ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

மலேசியப் பேச்சுத் தமிழ்

மலேசியாவில் சுமார் (2.5 மெய்யிரம்) 25 லட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர். மலேசிய தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் அழகான இனிமையான தமிழைக் கேட்கலாம். அறிவிப்பாளர்கள் வேறுமொழி கலவா தூயதமிழில் பேசுவதைக் கேட்கும் போது மிகவும் இனிமையாக இருக்கும். குறிப்பாக, THR Raaga எனப்படும் வானொலி அறிவிப்பாளர்கள் அழகாக தமிழில் பேசுவார்கள். சுழியம், இணையம், வலப்பக்கம், கைப்பேசி.. இப்படி ஏராளமான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தியே பேசுவார்கள். மேலும், ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசையின் விழுதுகள் நிகழ்ச்சியின் அறிவிப்பாளர்களும் அழகிய தமிழிலே பேசுவார்கள்.


எனினும், இளைஞர்களும் கல்லூரி மாணவ மாணவிகளும் பேசும் தமிழ் மிகவும் கொடுமையாக இருக்கும். அதிக அளவில் ‘மலாய்’மொழி சொற்களைக் கொண்டிருக்கும். அவர்கள் பேசும் தமிழில் ழகரமும் ளகரமும் லகரம் போலவே உச்சரிக்கப்படும். ணகரமும் நகரம் போலவும், றகரம் ரகரம் போலவும் உச்சரிக்கப்படும்.

மலேசிய தமிழர்கள் பெரும்பாலும் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். மலேசியாவில் தமிழ்ப் பள்ளிகளில் மட்டுமே தமிழ்மொழி கற்கும் ஓர் அரிய வாய்ப்பு நம் குழந்தைகளுக்குக் கிடைக்கின்றது. சமய வகுப்புகள், கோயில்கள் போன்ற இடங்களிலும் தமிழ்க் கல்வி கிட்டுகின்றது. இப்படி மிக அரிதாக கிடைக்கும் அமுதாக தமிழ்மொழி திகழ்கிறது. 25 லட்சம் தமிழர்கள் வாழும் மலேசியாவில் சுமார் 500 தமிழ்ப் பள்ளிகளே உள்ளன. எந்த பள்ளிகளுக்கும் அரசாங்கம் உரிய சலுகைகளை தருவதில்லை.

தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் அருமையாக கற்று தரப்படுகிறது. மலேசியாவில் தமிழ்ப் பள்ளி வாழ்க்கை சில காங்களே அமைகிறது. அதாவது 7 வயது முதல் 12 வயது வரை. பின்னர், மேல்நிலை கல்வியை தொடரும் மாணவர்கள், தமிழ்மொழியை மெல்ல மெல்ல மறக்கின்றனர். தமிழ் மேல்நிலைப் பள்ளிகள் மலேசியாவில் இல்லை. இதனால், பெரும்பான்மை தமிழ் இளைஞர்கள் பேசும் தமிழ் ஒரு கொடுமையான நிலையில் இருக்கும். அவ்வாறு பேசுவதையே அவர்கள் ஒரு ‘நாகரீகமாக’ கருதுகிறார்கள்.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள சொற்களை தவிர ஆயிரக்கணக்கான வினோதமான சொற்களை மலேசிய தமிழ் இளைஞர்கள் அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். இச்சொற்களை எல்லாம் முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளவேண்டும். மலேசியாவில் வாழும் சீனர்கள், அவர்களின் தாய்மொழியில் மிக அழகாகப் பேசுவார்கள்.

மலேசியாவில் தற்பொழுது புதியதொரு எழுச்சி தோன்றியிருக்கின்றது. தமிழ்ப்பள்ளிகளில் படித்த மாணவர்கள் பெரிய சாதனைகளைப் படைக்கின்றனர். தமிழ்ப் பள்ளி மாணவர்கள் பிற மாணவர்களை விட ஒழுக்கமானவர்களாகவும், கல்வியில் சிறந்தவர்களாகவும் திகழ்கின்றனர். இது உண்மையில் மிகவும் பெருமைக்குரிய ஒன்றாகும்.

இவ்வாறு பிறமொழிகள் கலந்து பேசுவது ஒரு கேளிக்கையாக தோன்றினாலும் முடிந்தவரை அழகான தமிழில் பேசப் பழகிக் கொள்வோம். ழகரம், ளகரம், றகரம், ணகரம் போன்ற ஒலிகளை முறையாக பயிற்சி செய்து உச்சரிக்க பழகி கொள்வோம். மிக அரிதாக, அமுது போல கிடைக்கும் தமிழ்மொழியை நேசிப்போம்.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல