ஞாயிறு, 30 மார்ச், 2014

ஓ.கே. ஜெனிவாத் திருவிழா முடிஞ்சுது... பை பை..

அமெரிக்காவின் இந்த வருட திருவிழா இனிதே நிறைவுபெற்றது. மீண்டும் அடுத்தவருடம் தொடரும்.....“

ஜெனவாவிலிருந்து ஒரு நண்பர் அவசரமாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இப்படிச் சொன்னார். அவருடைய குரலில் கேலியே தொனித்தது.

இ்ந்தக் கேலி அமெரிக்காவைப் பார்த்தா, ஐ.நாவைப் பார்த்தா, இலங்கையைப் பார்த்தா, இந்தியாவைப் பார்த்தா, உலகத்தைப் பார்த்தா அல்லது நம்மை (தமிழர்களை) ப் பார்த்தா..? என்று குழப்பமாக இருந்தது.



ஆனாலும் அது நம்மைப் பார்த்துத்தான் என்று உங்களுக்கு விளங்கியிருக்கும். உங்களுக்கு இப்ப அப்பிடி விளங்காது விட்டால், கொஞ்ச நாட்போக நன்றாக விளங்கும். ஏனென்றால் வரலாறு ஒரு நல்ல பாடம் புகட்டி. அது வடிவாகக் காதில முறுக்கியோ பிடரியில குட்டியோ குண்டியில நாலு போட்டோ தன்னுடைய பாடத்தைப் புகட்டும்.

இந்திய விமானங்கள் யாழ்ப்பாணத்துக்கு மேலே சுத்தி உணவுப் பொட்டலங்களைப் போடும்போதும், இந்திய அமைதிப்படை வந்தபோதும் குண்டியில தட்டின புழுகத்தோட – “இந்தா பார், ஜே. ஆரின்ரை கதை காலி. சிங்களவன்ரை தலையில் இல்லைப் பாதி“ என்று சொல்லிக் கொண்டு திரிந்த நாம் பிறகு தலையை நிமிர்த்தவே முடியாமல் இருந்தோமே!

(நமக்கு மூக்குப் பழுதானாலும் பரவாயில்லை. எதிரிக்குச் சகுனம் பிழைக்க வேணும்“ என்ற வியாதிக்காரர் நாங்களல்லவா!)

அப்படியொரு சங்கதிக்கான அடிக்கல்லைத்தான் இப்பவும் ஜெனிவாவில் அமெரிக்காவும் அதனுடைய கூட்டாளிகளும் வைச்சிருக்கிறார்கள்.

இதை நான் மட்டும் சொல்லவில்லை. இந்தத் தீர்மானத்திற்குப்பிறகு முகப்புத்தகம் (Face Book) தொடக்கம் சகல ஊடகங்களிலும் பலரும் இதை உறுதிப்படுத்துகிறார்கள்.

பாருங்கள், முகப்புத்தக (Face Book) நிலைத்தகவல் ஒன்றை....

“ஓ..மை காட்.. அது நம்மளை நோக்கி வந்துடுச்சி... எல்லோரும் தப்பிச்சி ஓடுங்க... தாழ்வான பகுதியை நோக்கி ஓடுங்க... அமெரிக்க ஆண்டவரின் பாதங்களில் சரணடையுங்க... அவ்வவ்..“

அமெரிக்கத் தயாரிப்புகளான “ஹொலிவுட்“ படங்களில் வரும் காட்சிகளில் இந்த வசனங்களை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.

எந்தக் கிரகத்திலிருந்து என்ன மாதிரியான ஆபத்துகள் வந்தாலும் அதையெல்லாம் பந்தாடித் தீர்த்து வெற்றிக் கனியை உங்கள் வாயில் திணிக்கும் அமெரிக்கப் புச்சாண்டியே இது.

இத்தகைய ஒரு பூச்சாண்டிதான் இப்பொழுது ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கப் பிரேரணையும் அதை நிறைவேற்றிய தீர்மானமும்.

இதற்காக சில இடங்களில் வீரத்தமிழர்கள், மானத்தமிழர்கள், யப்பானியர்களோடும் இஸ்ரேலியர்களோடும் தங்களை ஒப்பிட்டுப் பெருமைப்படும் தமிழர்கள் எல்லாம் வெடிகொழுத்தியும் கேக் பரிமாறியும் கொண்டாடினார்கள்.

இதைப் பார்த்துக் கவலையும் வெட்கமும் வந்தாலும் என்ன செய்வது? இதைப்போல எத்தனை வெங்காயத்தனங்களையெல்லாம் இதற்கு முன்பும் பார்த்திருக்கிறோம்.

இதற்குள் மாவை சேனாதிராஜா அண்ணை “ தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அழுத்தம், ஆலோசனைப்படிதான் இந்த அமெரிக்கப் பிரேரணை இப்படி நிறைவேறியிருக்கு“ என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு ஒரு பேட்டியைக் கொடுத்திருக்கிறார்.

நல்லவேளை அண்ணை இதோட நிற்பாட்டிப்போட்டார். கொஞ்சம் விட்டால், அமெரிக்கக்காரனுக்கு சோப்புப்போட்டுக் குளிப்பாட்டி, எண்ணை வைத்துத் தலை சீவி விடுவதுவரை தமிழ்க்கூட்மைப்புத்தான் என்றும் கதைவிட்டிருப்பார்.

“ஊரானுக்கு வால்பிடிக்கிறதிலேயே நம்மட ஆக்களின்ரை சீவியம் போகுது. நமக்குத்தான் சீலை நழுவுது“ என்று அனுபவசாலிகள் சொன்ன வார்த்தை பொய்யல்ல. அது பொன்.

வெடிகொழுத்திற கூட்டத்தையும் விசிலக்கிற ஆட்களையும் வளர்த்தெடுப்பதே அரசியற் பணி என்றால், அப்படியான கூட்டமே தமிழீழத்திற்கான ஆதரவுப் படையென்றால் அரோகராத்தான்.

“ஒரு படத்தில் ஜனகராஜ் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் என் தங்கச்சிக்கு நாய் கடிச்சிடுச்சு என்று அழுவார். அது போலவே அமெரிக்க தீர்மானம் நிறைவேறி விட்டது என்று பலர் சம்மந்தமில்லாமலே புலம்புகிறார்கள். உண்மையில் இந்தத் தீர்மானத்தை வைத்து ஈழத் தமிழர் நாக்கு வழிக்கக்கூட முடியாது“ என்று ஒரு ஆய்வாளர், பட்டறிவாளர் சொன்னதைத்தான் நானும் மீண்டும் சொல்ல முடியும்.

இதேவேளை இன்னொன்றையும் கட்டாயம் சொல்ல வேணும். தமிழர்களையோ சிறுபான்மை மக்களையோ ஏமாத்திப் பிழைக்கலாம். அவர்களைத் தெருவில் விட்டுவிட்டு தாங்கள் மெத்தையில் உறங்கலாம் என்று “கொழும்புக்காரர்“ இனியும் எண்ணக்கூடாது.

உள் வீட்டைச் சுத்தமாக வைக்கவில்லை என்றால் ஒரு நாளைக்குப் பி.எச். ஐ. வந்து பிடிப்பான்“ என்பதை விளங்கினால் சரி.

இது மகிந்த ராஜபக்ஷ கொம்பனிக்கு மட்டுமல்ல, சிங்கள மக்களுக்கும்தான்.

ஓ.கே. இந்த வருச ஜெனிவாத் திருவிழா ஒருமாதிரி முடிஞ்சுது.

23 - ஆதரவு
12 - எதிர்ப்பு
12 - வாயை பொத்திக்கிட்டு இருந்தது
இனி அடுத்த தடவை பாப்பம்

பை பை பை!!!

- வடபுலத்தான்

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல