள் நோக்கமும்?

சிந்திக்க சில குறிப்புகள்!

தனது மகன் விடுதலையாகப்போகிறான் என்ற கனவுகளோடும் நினைவுகளோடும் அவசர அசரமாகச் சென்று ஜெயலலிதாவுக்கு நன்றியைத் தெரிவித்திருந்தார் அற்புதம்மாள். தீர்ப்பு வந்து சில தினங்கள் ஆவதற்குள் அடங்கிப்போனது, அற்புதம்மாளின் ஆரவாரம் மட்டுமல்ல, நளினி முருருகன் மகளின் ஆனந்தமும்தான்! தூக்குத் தண்டனையை ஆயுள்தண்டனையாக மட்டும் குறைத்திருந்தால் இவ்வளவு சிக்கல்களைச் சந்தித்திருக்காது இந்த வழக்கு! சிலவேளைகளில் காங்கிரஸ் ஆட்சியாளர் மற்றும் கட்சியினர் கூட அதற்கு பச்சைக்கொடியால் சாமரம் வீசியிருப்பர். இவ்வளவு சிக்கலுக்லுக்கும் காரணம் அவர்களை விடுதலை செய்யும் பொறுப்பை மாநில அரசிடம் ஒப்புவித்ததுதான்!



இக் கொலைவழக்கு சார்பாக, சுப்பிரமணியசுவாமியின் ஜனதாதள கட்சியின் முன்னாள் செயலாளர் திருச்சி வேலுச்சாமியின் வாக்கு மூலங்கள், சந்திரசாமி உட்பட சுப்பிரமணியசுவாமி மீது பல சந்தேகங்களை உருவாக்கிய போதும், அவர்கள் மீது எவ்வித வழக்குப் பதிவுகளும் மேற்கொள்ளப்படவில்லை! இது குறித்து மத்திய புலனாய்வுத்துறை, தொடங்கி தமிழக காவல்துறை -குறிப்பாக முன்னாள் உயர் அதிகாரி கார்த்திகேயன்- அடங்கலாக ஜெயின் கமிசன், மத்திய உளவுத்துறை (சிபிஐ) வரை அனைத்து நிறுவனங்கள் மீதும் எழுப்பப்படும் பல சந்தேகங்கள் குறித்து ஊடகங்கள் பலவும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன! கூசாமல் குற்றங்கள் இழைக்கின்ற 'பெரிய மனிதர்களை" தப்பவைக்கும் நோக்கில் கோழி பிடித்தவனையும், கோம்பை சூப்பியவனையும் கொணர்ந்து குற்றங்களை ஏற்கும்படி நிர்ப்பந்திக்கின்ற காவல்துறையின் வழக்கமான பாணி, இந்த வழக்கிலும் மேற்கொள்ளப்பட்டிருப்பதை சாமானியரும் உணர்வர்.

இது „நூறு குற்றவாளிகள் தப்பித்துக்கொண்டாலும் நிரபராதி ஒருவன்கூட தண்டிக்கப்படக் கூடாது“ என்ற நீதித்துறையின் உயர் அறத்தை மீறுவதாக அமைகிறது! இந்நிலையில், முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தி கொலைசெய்யப்பட்டதன் பின்னணி குறித்து எழக்கூடிய மேலதிக ஊகங்களையும், வழங்கப்பட்டிருக்கும் இன்றைய தீர்ப்புக் குறித்தும் வாசகர்களின் சிந்தனையைத் தூண்டும் வகையில், சில குறிப்புகளை இங்கு பதிவுசெய்ய விளைகின்றோம்!

இந்திய காவல்துறை புரிந்துகொள்ளவேண்டிய முக்கிய விசயம் அடிப்படையில் புலிகள் இயக்கம் பல இரகசிய நடவடிக்கைகளைக்கொண்ட அமைப்பு! ஆகையினால் அது தனது உறுப்பினர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே தகவல்களை வழங்கும். குறிப்பாக உறுப்பினரின் பணி என்னவோ அதற்குத் தேவையான தகவல்களை மட்டும் வழங்குவதே புலித் தலைமையின் இயல்பு! பற்றறி வாங்கிக் கொடுத்தவனிடம் „நீ ஏன் பற்றி வாங்கிக்கொடுத்தாய்“ என்று கேட்டால் அதற்கு அவனிடம் பதில் இருக்காது! காரணம் கட்டளையிட்டவரிடம் அவராலும் அக்கேள்வியை எழுப்பியிருக்க முடியாது! ஹரிபாபு என்ற கமராக்காரர் ஸ்தலத்திலேயே இறந்துபோனதும் இதனால்தான்! ஏன் படம் எடுத்துவரும்படி தன்னைப் பணித்தார்கள் என்ற விசயம் பற்றி அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை! இலங்கையில் பொதுப்புத்தி மட்டத்தில் சிந்திப்பவர்களால் மிகச் சாதாரணமாக கணிப்பிடப்படுகின்ற விடயங்கள் இவை!

இக்கொலையுடன் நேரடித்தொடர்பில் இருந்தவர்கள் அல்லது இத்தாக்குதல் பற்றி முழுமையாக அறிந்தவர்கள் (சிவராசன் உட்பட) அனைவரும் சரணடையாமலேயே பெங்களுரில் இறந்துபோயினர்! இந்தியப் பொலிசுக்கும், உளவுத்துறைக்கும் இது பற்றி நன்கு தெரிந்திருந்தும் சில மூன்றாம் நபர்கள் மீது இவர்கள் வழக்கு தாக்கல் செய்ததன் நோக்கமென்ன? சில உள்ளக கிரிமினல்களை காப்பாற்ற முனைகிறார்களா?

ராஜீவ் கொலையை அடுத்து, புலிகளால் படுகொலைக்குட்படுத்தப்பட்ட முக்கியமானவர் இலங்கை ஜனாதிபதி பிரேமதாசா. இங்கு குறிப்பான செய்தி, இச் சந்தர்ப்பத்தில் பிரேமதாசாவுடன் பேரளவு முரண்பாட்டைக் கொண்டவர்களாக புலிகள் இருந்திருக்கவில்லை என்பது! இவ் இரண்டு கொலைகளையும் ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஓர் அங்கமாகச் செய்தார்களா? அல்லது சர்வதேசப் பின்னணியின் தூண்டுதலின் அல்லது வேண்டுதலின் பிரகாரம் பணத்திற்காகச் செய்தார்களா?

அடுத்து நாம் சிந்திக்கவேண்டியது இவ்விரு (ராஜீவ் காந்தி, பிரேமதாசா) கொலைகளுடனும் தொடர்பு பட்டிருக்கக்கூடிய சர்வதேசப் பின்னணி பற்றியது! இந்தச் சர்வதேசப் பின்னணியுடன் தொடர்புபட்டவராகவே சுப்பிரமணியசுவாமியையும் நோக்கவேண்டியிருக்கிறது!

இவற்றுக்கான காரணங்கள்…

ஜனதா தள கட்சியின் ஆட்சியில் இஸ்ரேல் நலன் காக்கும் பிரிவை இந்தியாவில் அமைப்பதற்கான முயற்சியில் அன்றைய பிரதமராக இருந்த சந்திரசேகர் ஈடுபட்டபோது, எதிக்கட்சித் தலைவராக இருந்துகொண்டு அதனை வன்மையாக எதிர்த்திருந்தார் ராஜீவ் காந்தி!

இதைப் போன்று ஏற்கனவே ஜே. ஆர். ஜெயவர்த்தனாவினால் கொண்டுவரப்பட்ட இஸ்ரேல் நலன் காக்கும் பிரிவை, அன்றைய சபாநாயகர் எம். எச். முகமது அவர்களின் கோரிக்கைக்கு இணங்க அதை வெளியேற்றுவதற்கான முயற்சிகளில் பிரேமதாச ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

இவ் இரண்டு செயற்பாட்டுக் கணங்களின் போதுதான் இந்நாடுகளின் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள்! இதற்கு ஆதாரமாக இவர்கள் இருவரும் கொலைசெய்யப்படுவதற்கு முன்பாக வெளிவந்திருந்த இவர்களது பத்திரிகை அறிக்கைகளை நோக்கலாம்!

பிரேமதாசா கொல்லப்பட்டதற்கான எந்த ஒரு தார்மீக காரணத்தையும் புலிகள் முன்வைக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்வோம்! ராஜீவ் காந்தி கொலையை புலிகள்தான் செய்தார்கள் என்பதை வலுப்படுத்துவதில் சோனியா, பிரியங்கா, ராகுல் ஆகியோரை விட சுப்பிரமணியசுவாமி மிகவும் துடிப்புடன் செயற்பட்டதன் மர்மம் என்ன என்பதும் இங்கு சிந்திக்கற்பாலதே!

ராஜீவ் காந்தியின் கொலைக்கான பின்னணி குறித்து சோனியா காந்திக்கும் பிள்ளைகளுக்கும் நிட்சயம் தெரிந்திருக்கும் என்றபோதும், அவற்றை வெளிக்கொணரும் துணிச்சலுடன் அவர்கள் இல்லை என்பதையும் திருச்சி வேலுச்சாமி முன்வைக்கத் தவறவில்லை! காந்தி குடும்பம் ஏதோ ஒருவகை நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டிருக்கிறது என்பதே வேலுச்சாமியின் ஊகம்!

இந்நிலைமைகளில் இந்திய நீதித்துறையின் நேர்மை குறித்தும் எம் மத்தியில் இயல்பாக எழக்கூடிய பல சந்தேகங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள முனைகிறோம்.

தூக்குத் தண்டனைக் கைதிகளின் தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைப்பதுடன் மட்டும் நிறுத்தியிருந்தால் அதற்கான அங்கீகாரத்தை வழங்குவதன் மூலம் காங்கிரஸ் கட்சி அரசியல் இலாபத்தை அறுவடை செய்வதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தியிருக்கும்! இல்லையேல் கைதிகள் அனைவரையும் விடுவிப்பதற்கான முழுப் பொறுப்பையும் நீதிபதி அவர்கள் தாமே ஏற்றிருக்கவேண்டும்! விடுதலை செய்கின்ற பொறுப்பை மாநில அரசிடம் விட்டுவிடுவது என்பது, பிரதம மந்திரிக் கனவோடு இருக்கும் ஜெயலலிதாவைச் சீண்டிப்பார்க்கும் செயலாகும்! இத் தீர்ப்பு, மாநில அரசையும் முதலமைச்சரையும் மட்டுமல்ல, மத்தியில் காங்கிரஸ் அரசையும் பிரதம மந்திரியையும் கூட பேர் நிர்ப்பந்தத்துக்கு உட்படுத்தியிருக்கிறது! நீதிபதி அவர்கள், தன்னால் வழங்கப்பட்டிருக்கும் இத் தீர்ப்பின் மூலம், இத்தகை நெருக்கடிகளை முன்கூட்டியே எதிர்பார்த்திருந்தாரா? அல்லது அவர் எதிர்பார்த்திருக்காத தற்செயல் நிகழ்வுகளா?

காங்கிரஸ் காரருக்கும் சரி, ஜெயலலிதாவுக்கும் சரி எவ்வித அரசியல் இலாபமும் கிட்டிவிடக்கூடாது என்பதை அடிப்படையாக வைத்துத்தான் இத்தீர்ப்பு வழங்கப்பட்டதா? என்பது எமது ஊகம்! இது நீதிபதியின் அரசியல் (பாரதீய ஜதாக் கட்சியின்) சார்புநிலையை வெளிப்படுத்தியிருக்கிறதா? அது மட்டுமலல்ல, இம் மூன்று நபர்களும் மீண்டும் தூக்குக்கயிற்றை நோக்கி நகர்த்தப்படுவார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்த நிலையில்தான் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கினாரா என்றும் சந்தேகிக்கத் தோன்றுகிறது!

கொலைக் குற்றத்துடன் நேரடித்தொடர்புகள் அற்ற இவர்களை குற்றத்துக்குரியவர்களாக மாற்றி, கோட்டில் நிறுத்தியதன் மூலம் இந்தியப் பொலீசினதும், உளவுத் துறையினரதும் ஆற்;றாமை குறித்து சந்தேகிக்கப்படவேண்டியிருக்கிறது! உண்மையில் இவர்கள் ஆற்றல் நலிந்தவர்களாக இருக்கிறார்களா? அல்லது வேலுச்சாமி கூறுவதுபோல் காந்தி குடும்பத்துக்கு ஏற்பட்ட நிர்ப்பந்தம் போல் இவர்களும் நிர்ப்பந்தங்களுக்கு ஆட்பட்டார்களர்? அல்லது பணத்துக்கு விலைபோகும் அயோக்கியர்களாகவே இருந்து பழக்கப்பட்டுவிட்டார்களா?

இலங்கையில் சாதாரண பொதுப்புத்தி மட்டத்தில் சிந்திப்பவர்களாலேயே துப்புத்துலக்கக் கூடிய மேற்படி சம்பவங்கள் சார்ந்து இந்திய காவல்துறையும் உளவுத்துறையும் நீதித்துறையும் கூட பல தவறுகளை இழைத்திருக்கிறது என்பது கண்கூடு! புலிகள் அறம் சார்ந்து செயற்படுபவர்கள் அல்ல என்பது பட்டவர்த்தனமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை! ஆனால் இங்கு அவர்களுடைய செயற்பாடுகளுடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டிராத இவர்கள் தண்டிக்கப்படுகின்றபோது ஆத்மாவின் இதயத்தைப் பிழிகின்ற அவலம் உணரப்படுகின்றது!

தூக்குத் தண்டனைக்குரிய மூன்று கைதிகளுடன் ஏற்கனவே ஆயுட்தண்டனை பெற்றிருந்த நால்வரையும் சேர்த்து ராஜீவ் காந்தியின் கொலைக்குற்றவாளிகளாகக் காணப்பட்ட மொத்தம் ஏழு பேரினதும் விடுதலையை மாநில அரசும், ஜெயலலிதாவும் அங்கீகரித்தது! இதைத் தொடர்ந்து ராகுல் காந்தியும், ராஜீவ் காந்தியின் மீதான தற்கொலைத் தாக்குதலின்போது கொல்லப்பட்ட (பொலீஸ் அதிகாரிகள் உட்பட) 16 பேரினதும் உறவினர்களும் ஊடகங்கள் வாயிலாகவும் வேறு பல வழிகளிலும் இவ் ஏழ்வரினதும் விடுதலை தொடர்பான தமது எதிர்ப்புக் குரலை ஒலித்து வருகின்றனர். அவர்களின் எதிர்ப்புக்குரல் புரிந்துகொள்ளப்பட வேண்டியதே! ஆனால் அவர்கள் கேட்கும் நீதியின் பொருட்டு, இவர்கள் தண்டிக்கப்படுவது என்பது „நூறு குற்றவாளிகள் தப்பித்துக்கொண்டாலும் நிரபராதி ஒருவன்கூட தண்டிக்கப்படக் கூடாது“ என்ற நீதித்துறையின் உயர் அறத்தை மீறுவதாக அமைகிறது!

மேலும் எதிர்கால அரசியல் வாழ்வில் முத்துக்குளிக்கும் கனவுகளுடன் காத்திருக்கும் ராகுல் காந்தி இச்சந்தர்ப்த்தில் நீதியும் நியாயத்துடனும் மட்டுமன்றி பெருந்தன்மையுடனும் நடந்துகொள்வதே பேர் அறமாகும்!

யோகா - ராஜன்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல