வியாழன், 9 ஜூலை, 2015

முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர் இரட்டை வேடதாரிகளுக்கு முகம் கொடுக்கிறாரா?


நல்லிணக்கத்தை நோக்கிய பாதை

வரும் பொதுத்தேர்தலில் ஒரு முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர் போட்ltte cadrs-1டியிடுவதற்காக வேட்புமனு விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளது கடந்த வாரம் அரசியல் வட்டாரங்களில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவரால் வேட்புமனுவுக்கு வேண்டுகோள் விடுக்கப் பட்டது தொடர்பான சமீபத்தைய பிரச்சினை, அவரைப் போன்ற கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளீதரன் மற்றும் பிள்ளையான் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தன் போன்றவர்கள் தேசிய அளவிலான தேர்தல்களில் போட்டியிட்டதுடன் முன்னாள் ராஜபக்ஸவின் அரசாங்கத்தில் பதவிகளை வகித்திருப்பதையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.



திருகோணமலை மாவட்டத்தில் எல்.ரீ.ரீ.ஈ யின் அரசியல் பிரிவுக்கும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யின் தலைமைச் செயலகத்துக்கும் பொறுப்பாக இருந்த ரூபன் என்றழைக்கப்படும் ஆத்மலிங்கம் ரவீந்திரா என்கிற எல்.ரீ.ரீ.ஈயின் உயர்மட்டத் தலைவர் வரும் பாராளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கீழ் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை கோரி விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளது சிலரைக் கலக்கமடைய வைத்துள்ளது. எல்.ரீ.ரீ.ஈ சார்பான புலம்பெயர்ந்தவர்கள் பிரிவினையை ஊக்கவிப்பதற்காக முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களை பாராளுமன்றத்துக்கு கொண்டுவரும் முயற்சியின் பின்னணியில் இயங்கலாம் எனச் சிலர் பல்வேறு சந்தேகங்களையும் மற்றும் கவலைகளையும் எழுப்பி வருகிறார்கள்.

மற்றொரு குழுவினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ரி.என்.ஏ) உட்பட சில அரசியற் கட்சிகள் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் பிரதான நீரோட்ட அரசியலில் நுழைவதற்கு வேட்புமனு வழங்குவதற்கு தயக்கம் காட்டும் நிலைப்பாட்டையிட்டும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குறிப்பாக இலங்கை தமிழரசுக் கட்சி உட்பட தமிழ் அமைப்புக்கள், முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை முற்றாக நிராகரிக்க அல்லது பாகுபாடு காட்டத் தக்கதான கொள்கையையை மறைமுகமாக கொண்டிருப்பதுடன், ஜனநாயக நடைமுறைக்கு அவர்கள் திரும்பும் பாதையையும் தடை செய்கின்றன எனவும், ஜனநாயக நடைமுறைக்கு அவர்கள் திரும்புவதின் மூலம் முன்னாள் போராளிகள், தமிழர்களின் பிரச்சினைகளுக்கு ஜனநாயக மற்றும் அமைதியான போராட்டங்கள் மூலம் தீர்வினைக் காணமுடியும் எனவும் சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தச் சூழ்நிலையில் முன்னாள் போராளிகளை பிரதான நீரோட்ட ஜனநாயக மற்றும் சமாதான அரசியலுக்கு கொண்டு வருவதன் மூலம், அவர்கள் ஆயுதம் ஏந்தி வன்முறைக்கு திரும்புவதை நிறுத்திவிட முடியும் எனப் பலரும் கருதுகிறார்கள்.

வேட்பாளர் நியமனம் கோரி ரூபன் சமர்ப்பித்துள்ள தனது விண்ணப்பத்தில், ஆயுதம் தாங்கிய ஒரு போராளியாக மக்களுக்கு சேவை செய்துள்ள ஒரு நபர் என்கிற வகையில், போரினால் அழிவுக்குள்ளான தமிழர்கள் மற்றும் தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்கிற வகையில் தன்னால் சேவையாற்ற முடியும் - ஒரு ஜனநாயக பாதையை கையாண்டு பாராளுமன்றம் ஊடாக தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்கிற தனது விருப்பத்தை சுட்டிக் காட்டியுள்ளார்.

எனினும் ‘த சண்டே லீடருடன்’ பேசும்போது, ரூபன் சொன்னது முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யுடன் சம்பந்தப் பட்டவர்களின் விண்ணப்பங்களை பிரதான நீரோட்டத்திலுள்ள அரசியற் கட்சிகள் நிராகரிக்கும் போக்கானது, போர் முடிந்த பின்பு கூட பிரதான நீரோட்ட அரசியலுக்கு திரும்புவதற்கான அவர்களது பாதை அடைக்கப் பட்டுள்ளது என்பதையே காட்டுகிறது என்று.

ரூபன் தனது விண்ணப்பத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளது, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோனாதிராஜா, தன்னைப் பற்றி பெருமையாக கூறுவதற்காக தான் ஒரு இளம் போராளியாக இருந்த வேளையையும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனுடனான அவரது முதல் சந்திப்பையும் நினைவு கூருகிறார். இதன் உட் கிடக்கை அவரும்கூட ஒரு முன்னாள் போராளி என்பதாகும். ரூபன் சொல்வதின்படி சில தமிழ் கட்சிகள் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களுக்கு வேட்பு மனுக்கள் வழங்குவதை தவிர்த்து வருகின்றனவாம். இருந்தும் தனது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“எனினும் எனது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டதா என்பதை வரும் திங்களன்று மட்டுமே என்னால் அறிய முடியும். இலங்கை தமிழரசுக் கட்சி ரி.என்.ஏ யின் குடையின் கீழ் உள்ளது – அதனால் அங்கு அதிக எண்ணிக்கையிலான வேறு விண்ணப்பங்களும் சமர்ப்பிக்கப் பட்டிருக்கும், மற்றும் எனது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான வாய்ப்பும் அதில் கூடத் தங்கியிருக்கலாம் - ஆனால் நான் நம்பிக்கையை உணர்கிறேன்” என்றார் அவர்.

த சண்டே லீடர் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை தொடர்பு கொண்டபோது, அவர் சொன்னது தாங்கள் விண்ணப்பங்களை தனித்தனியாக பார்ப்பதில்லை ஆனால் வேட்பு மனுக் குழு பொருத்தமான வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் என்று.

“வருகின்ற வாரம் நாங்கள் எல்லா விண்ணப்பங்கiளும் பரிசீலிப்போம் மற்றும் எங்கள் கட்சியின் வேட்புமனுவின் கீழ் யார் போட்டியிட வேண்டும் என்பதை அப்போது முடிவு செய்வோம்” என்று அவர் சொன்னார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் கூற்றுப்படி, ஏராளமான ஆட்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளார்கள், மற்றும் அவை முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களுடையதா என்பது அவர்களுக்குத் தெரியாது. எனினும் அவர்களது குழு அந்த விண்ணப்பங்களைப் பற்றி இறுதி முடிவு எடுக்கும் எனத் தெரிவிக்கப் பட்டது.

இதற்கிடையில் ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் த சண்டே லீடருடன் பேசுகையில், முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் ரி.என்.ஏ யில் இணையக்கூடாது என்கிற நிலைப்பாட்டை தாங்கள் எடுக்கவில்லை எனத் தெரிவித்தார்.

“எங்கள் கூட்டணியில் ஒரு கட்சிக்கு மட்டுமே வன்முறை சம்பந்தமான எந்த வரலாறும் கிடையாது. ஏனைய மூன்று கட்சிகளும் போராளிக் குழுக்கள் பின்னர் அவை பிரதான அரசியல் நீரோட்டத்தில் இணைந்து கொண்டன. ஆரம்பத்தில் அவை ஆயுதக் குழுக்கள். இந்தக் கருத்தில் பார்க்கும்போது, முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள், அவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு அல்லது புனர்வாழ்வு பெற்றிராதவர்களாக இருந்தாலும் - ஆனால் இனிமேலும் எந்த வன்முறைகளிலும் ஈடுபடாதவர்களாக இருந்து பிரதான நீரோட்ட அரசியலில் இணைவதற்கு விருப்பம் உள்ளவர்களாக இருந்தால் அவர்களை தடுப்பதற்கு எங்களால் ஒரு காரணத்தையும் காண முடியாது” என்று அவர் சொன்னார்.

தவிரவும் அவர்களை இணைத்துக் கொள்வது முக்கியமானதும் கூட என சுமந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் சுட்டிக் காட்டியது, நாட்டின் பிரதான நீரோட்ட அரசியலில் அவர்களை இணைத்துக் கொள்வது நாட்டுக்குப் பயனுள்ளது என்பதை ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) நிரூபித்துக் காட்டியுள்ளது – மற்றும் அப்படித்தான் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் பிரதான நீரோட்ட அரசியலில் இணைவதை ரி.என்.ஏயும் கருதுகிறது என்று சுமந்திரன் சுட்டிக் காட்டினார்.

“ஜனநாயக அரசியலுக்கு அவர்கள் வரும்; பாதையை இலங்கை தமிழரசுக் கட்சி தடுக்கிறது என்பதில் உண்மையில்லை. இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதான அமைப்பானது ரி.என்.ஏ, மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சிதான் ஏனைய மூன்று கட்சிகளையும் ரி.என்.ஏயில் இணையும்படி அழைப்பு விடுத்தது. முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் கட்சியில் இணைய முடியாது என்கிற ஒரு நிலைப்பாட்டை நாங்கள் ஒருபோதும் எடுக்கவில்லை. ஆனால் அப்படிச் சொல்கின்ற போதிலும், எவரையோ அல்லது எந்தக் குழவையோ குறிப்பாக ரி.என்.ஏ க்குள் வரவேற்கும் எந்த ஒரு முடிவையும் நாங்கள் எடுக்கவில்லை” என சுமந்திரன் சொன்னார்.

யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட ஆராய்ச்சியாளரும் மற்றும் அரசியல் ஆய்வாளருமான அகிலன் கதிர்காமர் த சண்டே லீடருக்குத் தெரிவிக்கையில், எல்.ரீ.ரீ.ஈயோ அல்லது வேறு எந்த முன்னாள் ஆயுதக்குழுவோ அல்லது அரசியல்வாதியோ என்று வரும்பொழுது அங்கு ஒரு சுய விமர்சன நடவடிக்கை உள்ளது. சுய விமர்சனம் கூட மீள் சிந்தனை, தாங்கள் பின்பற்றும் அரசியலில் என்ன தவறு நடந்துள்ளது என்று கேள்வி கேட்பது, மற்றும் அது கட்டவிழ்த்து விட்ட அழிவு வகைகள் என்பனவற்றைப் பற்றிய ஈடுபாடு உள்ளதாக இருக்க வேண்டும் மற்றும் அதில் பன்முகத் தன்மை மற்றும் ஜனநாயக பார்வை என்பன குறைவாகவே உள்ளன.

“ நான் வெறுமே ஆயுத அரசியலை மட்டும் குறிப்பிடவில்லை. ஆனால் சகல அமைப்பான தேசிய அரசியலை – பன்முக பார்வையுள்ள மற்றும ஜனநாயக விரோத அனைத்துவகை அரசியலையும் குறிப்பிடுகிறேன். இதில் முக்கியமானது என்னவென்றால் சுய விமர்சனம் மற்றும் ஜனநாயக அரசியலுக்கான அர்ப்பணிப்பு என்பன பற்றிய நியாயமான நடவடிக்கையே” என அவர் வலியுறுத்தினார்.

அவரைப் பொறுத்தவரை வரப்போகும் தேர்தல், இந்த வகையான ஜனநாயக அரசியலை மையமாக கொண்டிருக்குமா என்பது கேள்விக்குரியது, அல்லது நாட்டின் குடிமக்கள் அந்த வகையான ஜனநாயக யோசனைகளை தேர்தலின் மையமாக வலியுறுத்த வேண்டும். இது ஆயுத அரசியலுக்கு மட்டும் பொருந்துவதல்ல ஆனால் இதர வடிவத்திலுள்ள சர்வாதிகாரத்துக்கும் பொருந்தும்.

“ முந்தைய ஆட்சியின்போது முஸ்லிம் விரோத தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டது கூட ஜனநாயக விரோத மற்றும் பன்முகத் தன்மைக்கு விரோதமான செயலாகும். அதேவேளை அனைத்து வகையான குணாதிசயங்களும் அரசியலுக்குள் வரும், நாங்கள் தமிழர்களாகவோ, முஸ்லிம்களாகவோ அல்லது சிங்களவர்களாகவோ இருந்தாலும் நாங்கள் தேர்வு செய்யும் வேட்பாளர் ஜனநாயக மற்றும் பன்முக பார்வை உள்ளவராக இருக்கவேண்டியது மிகவும் முக்கியம்” என கதிர்காமர் வலியுறுத்தினார்.

அவர் மேலும் குறிப்பிட்டது, ரி.என்.ஏ போன்ற கட்சிகள் கூட, சுய விமர்சனம் என்கிற கருத்திலும் மற்றும் நாட்டில் பன்முகத் தன்மையை அல்ல பன்முக அரசியலை கட்டியெழுப்பும் அர்ப்பணிப்பு என்கிற வகையிலும் இதைப்பற்றி தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்.

கதிர்காமர் மேலும் தெரிவிக்கையில் ரி.என்.ஏ போன்ற வடக்கிலுள்ள தமிழ் கட்சிகள் மட்டுமன்றி ஆனால் தெற்கிலுள்ள அரசியலும் சிறுபான்மையினருக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒரு ஜனநாயக அரசிலை நிறுவ வேண்டும் எனத் தெரிவித்தார்.

“தனிப்பட்டதை விட ஒரு பரந்த கருத்து மிகவும் முக்கியம் அரசியல்வாதிகள் கூட மக்களுக்கு தெளிவாகத் தெரிவிக்க வேண்டியது என்னவென்றால் அவர்கள்(அரசியல்வாதிகள்) தங்கள் அரசியலைப்பற்றி மீள் சிந்தனை செய்வதுடன் மற்றும் விமர்சன நடைமுறை ஊடாகச் சென்று ஜனநாயக அரசியலில் நுழைவதற்கு விருப்பம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை” என்று அவர் தெரிவித்தார்.

ஜாதிக ஹெல உருமயவின் பேச்சாளர் நிசாந்த வர்ணசிங்க கூட முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களை ஜனநாயக அரசியலுக்கு கொண்டுவரும் பொறுப்பு அரசியல் கட்சிகளிடமே உள்ளது என்பதை ஏற்றுக் கொண்டார்.

“நாங்கள் எல்.ரீ.ரீ.ஈ யினைத் தோற்கடித்தோம். அப்போது அநேகர் இராணுவத்திடம் சரணடைந்தார்கள் மற்றும் அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு இப்போது சமூகத்தில் விடப்பட்டுள்ளார்கள். நாட்டிலுள்ள மற்ற எந்த ஒரு பிரஜையும் இந்த நாட்டில் அனுபவிக்கும் குடியியல், அரசியல் மற்றும் மனித உரிமைகள் அவர்களுக்கும் உள்ளது. அவர்களுக்கு ஜனநாயக ரீதியில் அரசியல் செய்யவும் மற்றும் எந்தக் கட்சியினூடகவும் போட்டியிடுவதற்கு உரிமை உள்ளது. அதில் எந்த தவறும் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை” என்று அவர் சொன்னார். எனினும் அவர்கள் நாட்டைப் பிரிப்பதற்கு முயற்சி செய்து ஈழ இலக்குகளுக்கு ஆதரவு அளித்தால் அப்போது அவர்களுக்கு எதிராக அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வர்ணசிங்க தெரிவித்தார்.

“அவர்கள் அரசியல் செய்யலாம் அது அவர்களின் உரிமை. ஆனால் அது ஜனநாயக கட்டமைப்புக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும். அவர்கள் பிளவு மற்றும் பிரிவினைவாதம் என்பனவற்றை நோக்கிச் செயற்பட்டால் அப்போது நாட்டின் சட்டத்திற்கு ஏற்றபடி அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ஜேவிபி 1987 மற்றும் 1989 காலத்தில் ஒரு ஆயுத மோதலை தொடர்ந்தது மற்றும் அவர்களது தோல்விக்குப் பின்னர் அவர்கள் பிரதான நீரோட்ட அரசியலில் இணைந்து கொண்டார்கள். அதே போல எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களுக்கும் ஜனநாயக ரீதியில் திரும்பவும் அரசியலில் நுழையும் தகுதி உள்ளது என்றார்.

முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களும் ஆயுதங்களைக் கைவிட்டிருந்தால் அவர்களும் பொதுத் தேர்தல் ஊடாகப் பாராளுமன்றத்துக்குள் நுழையலாம், மாகாணசபை தேர்தல்கள், மற்றும் மாநகரசபை தேர்தல்களிலும் போட்டியிடலாம். அது அவர்களின் உரிமை. அவர்கள் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் என்பதற்காக நாங்கள் அவர்களிடம் பாகுபாடு காட்டி சதாகாலமும் மூலையில் ஒதுக்கிவிடக் கூடாது. எனினும் அவர்களது இலக்குகள் என்ன எந்த திசையில் செல்கிறார்கள் என்பதை நாங்கள் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் - நாட்டின் அரசியலமைப்புக்கு எதிராக அவர்கள் செயற்பட்டால் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்று வர்ணசிங்க வலியுறுத்தினார்.

அவர் மேலும் சுட்டிக்காட்டியது, அவர்களை பிரதான அரசியல் நீரோட்டத்துக்குள் கொண்டு வருவது அரசியற் கட்சிகளின் பொறுப்பு – விசேடமாக வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள அரசியற் கட்சிகளான புளொட், ஈபிடிபி மற்றும் ரி.என்.ஏ என்பனவற்றுக்கு ஜனநாயக அரசியலுக்காக அவர்களை மக்கள் முன் கொண்டுவரும் பொறுப்பு உள்ளது என்பதை.

இதற்கிடையில் ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவிக்கையில், முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களின் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தால் அல்லது அவர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தால் அப்போ அவர்களுக்கு வேட்புமனு வழங்குவது தவறு. எனினும் அவர்கள்மீது வழக்குகளோ அல்லது ஊழல் குற்றமோ நிலுவையில் இல்லையென்றால் மற்றும் அவர்கள் இனிமேலும் ஆயுதங்களை ஏந்தாவிட்டால், அவர்கள் அரசியலுக்கு வருவதில் எந்தத் தவறும் இல்லை. என்று சொன்னார்.

அவர் சுட்டிக்காட்டியது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ஆதரவாளர்கள் சிலர் நாட்டில் இனவாதத்தை கிளப்பி அரசியல் செய்வது போலத் தெரிகிறது, அதனால் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் அரசியலுக்குள் நுழையும் இப்படியான நகர்வுகளை தடுப்பதற்காக மக்களிடையே அவர்கள் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாகத் தெரிகிறது என்று.

“ அத்தகைய நகர்வுகளுக்கு எதிராக பேசுபவர்கள், தாங்கள் எப்படி கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் ஆகியோரை அரசியலுக்குள் அனுமதித்தார்கள் என்பதை நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.

சில்வா மேலும் சுட்டிக்காட்டியது கடந்த ஆட்சியின்போது, 20 வருடங்களுக்கு மேலாக எல்.ரீ.ரீ.ஈ க்காகப் போரிட்ட முன்னாள் போராளியான கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளீதரனுக்கு ஒரு அமைச்சுப் பதவியும் வழங்கி ஸ்ரீ.ல.சு.க வின் மத்திய குழு உறுப்பினர் நியமனமும் வழங்கப்பட்டது. பிள்ளையான் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தன் கூட ஒரு முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ தலைவர்தான் அவருக்கும் பிரதான நீரோட்ட அரசியலுக்கு வருவதற்கு இடம் கொடுக்கப்பட்டது, அதன்மூலம் அவர் கிழக்கு மாகாண முதலமைச்சராக பணியாற்றினார் என்று.

“ அந்த நேரத்தில் அந்த நகர்வுகள் சரி என்றால், முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் பிரதான அரசியல் நீரோட்டத்தில் இணைவதும் மற்றும் தேர்தலில் போட்டியிடுவதும் தவறு என்று இப்போது அவர்கள் சொல்ல முடியாது. ஒரு எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவரோ அல்லது வேறு யாராயினும் ஊழல் மற்றும் மோசடியில் ஈடுபட்டிருந்தால் அவர்களைத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலோ அல்லது வேறு எந்தக் கட்சியிலோ ஊழல் பேர்வழிகளை அவர்கள் அரசியலுக்குள் அனுமதிப்பதுதான் தவறு” என்று அவர் சொன்னார்.

மக்கள் ஜனநாயக அரசியலுக்குள்ளும் மற்றும் பிரதான அரசியல் நீரோட்டத்திற்குள்ளும் நுழைவதற்கு வசதியாக அதற்கான இடைவெளி அகலமாக்கப்பட வேண்டும் என்று சில்வா வலியுறுத்தினார்.

- வருணி கருணாரத்ன

மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல