வியாழன், 17 ஏப்ரல், 2014

ஒரு பாவத்தை மறைக்க இன்னொரு பாவம் செய்யாதீர்கள்!

ஒரு துறவியின் துறவு என்பது ஈழத்தின் எழுத்தாளர் இராசரத்தினம் அவர்கள் எழுதிய சிறுகதை. தாய் ஒருவர் தன் ஆண் குழந்தையைத் துறவியாக ஆக்குவேன் என்று எடுத்த சத்தியத்தின் காரணமாக, அவரது மகன் பெளத்த துறவியாகுகிறார்.துறவு என்பதில் இம்மியும் விருப்பமில்லாத அந்தத் துறவி தன் துறவைத் துறந்து போவதைப் பற்றிக் கூறுவதுதான் அந்தச் சிறுகதை.தாயின் தந்தையின் விருப்பத்திற்காக துறவிக் கோலம் பூணுவது என்பது மிகவும் வேதனையான விடயம்.



துறவிகள் பல் சமயங்களில் இருந்தாலும் துறவு என்பதை இந்து சமயம் மிக தெளிவாகக் கூறி நிற்கின்றது.

மகனுக்கு மகன் பிறந்த பின் துறவு பூணுவது பொருத்துடையது என்கிறது இந்து தர்மம்.

இந்து தர்மத்தின் பிரகாரம் ஒவ்வொருவரும் இல்வாழ்க்கையில் இணையவேண்டும். இல் வாழ்வு என்பது ஒரு அறம். அந்த அறத்தை கடைப்பிடித்து தர்மம் செய்யவேண்டும்.

இவ்வாறாக இல்லறம், துறவறம் பற்றிப் பேசுகின்ற இந்து சமயம் எதையும் உன்விருப்பத்திற்கு அமையச் செய் என்கிறது.

நீ ஆறறிவு படைத்த மனிதன். ஆறறிவு என்பது இறைவனைப் புரிந்து கொள்கின்ற அறிவு.

ஐந்தறிவு கொண்ட ஜீவராசிகளில் இருந்து மனிதன் வேறுபடுவதற்குக் காரணம் ஆறாவது அறிவு. அந்த ஆறாவது அறிவு கடவுள் பற்றிய தேடல் அறிவாகும்.

ஆக, ஆறறிவு படைத்த உனக்கு, சமயம் என்பதன் ஊடாக தத்துவம் முன்வைக்கப்பட்டுள்ளது. அதை நீயோ புரிந்து கொள். உனது புரிதலின் ஊடாக அதைக் கடைப்பிடிப்பதற்கும், தூக்கி எறிவதற்கும் பூரண சுதந்திரம் தரப்படுகிறது முடிவு- தீர்மானம் உன்கையில் என்பதாக, இந்து சமயம் போதனை செய்கிறது.

எனவே, இதில் இருந்து துறவு என்பது துறவை மேற்கொள்பவரின் விருப்பமாக இருக்கவேண்டும். இன்னொருவரின் விருப்பத்திற்காக, இன்னொருவர் நேர்ந்து விட்டார் என்பதற்காக யார் ஒருவர் துறவு கொள்கிறாரோ அவரால் துறவுக்கும் மனித சமூகத்திற்கும் பங்கம் ஏற்படவே செய்யும்.

இன்றைய காலகட்டத்தில் யாரையும் நம்ப முடியாது என்று கூறும் அளவில் நிலைமை உள்ளது.

நாளாந்தம் நாம் அறிகின்ற செய்திகள் அவற்றின் பின்னணியில் பேசப்படுகின்ற திடுக்கிடும் தகவல்கள் எங்கள் வாழ்வியலின் அடிப்படைகளையே சிதைத்து சீரழித்து விடுவதாக உள்ளன.

எங்கும் எதிலும் புறநடைகள் இருக்கவே செய்யும் என்பதை எவரும் மறுக்கமுடியாது. அதற்காக புறநடைகளைப் பாதுகாப்பதோ அல்லது புறநடைகள் எதுவும் எங்களிடம் இல்லை என்பதாகக் காட்ட நினைப்பதோ அபத்தம்.

எது உண்மையோ, அந்த உண்மையை வெளிப்படுத்துவதுதான் மனிதப் பண்பு. அதைத்தான் துறவு என்கிறோம்.

ஆக, மன்னிப்பது வேறு; மறைப்பது வேறு. துறவுக்குள் மறைப்பு இருக்கமுடியாது. மறைப்பு இருக்கக் கூடிய துறவுக்கு மன்னிக்கக் கூடிய மகிமையும் இருக்க முடியாது. என்ன செய்வது? தெய்வீகம் என்பதில் நாம் வைக்கின்ற நம்பிக்கைகள் குறைகின்றபோது மன்னிப்பு என்பதை விட மறைப்புகளே மேலோங்கி நிற்கும்.

உயிர்ப்பும் உயிரும் நானே! என்னில் விசுவாசமாக இருப்பவர் இறப்பிலும் வாழ்வார் என்ற புனித வாக்கு; எதையும் மறைக்காதீர்கள், எவருக்கும் பாவம் செய்யாதீர்கள் என்பதையே சுட்டி நிற்கிறது.

ஆம், ஒரு பாவத்தை மறைக்க இன்னொரு பாவம் செய்யாதீர்கள். பாவ மன்னிப்பு வழங்கும் உரிமை மதகுருமாருக்கோ, சட்ட வைத்திய அதிகாரிகளுக்கோ, பொலிஸாருக்கோ கிடையாது என்பது உண்மை வாக்கு.

editorial valampurii
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல