புதன், 12 மார்ச், 2014

''அமைதியை விரும்பும் தமிழக மக்களுக்கு விடப்படும் சவால்!''

 - ஏழு பேர் விடுதலை பற்றி ஒரு வாசகர் கடிதம்!

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு, ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை தமிழக அரசு விடுதலைசெய்ய எடுத்த முடிவு, அதற்கு தமிழ் அமைப்புகள் தெரிவித்துவரும் ஆதரவு ஆகியவை பற்றி திருச்சி திருவானைக்கோவில் பகுதியைச் சேர்ந்த வாசகர் மூ.சுதந்திர செல்வன் எழுதியுள்ள கடிதத்தின் சில பகுதிகள்:



ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு கொலைக்குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக முதல்வர் அறிவித்தவுடன், இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடும் மனிதர்களை நினைத்தால், 'நெஞ்சு பொறுக்குதில்லை... இந்த நிலைக்கெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்’ என்ற மகாகவி பாரதியாரின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. ராஜீவ் காந்தி இந்திய திருநாட்டின் பிரதமராக இருந்து கம்ப்யூட்டர் வளர்ச்சிக்கு வித்திட்டவர். அவரே மீண்டும் பிரதமராக வருவார் என்ற நேரத்தில், வெளிநாட்டுத் தீவிரவாத கும்பலால் திட்டமிட்டு மனித வெடிகுண்டால் கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்குக் காரணமானவர்களே... இன உணர்வு என்ற விஷத்தைத் தூவி விடுதலைப் புலிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் தீவிரமாக ஆதரித்தவர்கள்தான். ஏனென்றால், தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் சுதந்திரமாக நடமாடுவதற்கு உதவியவர்கள் அவர்கள்தான். தமிழ், தமிழர் நலன் என்று பேசி, உணர்வுகளைத் தூண்டிவிட்டு, பிரிவினைவாதம் பேசி சுயலாபம் அடைய நினைப்பவர்களுக்குக் கீழ்க்கண்டவற்றை முன்வைக்கிறேன்.

1. 1965-ம் வருடம் இந்தி எதிர்ப்பு என்ற பெயரால் நான்கு தலைமுறைகளை இந்தி கற்றுக்கொள்ள முடியாமல் செய்தவர்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இன்று வரை ஆயிரக்கணக்கான ஆங்கில பயிற்று மொழிப் பள்ளிகள் தொடங்கப்பட்டு இருக்கிறதே? அந்தப் பள்ளிகளில் இந்தி கற்றுத்தரப்படுகிறது. அவற்றில் படிப்பவர்கள் எல்லாம் இந்தியை எதிர்ப்பதாகப் பறைசாற்றிக் கொண்டவர்களின் வீட்டுப் பிள்ளைகள்தானே? பணம் இருப்பதால் அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் இந்தி படிக்கிறார்கள். இதனால் பாதிக்கப்படுபவர்கள் ஏழை வீட்டு தமிழர்கள் பிள்ளைகள்தானே?

2. தமிழையே தாய்மொழியாகக்கொண்டு இரண்டாயிரம் ஆண்டுகளாக இங்கே வாழ்ந்துகொண்டு இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள், பல கிராமங்களில் சாதி இந்துக்கள் வாழும் தெருக்களில் செருப்பணிந்து செல்வதற்கு உரிமை மறுக்கப்படுகிறது. இரண்டு சக்கர வாகனங்களில் ஏறிச் செல்லக் கூடாது என்றும் கட்டுப்பாடு இருக்கிறது. அவர்களுக்கு இரட்டை டம்ளர் வைத்து டீ வழங்கப்படுகிறது. தமிழர் நலன் பேசுபவர்கள் இதை எதிர்த்துப் போராட்டம் நடத்தியது உண்டா? அப்படி போராட்டம் நடத்தினால், மற்ற சாதி வாக்குகள் தங்களுக்கு விழாது என்ற சுயநலம்தானே?

3. ஓர் உயிரை எடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று மனித நேயம் பேசுபவர்களுக்கு... ராஜீவ் காந்தியுடன் 18 பேர் கொல்லப்பட்டார்களே... அவர்களும் தமிழர்கள்தானே. அப்போது எங்கே போயிற்று மனித நேயம்?

4. கொலைகாரர்களில் ஒருவரான நளினிக்கு பெண் என்ற முறையில் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பரிந்துரை செய்தது சோனியா காந்திதானே? அந்த மனித நேயத்தை இவர்கள் பாராட்டியது உண்டா? அதுதானே உண்மையான மனித நேயம்?

5. ஏழு பேர் விடுதலையை இனத்தின் அடிப்படையில் கொண்டாடுவதை ஏற்றுக்கொண்டால்... அப்சல் குரு தூக்கிலிடப்படாமல் விடுதலை செய்யப்பட்டு, அவரைச் சார்ந்த சிறுபான்மை சமூகத்தவர்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி இருந்தால், சிறுபான்மைச் சமூகத்தவர்கள் பல இடங்களில் தாக்கப்பட்டு இருப்பார்கள். பல இடங்களில் மதக்கலவரம் நடந்திருக்குமே?

7. 'பேரறிவாளன் பேட்டரி வாங்கிக் கொடுத்தார். அது ராஜீவ் காந்தியைக் கொல்வதற்காகத்தான் என்பது அவருக்குத் தெரியாது’ என்று அவர் தாயார் சொல்கிறார். 'பேட்டரி வாங்கியதற்கான பில்லை பேரறிவாளன் வேறொருவரின் பெயரில் வாங்கினார் என்று பேட்டரி கடையின் உரிமையாளர் சாட்சியம் அளித்திருக்கிறார்’ என்கிறார் விசாரணை அதிகாரி ரகோத்தமன். பேட்டரி வாங்கியது சாதாரணமாகத்தான் என்றால், பில்லை ஏன் வேறு ஒருவர் பெயரில் வாங்க வேண்டும்?

8. இரண்டு சகோதரர்களுக்குள்ளோ அல்லது நண்பர்களுக்குள்ளோ ஏற்படும் வாய் தகராறு முற்றி கொலையில் முடியும் சம்பவங்களை நாம் நித்தமும் பார்க்கிறோம். அதுபோன்ற கொலைச் சம்பவங்களில் ஈடுபடும் கொலையாளிக்கு வேண்டுமானால் ஆயுள் தண்டனை வழங்கலாம். ஏனெனில் அதுபோன்ற கொலைகள், உணர்ச்சி வேகத்தில் நடைபெறுவது. ஆனால், ராஜீவ் கொலை போன்ற சம்பவங்கள் திட்டமிட்டு, பல்வேறு சதிகள் செய்து செய்யப்படுவது. அதற்குத் தூக்கு தண்டனைதான் வழங்கப்பட வேண்டும்.

9. சாதி, மதம், இனம், மொழி என்ற அடிப்படையில் திட்டமிட்டு கொலை செய்யும் கொலையாளிகளையோ அல்லது தீவிரவாதிகளையோ விடுதலைசெய்தால் என்ன நடக்கும்? தங்கள் சாதி சார்ந்த கொலையாளிகளை விடுதலைசெய்ய வேண்டும் என்று சாதியச் சங்கங்கள் போராடினால், சட்டம் - ஒழுங்கு என்னவாகும்? அமைதியை விரும்பும் பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடியுமா?

சமீபத்தில் மதுரை வந்திருந்த கட்சித் தலைவர் ஒருவரை பரோலில் வெளிவந்த ஆயுள் தண்டனை கைதி ஒருவர் பார்த்து, 'நீங்கள் முதல்வரைச் சந்திக்கக் கூடியவர். என் விடுதலைக்காக சி.எம்-மிடம் சிபாரிசு செய்தால் நம்ம சாதி ஓட்டுகள் அப்படியே உங்களுக்கு...’ என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். இப்படி ஒவ்வொரு சாதியினரும், அரசியல் கட்சியைச் சார்ந்தவரும் கொலை குற்றவாளிகளை விடுதலைசெய்யச் சொல்லிப் போராடினால், நாடு என்ன ஆகும்? 'நமக்குப் போராட ஆட்கள் இருக்கிறார்கள்’ என்ற எண்ணம் ஏற்பட்டு, யாரும் யாரையும் கொலைசெய்யலாமே! அப்படி ஒரு நிலை ஏற்படுமாயின், அப்புறம் சட்டம் எதற்கு? காவல் துறை எதற்கு? நீதிமன்றம் எதற்கு?

10. ராஜீவ் காந்தியைக் கொலைசெய்த குற்றவாளிகளை சுய லாபத்துக்காகவோ அரசியல் லாபத்துக்காகவோ விடுதலைசெய்வது என்பது ஒரு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும். இது இந்திய இறையாண்மைக்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் விடப்பட்ட சவால் மட்டுமல்ல... அமைதியை விரும்பும் தமிழ்நாட்டு மக்களுக்கும் விடப்பட்ட ஒரு பெரும் சவாலாகவே அமையும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல