ஞாயிறு, 11 அக்டோபர், 2015

தமிழ் சினிமாவின் ஆச்சி - நடிகை மனோரமா

தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில், 1937ம் ஆண்டு, மே 26ம் தேதி பிறந்தவர் நடிகை மனோரமா. இவரது பெற்றோர் காசி கிலாகுடையார் - ராமாமிதம் ஆவர். மனோரமாவின் இயற்பெயர் கோபிசாந்தாவாகும். சின்ன வயதில் இருந்தே நாடகத்தில் அதீத ஆர்வம் கொண்டவர் மனோரமா.

*12வயதில் மேடை நாடகம்*



வறுமையின் காரணமாக மன்னார்குடியிலிருந்து காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூருக்கு இடம்பெயர்ந்தனர் மனோரமா குடும்பத்தார். நாடகத்தில் ஆர்வம் கொண்ட மனோரமா, தனது 12 வயதில் மேடை ஏறினார். நாடக இயக்குநர் திருவேங்கடம் மற்றும் ஆர்மோனிய வித்வான் தியாகராஜன்
ஆகியோரது உதவியால் மேடை நாகடங்களில் நடிக்க தொடங்கியதோடு பாடகராவும் மாறினார்.

வைரம் நாடகம் சபாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த மனோரமா, பின்னர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் நாடக கம்பெனிக்கு பி.ஏ.குமார் மூலம் அறிமுகமானார். தனது அற்புதமான நடிப்பாலும், வசன உச்சரிப்புகளாலும் ராஜேந்திரனால் ஈர்க்கப்பட்டவர், தொடர்ந்து அவரது நாடக கம்பெனியின் மூலமாக 100க்கும் மேற்பட்ட நாடகளில் நடித்தார். அதில் அவர்
நடித்த மணிமகுடம், தென்பாண்டி வீரன், புதுவௌ்ளம் போன்ற நாடகங்கள் பெரிதும் பேசப்பட்டன. இதுவே அவரை சினிமாவுக்கும் அழைத்து செல்ல உதவியது.

*முதல் சினிமா படம்*

நாடகங்களில் நடித்து வந்த மனோரமா, 1958ம் ஆண்டு கவிஞர் கண்ணதாசனால் மாலையிட்ட மங்கை என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். அதன்பின்னர் ஒரு சில படங்களில் சின்ன சின்ன
ரோல்களில் நடித்தவர், 1963ம் ஆண்டு கொஞ்சும் குமரி படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதன்பின்னர் மனோரமா கொஞ்சம் கொஞ்சமாக முன்னணி நடிகர்களான சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் என அந்தக்கால திரையுலக ஜாம்பவான்களின் படங்களில் நடித்தார்.

*மனோரமா பெயர் வந்தது எப்படி.?*

நாடக இயக்குநர் திருவேங்கடம் என்பவர் இவருக்கு "மனோரமா என்று பெயர் வைத்தார். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை எழுதிய "வேலைக்காரி உள்ளிட்ட சில நாடகங்களில் அவருடன் மனோரமா நடித்துள்ளார். கருணாநிதி எழுதிய "உதயசூரியன் நாடகத்தில் கருணாநிதி கதாநாயகனாகவும், மனோரமா கதாநாயகியாகவும் நடித்தனர். ஆயிரம் நாடகங்களுக்கு மேல்
நடித்துள்ளார்.

*திருப்பம் தந்த தில்லானா மோகனம்மாள்*

மனோரமா பல படங்களில் நடித்திருந்தாலும் அவரது காமெடி திறனை முழுமையாக வௌிப்படுத்திய படம் என்றால் அது தில்லானா மோகனம்மாள் படம் தான். சிவாஜி-பத்மினியுடன், மனோரமாவும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஜில் ஜில் ரமாமணி என்ற கதாபாத்திரம் அவரை பெரிதும் பேச வைத்தது.

நாகேஷ், சோ, சந்திர பாபு, தங்கவேலு, தேங்காய் சீனிவாசன் என அந்தக்கால காமெடி நடிகர்களுக்கு மத்தியில் நடிகையாலும் காமெடி பண்ண முடியும் என்று நிரூபித்தவர். இவர்களின் அநேக படங்களில் மனோரமா காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

*கின்னஸ் சாதனை படைத்தவர்*

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள மனோராமா 1000 படங்களுக்கு மேல் நடித்தற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார். சினிமாவில் மட்டுமின்றி நாடகத்திலும் 1000
நாடகங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

*300 பாடல்கள் பாடியுள்ளார்*

மனோரமா சிறந்த நடிகை மட்டுமல்ல, சிறந்த பாடகியும் கூட. மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கிய காலத்திலேயே பாட்டு பாடி வந்தவர் சினிமாவிலும் சுமார் 300 பாடல்கள் பாடியிருக்கிறார். மகளே உன் சமத்து என்ற படத்தில் முதன்முதலாக பாடினார் மனோரமா. அவர் பாடிய ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாபேட்டை கொக்கு, டில்லிக்கு ராஜா ஆனாலும் பாட்டி சொல்ல
தட்டாதே, மெட்ராஸ சுத்தி பார்க்க போறேன் உள்ளிட்ட பல பாடல்கள் மிகவும் பிரபலமானவை.

*ஐந்து முதல்வர்களின் படங்களில் பணியாற்றியவர்*

தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான மறைந்த அண்ணாத்துரை, எம்.ஜி.ஆர்., மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஜெயலலிதா மற்றும் ஆந்திரா முன்னாள் முதல்வர் என்டி.ராமாராவ் ஆகிய ஐந்து முதல்வர்களின் படங்களில் பணியாற்றியுள்ளார் மனோரமா.

*ஐந்து தலைமுறை நடிகர்களை கண்ட நடிகை*

சினிமாவில் எம்ஜிஆர்., சிவாஜி காலம் தொடங்கி இந்தாக்கால தனுஷ்-சிம்பு வரை ஐந்து தலைமுறை நடிகர்களை கண்டவர் நடிகை மனோரமா.

*பெண் சிவாஜி கணேசன்*

தமிழ் சினிமாவின் நடிப்பு திலகம் என்றால் சிவாஜி கணேசன். அதேப்போன்று மனோரமா ஒரு பெண் சிவாஜி கணேசன் என நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகரும், பத்திரிகையாளருமான சோ ராமசாமி தெரிவித்துள்ளார்.

*பொன்விழா கண்டவர்*

நாடகத்துறை, சின்னத்திரை, வெள்ளித்திரை என நடிப்பின் அனைத்து பிரிவுகளில் தனது பெயரை நிலைநாட்டியவர். இவர் நடிக்காத கேரக்டர்களே இல்லை என கூறுமளவுக்கு நடிகை, அம்மா, ஆச்சி, வில்லி, காமெடி, பாடல் என அனைத்து கேரக்டர்களிலும் கொடிகட்டி பறந்தவர். நடிப்பில் 50 ஆண்டுகளை கடந்து "பொன்விழா கொண்டாடியவர்.

*முக்கிய நிகழ்வுகள்*

* 1963ல் வெளிவந்த "கொஞ்சும் குமரி என்ற படத்தில் நடிகையாக மனோரமா அறிமுகமானார்.

* "கண் திறந்தது படக் கதாநாயகன் எஸ்.எம்.ராமநாதனுடன் மனோராமா திருமணம் செய்து
கொண்டார். இவர்களுக்கு பூபதி என்ற மகன் உள்ளார்.


* "குன்வர பாப் என்ற இந்தி படத்தில் மெகமூத் என்ற பாலிவுட் காமெடி நடிகருடன் நடித்துள்ளார்.

* "நடிகன் என்ற படத்தில் சத்யராஜ்க்கு ஜோடியாக மனோரமா நடித்திருப்பார். இப்படத்தில் 50
வயது திருமணமாகாத பெண்ணாக நடித்திருப்பார். இப்படம் மனோரமாவுக்கு பிடித்த படங்களில் ஒன்று.

* அதிகளவில் "அம்மா கேரக்டர்களில் மனோராமா நடித்துள்ளார்.

* இவரது இளமை பற்றி மனோரமாவிடம் கேட்டபோது, "அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற
பழமொழிக்கு ஏற்ப, மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், உடலும் இளமையாக இருக்கும் என
தெரிவித்தார்.

* ஒரு "டிவி நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளர் "சோ, இவரை "பெண் சிவாஜி என்று குறிப்பிட்டார்.

* மனோராமா கடைசியாக சிவாஜியை (இறப்பதற்கு முன்) சந்தித்த போது, சிவாஜி தன் மனைவியிடம் "தமிழ் மொழியில் மனோரமாவைத் தவிர, எவராலும் இந்தளவுக்கு நடிக்க முடியாது என தெரிவித்தார். இது தன் வாழ்வின் மகிழ்ச்சியான தருணம் என மனோரமா தெரிவித்தார்.

* "உனக்கும் வாழ்வு வரும் என்ற படத்தில், மனோரமா ஊமையாக நடித்திருப்பார்.

* "மஞ்சள் குங்குமம் என்ற படத்தில் நடிக்கும் போது, மனோரமாவை "காட்டுவிரியன் பாம்பு கடித்து விட்டது. பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குணமடைந்த பின்,அடுத்ததாக நடித்த "ஆடி விரதம் படத்தில் பாம்பு சிலையை குளிப்பாட்டி தாலாட்டும் பாட்டு
சீன் ஒன்றில் நடித்தார்.

* இவர் கடைசியாக நடித்த படம் "பொன்னர் சங்கர்.

*அவர் நடித்த சில திரைப்படங்கள் : *

மாலையிட்ட மங்கை, புதிய பாதை, நெஞ்சில் ஓர் ஆலயம், ரத்த திலகம், கொஞ்சும் குமரி, அன்பே வா, கந்தன் கருணை, தில்லானா மோகனாம்பாள், கலாட்டா கல்யாணம், எங்கள் தங்கம், காசேதான் கடவுளடா, அந்தமான் காதலி, வாழநினைத்தால் வாழலாம், என் கேள்விக்கு என்ன பதில், குப்பத்து
ராஜா, பில்லா, காளி, தீ, வாழ்வே மாயம், போக்கிரி ராஜா, தங்க மகன், பாயும் புலி, அடுத்த வாரிசு, சம்சாரம் அது மின்சாரம், நான் அடிமை இல்லை, அன்னை என் தெய்வம், பேர் சொல்லும் பிள்ளை, உன்னால் முடியும் தம்பி, பாட்டி சொல்லத் தட்டாதே, இது நம்ம ஆளு, குரு சிஷ்யன், அபூர்வ சகோதரர்கள், நடிகன், மன்னன், எங்கிட்ட மோதாதே, மைக்கேல் மதன காமராஜன்,
இதயம், சின்னத் தம்பி, சின்ன கவுண்டர், சிங்கார வேலன், அண்ணாமலை, எஜமான், ஜென்டில்மேன், வியட்நாம் காலனி, மே மாதம், காதலன், நந்தவனத் தேரு, நான் பெத்த மகனே, முத்துக் காளை, இந்தியன், லவ் பேர்ட்ஸ், அருணாசலம், மறுமலர்ச்சி, புதிய பாதை, பாண்டவர் பூமி, மாயி,
சாமி, பேரழகன், சிங்கம், சிங்கம்-2.

*விருதுகளும், மரியாதைகளும் :*

தமிழ் நாடு அரசின் கலைமாமணி விருது.

1988 - புதிய பாதை திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது.

2002 - மத்திய அரசால் பத்ம ஸ்ரீ விருது.

1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

மலேசிய அரசிடம் இருந்து டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது.

கேரளா அரசின் கலா சாகர் விருது.

சினிமா எக்ஸ்பிரஸ் விருது.

சிறந்த குணச்சித்திர நடிகைக்காக அண்ணா விருது, என்.எஸ்.கே விருது, எம்.ஜி.ஆர்.விருது, ஜெயலலிதா விருது எனப் பல்வேறு விருதுகளை, தமிழ் நாடு அரசு அவருக்கு வழங்கி கெளரவித்தது.

சினிமா உலகில், நகைச்சுவை என்றால் நடிகர்கள் மட்டும் தான் என்னும் நிலையை மாற்றி,நடிகைகளும் காமெடியில் சாதனைப் படைக்க முடியும் என்று நிரூபித்தவர், மனோரமா அவர்கள்.

திரையுலக வரலாற்றில் 1000 படங்களுக்கு மேல் நடித்து, உலகப் புகழ் பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற சாதனை; இந்தியாவில் ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமை; தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் என ஆறு மொழிகளிலும் சிறந்த குணச்சித்திர நடிகை என இன்னும் பல அடையாளங்களை இவருக்கு சொல்லிக்கொண்டே போகலாம்.

குறிப்பாக சொல்லப்போனால், சினிமாவில் நகைச்சுவை, குணச்சித்திரம் என இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது எனலாம். ஒரு சாதாரண மேடை நடிகையாக தன்னுடைய கலையுலக வாழ்க்கையைத் தொடங்கி, சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி என அன்றைய காலம் முதல் இன்றைய
தலைமுறை வரை சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் திரையுலகை ஆட்சி செய்தார் என்று கூறினால் அது மிகையாகாது.

Dinamalar
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல