புதன், 11 ஜனவரி, 2017

ஹாலிவுட்' பெயரை "ஹாலிவீடாக' மாற்றியவர் கைது

அமெரிக்காவின் சினிமாத் துறை தலைநகரமாக விளங்கும் லாஸ் ஏஞ்சலீஸின் மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற "ஹாலிவுட்' என்ற ஆங்கில எழுத்துக்களை, "ஹாலிவீட்' என்று மாற்றியமைத்தவரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:லாஸ் ஏஞ்சலீஸ் நகரில், ஹாலிவுட் குன்றின் மீது மனை விற்பனை நிறுவனமொன்று தங்களது "ஹாலிவுட்லேண்ட்' என்று பெயரிடப்பட்ட மனைகளை விற்பனை செய்வதற்காக அந்தப் பெயரை சுமார் 30 அடி நீளம், 50 அடி உயர எழுத்துகளாக கடந்த 1923-ஆம் ஆண்டு அமைத்தது.



அந்த எழுத்து அமைப்பு பொதுமக்களைக் கவரவே, விற்பனை முடிந்த பின்னர் அதனை அந்த நிறுவனம் அப்படியே விட்டுவிட்டது.

அமெரிக்காவின் திரைத் துறை மையமாக லாஸ் ஏஞ்சலீஸ் ஆனபிறகு, இந்த எழுத்துருக்கள் உலகப் பிரசித்தி பெற்றன.

இந்த நிலையில், புத்தாண்டு தினத்தன்று அந்த எழுத்துருக்களில் உள்ள "ஓ' என்ற இரு ஆங்கில எழுத்துகளின் மீது கருப்பு மற்றும் வெள்ளை துணிகளைக் கட்டி "ஈ' என்ற எழுத்துகளாக மாற்றப்பட்டிருப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இவ்வாறு மாற்றப்பட்டதால் அந்த எழுத்துரு "ஹாலிவீட்' என்று மாறியிருந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஜாசாரி கோல் ஃபெர்னாண்டஸ் (30) என்பவர் போலீஸாரிடம் சரணடைந்தார்.

ஹாலிவுட் எழுத்துருவில் மாற்றம் செய்தது தான்தான் என்றும், கேளிக்கைக்காக கஞ்சாச் செடிகளை அனுமதிப்பதற்கு கலிஃபோர்னியா மாகாண பொதுவாக்கெடுப்பில் முடிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே அந்தச் செயலில் ஈடுபட்டதாகவும் ஃபெர்னாண்டஸ் தெரிவித்தார்.

(அமெரிக்க சொல் வழக்கில் கஞ்சாச் செடியை "களை' என்று பொருள்படும் "வீட்' என்ற வார்த்தையில் குறிப்பிடுவது வழக்கம்)

இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர். "ஹாலிவுட்' என்ற எழுத்துருவை அவர் சிதைக்காமல் வெறும் துணியை மட்டும் கட்டி மாற்றியிருந்ததால், பொது இடத்தில் அத்துமீறி நுழைந்ததாக மட்டும் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து சொந்த ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல