திங்கள், 19 அக்டோபர், 2015

எல்.ரீ.ரீ.ஈ யினால் தமிழ் பொதுமக்கள் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சோக நிகழ்வு பாகம் - 1

கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்ltte training உயர் ஆணையர் அலுவலகத்தால் தொகுக்கப் பட்ட ஸ்ரீலங்கா பற்றிய மனித உரிமைகள் விசாரணை அறிக்கையில், ஸ்ரீலங்கா ஆயுதப்படைகள், தமிழீழ விடுதலைப் புலிகள்( எல்.ரீ.ரீ.ஈ) மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரி.எம்.வி.பி) போன்ற அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட இராணுவக் குழுக்கள் என்பன தெற்காசியாவின் மிக நீண்ட போரில் புரிந்துள்ளதாகக் கூறப்படும் செயற்பாடுகள் பற்றிய ஏராளமான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதேவேளை எல்.ரீ.ரீ.ஈ யின் வெளிநாட்டு அங்கத்தவர்கள் புலிக்கொடிகளையும் மற்றும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்தையும் ஏந்தியவாறு ஜெனிவாவில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள், இந்த ஐநா அறிக்கையை வாசிப்பவர்கள், தனது சொந்த மக்கள்மீதே எல்.ரீ.ரீ.ஈ மேற்கொண்டுள்ள கொடூரமான நடவடிக்கைகளைக் கண்டு திகைப்பும் அதிர்ச்சியும் அடைவார்கள்.



ஓ.ஐ.எஸ்.எல் என சுருக்கமாக கூறப்படும் ஸ்ரீலங்கா பற்றிய ஐநா விசாரணை அறிக்கையில் பிரதானப்படுத்தியுள்ள பல அம்சங்களுக்கு மத்தியில் தமிழ் பொதுமக்களை பலவந்தமாக ஆட்சேர்ப்பு செய்த சோகமான நிகழ்ச்சியும் அடங்குகிறது. கடந்த காலங்களில் இந்த எழுத்தாளர் இந்தத் தலைப்பில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். எனவே இந்தக் கட்டுரையில் இந்த சோகமான நிகழ்ச்சியை பிரதானப்படுத்தும்போது கடந்த காலங்களில் எழுதப்பட்ட சில கருத்துக்கள் திரும்பவும் இதில் இடம்பெறலாம். ஆரம்பக் கட்டத்தில் எல்.ரீ.ரீ.ஈ கட்டாய ஆட்சேர்ப்பு அல்லது கட்டாய இராணுவ சேவையில் ஈடுபட்டிருக்கவில்லை. உண்மையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈ.பி.ஆர்.எல்.எப்) மற்றும் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்) போன்ற அமைப்புக்களே, ஸ்ரீலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த சமயத்தில் இந்த கட்டாய ஆட்சேர்ப்புக்கு முன்னோடியாகத் திகழ்ந்தன. பாரிய அளவில் கட்டாய இராணுவ சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் பிரச்சாரத்தை எல்.ரீ.ரீ.ஈ ஆரம்பித்தது 2006 ஜூனில் மற்றும் ஒக்ரோபர் மாதமளவில் அது பிரமாண்டமான வேக வளர்ச்சியைப் பெற்றது. இதற்கு பங்களிப்புச் செய்த காரணிகளில் ஒன்று, எல்.ரீ.ரீ.ஈ யின் முன்னாள் கிழக்குப் பிராந்திய தளபதியின் கிளர்ச்சி காரணமாக எல்.ரீ.ரீ.ஈயில் ஏற்பட்ட பிளவு.

எல்.ரீ.ரீ.ஈயில் இருந்து பிளவுபட்ட பிரிவுக்குத் தலைமை தாங்கிய புலிகளின் முன்னாள் கிழக்குப் பிராந்திய தளபதி விநாயகமூர்த்தி முரளீதரன் என்கிற கருணா அவர் எல்.ரீ.ரீ.ஈயில் இருந்து பிரிந்த பின்னர் கிழக்கிலிருந்து சிறுவர்களை கட்டாயமாக படையில் இணைப்பதற்கும் மற்றும் கட்டாய ஆட்சேர்ப்பு செய்வதிலும் தீவிரமாக ஈடுபட்டார். கருணா பிரிவினரின் இயக்கமான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு படையினரும் உடந்தையாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதன்படி அந்த நாட்களில் கிழக்குப் பிராந்தியம் ஆட்கடத்தல், கட்டாய இராணுவ சேவை மற்றும் கட்டாய ஆட்சேர்ப்பு என்பனவற்றின் மையமாக விளங்கியது.

பாதுகாப்பு படைகள் ரி.எம்.வி.பி உடன் ஈடுபாடு மற்றும் உடந்தையாக இருந்ததுக்கு அப்பால், பிரதான அமைப்பான எல்.ரீ.ரீ.ஈ யும் ஆட்கடத்தல் மற்றும் கட்டாய இராணுவ சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வது என்பதிலும் ஈடுபட்டு வந்தது. 2004ல் எல்.ரீ.ரீ.ஈ பிளவுபட்டதின் பின்னர் இது தொடர்பான அதிக செயற்பாடுகளை கிழக்கு மாகாணம் கண்டு வந்தது. இந்த பிளவுக்குப் பின்னர் எல்.ரீ.ரீ.ஈ யினை கைவிட்ட அல்லது அதிலிருந்து தப்பியோடிய ஆயிரக்கணக்கான அங்கத்தவர்களை இரண்டு கட்சிகளும் திரும்பவும் இலக்கு வைக்க ஆரம்பித்தன. அத்துடன் எல்.ரீ.ரீ.ஈ மற்றும் ரி.எம்.வி.பி ஆகிய இரண்டும் முறையே தங்கள் கட்சிகளுக்காக ஆட்கடத்தல் செய்யவும் மற்றும் புதிய நபர்களை கட்டாய இராணுவ சேவைக்கு சேர்ப்பதிலும் ஈடுபட ஆரம்பித்தன. இது பற்றிய சில சம்பவங்கள் ஊடகங்களில் வெளிவந்தன.

அனைவரது கவனமும் கொந்தளிப்பான கிழக்கின்மீது திரும்பியிருந்த அதேவேளை, வடக்கில் எல்.ரீ.ரீ.ஈ மேற்கொண்ட செயற்பாடுகள் அதே அளவு விளம்பரத்தை பெற்றிருக்கவில்லை. அப்போது எல்.ரீ.ரீ.ஈயின் ஆதிக்கத்தின் கீழிருந்த வடக்கின் பிரதான நிலப் பகுதிக்கான வழிகள் குறைவாக இருந்ததே இந்த மாதிரியான தொடர்பற்ற நிலைக்குரிய பிரதான காரணமாக இருந்தது. அநேக தமிழ் மக்கள் எல்.ரீ.ரீ.ஈ க்கு எதிரான தங்களது மனக்குறைகளை பகிரங்கமாக வெளிப்படுத்த விரும்பாததும் இந்த நிலைக்கான மற்றொரு காரணம் ஆகும். புலிகளின் ஆட்கடத்தல் பற்றிய வதந்திகளைப் பற்றிய கதைகளை தமிழ் சமூகம் தமக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் சில தமிழர்கள் விருப்பத்துடன் முன்வந்து அதை வெளிப்படையாகவே சொன்னார்கள்.

விளைவுகளைப் பற்றிய அச்சம்

இதற்கான முக்கிய காரணம் எல்.ரீ.ரீ.ஈ மற்றும் அதன் கூட்டாளின் கையில் இருந்து ஏற்படும் விளைவுகளைப் பற்றிய அச்சமே. மற்றொரு காரணம் எல்.ரீ.ரீ.ஈக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்தால் தமிழர்களின் விடயம் பலவீனமாகி விடுமே என்கிற உணர்வு. கடத்தப்பட்டவர்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்படுமே என்கிற காரணத்தால் கட்டாய இராணுவ சேவைக்கு சேர்க்கப்பட்டவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் கூட அதை வெளிப்படையாக சொல்ல அஞ்சினார்கள் . அந்த ஆட்கடத்தல் விபரங்கள் வெளியே கசிந்தால் அப்படியான சந்தர்ப்பங்களில் குடும்பங்களுக்கு வெளிப்படையாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தவிரவும் அநேக குடும்பங்கள் எல்.ரீ.ரீ.ஈ கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள்ளேயே வசித்ததால் தாங்கள் ஆபத்தில் சிக்கிவிடலாம் எனக் கவலையடைந்தன. அங்கு நிலவிய எல்.ரீ.ரீ.ஈயின் எதேச்சதிகாரமான கட்டுப்பாடு, மக்கள் தங்கள் துயரங்களை நம்பிக்கையான ஆட்களிடம் தெரிவிப்பதைத் தவிர வெளிப்படையாக பேசுவதை தடுத்து வந்தது. இந்தக் காரணங்கள் யாவும் அந்த வருடங்களில் எல்.ரீ.ரீ.ஈ தொடர்ச்சியான ஆட்கடத்தல் மற்றும் கட்டாய இராணுவ சேவைக்கு ஆட்சேர்ப்பு மேற்கொள்வதற்கு பெரிதும் உதவின. 2006ல் போர் உக்கிரம் பெற்றதால் கட்டாய ஆட்சேர்ப்பு செய்வதின் அளவும் மற்றும் தீவிரமும் அதிகரித்தன. போதுமான அளவு மக்கள் தாமாகவே சேருவதற்கு முன்வராத காரணத்தால் எப்போதும் ஆட்களுக்கு பற்றாக்குறை ஏற்படுவதே எல்.ரீ.ரீ.ஈ யின் நிலைப்பாடாக இருந்தது. போதுமான எண்ணிக்கையிலான ஆட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால்தான் தமிழீழம் என்கிற இலக்கை எட்டுவது கடினமாக உள்ளது என்று அப்போது அவர்கள் சொல்வது வழக்கமாக இருந்தது. ஆயுதப் படைகளுக்கு எதிராக எல்.ரீ.ரீ.ஈ யினால் பரந்தளவு எதிர்தாக்குதல்கள் மேற்கொள்ளப் படுவதாக அதிகம் பேசப்பட்டது. இதற்காக அதிகளவு அங்கத்தவர்கள் தேவைப்படுவதாக அப்போது எல்.ரீ.ரீ.ஈ யினால் விவாதிக்கப்பட்டது.

இராணுவ இலக்குகள் மற்றும் முன்னுரிமைகள் என்பனவற்றுக்கு பெருமையான இடம் வழங்கப் பட்டதால் மானிட பரிமாணங்கள் மீண்டும் ஒருமுறை எல்.ரீ.ரீ.ஈயின் பார்வையில் இருந்து மறைந்தன. யுத்தம் நடைபெறுவது தமிழ் மக்களின் விடுதலை மற்றும் மேம்பாடு என்பனவற்றுக்காக என்கிற உன்னத நோக்கம் துயரமான முரண்பாடாக மாறியது! எனினும் என்னதான் நடந்தாலும் தமிழ் மக்களின் நிலமை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே போனது.

போராட்டத்தில் மேலும் மேலும் ஆட்களை இணைத்து யுத்;தத்தை நடத்த எல்.ரீ.ரீ.ஈ விரும்பியிருக்கலாம் ஆனால் சாதாரண தமிழர்கள் அதற்கு பணியும் மன நிலையில் இருக்கவில்லை. சாதாரணமாக அவர்கள் விரும்பியது உடைந்துபோன தங்கள் வாழ்க்கையின் துகள்களை பொறுக்கி எடுத்துக்கொண்டு தங்களை தொடர்ந்து வாழ்வதற்காக தங்கள் வழியிலேயே விட்டுவிட வேண்டும் என்பதையே. இந்த யுத்தம் இனிமேலும் அவர்களுடைய யுத்தம் அல்ல. புலிகள் மரணங்களை கொண்டாடி இருக்கலாம் ஆனால் சாதாரண தமிழ் மக்கள் விரும்பியது தற்போது நிலவும் சூழ்நிலையில் வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும் பரவாயில்லை தங்கள் உயிர்களை பாதுகாக்க வேண்டும் என்பதையே. வெற்றி பெற முடியாது எனத் தெளிவாகத் தெரியும் ஒரு போரில், அவர்களுடைய பிள்ளைகள் பீரங்கிகளுக்கு தீவனமாகி மடியவேண்டும் என்று அவர்கள் விரும்பவில்லை. எந்தப் பெற்றோர்தான் அதை விரும்புவார்கள்?

பொதுமக்களுக்கான ஆயுதப் பயிற்சி

எல்.ரீ.ரீ.ஈ முன்னர் பொதுமக்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கும் ஒரு நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது. 16 க்கும் 45க்கும் இடைப்பட்ட வயதிலான இயலுமான சரீரமுள்ள அனைவரும் சில உடற்பயிற்சிகளை பயிலுவதுடன் சுய பாதுகாப்பு பற்றிய சில நுட்பங்களை கற்பதும் அவசியமாக கருதப்பட்டது. இன்னும் அதிகம் கற்க விரும்புபவர்களுக்கு தீவிரமான பயிற்சிகள் வழங்கப்பட்டு எல்லைப்படை என்கிற பெயரில் ஒரு துணைப்படைப் பிரிவும் ஏற்படுத்தப்பட்டது. அவர்கள் பிரதானமாக எல்லைப் பகுதிகளில் உள்ள எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களுக்கு உதவியாளர்களாகப் பணியாற்றி வந்தார்கள்.

அசல் பிரிவு பயிற்சியாளர்களில் இருந்து மற்றொரு வகையான ஆட்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு மேலும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அவர்களை மேலதிக இருப்பாக கருதி மக்கள் படை என அழைக்கப் பட்டார்கள். இவர்கள் வழமையான குடிமக்களைப் போல வாழ்க்கை நடத்த அனுமதிக்கப்பட்டார்கள் ஆனால் அவசியம் அல்லது தேவை ஏற்பட்டால் திரும்பவும் வரவேண்டும் என்கிற நிபந்தனை வழங்கப்பட்டது. இந்த குடிமக்கள் போராளிகள் பிரிவில் இருந்த ஏராளமானவர்கள் யுத்தம் செய்வதற்கோ அல்லது மரணிப்பதற்கோ விரும்பவில்லை. ஆனால் அவர்களுக்கு வேறு வழி இல்லை மற்றும் தயக்கத்துடன் புலிகளின் கட்டளைக்கு கீழ்படிய நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள். 2006ல் புதிதாக கட்டாய இராணுவ சேவைக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப் பட்டதுடன் இந்த மக்கள் படை ஆட்சேர்ப்பு நடைமுறை பாதிப்படைந்தது. தமிழ் பொதுமக்களை தங்கள் படைகளில் நேரடியாக கட்டாய ஆட்சேர்ப்புக்கு இணைக்கும் நடவடிக்கை தீவிரமாக முடுக்கி விடப்பட்டது அப்போது தமிழ் மக்கள் மத்தியில் அதிக வெறுப்பை ஏற்படுத்தியது. எனினும் அதை எதிர்ப்பதற்கோ அல்லது மறுப்பதற்கோ அவர்களுக்கு எந்த வழியும் இருக்கவில்லை. சிலர் மறைந்து வாழ்ந்தார்கள். வேறு சிலர் அந்த பிரதேசத்தை விட்டு வெளியேறவோ அல்லது தப்பி ஓடவோ வழி தேடினார்கள். தப்பியோடும் போது பிடிபட்டவர்கள் தண்டிக்கப் பட்டார்கள். அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் கூட புலிகள் ஊடுருவி ஆட்களைக் கடத்தினார்கள். எனினும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள மக்களே புலிகளின் கட்டாய இராணுவ சேவைக்கு ஆட்சேர்பு;பு செய்யப்பட்ட முழுப் படைக்கும் முகம் கொடுக்க வேண்டியவர்களானார்கள்.

சமாந்தரமான நிருவாகத்தை நடத்தி வந்த எல்.ரீ.ரீ.ஈ அப்போது தனது கட்டுப்பாட்டு பகுதிகளில் கண்காணிப்பு கருவிகளை அமைத்திருந்தது. ஒவ்வொரு கிராமத்திலும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர்கள் கிராம சேவகர்களாக கடமையாற்றி வந்தார்கள். அவர்களது அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் முழு விபரமும் அவர்கள் வசம் இருந்தது. எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர்கள் இத்தகைய விபரங்களுடன் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று தயங்கிவரும் இளம் ஆண்களையும் மற்றும் பெண்களையும் தங்களுடன் இணையும்படி வற்புறுத்தி வந்தார்கள். பகல்வேளைகளில் வெற்றி கிட்டாவிட்டால் புலிகள் இரவு நேரத்தில் வருவார்கள். இரவு நேர சோதனைகள் வழமையாக இடம்பெற்று வந்தன.

உயர்தர வகுப்புகளில் உள்ள மாணவர்கள் அனைவரும் கட்டாயமாக சுய பாதுகாப்பு மற்றும் முதலுதவி பயிற்சிகளை பெறுவதற்கு நிர்ப்பந்தப் படுத்தப்பட்டார்கள். பயிற்சிக் காலம் இரண்டு முதல் நான்கு வாரங்களுக்கு உட்பட்டதாகும். அதில் திறமையானவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களை மூளைச் சலவை செய்வது மூலமாகவோ அலலது கட்டாய ஆட்சேர்ப்பு மூலமாகவோ நிரந்தர அங்கத்தவராகவோ மாற்றப் படுவார்கள். ஆரம்பத்தில் இறந்த புலிகளின் அல்லது மா வீரர்களின்; மற்றும் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களாக பணி புரிபவர்களின் குடும்பங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. பின்னாளில் அவர்களும் இலக்கு வைக்கப் பட்டார்கள். அநேகமான பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதை நிறுத்தினார்கள். இளையவர்கள் அபூர்வமாகவே வெளியில் தென்பட்டார்கள். அவர்கள் கண்ணளில் பட்டுவிட்டால் அவர்களை பிடித்துச் செல்லும் வாய்ப்பு மிகவும் அதிகமாக இருக்கும். சில பெற்றோர் வெளியில் வேலைக்குச் செல்வதை தவிர்த்து, தங்கள் பிள்ளைகளை பிடித்துச் செல்வதை தவிர்க்கும் நோக்குடன் வீட்டிலேயே இருந்தார்கள்.

- டி.பி.எஸ்.ஜெயராஜ்

(தொடரும்)

பாகம் 2

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல