ஞாயிறு, 25 மே, 2014

ஈழப்போர்-5 ஐரோப்பாவில் தொடங்கியது! மதியுரைஞர் சேரமானின் கதிகலங்கும் வியூகம்!!

இலங்கை அரசு, வெளிநாடுகளில் உள்ள 16 தமிழர் அமைப்புகளை ‘விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய அமைப்புகள்’ என கூறி தடைசெய்துள்ள நிலையில், அந்த 16-ல் ஒன்றான பிரித்தானிய தமிழர் பேரவைமீது, அதே 16-ல் மற்றொன்றாக நெடியவன் படையணி, ‘தேசிய பன்முக தாக்குதலை’ தொடுத்துள்ளது.

நெடியவன் படையணியின் மதியுரைஞர் (ஆலோசகர் என்று அர்த்தம்) சேரமான், தமது புதிய அறிக்கையில், பிரித்தானிய தமிழர் பேரவையை போட்டுத் தாக்கியுள்ளதுடன், ‘சைட்-கிக்’ ஆக, தமிழீழ பிரதமர் உருத்திரகுமாரையும் ஒருகை பார்த்துள்ளார். (உருத்திரகுமாரனின் ஈழமும், இலங்கை அரசு பட்டியலில் உள்ள 16-ல் ஒன்று)

இலங்கை அரசு, 16 வெளிநாட்டு தமிழர் அமைப்புகளை தடை செய்தால், அந்த 16 அமைப்புகளும் ஒன்று சேர்ந்து இலங்கை அரசை தாக்க வேண்டும் என்பது, அறிவிலிகள் போடக்கூடிய வியூகம். ஆனால், மதியூகியான மதியுரைஞர் ஒருவரை கொண்டுள்ள நெடியவன் படையணி, வித்தியாசமான வியூகத்தை வகுத்துள்ளது.

சரி, இந்த மதியுரைஞர் எங்கிருந்து தோன்றினார்? அதை தெரிந்துகொள்ள கொஞ்சம் பின்னணி தெரிந்துகொள்ள வேண்டும்.

விடுதலைப் புலிகள் இயக்கம் முன்பு செயல்பாட்டில் இருந்த காலத்தில், இந்த இயக்கத்தின் மதியுரைஞர் என்ற பதவியில் ஆன்டன் பாலசிங்கம் இருந்தார். அவரது மறைவுக்குப் பின் இயக்கத்துக்கு மதியுரைஞர் இல்லை. 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் பின், சேரமான் நெடியவனுக்கு மதியுரைஞர் ஆனார்.

இவர் நெடியவனுக்கே மதியுரைஞர் என்பதால், வெளிநாட்டு புலிகளுக்கே மதியுரைஞர் என்ற நிலை ஆரம்பத்தில் இருந்தது.

ஆனால் அதன்பின், நெடியவன் படையணிக்கு போட்டியாக ஈழம் பெற்றுத்தர பல குழுக்கள் தோன்றிவிட்டன.

அந்தக் குழுக்கள், “எமது குழுவிலேயே மதி உடையவர்கள் உள்ளதால், மதியுரைஞர் சேரமான், நெடியவன் படையணியிலேயே இருக்கட்டும். அங்கேயுள்ளவர்களுக்குதான் அவரது தேவை உள்ளது” என்று பெருந்தன்மையாக கூறிவிட்டன.

இதனால், ஒட்டுமொத்த வெளிநாட்டு புலிகளுக்கும் மதியுரைஞராக இருந்த சேரமான், தற்போது நெடியவன் படையணிக்கு மட்டுமே மதியுரைஞராக உள்ளார். இதுதான், அவரது பின்னணி.

இலங்கை அரசு, ‘விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்புகள்’ என, 16 அமைப்புகளை அறிவித்ததில், மதியுரைஞர் சேரமானுக்கு கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. காரணம், விடுதலைப் புலிகளின் ஏகப்பிரதிநிதி நெடியவன் குழுதான் என்ற மித் அடிபட்டுப் போய், போட்டிக்கு 15 அமைப்புகள் களத்தில் உள்ளன.

இதனால், அந்த அமைப்புகளை ஒவ்வொன்றாக களையெடுப்பு செய்ய வேண்டிய தேசிய கடமை ஏற்பட்டுள்ளது.

இந்த வியூகத்தில் யாரும் குறைசொல்ல முடியாது. காரணம், ஒரிஜினல் விடுதலைப் புலிகளின் வியூகம் இது.

டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்., என ஒவ்வொரு அமைப்பாக களையெடுத்துவிட்டு, ஏகப்பிரதிநிதிகளாக மாறிய விடுதலைப் புலிகள், 3 லட்சம் மக்களையும், 30 ஆயிரம் போராளிகளையும் முள்ளிவாய்க்கால் வரை கொண்டுசென்ற அதே வியூகம்.

அதையே, மதியுரைஞர் சேரமான் ரிப்பீட் அடிப்பதால், அவர் சிறந்த ராஜதந்திரியாக (நெடியவன் படையணியால்) போற்றப்படுகிறார்.

களையெடுப்பு ஆபரேஷனில், 15-ல் இரு அமைப்புகள் மீது அதிரடித் தாக்குதலை தொடங்கிவிட்டது நெடியவன் படையணி. அதை தெரிவிக்கும் விதமாக சேரமானின் அறிக்கை வெளியாகியுள்ளது.

அவரது அறிக்கையின் முதல் பாரா இப்படி தொடங்குகிறது:


  • “தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தையும், தமிழ்த் தேசிய எதிர்ப்பியக்கத்தையும் முற்றாகத் துடைத்தழித்து ஈழத்தீவிலிருந்து தமிழினத்தைப் பூண்டோடு பிடுங்கியெறிவது சிங்களத்தின் இலக்கு என்றால், தமது சொல்லுக்குக் கீழ்ப்படிந்து தலையாட்டும் பொம்மைகளாக இயங்கக் கூடிய வீரியம் குறைந்த தலைமைகளை தமிழீழத் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உருவகித்து, அவற்றின் ஊடாக ஈழத்தீவில் தனது ஆதிபத்தியத்தை நிலைநாட்டுவதே இந்தியாவின் இலக்காகவுள்ளது”

ஏதாவது புரிகிறதா? நாம் நினைத்தது சரிதான், புரிந்திருக்க சான்ஸ் குறைவு. காரணம், இது தேசிய ராஜதந்திர மொழியில் எழுதப்பட்டுள்ளது!

எனவே அந்த அறிக்கையில் பாமர மக்களுக்கு புரியும் விதத்தில் உள்ள பகுதிகளை மட்டும் பார்க்கலாம்.

  • “ஏற்கனவே தனது சொல்லுக்குத் தலையாட்டக்கூடிய கைப்பாவை அமைப்பாக தமிழீழத் தாயகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், புலம்பெயர் தேசங்களில் ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ என்ற ருத்ரா கும்பலையும் இந்தியா இயக்கி வருவது இன்று உலகறிந்த இரகசியமாகிவிட்டது”

என ‘ருத்ரா கும்பல்’ மீது முதல் தட்டு தட்டுகிறார், மதியுரைஞர். (ருத்ரா கும்பல் – தமிழீழ பிரதமர் உருத்திரகுமாரின் ‘ஸ்கைப்’ அமைச்சரவை)

இதோ அறிக்கையில் (புரியக்கூடிய) மற்றொரு பகுதி வருகிறது:


  • “தமிழீழ தாயகத்தில் வாளேந்திய சிங்கக் கொடியை உவகையோடு சம்பந்தர் உயர்த்திப் பிடிக்க, புலம்பெயர் தேசங்களில் தமிழீழத்தின் வரைபடத்தையும், செண்பகப் பறவையையும் கொண்ட புதிய கொடி ஒன்றை உயர்த்திப் பிடிக்கும் முயற்சிகளில் ருத்ரா கும்பல் இறங்கியது.

  • ஆனால் இம்முயற்சிகள் தமிழ் மக்களிடம் எடுபடவில்லை. விளைவு: சிங்கக் கொடியைக் கீழே போட்டுவிட்டுத் தமிழீழத் தேசியத் தலைவரை மாவீரன் என்று போற்றிப் புகழ்ந்து வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்குப் பிச்சை கேட்டது.

  • புலம்பெயர் தேசங்களில் தமிழ் மக்களால் அடியோடு நிராகரிக்கப்பட்டு அரசியல் ரீதியில் அகால மரணமெய்திய நிலையில் வேறுவழியின்றி தமிழீழ வரைபடத்தை நோக்கி எழும் செண்பகப் பறவைக் கொடியைக் கைவிட்டு, அவசர அவசரமாகப் பாயும் புலிக்கொடியை ‘ருத்ரா கும்பல்’ உயர்த்திப் பிடித்து, இன்று புகலிடங்களில் ‘மம்மி’ அரசியல் செய்ய முற்படுகின்றது” என்கிறது அறிக்கையின் அந்தப் பகுதி.

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஐரோப்பாவில், ‘பயங்கரவாத இயக்கம்’ என்ற தடை உள்ளது. அதுதான், இலங்கை அரசு, தாம் தடை செய்த 16 அமைப்புகளையும் ‘விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய அமைப்புகள்’ என குறிப்பிடுகிறது.

இந்த 16 இயக்கங்களுக்கும் விடுதலைப் புலிகளுடன் உள்ள தொடர்பை நிரூபிக்க முடிந்தால், அவற்றை சர்வதேச அளவில் தடை செய்ய முடியும் என இலங்கை அரசு நினைக்கிறது. அது, ஓரளவு உண்மையும்கூட.

இந்த பின்னணியில்தான் வருகின்றன, மதியுரைஞரின் ராஜதந்திரம் தோய்ந்த, தந்திர வார்த்தைகள். இதோ, அறிக்கையின் அந்தப் பகுதி:


  • “இன்று பிரித்தானிய தமிழர் பேரவையின் செயலாளர் நாயகமாக விளங்கும் ‘ரூட்’ ரவி என்றழைக்கப்படும் ரவி குமார் என்பவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர். 1994-ம், 1995-ம் ஆண்டு காலப்பகுதியில் சந்திரிகா குமாரதுங்கவுடனான பேச்சுவார்த்தைகளில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் உதவியாளராகக் கடமையாற்றியவர்.

  • அதன்பின் விடுதலைப் புலிகளால் இவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தனர். அதுவும் பொட்டு அம்மானால் ‘கடுமையான’ விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், இயக்கத்திலிருந்து விலக்கப்பட்டார் இவர்.

  • தமிழ்ச்செல்வன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டதை அடுத்து, புதிய அரசியல்துறைப் பொறுப்பாளராகப் பொறுப்பேற்ற நடேசனுன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார் ‘ரூட்’ ரவி.

  • ஏற்கனவே இயக்கத்தில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, அதன் காரணமாக இயக்கத்தை விட்டு விலக்கப்பட்டவர் என்ற வகையில் இவருடன் தொடர்பைப் பேணுவதில் விடுதலைப் புலிகளுக்கு நெருடல்கள் இருக்கத்தான் செய்தன.

  • ஆனாலும் ஒட்டுமொத்த தமிழ்த் தேசத்தின் நலனைக் கருதி (!), இவருடன் ‘ஓடும் புளியம் பழமுமாக’ தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் தொடர்பைப் பேணினார்.”

சூப்பர்! தம்மீது விடுதலைப் புலிகள் நிழல் கூடாது என்பதற்காக, கடந்த வாரம் லண்டனில் நடந்த மே-18 நிகழ்வின்போது, புலிக்கொடி பிடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அமைப்பு, பிரித்தானிய தமிழர் பேரவை.

“ஹேய்.. இவர்களுக்கு புலிகளுடன் தொடர்பு இருந்தது” என கிளீனாக போட்டுக் கொடுத்துள்ளார், மதியுரைஞர் சேரமான்.

இப்படியொரு மதியுரைஞர் மட்டும் அமெரிக்காவுக்கு கிடைத்திருந்தால், ஒபாமா தற்போது அல்லாட வேண்டியிராது! அதேநேரத்தில், இப்படியொரு மதியூகி எதிரணியில் இருப்பது, இலங்கை அரசுக்கு அடித்துள்ள அதிஷ்டம். பெரும் பாக்கியம்.

“புளியம் பழத்தை ஏற்கனவே முள்ளிவாய்க்காலில் பிசைந்து விட்டீர்கள். இதோ இருக்கிறது புளியம் பழத்தின் ஓடு. ஓட்டுக்கு வையுங்கள் வேட்டு” என்பதே சேரமான் இலங்கை அரசுக்கு கொடுத்துள்ள சிக்னல்!

(மதியுரைஞர் சேரமானின் திறமையை யார் புரிந்து கொண்டார்களோ, இல்லையோ, இலங்கை அரசு புரிந்து கொண்டுள்ளது. அதனால்தான் இலங்கை அரசு தடை செய்த தனி நபர்கள் 424 பேரில், சேரமானின் (நிஜ) பெயர் இல்லை. காரணம், இவரைப் போன்ற மதியூகியை வெளியே வைத்திருப்பது, இலங்கை அரசுக்குதான் நல்லது)

தமது அறிக்கையில் இந்தியாவை ‘ஒரு கை’ பார்க்கவும், மதியுரைஞர் சேரமான் தவறவில்லை. இதோ, அவரது அறிக்கையில் உள்ள அந்தப் பகுதி:


  • “தனது சொல்லுக்குத் தலையாட்டக்கூடிய கைப்பாவை அமைப்பாக தமிழீழத் தாயகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், புலம்பெயர் தேசங்களில் ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ என்ற ருத்ரா கும்பலையும் இந்தியா இயக்கி வருவது இன்று உலகறிந்த இரகசியமாகிவிட்டது.

  • இதுவரை தாம் போர்த்திருந்த புலித்தோலை உரிந்து விட்டு வெள்ளைச்சாயம் பூச முற்படும் பிரித்தானியத் தமிழர் பேரவையினர், எதற்காக இன்றும்கூட ஒப்புக்கு புலித்தோலைப் போர்த்துக் கொண்டு இருக்கிறார்கள்?

  • தன்னைத் தமிழீழ தேசியத் தலைவரின் (பிரபாகரன்) சட்ட ஆலோசகர் என்று கூறிக்கொள்ளும், இந்திய உள்ளகப் புலனாய்வு நிறுவனமான ஐ.பி அமைப்பின் முகவராகவும், ஈ.என்.டி.எல்.எவ் ஒட்டுக்குழுவின் தலைவரான பரந்தன் ராஜனின் நண்பனாகவும் விளங்கும் உருத்திரகுமாரனை எதற்காக மேடையில் ஏற்ற வேண்டும்?

  • புலிக்கொடியை ஏற்றுவது தவறு என்றால் புலித்தோல் அணிந்த நரியாக வேடமிட்டிருக்கும் உருத்திரகுமாரனை மேடையில் ஏற்றுவது மட்டும் எந்த விதத்தில் நியாயம் ஆகும்?

  • புதிர்கள் போன்று தென்படக்கூடிய இக்கேள்விகளுக்கான விடை உண்மையில் இலகுவானது. இந்தியாவிற்கு புலிக்கொடி பிடிக்காது: ஆனால் உருத்திரகுமாரனைப் பிடிக்கும்.

  • எனவே இந்தியாவைத் திருப்திப்படுத்துவதற்காக தமிழீழ தேசியக் கொடியை பிரித்தானியத் தமிழர் பேரவை வீசியெறிந்து விட்டது. அதே இந்தியாவைத் திருப்திப்படுத்துவதற்காகவே உருத்திரகுமாரனையும் மேடையேற்றியுள்ளது” என்கிறது, அறிக்கையின் இறுதிப் பகுதி.

இதைப் படித்துவிட்டு, “ஐயோ.. அமெரிக்காவில் இருந்து உருத்திரகுமார், தனது காலாவதியான இலங்கை பாஸ்போட்டுடன் லண்டன்வரை வந்து மேடையேறி விட்டாரா?” என பதறாதீர்கள். அவர் ‘வழமைபோல’ நிழலாகவே வந்தார்.

ஆம். லண்டன் மேடையில் இருந்த திரையில் ஸ்கைப்பில் வந்து உரையாற்றினார்.

“வரலாறுதான் நான் படித்த பள்ளிக்கூடம்” என்றார், விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர், வேலுப்பிள்ளை பிரபாகரன்.

அதே பள்ளிக்கூடத்தில்தான், மதியுரைஞர் சேரமானும் படித்திருப்பார் போலும்.

ஏனென்றால், இலங்கையில் இருந்த இந்திய ராணுவத்தை வெளியேற்றுவதற்கு பிரபாகரன், இலங்கை ஜனாதிபதி பிரேமதாசவுடன் டீல் வைத்துக் கொண்டார். இலங்கை அரசு கொடுத்த ஆயுதங்களை வைத்து, இந்திய அமைதிப்படை மீது தாக்குதல் நடத்தினார்.

இதனால், காரியம் ஆகவேண்டும் என்றால், எதிரியுடன் டீல் வைத்துக் கொள்ளலாம் என்ற தேசிய தத்துவம் உருவானது.

நம்ம மதியுரைஞர் சேரமான் செய்வதும் அதையேதான்!

வெளிநாட்டில் உள்ள போட்டியாளர்களை அகற்ற, இலங்கை அரசுக்கு உதவ முன்வந்துள்ளார். நீட்டிய கையை பற்றிப் பிடிப்பதும், தட்டி விடுவதும், இலங்கை அரசின் கைகளில் உள்ளது.

மொத்தத்தில், தற்போது வெளிநாட்டில் தொடங்கிவிட்டது, ப்ரீலிமினரி ஈழ யுத்தம்-5.

இதில் 15 எதிரிகள் அழிக்கப்பட்டபின், இறுதி யுத்தம் இலங்கையில் நடைபெற்று, தமிழ் மக்களுக்கு ஈழம் பெற்றுக் கொடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதுவரை தமிழர்கள் பொறுமை காக்கும்படி கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளனர்!

மதியுரைஞர் சேரமான் ‘தேசிய பன்முக தாக்குதல்’ செய்வதில் வல்லவர் என கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தோம் அல்லவா? அதன் அர்த்தம் என்னவென்றால், மதியுரைஞர் அவர்களுக்கு, இப்படியான ராஜதந்திர அறிக்கை விடவும் தெரியும். ‘தேசிய கலைச் சொற்கள்’ மட்டுமே கொண்ட பக்கா லோக்கல் அறிக்கை விடவும் தெரியும்.

“குரைக்கும் நாயில் சவாரி செய்யும் கோவேறு கழுதை”, “பச்சை குத்திய பிச்சைக்காரன்” போன்ற வர்ணணைகளுடன் அவர் சாபம் கொடுத்து, துரோகி பட்டமும் கொடுக்கும் அறிக்கைகள் மிக சுவாரசியமானவை.

விறுவிறுப்பு.காமில் நாம் அவரைப் பற்றி இந்த கட்டுரை எழுதியதால், அநேகமாக எம்மைப் பற்றி அப்படியொரு பக்கா லோக்கல் அறிக்கை சீக்கிரம் வரும் என எதிர்பார்க்கிறோம். அது வந்தவுடன் விறுவிறுப்பு.காமில், பிரசுரித்து நாம் அனைவரும் சிரித்து மகிழலாம்.

சீக்கிரம் எழுதுங்க சேரமானே..!



விறுவிறுப்பு
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல