திங்கள், 14 ஏப்ரல், 2014

இந்தியா கைவிடாது... அமெரிக்கா கைவிடாது... தமிழர்களைச் சனியனும் கைவிடாது....

'சாய்.... என்ன மாதிரிச் சனங்களின்ரை காதில பூவை வைக்கிறாங்களப்பா..' என்று கவலைப்படுகிறார் ஒரு நண்பர்.

என்னுடைய கவலை வேறு. 'இந்தச் சனங்கள் தங்களின் காதுகளில் ஓட்டைபோட்டு மற்றவர்கள் பூவைச் செருகுவதை வலு இன்பமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்' என்று.



இல்லையென்றால், 'இந்தியா வரும் - உதவும்' என்றும் 'அமெரிக்கா வரும் - உதவும்', 'அமெரிக்கக்காரன் விடமாட்டான்' என்றும் 'ஐ. நா. வரும் - உதவும்' என்றும் எத்தனை புலுடாக்களை இந்தத் 'தமிழ்மண்ணாங்கட்டிகள்' (தமிழ்த்தலைமைகள்) சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள்.

இப்படி வந்த இந்தியாவைத்தான் நாங்கள் எப்படிக் கையாண்டனாங்கள்? தமிழருக்கு ஆதரவாக வந்த இந்தியாவை சிங்களத்தலைமைக்கு – கொழும்பு அரசாங்கத்துக்கு - ஆதரவாக மாற்றிய பெருமை எங்களைத் தவிர வேறு யாருக்குண்டு?

இதுக்குப் பிறகு, நோர்வேயின் அனுசரணையோடு வந்த சமாதானப் பேச்சுவார்த்தையைக் கூட முறிச்சுக் குப்பைக் கூடைக்குள் போட்டு விட்டுப் பதுங்குகுழிக்குள் இறங்கிச் சவக்குழிக்குப் பலியாகிச் சுடலை (முள்ளிவாய்க்கால்) வரை போனோமே....!

விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்த ஒரு அமைப்பை (விடுதலைப்புலிகளை) உலகம் தடைசெய்து ஒடுக்குமுறை அரசை ஆதரித்தது என்றால்... உலகம் எப்படியிருக்கிறது, எப்படிச் சிந்திக்கிறது? என்று எங்களுக்கு விளங்கியிருக்க வேண்டும்.

இதையெல்லாம் கணக்கில் எடுக்காமல் உலகத்தைப் பற்றித் தப்பாகக் கணக்குப் போட்டதால் வந்த வினையையே அறுவடை செய்தோம். அந்த அறுவடையே பிணவாடையாக இருந்தது.

இதிலிருந்து நாங்கள் புரிந்து கொள்ள வேண்டியதாக இருந்தது என்ன?

அமைதியாக வாழ விரும்பினால் சுதந்திரமாக நடமாடலாம். வெளிப்படையாகத் திரியலாம். காயங்களும் வலிகளும் இல்லாமல் வாழலாம். சந்தோசமாக இருக்கலாம்.

அமைதியைக் குலைத்தால், அமைதிக்கெதிராகச் சிந்தித்தால் நெருக்கடிகளும் பிரச்சினைகளுமே நம்மைச் சூழும். சொந்த வீட்டிற்கூட இருக்க முடியாது. அமைதிக்கெதிராகச் சிந்தித்தால் அது நம்முடைய மடியினுள்ளே பாம்பைப் பிடித்து நாமே விட்டமாதிரித்தான்.

ஆனால். ஒடுக்குமுறையும் இனப்பாரபட்சமும் அரசியல் அந்தஸ்த்தும் இல்லாமல் எப்படி நாங்கள் அமைதியாக இருக்க முடியும் என்று நீங்கள் கேட்பதும் முணுமுணுப்பதும் தெரிகிறது
.
இந்தக் கேள்விகளும் முணுமுணுப்பும் எனக்குள் மட்டுமில்லையா?

இந்தக் கேள்விகளுக்கான - இந்தப் பிரச்சினைகளுக்கான பதில்களை நாங்கள் யாரிடம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதே என்னுடைய கேள்வி.

மீண்டும் அந்நியர்களிடம், அந்நியச் சக்திகளிடம்... தானா!

அப்படியென்றால் கதை கந்தல்தான். மீண்டும் கோவிந்தாதான். மீண்டும் மீண்டும் வேதாளம் முருங்கையில்தான்...

வன்னியில் மூன்று லட்சம் சனங்கள் அவலப்பட்டுக்கொண்டிருந்த போது 'வணங்கா மண் கப்பல் இந்தா வருது, அமெரிக்கப்படைகள் அந்தா வருது' 'ஐ.நாவின் மீட்பு அணிகள் கிட்ட வந்து கொண்டிருக்கு' 'பாரதிய ஜனதாவின் வெற்றி உறுதி என்றால் புலிகளின் வெற்றியும் உறுதி' 'அமெரிக்காவில் ஒபாமாவின் வெற்றி - ஈழத்தில் எங்களின் வெற்றி' என்று எத்தனை புலுடாக்களையெல்லாம் விட்டார்கள். மன்னிக்கவும், இப்படி எத்தனை பூக்களை இந்தச் சனங்களின் காதுகளில் செருகினார்கள்.

இப்படிப் பூக்களைச் செருகிச் செருகியே ஒரு அம்பாரம் பூக்கொத்து தமிழர்களின் காதுகளில் இப்பொழுது இருக்கிறது. போதாக்குறைக்கு காதுகளில் துளைபோட்டுப் பூவைச் செருகும் அளவுக்கும் நிலைமை முன்னேறியிருக்கிறது.

உலகம் அறத்தின்படி இயங்குகிறதா? அல்லது நலன்களின்படி இயங்குகிறதா?

அறத்தின்பாற்பட்டு உலகம் இயங்கினால், உலகத்தில் கண்ணீரோடும் கம்பலையோடும் அலைகின்ற மக்களுக்கெல்லாம் கௌரவமான தீர்வும் கண்ணியமான வாழ்க்கையும் நீதியும் எப்பவோ கிடைத்திருக்கும்.

நலன்களின் தேவைக்கேற்றமாதிரி உலகம் இயங்கிக் கொண்டிருக்கிற படியால்தான் அந்த நலன்களின்படி நீதியும் நியாயமும் நிறுத்துக் கொட்டப்படுகிறது. யார் யாரெல்லாம் - எங்கெங்கேயெல்லாம் நலன்களுக்கு வாய்ப்பளிக்கக் கூடிய நிலை இருக்கிறதோ அதன்படியே இந்த வல்லாதிக்கச் சக்திகளின் தராசு நிறுக்கும். அப்படித்தான் அது நிறுத்துக்கொண்டிருக்கிறது.

இது மிகச் சாதாரணமாகவே எல்லோருக்கும் தெரிந்த – தெரிய வேண்டிய அரசியல் அறிவு.

இதற்கெல்லாம் அரசியலில் அப்புக்காத்துமாராகவோ ஆய்வாளராகவோ இருக்க வேண்டியதில்லை.

ஆனால். இந்த அறிவையெல்லாம் குப்பைத் தொட்டிக்குள் தூக்கிப் போட்டு விட்டு நம்மவர்கள் காதுகளில் பூவை வைக்கும் காரியத்தையே பார்க்கிறார்கள்.

நல்லாய்த்தானிருக்கிறது, இந்தியா எங்களைக் கைவிடாது... அமெரிக்கா எங்களைக் கைவிடாது.... ஐ. நா எங்களைக் கைவிடாது... சனியனும் தமிழர்களைக் கைவிடாது...

'பக்கத்திலிருக்கும் பிச்சைக்காரனை விட தூரத்திலிருக்கும் பணக்காரனால் புண்ணியமில்லை'.

 - வடபுலத்தான்

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல