வெள்ளி, 18 ஏப்ரல், 2014

காணாமற் போனவைகளின் தேசமும் பேய்கள் பிசாசுகளுக்கான வாசலும்

காணாமற்போன விடயங்களின் பட்டியலில் இலங்கையில் கன விசயங்கள் சேர்ந்து கொண்டிருப்பது வரலாறு. இந்த வரலாறு சிலருக்குச் சுவையாது. சிலருக்குச் சோகமானது. வரலாற்றின் விசித்திர குணமே அதுதான். அது சிலருக்குச் சுவையாக இருக்கும். சிலருக்குச் சோகமாக இருக்கும்.


இப்படியான ஒரு வரலாற்றில்தான், 1983 இல் நடந்த இனவன்முறையையும் வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலையையும் விசாரிக்க எண்டு நிய மிக்கப்பட்ட விசாரணைக்குழு காணாமல் போனது. மூதூரில் 2007 இல் அக்ஸன் பெய்ம் தொண்டு நிறுவனப்பணியாளர்கள் 17 பேரின் கொலை தொடர்பாக விசாரிக்க எண்டு நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவும் காணாமற் போய்விட்டது.

இடையில், சர்வகட்சிகள் கூட்டம், வட்டமேசை மாநாடு என்று இனப்பிரச்சினையின் தீர்வுக்கு என உருவாக்கப்பட்ட அமைப்புகளும் எடுக்கப் பட்ட முயற்சிகளும் காணாமற்போய் விட்டன. இப்பொழுது பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான நாடாளுமன்றத் தெரிவுக்குழு சேடமிழுத்து, சேடமிழுத்தபடி இன்னும் உயிரோடிருக்கிறது. இதுவும் எப்ப மண்டையைப்போடும், எப்பகாணாமற்போகும் எண்டு தெரியேல்ல.

இறுதியாக உருவாக்கப்பட்ட நல்லிணக்க முயற்சிகளுக்கான குழுவும் மீளிணக்க முயற்சிகளும் கூட இன்னும் கொஞ்சக் காலத்தில் காணாமற்போயிடும். ஆனால், ஒரேயொரு விசயம் மட்டும் காணாமற்போகாது. அது தேயவோ மறையவோ கூட மாட்டாது. ஏனெண்டால், அதுக்கு இலங்கையில் உள்ள பல தரப்புகளும் நல்லாத் தண்ணி வார்த்து, உயிரூட்டிக்கொண்டேயிருக்கிறார்கள். தங்கள் தங்கள் வீடுகளில் மட்டுமல்ல, அதை அவர்கள் தங்கள் மனதிலேயே வளர்த்துப் போசித்து வருகிறார்கள்.

படித்தவர்கள் இன்னும் அதற்கு ஊட்டச்சத்து வேறு கொடுக்கிறார்கள். அது அவ்வளவு கெதியாக அழிந்து விடக்கூடாது என்பதில் அவர்கள் எல்லாம் வலு கவனமாக இருக்கிறார்கள். சிலர் அதுக்கு நன்றாகச் சோப்புப் போட்டுக் குளிப்பாட்டி, அலங்காரம் வேறு செய்கிறார்கள். பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் எல்லாம் அதை உறங்கவிடாமல் விளம்பரப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள்.

அதுதான் இனப்பிரச்சினையும் தீர்வு காணப்படாத தீர்வு முயற்சியும். மன்னிக்கவும், இதைக் கொஞ்சம் திருத்திச் சரியாகச் சொல்கிறேன். இனவாதமும் அதைச் சவப்பெட்டிக்குள் கொண்டு போக முடியாத தீர்வு காணக்கூடாது எண்ட முயற்சிகளும். சுதந்திர இலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் சிங்களவர்களும் சிங்கள வர்களும் தமிழர்களும் தமிழர்களும் தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்களவர்களும் முஸ்லிம்களும் என்று ஆளுக்காள் மாறிமாறி அடிபட்டுக் குத்துப்பட்டுச் செத்த தொகை, இலங்கையின் சுதந்திரத்துக்காக 1505 இலிருந்து 1948 வரை போராடிச் செத்ததையும் விடப் பல மடங்கு அதிகம்.

வரலாற்றின் சுவை எப்படியிருக்கிறது பார்த்தீர்களா? இப்படி முட்டாள்கள், மூடர்கள், இன வெறியர்கள், சொல்வழி கேளாதவர்களினால் மேய்க்கப்படுகின்றன – ஆட்சிசெய்யப்படுகின்றன – இலங்கைச் சமூகங்கள். இல்லை யென்றால், போர் வெறியும் பகையுணர்ச்சியும் ஆளையாள் எதிர்க்கின்ற வியாதியும் சந்தேகப் புத்தியுமாக இன்னும் இருப்பார்களா? இத்தனைக்குப் பின்னும் இதை மாற்றி அமைக்க வேணும், பல்லாயிரம் உயிர்களைப் பலியெடுத்த, பல கோடிக்கணக்கான சொத்துக்களையும் இயற்கை வளங்களையும் தொழிற்துறைகளையும் பல்லாயிரக்கணக்கானவர்களின் எதிர்காலத்தையும் அழித்த இனவாதத்தை இல்லாதொழிக்க வேணும் என்று இதுவரையில் எந்தப் பயலாவது முயன்று பார்த்திருக்கிறானா? அல்லது முயன்று பார்த்திருக்கிறாளா? இங்கே பயல் என்று நான் குறிப்பிடுவது, உருப்படியான அரசியற்தலைவர்கள், மதத்தலைவர்கள், புத்திஜீவிகள், நியாயமான ஊடகவியலாளர்கள், பொறுப்பான சமூகச் செயற்பாட்டாளர்கள்… போன்றோரைக் குறிக்கும்.

உண்மையில் – விசுவாசமாக சிலர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும். இந்த இனவாதப்பேயை விரட்டியடிக்க வேண்டும் என்று கடுமையாக முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், அவர்களை இந்த இனவாதப்பேய்கள் விரட்டியடித்துக் கொண்டிருக்கின்றன. என்றபடியால்தான் அவர்கள் எல்லாம் தேர்தல்களில் தோல்வியையும் மக்களிடத்தில் செல்வாக்கில்லாத நிலையையும் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இனப்பேயைத் தங்கள் தங்கள் பாயோடு வைத்து ஒண்டாகப் படுத்து எழும்பிக்கொண் டிருக்கும் மக்களுக்கு வெள்ளைத் தேவதையாக வரும் அமைதியும் நல்வாழ்க்கையும் சமாதானமும் பிடிக்காது. பிடிக்கவே பிடிக்காது. முன்னைப் பின்னை அமைதியின் ருசியை, சமாதானத்தின் வாசனையை, நல்வாழ்க் கையின் சுவையைப் பற்றி எப்படித் தெரியும்? என்று ஒரு அன்பர் கேட்பதிலும் நியாயமுண்டு.

அப்படியென்றால் இது பேய்ச்சமூகங்களின் தேசமா? சந்தேகமேயில்லை, இனப்பேய்கள், இனவாதப்பிசாசுகளின் தேசமேதான். இப்படி இனப்பேய்களின் தேசமாக இருப்பதால்தான் இந்த நாட்டில் அமைதி காணாமற்போனது. நிம்மதி காணாமற்போனது. செல்வச் செழிப்புக் காணாமற் போனது. வளங்கள் காணாமற்போனது. நல்வாழ்க்கை காணாமற்போனது. நல்ல தெரிவுகளும் நல்ல தலைவர்களும் காணாமற்போனார்கள். உங்கள் பிள்ளைகளும் கணவன்களும் அப்படித்தான் காணாமற்போனார்கள்.

இப்படி இனப்பேய்கள் வாழ்கின்ற தேசமாக இருப்பதால்தான் இந்த நாட்டில் அந்நியப் பிசாசுகள் – வல்லரசுகள் எல்லாம் மிகச் சுலபமாகத் தங்கள் கையையும் காலையும் விட்டு நம் கண்ணையும் பல்லையும் எலும்பையும் பிடுங்கப்பார்க்கின்றன. எங்கள் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கப்பார்க்கின்றன. இறுதியில் காணாமற்போவது எங்கள் உடலும் உயிருமாகவே இருக்கப்போகிறது. அதாவது, நாங்களாகவே இருக்கப்போகிறது.

ஆமாம், இது காணாமற்போனவர்களின் – காணாமற்போனவைகளின் தேசமேதான். மிஞ்சியிருப்பது இனப்பேயும் அந்நியப் பிசாசுகளுக்கான வாசலுமே….

வடபுலநாதன்-
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல