வியாழன், 22 மே, 2014

பிரபாகரன் உயிரிழந்து 5 ஆண்டுகள்: அன்று அதிகாலை நந்திக்கடலில் என்ன நடந்தது? 02

இறுதிப் பாகம்

கடந்த பாகத்தை தவற விட்டிருந்தால், இங்கே கிளிக் செய்யவும்

மீண்டும் சற்று பின்நோக்கி போகலாம். 2009-ம் ஆண்டு மே, 17-ம் தேதி. மாலை 6 மணி.

விடுதலைப் புலிகள் இருந்த சிறிய பகுதியை சுற்றி முற்றுகையிட்டிருந்த இலங்கை ராணுவ படைப்பரிவுகளில், 58-வது, 59-வது படைப்பிரிவுகளின் முற்றுகை லைன் பாதுகாப்பு ஏற்பாடுகளை செக் பண்ணிக்கொண்டு இருந்த தளபதி லெப். கர்னல் செனக விஜேசூர்யவுக்கு போன் அழைப்பு வந்தது.

பேசியவர், வன்னி ஆபரேஷன் கமான்டர், மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூர்ய.

“விடுதலைப் புலிகளின் ரேடியோ தொடர்புகளை ஒட்டுக் கேட்டதில் இருந்து, இன்றிரவு அவர்கள் முற்றுகை லைனை உடைத்துக் கொண்டு வெளியேறும் திட்டம் ஒன்று வைத்திருப்பது தெரிகிறது. அவர்கள் தமது ரேடியோ உரையாடலில் படகுகள் பற்றி பேசினர். எனவே, இந்த தாக்குதல் நந்திக்கடல் பக்கம் இருந்து வரலாம். உங்களது டிவிஷன் பாதுகாப்பு லைனை பலமாக வைத்திருங்கள். இன்றிரவு தாக்குதல் நடக்கலாம் என சொல்கிறது எம்.ஐ. (மிலிட்டரி இன்டெலிஜென்ஸ்)” என்றார்.

செனக விஜேசூர்யாதான், 59-வது படைப்பிரிவு, நந்திக்கடல் கரையில் முற்றுகை லைன் அமைத்திருந்த செக்டருக்கு கமாண்டர்.

மாலை 6 மணிக்கு இருட்ட தொடங்கியிருந்த நேரத்தில், நந்திக்கடல் பகுதியில் எந்த நடமாட்டமும் இல்லை என்பதை அவர் கவனித்தார்.

இந்த நந்திக்கடல் என்பது கடல் ஏரி. சுமார் 5 கி.மீ. அகலமானது. சில இடங்களில் இடுப்பளவு தண்ணீர் (மேலே போட்டோ பார்க்கவும்) சில இடங்களில் ஆழம் அதிகம். கரையில் சில இடங்களில் மாங்குரோவ் புதர்கள் உள்ளன.

இரவு 7 மணி.

நந்திக்கடலில் தொலைவில் இரு படகுகள் வருவது முழுமையாக இருள் சூழாததால் சாதாரண கண்களுக்கே தெரிந்தன. இரு படகுகளும் கடல்புலிகளின் படகுகள் என்பதை அவற்றின் ஷேப்பை வைத்தே தெரிந்து கொள்ள முடிந்தது. 59-வது படைப்பிரிவு முற்றுகை லைன் இருந்த இடத்தை நோக்கி வந்த இரு படகுகளும் கரையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் நின்று விட்டன.

கரையில் முற்றுகை லைனில் இருந்த தனது சிப்பாய்களுக்கு, படகுகளை நோக்கி சுட வேண்டாம் என கடுமையாக உத்தரவு கொடுத்திருந்தார், செனக விஜேசூர்ய. “படகில் இருந்து சுட்டால்கூட திருப்பி சுட வேண்டாம்”

இதற்கு காரணம் என்னவென்றால், கரையில் இருந்து இவர்கள் சுட்டால், எந்தெந்த இடங்களில் இவர்களது சக்தி வாய்ந்த துப்பாக்கிகள் உள்ளன என்பதை கடல்புலி படகில் உள்ளவர்கள் தெரிந்து கொள்வார்கள் என்பதே!

கடல்புலி படகுகள் இரண்டும் அந்த காரணத்துக்காகதான் வந்து நின்றன போலிருக்கிறது. சுமார் அரை மணி நேரம் நின்று விட்டு, திரும்பி சென்றுவிட்டன.

இரவு 8 மணி.

மீண்டும் இரு படகுகள் வந்து அதே இடத்தில் நின்றன என்பதை military night google equipments மூலம் பார்க்க முடிந்தது. இம்முறை அந்த படகுகள் அரை மணி நேரத்தில் திரும்பி செல்லவில்லை. தொடர்ந்து அங்கேயே நின்றிருந்தன.

இரவு 11 மணி.

இரண்டு படகுகள் தெரிந்த இடத்தில் இப்போது 4 படகுகள் தெரிந்தன. 4 படகுகளில் ஒரேயொரு படகு கரையை நோக்கி வரத் தொடங்கியது. கரையில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் வந்துவிட்ட அந்தப் படகில் இருந்து கரையை நோக்கி சுட தொடங்கினார்கள். அந்த நேரத்தில் பின்னணியில் கரையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் பல படகுகள் தெரியத் தொடங்கின. அவை கரையை நோக்கி வேகமெடுப்பது தெரிந்தது.

விடுதலைப் புலிகள் 59-வது படைப்பிரிவு முற்றுகை லைனை உடைப்பதற்காக வந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது கரையில் இருந்த ராணுவத்துக்கு புரிந்தது.

அந்த இருளில், சுமார் எத்தனை படகுகள் வருகின்றன என்பதை கரையில் இருந்தவர்களால் ஜட்ஜ் பண்ண முடியவில்லை.

முதலில் கரைக்கு அருகே வந்த படகை நோக்கி சுடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சில ரவுண்ட் மோட்டார் தாக்குதல்கள் அந்த படகை நோக்கி மேற்கொண்டதில், அந்தப் படகு மூழ்கியது.

இதற்குள் ஏராளமான எண்ணிக்கையில் படகுகள் கரையை நெருங்கி வரத் தொடங்கி விட்டன.

ராணுவம் கரையில் இருந்து சுடத் தொடங்கியது. சில படகுகள் மூழ்கின. சில படகுகள் தப்பி கரையை அடைந்தன. அதிலிருந்து விடுதலைப் புலிகள் சுட்டபடி கரையில் குதித்தார்கள்.

அடுத்த சில நிமிடங்களில் பெரிய வெடிச் சத்தங்கள் இரண்டை கேட்டார் செனக விஜேசூர்ய. 59-வது படைப்பிரிவின் முற்றுகை லைனில் இருந்த காவலரண்கள் வெடிப்பது தெரிந்தது.

விடுதலைப் புலிகளின் தற்கொலை படையினர், உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு, 59-வது படைப்பிரிவின் முற்றுகை லைனில் இருந்த காவலரண் பங்கர்களுக்குள் குதித்து வெடிகுண்டுகளை வெடிக்க வைத்ததால் ஏற்பட்ட வெடிப்பு அது.

அந்த இரு பங்கர்களுக்குள் இருந்த அனைத்து ராணுவத்தினரும், கொல்லப்பட்டனர்.

இப்போது, 59-வது படைப்பிரிவின் முற்றுகை லைனில் உடைப்பு ஏற்பட்டு விட்டது. அந்த இரு பங்கர்கள் இருந்த இடத்தில் யாரும் இல்லை.

படகுகளில் வந்த விடுதலைப் புலிகள், அந்த இடத்தின் ஊடாக ஊடுருவி செல்ல தொடர்ந்து சுட்டபடி ஓடிவந்தார்கள்.

முன்னால் வந்தவர்கள் தற்கொலை படையினர். இவர்கள்தான் நிஜ தாக்குதல் படை.

ராணுவம், தாம் இழந்த இரு பங்கர்களையும் மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் இறங்கவே இல்லை. அதற்கு என்ன காரணம் என்பதை அடுத்த சில நிமிடங்களில் விடுதலைப் புலிகள் தெரிந்து கொண்டார்கள்.

அந்த காரணம் என்ன தெரியுமா?

புலிகளின் தற்கொலை தாக்குதல்களால் இரு பங்கர்கள் அழிக்கப்பட்டு, பாதுகாப்பு லைன் உடைக்கப்பட்ட இடத்தை நோக்கி, ராணுவம் 12.7mm எந்திர துப்பாக்கிகளை இரு திசையில் இருந்தும் திருப்பி விட்டிருந்தது.

அந்த துப்பாக்கிகள் சடசடவென வெடிக்க தொடங்கின. முற்றுகை லைனை ஊடுருவி செல்ல ஓடிவந்த விடுதலைப் புலிகள், நேரே வந்து, 12.7mm எந்திர துப்பாக்கி குண்டு மழையில் சிக்கிக் கொண்டார்கள்.

சுமார் 15 நிமிட குண்டுமழைதான். தாக்குதலுக்கு வந்த அனைவரது துப்பாக்கிகளும் ஓய்ந்து விட்டிருந்தன. நேரமும் நள்ளிரவை கடந்து விட்டிருந்தது.

மறுநாள் காலைதான் (18-ம் தேதி), இந்த முற்றுகை உடைப்பு தாக்குதலுக்கு வந்த புலிகள் பற்றிய விபரத்தை ராணுவம் தெரிந்து கொண்டது.

நந்திக்கடல் கரையில், சுமார் 120 விடுதலைப் புலிகளின் உடல்கள் கிடந்தன. வந்த அனைவருமே, வாட்டசாட்டமான ஆட்கள். நன்கு ஆயுதம் தரித்திருந்தனர். ஒவ்வொருவரிடமும் இரவில் பார்க்கும் உபகரணங்கள், ஒவ்வொரு லைட் மெஷின் துப்பாக்கி, ஒவ்வொரு ஜெனரல் பர்ப்பஸ் மெஷின் துப்பாக்கி இருந்தன. ஒவ்வொருவரின் உடலிலும், தற்கொலை அங்கிகள் காணப்பட்டன.

அவர்களின் அடையாள பட்டிகளில் (dog tags) உள்ள இலக்கங்களை பார்த்தபோது, அவர்கள் புலிகளின் மிகவும் சீனியர் படையணி என்று தெரிந்தது.

இந்த தாக்குதலில் இருந்து ராணுவம் ஒரு விஷயத்தை புரிந்து கொண்டது.

புலிகளின் மிக சீனியர் அணி ஒன்றை, அதுவும் நூற்றுக்கு மேற்பட்டவர்களை, நன்கு ஆயுதம் தரித்து, அனைவருக்கும் தற்கொலை அங்கி கொடுத்து அனுப்புகிறார்கள் என்றால், அந்த வழியாக மிகமிக முக்கியமான ஒருவர் தப்பித்துச் செல்ல திட்டமிட்டு இருந்திருக்கின்றனர்.

அது அநேகமாக பிரபாகரனாக இருக்கலாம்.

ஆனால், தாக்குதல் தோல்வியில் முடிந்தது. 59-வது படைப்பிரிவின் பாதுகாப்பு லைனை உடைத்து ஊடுருவி செல்ல முடிந்திருக்கவில்லை.

இவர்களுக்கு பின்னால் வந்திருந்த பிரபாகரன், திரும்பி சென்றிருக்க முடியாது, அதே நேரத்தில் 12.7mm எந்திர துப்பாக்கி குண்டு மழையை கடந்து சென்றிருக்கவும் முடியாது என்பதை புரிந்து கொண்ட ராணுவம், மற்றொரு விஷயத்தையும் ஊகித்துக் கொண்டது.

அது என்னவென்றால், பிரபாகரனும், நந்திக்கடலை அண்மித்த பகுதியில் எங்கோதான் இருக்க வேண்டும்.

பெரும்பாலும் நந்திக்கடல் கரையில் மாங்குரோவ் புதர்கள் அடர்ந்த பகுதிகளில் மறைந்திருக்கலாம். அந்தப் பகுதியை அதுவரை ராணுவம் கிளியர் செய்திருக்கவில்லை.


உயிரிழந்தபோது, பிரபாகரனிடம் இருந்தவை

இந்த முடிவுக்கு ராணுவம் வந்து, நந்திக்கடல் கரையோரமாக சில பகுதிகளில் தேடியதில் யாருமில்லை. இதற்குள் இருள் சூழ்ந்துவிட்டது.

இந்தக் கட்டத்தில், அவர்களது தேடுதல் வேட்டை நடைபெறாத பகுதி, சுமார் 800 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் உள்ள மாங்குரோவ் புதர்கள் இருந்த பகுதிதான்.

மறுநாள் காலையில், அதிரடிப்படை-8ன் பிரிவாக இருந்த 4-வது விஜயபா படையினர், அந்த புதர்களில் தேடுதலை தொடங்கினார்கள். இவர்கள் புதர்களை நோக்கி சுட்டபடி நகர்ந்து செல்ல, ஒரு இடத்தில் புதர்களுக்கு உள்ளேயிருந்து எந்திரத் துப்பாக்கிகள் வெடிக்க தொடங்கின.

இந்த தகவல், அதிரடிப்படை-8 தளபதி கர்னல் ஜி.வி.ரவிப்பிரியவுக்கு உடனே தெரிவிக்கப்பட்டது.

“கேட்கும் ஓசைகளை வைத்து கணிப்பிட்டால், சுமார் 20 துப்பாக்கிகள் அங்கிருந்து சுடுகின்றன” என்ற விபரமும் கூறப்பட்டது.

அந்த புதர்களுக்குள் சிலர் மறைந்திருப்பது, உறுதியானவுடன், மேலும் இரு தேடுதல் அணிகளை அனுப்பினார், ரவிப்பிரிய.

மூன்று அணிகளும் சுட்டபடி நகர, நந்திக்கடல் கரை தண்ணீரில் உள்ள அந்த புதர்களில் இருந்த மூவர் இவர்களிடம் உயிருடன் பிடிபட்டனர்.

அவர்களை விசாரித்ததில், அவர்கள் பிரபாகரனின் பாடிகார்டுகள் எனவும், பிரபாகரனும் மேலும் 30 பேரும் நந்திக்கடல் கரை தண்ணீரில் உள்ள அந்த மாங்குரோவ் புதர்களில் மறைந்திருக்கும் விஷயம் தெரியவந்தது.

இதையடுத்து, மூன்று தேடுதல் அணியை சேர்ந்தவர்கள் அனைவரும் அந்த புதர்களை நோக்கி சராமாரியாக சுட்டுத்தள்ள தொடங்கினார்கள்.

சிறிது நேரத்தில், புதர்களுக்கு உள்ளேயிருந்து ஒலித்த துப்பாக்கி ஓசைகள் நின்று போயின. அதன் பின்னரே, ராணுவம் புதர்களை நோக்கி சுடுவதை நிறுத்தியது.

சிறிது நேரத்தின்பின், தண்ணீரில் இறங்கி புதர்களில் உடல்களை தேடும் நடவடிக்கை தொடங்கியது. உடல்கள் ஒவ்வொன்றாக வெளியே வந்தன.

அதிரடிப்படை-8ஐ சேர்ந்த சார்ஜென்ட் முத்து பண்டா என்பவர், “இங்குள்ள உடல் ஒன்று பிரபாகரனின் போல உள்ளது” என தெரிவித்தார்.

கர்னல் ஜி.வி.ரவிப்பிரிய, அந்த உடல், பிரபாகரனின் உடல்தான் என்பதை உறுதி செய்தார்.

இவர்கள் உடலை கண்டெடுத்தபோது, உடல் சூடு மீதமிருந்தது. அதிலிருந்து, சில நிமிடங்களுக்கு முன்புதான் அவர் இறந்திருப்பார் என ஊகித்தார்கள்.

அந்த உடலில், த.வி.பு. 001 (தமிழீழ விடுதலைப்புலிகள் 001) என்ற இலக்கமுடைய அடையாளப் பட்டி (dog tag) இருந்தது.

அது தவிர, இரு பிஸ்டல்கள், ஒரு T-56 எந்திரத் துப்பாக்கி (டெலஸ்கோப் பொருத்தப்பட்டது), ஒரு சாட்டலைட் போன், பிரபாகரனின் பெயர் பொறிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அடையாள அட்டை, ஒரு மருந்து சீசாவுக்குள் டயாபடிக் மருந்துகள் ஆகியவை இருந்தன.

நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, இதுதான் இலங்கை ராணுவத் தரப்பில் சொல்லப்பட்ட விபரங்கள். அவர்களது கூற்றுப்படி பிரபாகரன் இறந்தது, 5 ஆண்டுகளுக்கு முன், சரியாக இதே நாள் (19-ம் தேதி, மே 2009), காலையில்!!

விறுவிறுப்பு.காம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல